அரசியல் கட்டுரைகள்

ரஷ்சிய ஜனாதிபதியின் வடகொரியாவுடனான இராணுவ உடன்படிக்கையும் உலகளாவிய அரசியலும்?

உக்ரையின்-ரஷ்சியப் போர் உலக ஒழுங்கை மாற்றத்திற்கு உள்ளாக்கம் என்ற எதிர்வுகூறல் யதார்தமாகிக் கொண்டே நகருகிறது. மேற்குக்கும் -கிழக்குக்குமான பிரிநிலையானது வலுவான அரசியல் பொருளாதார இராணுவ ஒழுங்கை கட்டமைப்பதில் முனைப்புக் கொண்டதாக விளங்குகிறது. அமெரிக்கா உக்ரையினுடன் செய்து கொண்ட பாதுகாப்பு உடன்பாடு தொடர்பில் கடந்த கட்டுரையில் உரையாடியிருந்தோம். அதற்கு பதிலீடாக அரசியலை (Counter Politics) ரஷ்சியா வடகொரியாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளது. அத்தகைய பாதுகாப்பு உடன்பாடுகள் வேறுபட்டதாக அமைந்தாலும் அடிப்படையில் இரு தரப்பின் நோக்கங்களும் ஒன்றானதாகவே அமைந்துள்ளது. இக்கட்டுரையும் ரஷ்சிய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினது வடகொரியா-வியட்நாம் விஜயங்களின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வதாக அமைந்துள்ளது.

இருபத்தி நான்கு வருடங்களுக்கு பின்னர் வடகொரியாவுக்கு ரஷ்சிய ஜனாதிபதி விஜயம் (18-19.06.2024) செய்துள்ளார். இந்த விஜயம் இரு நாட்டுக்குமான அரசியல்-இராணுவ பரிமாணத்தில் தனித்துவமானதாகவே தெரிகிறது. காரணம் இரு நாட்டுத்தலைவர்களும் இராணுவ உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர். அதில் மிகப்பிரதானமானது ஒரு நாட்டின் மீது வேறு நாடு தாக்குதலையோ ஆக்கிரமிப்பையோ மேற்கொள்ளுமாயின் அந்த நாட்டுக்கு எதிராக கூட்டாக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதென இரு தலைவர்களும் உடன்பாடு செய்துள்ளனர். இதன் கீழ் ஆயுததளபாடங்கள் தொழில்நுட்ப பரிமாற்றங்கள் பரஸ்பரம் கைமாற்றிக் கொள்வதென முடிபாகியுள்ளது. இது தொடர்பில் வடகொரியாவின் ஜனாதிபதி கிம்-ஜோங்-உன் கருத்துத் தெரிவிக்கும் போது, எதிர்காலத்தில் இரு நாட்டுக்கும் இடையில் மேற்கொள்ள எத்தனிக்கும் எத்தகைய போரையும் கூட்டாக எதிர்கொள்ள தயாராக உள்ளதை உடன்பாடு காட்டுகிறது என்றார். அது மட்டுமன்றி புட்டின் வடகொரியர்களின் நண்பன் என்றும் முற்றிலும் அமைதியான மற்றும் தற்காப்புத் தன்மை கொண்டது என்றும் குறிப்பிட்டார். கிம் ரஷ்சியா நேர்மையான நண்பன் மற்றும் நெருக்கமான கூட்டாளி எனவும் தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் பல்முனை உலகத்தை உருவாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பதிலுக்கு புட்டின் குறிப்பிடும் போது, இராணுவ உடன்படிக்கைக்கு அப்பால் பொருளாதார மற்றும் ஆயுத விநியோகம் முதன்மையானது எனவும் வடகொரியா மீது மேற்குலகம் திணித்துள்ள காலவரையறையற்ற பொருளாதாரத் தடைகளை மீளாய்வு செய்ய வேண்டும் எனவும் வெளிப்படுத்தியிருந்தார். மேலும் ரஷ்சியாவின் மண்ணின் மீது தாக்குதல் நடத்தக் கூடிய துல்லியமான நீண்டதூர ஆயுதங்கள் எப்-16 ரக விமானங்கள் உயர் தொழில்நுட்ப ஆயுதங்கள் உபகரணங்கள் உக்ரையினுக்கு வழங்குவது பற்றி அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளது நடவடிக்கைகளை சுட்டிக்காட்டிய புட்டின் வடகொரியாவின் இராணுவ தொழில்நுட்பத்தை வலுப்படுத்துவது அவசியமானதெனவும் தெரிவித்திருந்தார்.

