அரசியல் கட்டுரைகள்

புவிசார் பூகோள அரசியலை கையாளும் புதிய அரசாங்கம்?

தென் இலங்கையின் புதிய அரசாங்கம் பாராளுமன்றத் தேர்தலை வெற்றி கொள்வதற்கான உத்திகளை வகுத்துக் கொண்டிருக்கின்ற போது புவிசார் மற்றும் பூகோள அரசியல் சக்திகளின் இலங்கை தீவு பொறுத்தான கவனம் அதிகமாகி உள்ளது. அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஐரோப்பிய யூனியன், சர்வதேச நாணய நிதியம் என்பனவற்றின் பிரதிநிதிகளும், தூதுவர்களும் இலங்கைத் தீவின் அரசியலில் அதிக ஈடுபாட்டை காட்டி வருகின்றன. அதேபோன்று இந்தியாவும், சீனாவும் மறுபக்கத்தில் இலங்கையுடன் உறவை பலப்படுத்துவதில் கரிசனை கொண்டு செயல்பட்டு வருகின்றன. இக்கட்டுரையும் இந்திய இலங்கை உறவு தொடர்பில் உரையாடலை முதன்மைப்படுத்த முயலுகிறது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நெடுஞ்சாலை மற்றும் ரயில் பாதை இணைப்பு திட்டம் குறித்து ஆராயப்படுவதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் பிரதாப் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். இத்தகைய இரு நாட்டுக்கும் இடையிலான இணைப்பு திட்டத்துக்கு உரித்தான முழு செலவையும் இந்தியா பொறுப்பிற்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய பெரும் இருதரப்பு திட்டம் இராமேஸ்வரம்-திருகோணமலை வரையிலான நெடுஞ்சாலை மற்றும் ரயில் பாதை அமைக்க உள்ளது. இரு நாடுகளுடைய வர்த்தகத்தை அதிகப்படுத்தவும்; அதிகரித்துள்ள கட்டணச் செலவை கட்டுப்படுத்தவும் உதவும் எனவும்; இது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இத்திட்டம் இரு தரப்புக்கும் உதவியாக அமைவது ஐரோப்பா உட்பட ஏனைய நாடுகளுடனான வர்த்தகத்துக்கு உதவும் எனவும்; இந்திய வர்த்தகர்கள் இலங்கையிலிருந்து நன்மையப் பெற முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் ஒக்டோபர்-16, 2024அன்று இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா கொழும்பில் நடைபெற்ற பட்டைய கணக்காளர் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது பின்வருமாறு தெரிவித்துள்ளார். “இரு நாடுகளும் கடந்த கால தடங்கல்களைக் கடந்து பொதுவான இலக்குகளை அடைவதற்கான மனோநிலை மாற்றிக் கொள்ள வேண்டும்” எனக்குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்குமான வலுவான பங்காளித்துவத்தின் அவசியத்தை வலியுறுத்திய இலங்கைக்கான இந்திய தூதுவர் இரு நாடுகளது தலைவிதிகள் பின்னிப் பிணைந்தவை என சுட்டிக்காட்டி உள்ளார். “இரு நாடுகளும் இணைந்து வளர வேண்டும்; செழிப்படைய வேண்டும்; இரு நாட்டின் வரலாறு புவியியல் பிணைக்கப்பட்டிருக்கின்றது; இரு நாடுகளும் ஈடு செய்ய முடியாதவர்கள்; இன்றியமையாதவர்கள்; பிரிக்க முடியாதவர்கள்; பிளவுகளை உருவாக்கும் எந்த முயற்சியும் இரு நாடுகளதும் பகிரப்பட்ட அபிலாசைகள் மற்றும் எதிர்காலப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது” எனத் தெரிவித்துள்ளார்.

மேற்குறிப்பிட்ட இரு கருத்துக்களும் இலங்கை இந்திய உறவில் பிரதான பங்களிப்பை மற்றும் முக்கியத்துவத்தை உணர்ந்ததன் பிரதிபலிப்பை காட்டுகிறது. இந்தியா இலங்கையோடு கொள்ளுகின்ற தரைவழி தொடர்பு உறவுரீதியில் அதிக பயன்களையும் மாற்றங்களையும் ஏற்படுத்தக் கூடியது. அவ்விடயத்தை விரிவாக விளங்கிக் கொள்வது அவசியமாகிறது.

