அரசியல் கட்டுரைகள்

உக்ரைனுக்கான இந்தியப் பிரதமரது விஜயமும் இராஜதந்திர அரசியலும்?

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போர் இரண்டு ஆண்டுகளைக் கடந்து நகர்கிறது. தற்போது ரஷ்சியாவுக்குள் ஊடுருவி தாக்குதலை மேற்கொள்ளும் உக்ரையின் அதிக ஆதரவையும் வெற்றிகளையும் தனதாக்கியுள்ளதாக உரையாட முயற்சிக்கிறது. இதனை மேற்கு ஊடகங்கள் முதன்மைப்படுத்தி வருகின்றன. ஆனால் போரில் எப்போதும் திறன்களையும் ஆயுத பலத்தையும் கடந்து தந்திரங்களும் நுட்பங்களும் போரின் முடிபுகளை தரக்கூடியன. இது ஒர் அரசியல் நோக்கத்தை அல்லது அரசியல் இராணுவ பரிமாணத்தை தேடி கொடுக்கக் கூடியதாக அமைந்து விடுவதுண்டு. ரஷ்சியாவுக்கு அத்தகைய வரலாற்று ரீதியான அனுபவங்கள் உண்டு. ஆனால் தற்போது ரஷ்சியா எதிர்கொள்ளுகின்ற பிரதான எதிரியான உக்ரையின் ரஷ்சியாவின் அயல்நாடு என்பதும் சகோதரத்துவ தேசம் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. இந்த சூழலுக்குள் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 25.8.2024 போலந்திலிருந்து ரயில் பயணம் மூலம் உக்ரையின் தலைநகரான கீவ்வை சென்றடைந்துள்ளார். இரு தலைவர்களும் சந்தித்ததன் அரசியல் விளைவுகளை தேடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகவுள்ளது.

சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு உக்ரைனுக்கு இந்தியத் தலைவர் முதல் விஜயமாக பார்க்கப்படுகிறது. ரஷ்சிய- உக்ரைன் யுத்தத்திற்கு முடிவை எட்டும் பயணமாக அமையக்கூடும் என்ற அரசியல் விமர்சனம் உண்டு. உக்ரேனிய சுதந்திர தினத்தை முன்னிட்டு சந்திப்பை நகர்த்தும் நரேந்திரமோடி அணியானது போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை மேற்கொள்ள உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு செயலாளர் தன்மயா லால் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனுக்கு விஜயம் செய்துள்ள இந்திய பிரதமர் கடந்த மாதம் ரஷ்சியாவுக்கு விஜயம் செய்திருந்தார் அப்போது எழுந்த விமர்சனங்களும் உரையாடப்பட்ட அம்சங்களும் அதே பாணியில் உக்ரைன் ஜனாதிபதியோடு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். போரினால் தேசத்தை கட்டி எழுப்ப முடியாது என்றும் சமாதானத்தின் ஊடாகவோ அல்லது பேச்சுவார்த்தையின் மூலமோ மட்டுமே இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்று கடந்த மாதம் தெரிவித்த அதே விடயங்களை ஜனாதிபதி ஜெலன்ஸிக்கு தெரிவித்துள்ளார். அதனால் அவரது விஜயம் இரு நாடுகளுக்கும் இடையில் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான உத்திகளைக் கொண்டிருக்கின்றது என சர்வதேச விமர்சனங்கள் மேல் எழுந்திருக்கின்றது. இதே நேரம் உக்ரைன் மீது ஐக்கிய நாடு சபை குற்றச்சாட்டுகளை போர் பொறுத்தம் போர்க்கைதிகள் பராமரிக்கப்படுவது பொறுத்தம் முன் வைத்துள்ளது. எனவே இத்தகைய சூழல் உக்ரைன் ஜனாதிபதிக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே முக்கியமான சந்திப்பாக அமையக்கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது அதனை ஆழமாக தேடுதல் அவசியமானது.

முதலாவது, இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் விஜயம் போலந்துக்கு பின்னர் உக்ரையினை நோக்கி நகர்ந்திருப்பது முக்கியத்துவம் கொண்டது. ஊக்ரையின் ஜனாதிபதியை சந்தித்தபோது இந்திய பிரதமருடைய வெளிபாடும் அதிக பேசுபொருளாக மாறி உள்ளது. காரணம் ரஷ்சிய ஜனாதிபதி புட்டினை சந்தித்தபோது அவர் வெளிப்படுத்திய அதே மாதிரியான உணர்வுகள் சார்ந்த நேசிப்புச் சார்ந்த வெளிபாடு ஒன்றை உக்ரையின் ஜனாதிபதியோடு வைத்துக் கொள்ளவில்லை என்பது கவனத்திற்கு உரிய விடயமாகும். இது இந்தியாவின் ரஷ்சியாவுடன் நட்பை அதன் முக்கியத்துவத்தையும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் கருத்தில் கொண்டதாகவே தெரிகின்றது. இதனை சர்வதேச ஊடகங்கள் சுட்டிகாட்டியுள்ளன.

