அரசியல் கட்டுரைகள்

இந்திய-ரஷ்சிய தலைவர்களது சந்திப்பும் உலகளாவிய அரசியல் போக்கும்?

உலக அரசியலில் முக்கியத்துவம் இந்தியா-ரஷ்சியா பக்கம் திரும்பி உள்ளது. இந்தியாவுக்கு இரண்டு நாள் (5-6.12.2025) அரச முறை விஜயம் தந்துள்ள ரஷ்சிய ஜனாதிபதி புட்டினதும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பே அதற்கான காரணமாகும். இரு நாட்டுக்குமான உறவின் முக்கியத்துவம் உலக அரசியல் அதீத மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது என்ற உரையாடல் வலிமையானதாக உள்ளது. உச்சமான பாதுகாப்பும், மரபுகள் எல்லாவற்றையும் உடைத்துக் கொண்ட வரவேற்புக்கான நிகழ்வுகள் அதீதமானதாக அமைந்துள்ளது. இது மட்டுமன்றி இரு தலைவர்களுக்கும் இடையிலான நெருக்கமான புரிதல்கள் இரு நாட்டுக்குமான உச்சிமகாநாடு என்பன அதிக முக்கியத்துவத்தை தந்திருக்கின்றது. இக்கட்டுரையும் ரஷ்சிய-இந்திய உறவின் தரப்போகும் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முயலுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு நீண்டதும் வலிமையானதும். அரசியல் பொருளாதார இராணுவ விடயங்களில் பரஸ்பரம் வகிக்கும் முக்கியத்துவம் உலக அரசியலில் பிரதானமானதாகும். ரஷ்சிய-இந்திய ஆகிய இரு தேசங்களுக்கும் வரலாற்று ரீதியான நட்பு பலமானது. அதற்கான அடிப்படை புவிசார் அரசியலால் எழுந்த பண்பாடு கலநட்த பாதுகாப்பும் காரணமாகும். இதற்கு அப்பால் சமகாலத்தில் இரு நாடுகளும் எதிர் கொள்ளும் சவால்களும் முக்கியமான பங்கு வகிக்கின்றன. பரஸ்பரம் இரு நாடுகளது நலனும் சந்திக்கும் இடடே அரசியல் உறவு என்பதற்கு அமைவாக இரு நாட்டுக்குமான உறவு நிலவுகிறது. இத்தகைய நெருக்கத்திற்கான அடிப்படை ரஷ்சியா மீது மேற்குலக நாடுகள் விதித்திருக்கும் பொருளாதார மற்றும் அரசியல் தடைகளும் அதனால் ஏற்பட்ட நெருக்கடிகளும் வலிமையான காரணமாகத் தெரிகிறது. ரஷ்சியா மீதான அத்தகைய நெருக்கடிகள் கிழைத்தேசங்களுடன் ரஷ்சியா உறவை பலப்படுத்தப்பட வேண்டிய அத்தியாவசியத்துக்குள் அகப்பட்டு இருக்கின்றது. மறுபக்கத்தில் இந்தியா மீதான அமெரிக்க வரி அறவீட்டின் நெருக்கடி ரஷ்சியாவுடன் உறவைத் துண்டிக்குமாறு அமெரிக்காவின் நிர்பந்தனை என்பன ரஷ்சியாவுக்கும் இந்தியாவுக்கும் பொதுவான சவால்களாக மாறி உள்ளன. இதனால் இரு நாடுகளும் நட்புறவை அதீதப்படுத்துவதோடு பொருளாதார இராணுவ உறவில் முக்கியத்துவத்தை பெற்றிருக்கின்றது. இராணுவ ரீதியில் பாகிஸ்தானிடம் இந்தியா அண்மையில் அடைந்த நெருக்கடி வலுவான இராணுவத்தை கட்டமைக்க வேண்டிய தேவைப்பாடு எழுந்திருக்கிறது. இதற்கான ஒத்துழைப்பை ரஷ்சியா வழங்குவதற்கு தயாராக உள்ளது. இதுவே இரு நாட்டுக்குமான உறவின் அதீதமான நெருக்கத்திற்கு அடிப்படையானதாகத் தெரிகிறது. இந்திய விஜயத்தில் இரு நாடுகளும் முதன்மைப்படுத்திக் கொண்ட அம்சங்களை அவதானிப்பது அவசியமானது.

