April 30, 2026
அரசியல் கட்டுரைகள்

அரசியல் உள்நோக்கங்களைக் கொண்ட ஜனாதிபதியின் வடக்கு விஜயம்?

இலங்கையின் ஜனாதிபதி அநுரா குமாரதிசாநாயக்க வடக்குக்கான விஜயத்தை மேற்கொண்டு அதிக அபிவிருத்தி திட்டங்களை தொடக்கி வைத்துள்ளார். குறிப்பாக சர்வதேச கிரிக்கெட் மைதானம் கச்சதீவு-நெடுந்தீவு ஒன்றிணைந்த உல்லாசப்பயணத்துறை வட்டுவாகல் பாலம் புணரமைப்பு தெங்கு அபிவிருத்தி வலயம் போன்ற பல விடயங்களுக்கான பூர்வாங்க வேலைகளை தொடக்கி வைத்தார். இவ்வாறு வடக்குக்கு பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் அதிக முதன்மைப்படுத்திவரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியிலிருந்து வடக்கை தெற்கோடு இணைப்பதிலும் இனவாதம் பற்றிய உரையாடலை முதன்மைப்படுத்துவதிலும் கவனம் கொண்டு செயல்பட்டு வருகிறது. இக்கட்டுரையும் ஜனாதிபதியின் வடக்கு விஜயம் ஏற்படுத்தி இருக்கக்கூடிய அரசியல் உள்நோக்கங்களை அடையாளப்படுத்துவதாக உள்ளது.

ஜே.வி.பி. அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இனவாதம் மீண்டும் ஏற்படாமல் தடுப்பதற்கு அனைத்து வழிமுறைகளையும் அரசாங்கம் கொண்டிருப்பதாக திரும்ப திரும்ப உரையாடி வருகிறது. இனவாதமானது ஓர் இனத்தின் மீது ஆதிக்கம் செய்ய இனம் அரசியல் பொருளாதாரம், இராணுவ மற்றும் பண்பாட்டு ரீதியில் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பை அடையாளப்படுத்துவதாகவும் கடந்த காலத்திலும் எதிர்காலத்திலும் அத்தகைய ஆக்கிரமிப்புக்கான வரைமுறைகளை கொண்டிருப்பதும் இனத்தின் அடிப்படை வாழ்வாதாரங்களையும் வாழ்வியல் முறைகளையும் அந்த இனம் வாழும் நிலத்தின் எல்லைகளையும் பண்பாட்டுத் தொடர்களையும் அழித்தொழிப்பது இனவாதமாகும். இலங்கை தீவை பொருத்தவரையில் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாகவே தமிழ் இனத்தின் மீது ஆக்கிரமிப்பையும் படுகொலைகளையும் நிகழ்த்தி ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்திருந்தார். சிங்கள மக்களை தமிழ் மக்களுக்கு எதிரானவர்களாக ஆக்குவதில் கவனம் கொண்டு அரசியல் அதிகாரத்தை பிரயோகித்தனர். அத்தகைய அணுகுமுறைகளை அடையாளம் காணுகிற செய்முறைகள் எல்லாம் கடந்த காலத்திலும் சமகாலத்திலும் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் நிட்சிக்குள்ளேயே ஜே.வி.பி. அரசாங்கம் அதன் ஜனாதிபதியும் காணப்படுகின்றனர். அவ்வாறான ஒரு அரங்கொன்று முள்ளிவாய்க்காலிலும் சமகாலத்தில் செம்மணியிலும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. வடக்கின் ஜனாதிபதியின் விஜயம் செம்மணியை தவிர்க்கப்பட்டதோடு அது பற்றிய உரையாடலில் துயரம் என்ற வார்த்தையோடு ஜனாதிபதி கடந்து செல்கின்றுள்ளார். அரசாங்கம் குறிப்பிடுகின்றது போல் செம்மணி அகழ்வில் எத்தகைய தலையிடும் அரசாங்க மேற்கொள்ளாது. இத்தகைய சூழலை கருத்தில் கொள்ள தவறிய ஜனாதிபதி தமிழர்கள் கோரிய சர்வதேச விசாரணைக்கு பதில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை சிபர்சு செய்துவிட்டு சென்றுள்ளார். அவ்வாரெனில் ஜனாதிபதியின் வடக்கு விஜயம் எதற்க்கானது என்ற கேள்வி முக்கியமானதே. அதற்கான பதிலைத் தேடுவது அவசியமானது.

