June 24, 2026
அரசியல் கட்டுரைகள்

நியூயோர்க் நகரத்தின் மேயரான முஸ்லீமும் அமெரிக்க அதிகார வர்க்கமும்?

அமெரிக்க அரசியல் வரலாற்றில் புதிய மாற்றத்திற்கான நகர்வென்று நியூயோர்க் நகர மேயர் தேர்தலில் நிகழ்ந்து முடிந்துள்ளது. அமெரிக்கா முதலாளித்துவத்தின் மேலாதிக்கத்தை உலகம் முழுவதும் பரப்பியதோடு அதன் மீதான செல்நெறியை உலகளாவிய ரீதியான அதிகாரத்துக்கு வித்திட்டிருந்தது. கறுப்பர்கள் மீதான அடக்கு முறையும் அடிமைத்தனத்தால் பிணைக்கப்பட்டு இருந்த மனித சமூகத்தின் எண்ணங்களை முற்றாகவே நிராகரித்துக் கொண்டு எழுச்சி பெற்ற ஒரு தேசமாக அடையாளப்படுத்தப்படுகிறது. அத்தகைய சூழலில் இருந்து நியூயோர்க் நகரத்தை மீட்டெடுப்பதில் ஜனநாயகக்கட்சி வேட்பாளர் சொரான் மம்டானியின் (Zohran Mamdani) வெற்றி(50.4%) பெற்றிருக்கின்றார். அவர் ஒரு ஆசியனாக மட்டுமன்றி முஸ்லீமாகவும் முதல் முஸ்லீம் மேயராகவும் 1892 ஆண்டுக்கு பின்னர் இளம் மேயராகவும் (34 வயது) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியப் பெற்றோருக்கு உகண்டாவில் பிறந்த மம்டானி இளம் வயதில் நியூயோர்க்கில் குடியேறினார். 2018 இல் அமெரிக்க குடியுரிமையை பெற்றார். இக்கட்டுரையும் மம்டானியின் வெற்றிக்கான காரணங்களை தேடுவதோடு விளைவுகளையும் அடையாளப்படுத்தவும் முயலுகிறது.

முதலாவது குடியரசு கட்சிக்கு எதிரான மனோநிலை ஒன்று அமெரிக்க தேசத்தின் எழுச்சி பெற்றுவருகிறது. அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்ன் ஆட்சியின் அணுகுமுறைகள் காரணமாகக் கொண்டு குடியரசு கட்சி மீதான நிராகரிப்பும் எதிர்ப்பும் பெரிய அளவில் வளர்ந்துள்ளது. நியூயோர்க் நகரம் உட்பட கணிசமான நகரங்களின் ஆட்சியை ஜனநாயக கட்சி கைப்பற்றுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. வேர்ஜினா மற்றும் நியூஜேர்சி ஆளுனர் தேர்தலிலும் ஜனநாயகக் கட்சியினர் வெற்றி பெற்றுள்ளனர். இச்சூழலிலேயே நியூயோர்க் நகரத்துக்கான தேர்தலிலும் ஜனநாயக கட்சி குடியரசு கட்சியை பின் தள்ளிவிட்டு வெற்றியை பெற்றிருக்கின்றனர். இவற்றிற்கான அடிப்படை மாற்றம் பற்றிய செய்தியாகவே தெரிகிறது. அமெரிக்க வரலாற்றில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை தந்துள்ளது. குறிப்பாக முஸ்லீம் ஒருவரின் வெற்றி என்பது குடியரசுக் கட்சியினருக்கும் ஜனாதிபதி ட்ரம்ப்க்கும் சவாலானதாகவே அமைந்துள்ளது.

இரண்டாவது நியூயோர்க் நகர் மேயருக்கான தேர்தல் முஸ்லீம் ஒருவர் வெற்றி பெறுவதற்கான களநிலவரம் தனித்துவமானதாகவே நோக்கப்படுகிறது. மக்களோடு மக்களாக மக்களின் எண்ணங்களில் இருந்து பிரதிபலிப்புகளை முதன்மைப்படுத்திக் கொண்டு அத்தைய வெற்றியை மம்டானி தக்கவைத்துள்ளார். சாதரண மக்களுடனான நெருக்கமும் சமூக ஊடகங்களுடனான பலமான தேர்தல் பிரச்சாரம் மற்றும் தன்னார்வ பணியாளரின் ஈடுபாடு முதன்மையானதாக அமைந்திருந்தது. மம்டானியின் அணுகுமுறைகளும் மக்களுடைய நலன்களை நிறைவு செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பதற்கான உத்திகளும் அவரது வெற்றியை உறுதிப்படுத்தியது. வெளிப்படையாக கூறுவதானால் மக்கள் சார்ந்த வெற்றிகரமான அணுகுமுறையே வெற்றிக்கான அடிப்படையாக கொள்ளப்படுகின்றது. அமெரிக்க ஜனாதிபதியின் மிரட்டலும் போராட்டங்களும் காணப்பட்ட போதும் மம்டானி வெற்றியை அடைந்துள்ளார்.

