தென்னாசிய பிராந்திய அரசியல் பங்களாதேஷ் மீண்டும் ஒரு இலங்கை தீவை போன்று அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இலங்கை தீவானது பொருளாதாரத்தை மையப்படுத்தி அத்தகைய நெருக்கடியை எதிர்கொண்ட போதும் பங்களாதேஷ் பலமான பொருளாதாரக் கட்டமைப்பை கொண்டிருந்த போதும் மேற்குலக நாடுகளில் செல்வாக்கு கொள்ளும் அதன் கட்டுப்பாட்டுக்குள்ளும் செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டபோது நெருக்கடி மிக்க அரசியலை அதன் ஆட்சியாளர் எதிர் கொண்டனர். இதன் விளைவையே முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்துசமுத்திரப் பிராந்தியம் இந்து- பசிபிக் தந்திரோபாயம், குவட் கட்டமைப்பிலும், சீனாவின் பட்டி மற்றும் பாதை முன்முயற்சியிலும் ஏறக்குறைய மூழ்கிப்போயிருக்கின்ற பிராந்தியமாக அல்லது பிராந்தியங்களில் ஒன்றாக காணப்படுகின்றது. இதில் பிரதானமாக மேற்கு வல்லரசுகளும் ஆசியாவின் இரு பிரதான வல்லரசுகளும் மோதுகின்ற மைய பிரதேசமாக இந்து சமுத்திரம் காணப்படுகிறது. பங்களாதேஷ் மீதான நெருக்கடி என்பதும் இந்து சமுத்திர அரசியலின் நீட்சியாகவே காணப்படுகிறது. இக்கட்டுரையும் அத்தகைய முயற்சியின் பிரதிபலிப்புகளை தேடுகின்ற விதத்தில் வடிவமைக்க திட்டமிடப்படுகிறது.
பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கம் பதவியேற்ற பின்னர் இந்து மதத்தவருக்கு எதிரான பகைமை தீவிரமடைந்து வருகின்றது. இதுவரை இருநுர்றுக்கு மேற்பட்ட கலவரங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் இந்துக்கள் கொல்லப்படுவதும் அவர்கள் சொத்துக்கள் திருடப்படுவதும் பாரிய நெருக்கடியாக இடைக்கால அரசாங்கம் எதிர்கொண்டிருக்கிறது. இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக பதவி ஏற்றுள்ள நோபன் பரிசு பெற்ற முகமது யூனுஸ் இந்துக்கள் மீதான வன்முறையே கைவிடுமாறு அமைதியான வழியிலும் சமாதானபூர்வமாகவும் பிரச்சனைக்குரிய தீர்வை எட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இந்துக்கள் மீதான வன்முறையில் பாரிய அழிவுகளையும் புலப்பெயர்வுகளையும் ஆரம்பித்து இருப்பதோடு இதுவரையில் பலர் கொல்லப்பட்டும் பலர் காணாமல் போயும் உள்ளதாக தெரியவருகிறது. இராணுவத்தால் கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. இந்துக்கள் மீதான வன்முறை பிராந்திய அரசியல் குறிப்பாக இந்திய அரசியலில் அதிகமான நெருக்கடியை உருவாக்கியுள்ளது. முன்னாள் பங்களாதேஷ் பிரதமர் தஞ்சமடைந்திருக்கும் தேசமாக இந்தியா இருப்பதும் இந்தியாவில் ஒர் இந்து மத ஆட்சி முறை இருப்பதும் பங்களாதேஷ் வன்முறைக்கு பின்னால் இருக்கக்கூடிய வலுவான காரணங்களாக கருதப்படுகிறது. ஆனாலும் பங்களாதேஷ் வன்முறை என்பது ஒரு தனித்துவமான சர்வதேச அரசியல் விடயத்தோடு பின்னிப்படைந்ததாகவும் இந்து சமுத்திர அரசியலோடு ஒன்றிணைந்து இருப்பதாகவும் அடையாளப்படுத்தப்படுகிறது. அதனை விரிவாக நோக்குவது அவசியமானது.