இரண்டாவது, இந்திய பிரதமர் உக்ரேனுக்கான தனது பயணத்தை முதன்மைப்படுத்துகிற போது குறிப்பாக ரஷ்சியாவுக்கு உக்ரையினுக்குமான போரை சமாதானபூர்வமான அணுகுமுறை ஊடாக நிறைவு செய்ய வேண்டும் என்பது கவனம் கொண்டிருந்தார். அதற்கான வெளிப்பாடுகளை போலந்தில் வைத்தேன் தெரிவித்திருந்தார். அவரது விஜயத்தின் பிரதான நோக்கம் பிராந்தி அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையில் நிகழ்கின்ற போரை முடிவுக்கு கொண்டுவருகின்ற முயற்சியின் வெளிப்பாடாக அமைந்திருப்பதை கண்டுகொள்ள முடியும். இந்திஜயப் பிரதமர் தெளிவாக சமாதானத்துக்கான வாய்ப்புகளை உக்ரேன் ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி புட்டினோடு உரையாடிய போது தெரிவித்த அதே கருத்துக்களை மீளவும் உக்ரையின் ஜனாதிபதியின் முன்னிலையில் வெளிப்படுத்தி இருப்பது என்பது இரு தலைவர்களுக்கும் இடையிலான முரண்பாட்டை தீர்த்துக் கொள்கின்ற விதத்தில் நகர்வதாகவே தெரிகிறது.

மூன்றாவது, இந்தியாவைப் பொறுத்தவரை இந்திய ரஷ்சிய உறவு வலுவான ஒன்று என்பதை போர் தொடங்கிய காலத்தில் இருந்து வெளிப்படுத்தியுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது தடவையாக ஆட்சிக்கு வந்த சந்தர்ப்பத்தில் அத்தகைய உறவை மேலும் பலப்படுத்துகின்ற உத்திகளை அதிகம் ஈடுபாடு காட்டி இருந்தார். தற்போது கூட ரஷ்யாவுக்கு விஜயக்கு பின்னரே உக்ரையனுக்கு அவரது விஜயன் அமைந்துள்ளது. ஏறக்குறைய ரஷ்சிய ஜனாதிபதி புட்டினது கருத்துக்களை அல்லது எண்ணங்களை பிரதிபலிக்கும் விதத்தில் உக்ரைனுக்கான விஜயத்தை நரேந்திர மோடி திட்டமிட்டு இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளுதல் வேண்டும். இதன் உள்ளார்ந்த அர்த்தமாக இராஜதந்திர செய்முறை என்பது அதன் நடத்தையிலும் வெளிப்படுத்துகின்ற தகவல்களிலும் அதற்கான கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவத்தின் அடிப்படையிலும் அளவீடு செய்யப்பட வேண்டும். அத்தகைய அளவிட்டுக்குள் இந்தியா ரஷ்சியவுக்கிடையிலான நெருக்கமான உறவை மேலும் ஒரு தடவை உலகத்துக்கு வெளிப்படுத்தி இருக்கிறது. மேற்கு நாடுகள் எத்தகைய உத்தியை வகுத்து இந்தியாவை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கின்ற எல்லா சந்தர்ப்பங்களிலும் ரஷ்சியாவோடு இந்தியா தனது நெருக்கத்தை காட்டுவது என்பது தவிர்க்க முடியாத புவிசார் அரசியல் நியதியைக் கொண்டது என்பதை இந்திய பிரதமரது உக்ரையின் விஜயம் உணர்த்துகின்றது.

நான்காவது, இந்திய பிரதமரது உக்ரையின் விஜயம் உக்ரேனுக்கான அல்லது மேற்குலகத்திற்கான அணுகுமுறையாக அல்லது அதன் பிரதிபலிப்பாக எழுந்த ஒன்று என்று குறிப்பிடுவதை விட ரஷ்சியாவின் இலக்குகளை நோக்கங்களை வெளிப்படுத்துகின்ற நோக்கோடு நரேந்திர மோடியின் விஜயம் அமைந்துள்ளது. இதனை புரிந்து கொள்வதற்கு அதனுடைய முக்கியத்துவம் சார்ந்து உரையாடப்பட்ட விதம் சார்ந்தது நரேந்திர மோடி ஜெலன்ஸ்கியை சந்திப்பின் போது வெளிப்படுத்தப்பட்ட உடல் மொழி சார்ந்தது புரிந்து கொள்ளப்பட வேண்டும். நரேந்திர மோடிக்கும் புட்டினுக்கும் இடையிலான சந்திப்பின் உடல் மொழியையும் உக்ரையின் ஜனாதிபதியுடனான சந்திப்பின் உடல் மொழியையும் கவனத்தில் கொள்வது மிக முக்கியமானது. இத்தகைய இராஜதந்திர செய்முறை ஒரு வலுவான பிராந்திய சூழலையும் கீழைத்தேச அரசியல் சூழலையும் வெளிப்படுத்தி இருக்கிறது. கீழைத்தேச நாடுகள் அல்லது கீழைத்தேச ஏகாதிபத்தியங்கள் தமக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவதில் கவனம் கொள்ளுகின்றனர் என்பதே இதன் வெளிப்பாடாக தெரிகிறது.

எனவே, நரேந்திர மோடியின் உக்கரையின் பயணம் அரசியல் இராணுவ ரீதியான முக்கியத்துவத்தை கொண்டது. உக்கிரனுடைய ஊடுருவல் தாக்குதல் ரஷ்யாவுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற போது இந்த விஜயத்தினுடைய முக்கியத்துவம் அதிகமான அரசியல் வெளிப்பாடுகளையும் இராஜதந்திர உத்திகளையும் இராணுவ ஒழுங்கு முறையில் நிலவக்கூடிய மாற்றங்களையும் தெரிவிப்பதாகவே அமைந்திருக்கின்றன.

-பேராசிரியர் கே ரீ கணேசலிங்கம்-