முதலாவது ஜனாதிபதியின் வடக்கு விஜயம் நிகழ்கின்ற காலப்பகுதி ஜெனீவாவில் மனித உரிமை பேரவை கூட்ட தொடர் நிகழ்கின்ற காலப்பகுதியாகும். ஜே.வி.பி. அரசாங்கத்திற்கு சர்வதேச மனித உரிமை பேரவையின் முன்னிலையில் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஈழத்தமிழர்களோடு இணைந்து செயல்படுவதற்கான எண்ணங்களைக் கொண்டிருக்கின்றது என்பதை பரிந்துரை செய்வது அவசியமானதாக உள்ளது. தென் இலங்கையில் தீவிரவாத அரசியல் தரப்புக்களின் நலன்களையும் ஆயுதப்படைகளின் நலன்களையும் பாதுகாக்கும் பொறுப்பில் செயல்பட வேண்டியது அவசியமானதெனக் கருதுகிறது. அதேநேரம் அரசாங்கம் வடக்கு கிழக்குச் சார்ந்து முன்னெடுக்கும் அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் முதன்மைப்படுத்துவதன் ஊடாக சர்வதேச மனித உரிமை பேரவையை திருப்திப்படுத்த வேண்டும். அதனால் உள்நாட்டு நீதிப் பொறிமுறைகளை முன்னிலைப்படுத்த முடியும் என்பதை அரசாங்கம் திட்டமிடுகிறது. ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தின் பிரதான உள்நோக்கமாகத் தெரிகிறது. வடக்குக்கு அதிகமான அபிவிருத்தி திட்ட வாய்ப்புகளை வழங்குவதில் இந்த அரசாங்கம் பாரபட்சமற்ற முறையில் இயங்குவதாகவும் மனித உரிமை பேரவைக்கும் அனுசரணை வழங்கும் நாடுகளுக்கும் காட்சிப்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு உண்டு. அதன் நிமித்தமே ஜனாதிபதியின் வடக்கு விஜயம் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

இரண்டாவது வடக்குக்கான விஜயத்தை முக்கியமான அம்சமாக கச்சதீவு விவகாரம் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உடன்படிக்கையின் அடிப்படையில் கைமாற்றப்பட்ட கச்சதீவு தமிழக அரசியல்வாதிகளில் உரையாடலுக்குள்ளால் அதன் எதிர்ப்புவாதத்தை வெளிப்படுத்தும் விதத்தில் அணுகல் ஒன்றை ஜே.வி.பி. அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கை தீவின் நிலப்பரப்பின் அங்கமான கச்சதீவு பொறுத்து இலங்கையின் ஜனாதிபதி மற்றும் அவர் தலைமைதாங்கும் அமைச்சரவை இத்தகைய விவாதங்களும் முன்வைக்கப்பட வேண்டிய தேவை இல்லாத சூழலில் அதனை ஒரு உரையாடலுக்குரிய களமாக ஜனாதிபதியின் வடக்கு விஜயன் கொண்டு வந்திருக்கிறது. தமிழகத்துக்கும் ஈழத்தமிழர்களுக்குமான உறவில் இது அதிக நெருடலை தோற்றுவித்திருக்கிறது. மீனவர் விவகாரமும் அவ்வாறான ஒன்றாகவே மாறி இருக்கிறது. இது சாதாரண மட்டத்தில் அரசியல்வாதிகளின் மக்கள் அரசியல் நோக்கிய திசை திருப்பதற்கான உத்தி மட்டும் டிஎன்றுஉ கடந்து செல்ல முடியாது. அதற்கும் அப்பால் அரசாங்கத்தின் நடபுச் சக்தியான சீனாவை திருப்திப்படுத்துவதற்கான நகர்வாகத் தெரிகிறது. ஜனாதிபதியும் அமைச்சர்களும் கொடுத்த முக்கியத்துவம் அதன் உள்நோக்கத்தை தெளிவுபடுத்துகிறது. முன்னாள் இலங்கை பிரதமர் சினிமாவோ பண்டாரநாயக்கா சீனாவுடன் கைகோர்த்து விடக் கூடாது என்பதற்காக ஈன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி கச்சதீவை கையளித்து இலங்கை இந்திய உறவின் நெருக்கத்தை உத்தரவாதப்படுத்தியிருந்தார். ஆனால் தற்போது அத்தகைய கச்சதீவு இந்தியாவின் கண்காணிப்புக்குள் இருந்து விலகுகிறது என்ற நிலைப்பாட்டை காணுகின்ற சூழலில் இந்திய-சீன நட்பு பலமடையும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியின் கச்சதீவு தொடர்பான நடவடிக்கை நிகழ்ந்துள்ளது. ஜனாதிபதியின் வடக்கு விஜயம் வேறொரு கோணத்தில் பிரஸ்தாபிக்கப்படுவதற்கான களம் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. அது ஈழத்தமிழர்-தமிழகம் பொறுத்து உரையாடலாக மாறி இருக்கின்றது.