முதலாவது, பொருளாதார அடிப்படையில் தேசிய நாணயங்களில் பரஸ்பரம் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பது வலிமையான பொருளாதார இருப்புக்கான அடிப்படையை ஏற்படுத்தக் கூடியது. அமெரிக்க டொலர் ஊடாக நிகழ்ந்து வரும் வர்த்தக உறவுகளை கைவிட்டு ரூபிளிலும் ரூபாவிலும் பரிமாற்றம் செய்வதற்கான எண்ணம் இந்த உரையாடலில் முக்கியத்துவம் பெற்றதாக விளங்குகிறது. ஒப்புக் கொள்ளப்பட்டபடி தேசிய நாணயத்திற்கூடாக வர்க்க நடவடிக்கைகள் மற்றும் நாணயப் பரிமாற்றங்களைவ ங்கிகள் கையாளும் செய்முறையையும் உருவாக்கியுள்ளன. வர்த்தக ரீதியில் வரியல்லாத மற்று வரி தொடர்பான உரையாடலை இரு தலைவர்களும் முதன்மைப்படுத்தியதுடன் கடந்த காலத்தில் நிலவிய குறைபாடுகளை களைவதென்ற புரிதலையும் தந்துள்ளது. சர்வதேச வினியோகச் சங்கிலியின் பாதுகாப்பையும் மற்றும் உலோகப் பொருட்களுக்கான பரிமாற்றத்தையும் தேசங்களினதும் மக்களது பாதுகாப்பை கருத்தில் கொண்டு மேற்கொள்வதென முடிவாகியுள்ளது. சிவில் அணுசக்தி உடன்பாட்டிலும் இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்துள்ளன. விண்வெளித் திட்டத்திற்கு இரு நாடுகளது கூட்டாண்மையை பலப்படுத்துவதென தீர்மானித்துள்ளன.

இரண்டாவது, இந்தியா ரஷ்சியா உறவை சமப்படுத்துவது மட்டுமின்றி இந்திய சீன உறவைப் பலப்படுத்துவதில் புட்டினது இராஜதந்திரம் கவனம் கொண்டிருந்தது. இது கிழைத்தேச நாடுகளின் பொருளாதார பரிமாற்றத்துக்கான வலுவான உறவு நிலையை ஏற்படுத்தக் கூடியதாக அடையாளம் காணப்படுகிறது. ஏற்கனவே பிரிக்ஸ் அமைப்பின் ஊடாக கிழைத்தேச நாடுகளின் பொருளாதாரக் கட்டமைப்பு எழுச்சிகரமானதாக மாறுகின்ற போது இந்திய சீன நெருக்கம் ரஷ்சிய உறவின் அடிப்படையில் தெளிவான புவிசார் பொருளாதாரத்தை விரிவுபடுத்தவும் பொருளாதார ரீதியில் வலுவான நட்புறவை கட்டமைக்கவும் உதவக் கூடியது. சுர்வதேச வடக்கு –தெற்கு வழித்தடத்தின் (INSTC) முக்கியத்துவத்தை உரையாடியதுடன் சென்னை-விளாடிவோஸ்டாக்வழித்தடம் மற்றும் வடகடல் பாதை இணைப்பை மேம்படுத்துவற்காக உட்கட்டமைப்புக்களை விருத்தி செய்வதென ஒப்புக் கொண்டுள்ளன. தூரகிழக்கு மற்றும் ஆட்டிக் பிராந்தியத்துடன் கூட்டாக வர்த்தகத்தில் ஈடுபாடு காட்டுவதென் முடிவாக்கியுள்ளனர்.