முதலாவது மாணவர்களுடைய எழுச்சி பிரதமர் ஷேக் ஹசீனாவினுடைய ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தது. மாணவர்கள் தீவிர எதிர்ப்புகளை காட்டியதோடு பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிடவும் வழியமைத்தது. இலங்கை யில் எழுச்சி பெற்ற அரகலய புரட்சி போன்று ஓரு புரட்சி பங்களாதேஷ் பல்கலைக்கழக மாணவர்கள் திட்டமிட்டிருந்தனர். அதன் விளைவாக ஆட்சியை விட்டு ஹசீனா வெளியேறியது மட்டுமல்ல இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதும் மீண்டும் பங்களாதேஷ் ஒரு நெருக்கடி மிக்க சூழலுக்குள் அகப்பட்டு உள்ளது. அத்தகைய நிலையில் இதனை எதிர்கொள்ளுகின்ற விதத்தில் அமைதியையும் சமாதானத்தையும் உறுதியான ஒரு ஆட்சியையும் கட்டமைக்கும் விதத்தில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் இடைக்கால ஆட்சியை பொறுப்பேற்கின்ற நிலை ஏற்பட்டது. முகமது யூனுஸ் நோபல் பரிசு பெற்றவர் என்பது மட்டுமின்றி அத்தகைய பரிசுக்கு பின்னால் இருக்கக்கூடிய மேற்குலகமும் அதன் தேவைப்பாடுகளும் ஹசீனாவினுடைய ஆட்சி மீதான குழப்பத்திக்கு பின்னால் இருந்த காரணி என்ற உரையாடல் அல்லது விவாதம் தவிர்க்க முடியாததாக எழுந்துள்ளது. பங்களாதேஷ் மக்கள் நீண்ட வரலாற்று ரீதியான புரட்சி தொடர்பில் ஆழமான கரிசனை கொண்டவர்கள். மட்டுமின்றி இராணுவ ஆட்சிக்குள்ளோம் அடக்குமுறைகளுக்கும் அகப்பட்டு எழுந்துவந்த ஒரு தனித்துவமான மக்களாக இனம் காணப்படுகின்றனர். புரட்சியை மாணவர்கள் முன்னெடுக்கின்ற போது அதனை எதிர்கொள்ள இந்த விதத்தில் ஆட்சி முறையில் இலகுவான ஒரு மாற்றத்தை மேற்கொள்ளவும் அதற்கு வழி விடவும் வங்காளதேச இராணுவம் உதவியுள்ளது. இது அந்த மக்களின் அல்லது இராணுவத்தின் ஆட்சியினுடைய உறுதிப்பாட்டை ஏற்படுத்துகின்ற விதத்துக்கான அரசியல் கலாசாரமாக புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஆனால் அத்தகைய சூழல் ஒர் ஆரோக்கியமான ஆட்சியை கட்டமைப்பதற்கான சூழலை இடைக்கால அரசின் மூலம் நிறுவ முயன்றது. இத்தகைய இடைக்கால அரசு மேற்கு நாடுகளுடைய ஒத்துழைப்பில் உருவானது என்ற விவாதம் பங்களாதேஷ் மக்கள் மத்தியில் மட்டுமின்றி சர்வதேச மட்டத்திலும் அவதானிக்கப்படுகின்ற ஓர் அம்சமாகவே விளங்குகிறது.
இரண்டாவது பங்களாதேஷின் புதிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அதன் மீதான விமர்சனத்தை முன்னாள் பிரதமர் ஹசீனா முன்வைக்கின்ற போது அமெரிக்காவே தன்னுடைய ஆட்சியை கலைத்ததற்கான பின்னணியில் இருந்த நாடு என்று குறிப்பிட்டார். பங்களாதேஷிக்கு சொந்தமான செயின்ட்மார்ட்டின் என்ற தீவினை அமெரிக்கா கோரியதாகவும் தனது அரசாங்கம் அதனை வழங்க மறுத்ததன் பிரதிபலிப்பாகவே தன்னுடைய ஆட்சி கலைக்கப்பட்டது என இந்தியாவில் இருந்து வெளிப்படுத்தியுள்ளார். இந்தியாவுக்கும் பங்களாதேஷிக்கும் சீனாவுக்கும் இடையில் ஒரு நீண்ட உறவு முறையும் முரண்பாடும் புவி தொடர்ச்சியும் பரஸ்பரம் அதிக குழப்பங்களை ஏற்படுத்துகின்ற விதத்தில் காணப்பட்டது. இதனால் இத்தகைய குழப்பங்களை சரி செய்து கொள்வதற்கு எடுக்கப்பட்ட ஒரு நகர்வாக கூட உரையாடல் அல்லது விமர்சனம் எழுந்திருந்தது. ஆனால் ஷேக் ஹசினாவில் அமெரிக்கா பற்றிய அதிர்ச்சிகரமான உரையாடல்கள் தகவல்கள் பங்களாதேஷினுடைய அரசியலில் இந்தியா சீனா மட்டுமன்றி அமெரிக்காவும் ஒரு முக்கிய சக்தி என்பதை கோடிட்டுக் காட்டியது. இதனால் இந்து