மூன்றாவது ஜனாதிபதி இலங்கை நாட்டின் அனைத்து மக்களுக்குமான ஜனாதிபதியாகவே பார்க்கப்படுகின்றனர். அவரது வருகை நீண்ட போராட்டங்களை துயரங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்ற தமிழ் மக்களை நோக்கி பார்வை கவனம் கொள்ளவில்லை. செம்மணி சார்ந்து நீண்ட துயரத்தை அனுபவித்த தமிழ் மக்கள் தொடர்பில் எத்தகைய எண்ணமும் வெளிப்படுத்தவில்லை. காணாமல் போனவர்களின் தொடர் போராட்டங்களும், மன்னார் காற்றாலை தொடர்பிலான எந்தக் கரிசனையும் வெளிப்படுத்தாது ஜனாதிபதி வடக்கு விஜயம் நிறைவு பெற்றது. மாறாக கிரிக்கெட் மைதானத்திற்கும் முள்ளிவாய்க்கால் பாலத்துக்கும் அவை போன்ற அபிவிருத்தி திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் நடந்து முடிந்துள்ளது. இவ்வாறு கடந்த கால ஜனாதிபதிகளும் அடிக்கல் நாட்டுவதும் திறந்த கட்டிடத்தை மீள திறப்பதும், புதிய அபிவிருத்தித் திட்டங்களை முன்மொழிவதுவதும் வளமையான ஒன்றாகவே தெரிகிறது. ஜனாதிபதி அதிகாரம் என்பது இலங்கைத் தீவின் இனவாதத்தின் ஒரு அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. அதற்கு இருக்கும் அதிகாரமும் அதன் பிரயோகமும் அதிதீவிரமான இனவாத பிம்பத்தை கடந்த காலம் முழுவதும் தந்திருக்கின்றது. விடுதலை, சுதந்திரம், தன்னாதிக்கம் பற்றிய விவாதங்களை கொண்டிருக்கும் இடதுசாரி அரசாங்கம் அதிகார மமதையில் செயல்படும் ஜனாதிபதி பதவியின் போக்கு என்பது இனவாதத்தின் போக்காகவே காணப்படுகிறது. ஜனாதிபதியின் வடக்கு விஜயம் அவர் முன்வைத்த அபிவிருத்தி திட்டங்களின் அடிப்படைகள் அதனையே உணர்த்துகிறது. தமிழ் மக்கள் நீதிப் பொறிமுறையின் முன் நிறுத்தப்பட்டுள்ளார்கள். அவர்கள் கோருவதெல்லாம் தம்மீது நிகழ்த்தப்பட்ட அநீதிக்கான நியாயம் மட்டுமே. அதற்கான பரிகாரங்களையோ நியாயாதிக்க செய்முறைகளையும் முன்வைக்காது ஜனாதிபதி தனது அதிகாரத்தை வெளிப்படுத்தும் விதத்தில் அபிவிருத்தி திட்டங்களையும் அடிக்கல் நாட்டும் நிகழ்வுகளையும் மேற்கொண்டு விட்டு இனவாதத்தை மீண்டும் அனுமதிக்க முடியாது என்று கூறுவது அரசாங்கத்தின் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

நான்காவது வடக்கு தமிழ் மக்களை திருப்திப்படுத்துவது. துமிழ் மக்களுடன் ஜே.வி.பி இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துவது ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தின் நோக்கங்களில் ஒன்றாகும். தமிழ் மக்களோடு ஜே.வி.பி. அரசாங்கம் செயல்படுகிறது என்பதை தெரிவிப்பதன் மூலம் சர்வதேசப் பொறிமுறையை மட்டுமல்ல தமிழ் மக்களையும் கையாளுவது தேவையாக உள்ளது. கடந்த இரண்டு தேர்தல்களிலும் வழங்கிய எத்தகைய உறுதிமொழிகளும் நிறைவேற்றப்படாத நிலையில் மீளவும் வாக்குறுதிகளை வழங்குவதில் கவனம் கொண்டு அரசாங்கம் செயல்படுகிறது. ஜே.வி.பி ஆட்சியில் வாக்குறுதிகளால் தமிழ் மக்கள் நிறைந்துள்ளனர். நடைமுறையில் எதுவுமற்றவர்களாக உள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள், செம்மணி புதைகுழி, பயங்கரவாத தடைச்சட்டம் எதற்கும் தீர்வற்ற நிலையில் முன்வைக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் எத்தகைய விளைவை தரப் போகின்றதென்பது கேள்விக்குரியதே. அவை ஒவ்வொன்றும் தென் இலங்கை மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் படையினருக்கும் சேவை செய்வதாகவே அமையும்.

எனவே இனவாதத்தின் வலிகளை சுமந்துள்ள ஈழத்தமிழர்களின் கடந்த கால வரலாற்று துயரை மீட்டெடுக்க முடியாத ஜே.வி.பி.இன் ஆட்சியும் இலங்கைத்தீவில் எத்தகைய அபிவிருத்தித் திட்டத்தையும் அடிக்கல் நாட்டுக்களையும் செய்தாலும் அதன் விளைவு பூச்சியமாகவே அமையும். ஜனாதிபதி சர்வதேசத்துக்கு ஒரு முகத்தையும் தென்னிலங்கைக்கு இன்னோர் வடிவத்தையும் ஈழத்தமிழருக்கு புதிய வடிவத்தையும் காட்டுகின்ற அணுகுமுறையில் வெற்றிகரமான இடதுசாரி தலைவராக காணப்படுகின்றார். ஈழத்தமிழரின் எலும்புக்கூடுகள் மேல் சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டப்படுகிறது என்பது பண்பாட்டு ரீதியான இன்னொரு இனப்படுகொலையாகவே தெரிகின்றது. உண்மையான நீதியே நியாயமான அபிவிருத்தியை சாத்தியப்படுத்தும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)