மூன்றாவது நியூயோர்க் நகரத்தின் மக்கள் மீதான டொனால்ட் ட்ரம்மின் அணுகுமுறைகள் அதிகமான அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. குடியரசு கட்சியினர் நியூயோர்க் நகரை ஆட்சி செய்த போதும் சிறுபான்மை இனங்களையும் குடியேற்றவாசிகளையும் அடக்குமுறைக்கு உட்படுத்தியதோடு பாரிய எதிர்ப்புணர்வு ஆட்சிக்கு எதிராக அந்த மக்கள் எதிர்கொண்டிருந்தனர். இதனால் ஒரு மாற்றத்தை நோக்கி நகர வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டது. இதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதில் நியூயோர்க் நகர மேயர் அதிக விட்டுக் கொடுப்புகளையும் மக்களோடு சேர்ந்து பயணிக்கின்ற எண்ணத்தையும் அதிகம் பிரதிபலிப்பவராக காணப்பட்டார். இதனால் மக்கள் அவரோடு இணைந்து பயணிக்கவும் அவரது வெற்றியை உறுதிப்படுத்தவும் பங்காற்றுவார்களாக காணப்பட்டனர்.

நான்காவது அமெரிக்க வரலாற்றில் கறுப்பர்களின் ஜனநாயக ரீதியான போராட்டங்கள் அமெரிக்க ஜனநாயகத்தை நவீன வடிவத்தில் உள்ளாக்கியது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நியூயோர்க் மேயர் குடியேற்றவாசிகளின் நகரமான நியூயோர்க்கை தமது ஆதிக்கத்துக்குள் வைத்திருக்கும் வலுவை ஏற்படுத்திக் கொண்டார். அத்தகைய வலுவானது குடியேற்ற வாசிகளின் ஒருமைப்பாட்டினாலும் உரிமைக்கான போராட்டங்களாலும் கட்டமைக்கப்பட்டிருந்தது. அதனை கறுப்பர்களும் இதர ஆசிய நாட்டவர்களும் முதன்மைப்படுத்தி இருந்ததோடு அதற்கான வாய்ப்புகளை கொடுத்திருந்தனர். நியூயோர்க் மக்கள் முதலாளித்துவத்தின் ஆடசி மீது வெறுப்பு கொண்டது என்பதற்கு அப்பால் ஒரு மாற்றத்தை நோக்கி செயல்பட வேண்டிய பொருளாதார சமூக கலாச்சார தேவைப்பாடு எழுந்திருந்தது. அதனாலேயே முஸ்லீம் தலைமையை நோக்கி அந்த மக்கள் நகர்வதுள்ளனர். அது மட்டுமன்றி ஆசிய நாட்டவர்களை மையப்படுத்தி பன்மைத்துவ கலாச்சார வரப்புகளுக்குள்ளால் அதிகாரங்களை கைப்பற்றுவதற்கான திட்டமிடல்களை முன் வைத்துள்ளனர். அதுவே முஸ்லீம் வேட்பாளர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை கொடுத்திருந்தது. அமெரிக்கா ஒரு பல்லினக் கலாசாரத்தைக் கொண்ட நாடு என்பதை மம்டானியின் தெரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

ஐந்தாவது அமெரிக்க வரலாற்றில் நியூயோர்க் நகரத்தை கைப்பற்றி இருக்கும் ஜனநாயகக் கட்சியினர் மேற்கொள்ளுகின்ற ஆட்சி முறையைப் பொறுத்து வரும் காலங்களில் அவர்களது வெற்றி உறுதிப்படுத்தப்படும். ஆனால் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் ஒருவரை ஜனநாயகக் கட்சியினர் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. அதனை அமெரிக்க ஊடகங்கள் உறுதிப்படுத்துகின்றன. மம்டானியின் பதவியேற்பு நிகழ்வில் இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவை ஆதாரமாகவும் அவரது நினைவுகளை தாங்கி கருத்துக்களை முன் வைத்திருப்பது நியூயோர்க் நகரம் பல்லின கலாச்சாரத்தையும் அதற்கான அடிப்படை குடிப்பரம்பலையும் கொண்டிருப்பதனை பிரதிபலிப்பதை உறுதிப்படுத்துகின்றது. வெள்ளை இனத்தவருக்கு நிகராக பிற இனத்தவரும் உள்ள நகரமாக நியூயோர்க் நகரம் காணப்படுகிறது.

எனவே இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர், முஸ்லீம் மற்றும் சதாரண மக்களுடனான தலைவர் என்ற அடிப்படையில் புதிய பார்வையை அமெரிக்க தேசத்திற்கு தந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியின் எச்சரிக்கைகளைக் கடந்து நியூயோர்க் மக்கள் மம்டானியை தெரிவு செய்துள்ளமை அமெரிக்க ஜனாதிபதி மீதான வெறுப்பை உறுதிப்படுத்துகிறது. அமெரிக்க பல்லினக் கலாசாரத்தை புடம்போட்டுள்ள நகரமான நியூயோர்க் அமெரிக்க மக்களின் இருப்பை அடையாளப்படுத்தியுள்ளது. மரபார்ந்த அதிகார வர்க்கத்தின் வலுவை பலவீனப்படுத்தியுள்ளதாகவே கூறிக் கொண்டாலும் அமெரிக்க பல்லினக் கலாசாரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)