சமுத்திர அரசியலில் பங்களாதேஷினுடைய கடந்த கால அணுகுமுறைகள் சீனா சார்ந்து இந்தியா சார்ந்த வடிவமைக்கப்பட்டு இருந்தது என்பதும் அதிலிருந்து ஒரு மாற்றத்தை இந்து சமுத்திரம் சார்ந்து அமெரிக்கா முன்னெடுக்கின்ற போது அதனை எதிர்கொள்ள வேண்டிய தேவைப்பாடு பங்களாதேஷிக்கு தவிர்க்க முடியாமல் உள்ளது. இத்தகைய சூழல் இந்து சமுத்திரம் மீது அமெரிக்கா கொண்டிருக்கின்ற கரிசனையும் அதன் போட்டியாளர்களுமே அடிப்படை காரணமாக தென்படுகின்றது. இத்தகைய அனுபவமே இலங்கை தீவிலும் கடந்த காலங்களில் ஏற்பட்டது இலங்கை தீவினுடைய அரசியல் அறகளய என்று அழைக்கப்பட்ட போராட்டமாக அமைந்த போதும் அதனுடைய விளைவை அறுவடையும் மேற்குலக நலன் விரும்பிகளே கைப்பற்றுகின்ற சூழல் ஏற்பட்டது. எனவே இத்தகைய சூழலுக்கான பின்புலம் ஒன்றே முகமது யூரிஸ்னுடைய இடைக்கால தெரிவு சாத்தியப்படுத்தி இருக்கின்றது. வெள்ளை மாளிகை ஹசீனாவினுடைய குற்றச்சாட்டை நிராகரித்த போதும் நடைமுறையில் பங்களாதேஷ் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்கள் சுதேச அரசியல் இருப்பையும் ஆட்சிமுறையினுடைய அடிப்படையில் தகர்ப்பதாகவே காணப்படுகிறது. ஆகவே அந்த நோக்கு நிலையில் பங்களாதேஷினுடைய ஆட்சியானது மேற்கு நலனுக்கு அகப்பட வேண்டிய தேவைகுள் நகருகின்றது. இதில் இந்தியா சீனா மேற்கொள்ள இருக்கின்ற உத்திகளை பொறுத்தே பங்களாதேஷினுடைய எதிர்காலம் கட்டமைக்கப்பட உள்ளது
மூன்றாவது பங்களாதேஷினுடைய புரட்சியானது மாணவர்கள் ஆட்சி மாற்றத்தை திட்டமிட முயன்ற போதும் அத்தகைய ஆட்சி மாற்றம் மேற்குலக நலன் விரும்பிகளின் ஆட்சியாகவே மாறி இருக்கின்றது. இதனால் மாணவர்களுடைய புரட்சி நீண்ட காலமாக வளர்ந்து இருந்த இந்துக்கள் மீதான வன்முறையாக திசைதிருப்பல் வடிவம் கொண்டுள்ளது. இத்தகைய வடிவத்திற்கு ஊடாக புரட்சி தன்னுடைய போக்கினை திசை திருப்பவும் ஒரு புதிய வழிமுறைகள் உடனாக பிரச்சனையினுடைய தீர்வை எட்டவும் அல்லது பிரச்சனைக்குரிய நிலைத்திருப்பை கட்டமைக்கவும் மேற்குலக நாடுகள் திட்டமிடுவதாக தெரிகின்றது. இதில் இந்தியாவினுடைய அணுகுமுறை தற்போது வரைக்கும் எந்தவிதமான வெளிப்படுத்தலையும் கொண்டிருக்காதுள்ளது. இது ஒரு அபாயமான அரசியல் சூழலாகவே தென்படுகின்றது. இது சமுத்திரம் நோக்கிய போட்டித் தன்மையில் அதன் விளிம்பு நாடுகளும் அதனுடைய மையப் பகுதிகளை கொண்டு இருக்கின்ற நாடுகளும் ஒவ்வொரு சர்வதேச சக்திகளாலும் கையாளப்படுகின்ற துயரம் தவிர்க்க முடியாதாக மாறி உள்ளது.
எனவே, இந்து சமுத்திர அரசியலின் விளிம்பில் சிக்கியுள்ள அரசுகளின் பட்டியலில் பங்களாதேசம் ஒன்றாக மாறியுள்ளது பங்களாதேஷஷினுடைய இருப்பு உறுதித்தன்மை பொருளாதார பலம் என்பன அந்த தேசத்தில் நெருக்கடியையும் ஆட்சி குழப்பத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக இட ஒதுக்கீடு என்ற ஒரு அம்சம் மாணவர்களுடைய எழுச்சியை தூண்டியதோடு அது தற்போது இந்துக்கள் மீதான திசை திருப்பலாக மாறி உள்ளது புரட்சி ஆனது இலங்கை தீவின் புரட்சியை போன்று எந்தவிதமான நியாயப்பாடுகளையும் தெளிவான உத்திகளையும் கொண்டிராத அணுகுமுறையுடன் நகருகின்றது. இது படிப்படியாக தெனாசிய நாடுகளை ஸ்திரமற்றதாக்குவதும் குழப்பத்துக்கு உள்ளாக்குவதும் அதன் மூலம் மேற்குலக நலனை நிறைவு செய்து கொள்ளும் உத்தியாக காணப்படுகிறது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினகரன்)