இதே நேரம் ரஷ்சிய ஜனாதிபதி வியட்நாமுக்கு விஜயம் (20.06.2024) செய்த போது வியட்நாம் ஜனாதிபதி ரூ லாம் உடன் பரஸ்பரம் பொருளாதார தொழில்நுட்ப உடன்பாடுகளை மேற்கொண்டிருந்தார். இரு தலைவர்களும் பிராந்திய பாதுகாப்புச் சார்ந்து விரிவான கட்டமைப்பு மேற்கொள்ள வேண்டும் என்பதையும் பலமுனை உலகத்தை கட்டமைப்பதே தமது விஜயத்தின் பிரதான நோக்கம் எனவும் தெரிவித்தார். அத்தகைய உடன்பாட்டுக்கான உரையாடலை ஏற்றுக் கொண்ட வியட்நாம் ஜனாதிபதி பிராந்திய அமைதிக்கும் பாதுகாப்புக்கமான விரிவான செயல்திட்டம் வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

ரஷ்சிய ஜனாதிபதியின் இரு நாட்டுக்குமான விஜயங்களின் முக்கியத்துவத்தை விரிவாக விளங்கிக் கொள்வது அவசியமானது.

ஒன்று, அமெரிக்காவுக்கும் உக்ரையினுக்கு எகடந்த வாரம் இத்தாலியில் நிகழ்ந்த ஜி-7 மகாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு பதிலளிப்தாக அதிகம் உணரப்படுகிறது. உக்ரைன் மற்றும் அமெரிக்கா உடன்பாடும் இராணுவ உடன்பாடாகவே அமைந்திருந்தது. அத்தகைய அடிப்படைக்குள்ளேயே வடகொரியாவுடனான உடன்பாடும் அமைந்துள்ளது. அதனால் இது ஒரு பதில் நடவடிக்கையாக அமைந்துள்ளது என்பது முதல்கட்டமான புரிதலாகவுள்ளது. அது மட்டுமல்லாது ஈரான் ஜனாதிபதியின் படுகொலைக்குப் பின்னர் ரஷ்சியாவின் நகர்வுகள் அதிக எச்சரிக்கையுடையதாகவே தெரிகிறது. தனது நட்பு நாடுகளையும் அதன் தலைவர்களையும் பாதுகாக்க வேண்டிய நிலைக்குள் புட்டின் காணப்படுகின்றார். அதனால் இத்தகைய உடன்பாடுகளும் கூட்டுவலுவும் அவசியமானதாக தெரிகிறது.

இரண்டு, பாதுகாப்பு உடன்பாட்டின் வாயிலாக இரு நாடுகளும் பரஸ்பரம் ஆயுததளபாடங்களை பரிமாற்றுவதென்பது முக்கியமானதாக அமைந்தாலும் இரு நாடுகளுமே அணுவாயுதங்களை கொண்ட நாடுகள் என்ற அடிப்படையில் அதிக முக்கியத்துவம் கொண்டதாக தெரிகிறது. காரணம் பல்முனை உலகம் பற்றிய உரையாடலை புட்டின் வியட்நாமிலும் வடகொரியாவிலும் வெளிப்படுத்தியுள்ளார். அதனால் உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்புச் சார்ந்த விடயம் இத்தகைய உடன்பாட்டினால் ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக புட்டின் புரிந்து வைத்தள்ளதாகவே தெரிகிறது. அதாவது அணுவாயுதமே உலக அமைதிக்கான அடிப்படை என்ற யதார்த்தவாதக் கோட்பாட்டாளர்களின் எண்ணத்தை புட்டின் பிரதிபலிப்பது போலவே தெரிகிறது. உலகத்தின் அமைதியானது ஆயுததளபாடங்களாலும் இராணுவ பலத்தினாலும் கட்டமைக்கப்படடதென்ற நியாயத்தை நவ-யாதார்த்தவாத்தை முதன்மைப்படுத்தும் கோட்பாட்டு வாதிகள் குறிப்பிடுகின்றனர். அதனையே வடகொரிய-ரஷ்சிய இராணுவ உடன்பாட்டில் காணமுடிகிறது.