முதலாவது, இலங்கைத் தீவின் புதிய ஆட்சியானது சர்வதேச சக்திகளாலும் பிராந்திய சக்தியாலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக அமைந்தாலும், புதியது நெருக்கடி ஏற்படுத்தக் கூடியதென கருதப்படும் ஒரு ஆட்சி முறையாகும். இத்தகைய ஆட்சி முறையை பூகோள அரசியலும், புவிசார் அரசியலும் தமக்கு இசைவாக கட்டமைப்பதில் அதிக முனைப்போடு பொருளாதார அரசியல் ராணுவ விடயங்களில் கரிசனை கொண்டு வருகின்றது. இத்தகைய கரிசனை இரண்டு பிரதானமான தரப்புகளால் மேற்கொள்ளப்படுகிறது. புவிசார் அரசியல் செல்வாக்கு கூடிய இந்தியாவில் பூகோள அரசியலில் பங்காளியான அமெரிக்காவாலும்; இன்னொரு தரப்பான சீனாவாலும் பிரயோகப்படுத்தப்படுகிறது. இதில் மேற்குலகத்தின் வெறுப்புகளை கையாளவும், எதிர்கொள்ளவும் இந்தியாவையும் சீனாவையும் புதிய அரசாங்கம் அரவணைத்துக் கொள்வதில் அதிக கவனம் கொள்வதாக தெரிகிறது. அதிலும் இந்தியாவை அரவணைத்துக் கொண்டு மேற்கையும் சீனாவையும் சரியான தளத்தில் நிலை நிறுத்துவது என்பதே தற்போதைய ஆட்சியின் பிரதான இலக்காக தெரிகின்றது. இன்னொரு வகையில் குறிப்பிடுவதானால், பூகோள அரசியலை புவிசார் அரசியல் சக்திகளின் ஒத்துழைப்போடு எதிர்கொள்வது ஆகும். மறுபக்கத்தில் பூகோள அரசியல் சக்திகளை முன்னிறுத்திக் கொண்டு புவிசார் அரசியல் சக்தியை பிரயோகப்படுத்துவது ஆகும். இவ்வகை இரு முனைப்புகளோடு இவ்அரசியல் களம் கையாளப்படத் தொடங்கியுள்ளது.

இரண்டாவது, புவிசார் அரசியலின் பிரதான பங்காளியான இந்தியா இலங்கையோடு நெருக்கமான உறவை கொண்டிருக்கிறது. இதனை சரியாகப் பயன்படுத்துதல் என்பது புதிய அரசின் நோக்கமாக தெரிகின்றது. தென்னிலங்கையில் எழுந்திருக்கின்ற விமர்சனங்களில் கடந்த காலங்களில் ஓரங்கமாக இருந்த புதிய அரசு, தற்போது அதனை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. அதாவது இராமேஸ்வரத்துக்கும் இலங்கைத் தீவுக்குமான தரைவழி தொடர்பு வடக்கின் பொருளாதார வாய்ப்புகளை அதிகரிக்கும் எனவும்; தென்னிலங்கை அந்த வாய்ப்புகளை அடைய முடியாத ஒரு நிலை ஏற்படும் என்றும் குறிப்பிடப்படுகின்ற விமர்சனம் முக்கியமானதாக காணப்படுகிறது. அதாவது வடக்கு வளர்கிறது; தெற்கு தேய்கிறது என்ற தமிழகத்தின் எண்ணத்தை பிரதிபலிக்கின்ற விதத்தில், தென்னிலங்கை ஆய்வாளர்களும் அரசியல்வாதிகளும் விவாதித்து வருகின்றனர். அத்தகைய விவாத பொருளை கடந்த காலங்களில் புதிய அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டிருந்தனர். ஆனால் தற்போது அத்தகைய விடயத்தை சவாலாக எதிர்கொள்ளுகின்ற நிலை ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. அதேநேரத்தில் ஆட்சியாளர்கள் தமக்கு கிடைத்த ஆட்சியையும் வாய்ப்பையும் தவறவிட கூடாது என்ற எண்ணத்தில் இதனை ஒரு உபாயமாக கொள்வதில் கவனம் கொள்ளத் தொடங்கியுள்ளனர். இலங்கைத் தீவின் அரசியல் என்பது உள்நாட்டின் பரிமாணங்களை, பூகோள புவிசார் அரசியல் பரிமாணங்களுக்குள்ளால் அணுகுவதாகவே அமைந்துள்ளது. அத்தகைய அணுகுமுறைக்குள் புதிய அரசு செயல்பட தொடங்கி இருக்கிறது. அதனால் ஆட்சியையும் இலங்கைத் தீவின் எதிர்காலத்தையும் கட்டமைத்துக் கொள்ள முடியும் என புதிய அரசாங்கம் கருதுகிறது. அதற்கான விட்டுக் கொடுப்புகளை செய்வதற்கும் பயணிப்பதற்கும் தயாராக உள்ளது.