மூன்றாவது இராணுவ ரீதியான உறவினை பலப்படுத்தும் விதத்தில் எஸ்-500 ஏவுகணை பரிமாற்றத்துக்கான உரையாடல் நீர்மூழ்கிகளில் அணு ஆயுதங்களை தாங்கிச் செல்கின்ற தொழில் நுட்பத்தை பரிமாற்றிக் கொள்ளுகின்ற செய்முறையில் அதிகமான முக்கியத்துவத்தை இரு நாட்டு இராணுவ நிபுணர்களும் கவனம் பெற்றிருந்தனர். ரஷ்சியா அணு ஆயுதத்தில் வலிமையான நாடு என்ற அடிப்படையில் அதன் தொழில்நுட்பம் இந்தியாவுக்கு கைமாற்றப்படுகிற போது இந்தியாவின் பாதுகாப்பும் அந்நிய நாடுகளில் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பை பெறவும் வாய்ப்பானதாக காணப்படுகிறது. இந்தியா அடைந்து கொண்ட மிக வலிமையான விடயமாக பாதுகாப்பு சார்ந்த தொழில் நுட்ப பரிமாற்றமும் ஆயுத தளபாடப் பரிமாற்றமும் காணப்படுகிறது. ஆயுத உற்பத்தியில் கூட்டாண்மை மட்டுமல்ல ஏற்றுமதியிலும் இரு நாடுகளும் கூட்டாக இயங்குவதற்கு உடன்பாடு எட்டியுள்ளன.

நான்காவது அரசியல் ரீதியில் இரு நாடுகளும் வலுவான கீழத்தேச எதிர் மேற்குலகம் என்ற கட்டமைப்பை வடிவமைப்பதில் வெற்றி கண்டுள்ளனர். ரஷ்சியாவுக்கும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான முரண்பாட்டையும் இந்திய மேற்குலக நாடுகளுடனான நட்புறவையும் சமன் செய்வதில் ஒரு வெற்றிகரமான பங்களிப்பாக காணப்படுகிறது. அரசியல் ரீதியில் இரு தேசங்களும் வலிமையான கூட்டாண்மையைப் பலப்படுத்துவது என்பது கிழைத்தேசத்தின் அரசியலை பலப்படுத்துவதாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. இது மேற்குலகத்தை கையாளுவதற்கான தெளிவான உத்தி வகுக்கப்படுவதாகத் விளங்குகிறது. மேற்கு ஐரோப்பாவுக்கும் சீனாவுக்குமான உறவு மேற்கைக்கு ஐரோப்பாவுக்கும் இந்தியாவுக்குமான உறவு ரஷ்சியாவை அரவணைத்துச் செல்லும் சீன-இந்திய கீழைத்தேச மரபு ஆரோக்கியமான அரசியல் இருப்பை பொருளாதார வலுவை சாத்தியப்படுத்தக் கூடியதாக அமைய வாய்புள்ளது.

எனவே இதன் அடிப்படைகளுக்குள்ளால் அவதானிக்கின்ற போது பிரிக்ஸ், சங்காய்-5, பிம்ஸ்ரிக் போன்ற கீழைத்தேசதின் அமைப்புகளின் பெருக்கமும் வலிமையும் உலக அரசியல் ஒழுங்கில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனுடைய நீட்ச்சி வலிமை அடைகின்ற போது மேற்குலகம் தவிர்க்க முடியாத ஒரு போரை மேற்கொள்வதற்கான அடிப்படையை ஏற்படுத்தும். அமெரிக்காவின் தொழில்துறையிலும் பிரபலத்திலும் கணணி தொழில் நுட்பத்திலும் உலகளாவிய ரீதியில் முதன்மைப்படும் அலன் மாஸ் 2040க்களில் உலகப் போருக்கான வாய்ப்புகளை உரையாடியுள்ளார். அதனை நோக்கி புட்டினது இந்திய வருகை கிழைத்தேச நாடுகளின் பொருளாதார இராணுவ பலத்தை உத்தரவாதப்படுத்தக் கூடியது வலிமையான கீழைத்தேச அரசியல் கட்டமைக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் மேற்கின் பொருளாதார அரசியல் இராணுவ இருப்பு நெருக்கடிக்கு உள்ளாகும் போது அது உலகத்தை நோக்கி போர்களை முதன்மைப்படுத்துவது வழமையான உலக அரசியலாக உள்ளது. அதனை நோக்கிய அடியெடுப்பாகவே ரஷ்சிய இந்திய சீன தென்ஆபிரிக்க உறவின் விரிவாக்கங்களை புரிந்து கொள்வது அவசியம்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)