மூன்று, வடகொரியாவுடனான ரஷ்சியாவின் இராணுவ உடன்படிக்கை உக்ரையின் போரில் வடகொரியாவின் ஆயுததளபாடங்களை பயன்படுத்துவது தொடர்பிலானதாகவே அதிகம் உள்ளது. ஈரானிய ஜனாதிபதி ரைசியின் படுகொலை உக்ரையின் -ரஷ்சியப் போரில் நெருக்கடியான சூழலையே ஏற்படுத்தியுள்ளது. அதனை எதிர்கொள்வதும் நகர்த்துவதும் புட்டினது சவாலனான அம்சமாக அமைந்திருந்தது. அதனை கையாளும் விதத்திவேயே வடகொரியாவுடனான உடன்பாட்டை ரஷ்சியா முதன்மைப்படுத்தியுள்ளது. இவ்வுடன்பாட்டை அதிகளவில் உக்ரையின் போரை ரஷ்சியா எவ்வாறு நகர்த்த திட்டமிடுகிறது என்பதை வெளிப்படுத்தவதாக அமைந்துள்ளது.

நான்கு, ரஷ்சியா மீதான மேற்குலகத்தின் பொருளாதாரத் தடைகளும் தனிமைப்படுத்தல் உத்தியையும் உடைப்பதே புட்டினது வடகொரிய-வியட்நாம் விஜயங்களின் தனித்துவமாகும். மேற்கு வகுத்துள்ள அனைத்து உத்திகளையும் முறித்துவரும் புட்டின் தனது நட்பு நாடுகளின் எண்ணிக்கையையும் பலத்தையும் கூட்டுவதுடன் அதனை பாதுகாப்பு சார்ந்து கட்டமைக்க முயலுகிறது. பொருளாதர இயங்குதிறனை இராணுவ உத்திகளுக்குள்ளால் கையாளும் திறனை அதிகம் இராணுவ உடன்பாடுகள் கொண்டுள்ளன. அதனையே மேற்கு நாடுகளும் கிழக்கு சக்திகளும் மேற்கொள்வதில் முனைப்புக் காட்டுகின்றன. அதாவது பொருளாதாரத்தை இராணுவ நெருக்கடிக்குள்ளால் வெற்றி கொள்வதே புட்டினது விஜயங்களது உத்தியாக உள்ளது. அதனையே அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் மேற்கொள்கின்றன.

ஐந்து, ரஷ்சிய ஜனாதிபதியின் வியட்நாம் மற்றும் வடகொரியாவுடனான இராணுவ உடன்பாடு தொடர்பில் அமெரிக்கா மற்றும் தென்கொரிய நாடுகளது எதிர்வினைகள் நலன்களை மட்டுமே வெளிப்படுத்தியிருந்தது. அதிலும் வியட்நாம் விஜயத்தை அமெரிக்கா அதிகம் விமர்சனம் செய்துள்ளது. காரணம் பணிப்போரின் போது சோஸலிஸ அணியுடன் பயணித்த வியட்நாம் பின்னா அமெரிக்க நட்பு நாடுகளுடன் செயல்படத் தொடங்கியது. அதனை மீளவும் ரஷ்சியா பலவீனப்படுத்தவதாக அமெரிக்கா கருதுகிறது. ஆனால் வியட்நாம் ரஷ்சியாவின் நட்பு நாடு என்பது மட்டுமல்லாது நீண்டகால் அரசியல் சித்தாந்தத்தின் உறவுள்ள சக்திகள் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும். வியட்நாமியர்களது இருப்பின் மூலம் கோசிமினது சிந்தனை விதைக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்வது அவசியமானது. ஆனால் ரஷ்சியாவின் இருப்பும் வியட்நாமின் இருப்பும் தற்போதைய உலகத்தில் எத்தகையது என்பது அளவீடு செய்யப்பட வேண்டும். பொருளாதாரமாக ஒரேதரிசனத்தை உலகம் கொண்டிருந்தாலும் அரசியலில் இருதுருவத்தை கொண்டியங்க முனைகிறது.

எனவே ரஷ்சிய ஜனாதிபதி புட்டினது வடகொரிய மற்றும் வியட்நாம் பயணங்கள் உலக இராணு-அரசியல் பரிமாணத்தில் முதன்மையானது. ஒரு நாட்டின் வெளியுறவு என்பது அந்த நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினைகளை கையாளும் உத்திகளாகவே உள்ளன. அதனையே புட்டின் முதன்மைப்படுத்தி வருகிறார். மேற்கு நாடுகள் போடும் அனைத்து உத்திகளுக்கும் பதிலளிப்பதில் முனைப்புடன் ரஷ்சியா-சீனா-வடகொரியா-ஈரான்-சிரியா நாடுகளின் அணி செயல்படுகின்றன.

-பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)