மூன்றாவது, இந்தியாவைப் பொறுத்தவரை இலங்கைத் தீவோடு சேர்ந்து பயணிப்பதும்; பிற சக்திகளின் தலையீட்டை கட்டுப்படுத்துவதும் அதன் முக்கிய நோக்கமாக உள்ளது. இலங்கைக்கான இந்திய தூதுவாரது உரையும் அத்தகைய எண்ணத்தை முழுமையாக பிரதிபலிப்பாகவே அமைந்திருக்கின்றது. இலங்கைக்கு இந்தியாவுக்கும் இடையிலான புவிசார் அரசியலை துல்லியமாக அளவீடு செய்ததோடு அதற்கான முக்கியத்துவத்தை கோடிட்டு காட்டியுள்ளார். இரு தேசங்களின் வளர்ச்சியும் நட்புறவிலும், புரிந்துணர்விலும், விட்டுக் கொடுப்பிலும் தங்கி இருக்கின்றது என்பதை கோடிட்டு காட்டி உள்ளார். இதுவே இந்தியா பிராந்திய அரசியலை கையாள முனைகின்ற நடவடிக்கையாகும். தென்னாசியாவில் பல நாடுகளோடு முரண்பட்டுக் கொள்ளும் இந்தியா, இலங்கைத் தீவை பிற சக்திகளுக்கு விட்டுக் கொடுக்காது கையாள வேண்டும் என கருதுகின்றது. ஹம்பாந்தோட்டைக்கு பதிலீடாக இலங்கை-இந்திய தரைவழி பாதை அவசியமென கருதுகின்றது. அதனை சாத்தியப்படுத்துகின்ற சூழல் ஒன்றை உருவாக்கி கொள்ள, இலங்கை தீவில் புதிய ஆட்சி ஒத்துழைக்கும் எனவும்; அதற்கான வாய்ப்புகளை புதிய அரசின் காலத்தில் கட்டமைக்க முடியும் எனவும் இந்தியா கருதுகின்றது. ஆனால் இந்தியாவில் எதிர்பார்க்கையும் இந்திய அரசின் அணுகுமுறைகளும், தென்னிலங்கையில் ஏற்பட இருக்கின்ற எதிர்ப்புகளாலுமே கட்டமைக்கப்பட கூடிய வாய்ப்பு இருக்கின்றது. அதனால் தென்னிலங்கை இந்தியா சார்ந்த கொள்கையில் புதிய மனோநிலையை உருவாக்க வேண்டும் என்பது அவசியமானதாக தெரிகின்றது.

எனவே, இலங்கை-இந்திய உறவு பலமான ஒரு நிலைக்குள் உள்வாங்கப்படுகின்ற சூழல் ஒன்றை புதிய அரசும் இந்திய தரப்பும் முன்மொழிந்துள்ளன. இதற்கான முன்மொழிவை வெற்றிகரமாக நகர்த்துவதில் தென்னிலங்கை எதிர் கட்சிகளதும், மகா சங்கக்ககளதும் முடிவுகளிலேயே அதிகம் தங்கி உள்ளது. ஈழத் தமிழர்களை பொறுத்தவரையில் இத்தகைய அரசியலில் வெறும் பார்வையாளர்களாக மட்டும் செயல்படுகின்ற நிலைக்கே தள்ளப்பட்டுள்ளனர். அவர்களிடம் காணப்படும் பலவீனமான சூழல் என்பது, எவ்வகை அரசியல் கையாளுகின்ற திறன்களை இல்லாமல் செய்துள்ளது. அதனால் இலங்கைத் தீவின் அரசியலில் ஒரு பங்குதாரராகவும், அதனை பயன்படுத்தும் திறன் உள்ளவர்களாகவும் அவர்களது இருப்பும் அணுகுமுறைகளும் இல்லாத சூழல் ஒன்றை காண முடிகின்றது. அதனை நோக்கி ஈழத்தமிழர் உடைய அரசியல் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் தற்போதைய ஆட்சி ஈழத்தமிழர்களுடைய அரசியலை சரியான முறையில் வடிவமைப்பதற்கும், எழுச்சி பெற செய்வதற்கும் வாய்ப்பான காலமாக அமைந்திருக்கின்றது. அதனை மேற்கொள்கின்ற அரசியல் தரப்புகளோ, சிவில் தரப்புகளோ தயார் இல்லாத நிலையில் இத்தகைய அரசியல் வெறுமையான வழியை ஈழத்தமிழர்களுக்கு தந்துள்ளது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)