உலக வரலாற்றில் புதிய ஒரு போரியல் நெருக்கடியை மேற்காசியா சந்திப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. மேற்குலகத்தின் நீதிக்கான போதனைகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு உயிரை உண்டு உயிர்வாழ்வதே உயிர் வாழ்வு என்ற நியமத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் போர் உத்தி கடந்த காலங்களை விட வேறுபட்டதாகவும் தனித்துவமானதாகவும் காணப்படுகிறது. ஈரான் மீது அமெரிக்கா போருக்கான ஒத்திகையை முழு அளவில் நிறைவு பெற்றிருக்கிறதாகவே தெரிகின்றது. அதற்கு எதிராக ஈரானால் எதிர்த்துப் போராட முடியுமா என்பது உலகளாவிய ரீதியில் எழுந்திருக்கும் பாரியளவான கேள்வியாகும். இக் கட்டுரையும் ஈரான் அமெரிக்கப் போரின் மத்தியில் உலக நாடுகளின் நகர்வை தேடுவதாக அமைந்துள்ளது.
பிரித்தானிய பிரதமர் கெயர் ஸ்டாமர் (Keir Starmer) சீனாவுக்கு மேற்கொண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயமானது இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல்-பொருளாதார நெருக்கத்தை தொடங்கியிருக்கிறது. இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவு வரையும் அடிமை நாடாக பிரித்தானியாவினால் கருதப்பட்ட சீனாவை நோக்கி பிரித்தானிய பிரதமரரின் விஜயம் என்பது வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாக கருதப்படுகின்றது. 2008 ஆம் ஆண்டு அப்போதைய பிரிட்டன் பிரதமர் கோல்டன் பிறவுணது (Gordon Brown) பயணம் அதிக முக்கிய உரையாடல்களை வெளிப்படுத்தியிருந்தது. ஆனால் தவிர்க்க முடியாமல் இன்றைய சூழல் பொருளாதார அடிப்படையிலும் வர்த்தக நோக்கு நிலையிலும் அமெரிக்காவுக்கான பதிலீடுகளை தேடுகின்ற ஐரோப்பியர்கள் ஆசியாவின் இரண்டு பெரும் சக்திகளோடு நமது வர்த்தக உறவை பலப்படுத்ததிட்டமிடுகின்றனர். ஐரோப்பிய யூனியன் இந்தியாவோடு மேற்கொண்ட உடன்படிக்கையும் மற்றும் வர்த்தக உடன்படிக்கையும் சீனாவோடு பிரித்தானியா செய்துள்ள பொருளாதார உடன்பாடும் ஐரோப்பியர்களின் வரலாற்றிலே முக்கியமான அம்சமாக புரிந்து கொள்ளப்படுகிறது.
இதே நேரம் ஈரான் மீதான அமெரிக்க போர் நடவடிக்கை நெருங்கி வரும் சூழலில் பிரித்தானியா மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள தளங்கள் அமெரிக்க தாக்குதலுக்கு ஒத்துழைப்பு வழங்குவது என திட்டமிட்டுள்ளனர். மறுபக்கத்தில் ஈரானின் புரட்சிகர காவல் படை மீது அமெரிக்கா தடை விதித்ததோடு அது ஒரு பயங்கரவாத அமைப்பு என பட்டியலிட்டு இருப்பதை ஐரோப்பிய யூனியன் வரவேற்றிருக்கின்றது. ஜெர்மனிய நாட்டின் ஜனாதிபதி பிறீட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) ஈரான் ஆட்சியாளர்களின் நாட்கள் எண்ணப்படும் நிலை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார். சீனாவுக்கும் ஈரானுக்கும் உள்ள உறவு தற்போது சீனாவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற உடன்படிக்கைகள் போன்ற தளத்தில் இதனுடைய யதார்த்தம் உரையாடப்பட வேண்டியதென்றாக தெரிகின்றது. காரணம் சீனாவும் ரஷ்சியாவும் ஈரானுக்கு பாரிய அளவான ஆயுதங்களை வழங்கி உள்ளன. ஈரான் அமெரிக்காவுக்கு எதிரான போரை முழுமைப்படுத்த வேண்டும் என்பதில் ரஷ்சியாவும் சீனாவும் அதிக கவனம் கொண்டிருக்கின்றன. அதற்கான அடிப்படைகளை தேடுவது அவசியமானது.
முதலாவது ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்டுள்ள போர் அமெரிக்காவுக்கான வாய்ப்புகளையே அதிகம் கொடுக்கக் கூடியது என மதிப்பிடப்படுகிறது. ஆபிரகாம்லிங்கன் போர்க்கப்பல் நகர்த்தப்பட்டு மேற்காசிய கடல் பகுதியில் தரித்திருந்து ஈரானின் இராணுவ இலக்குகள் கணிசமாக தீர்மானிக்கப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்துகிறது. அதனால் போரில் இலக்கை தெளிவாக அடையாளம் காணுகின்ற சீனா ரஷ்சியா போன்ற நாடுகள் ஈரானை முன்னிறுத்தி ஒரு நீண்ட போர் ஒன்றை அமெரிக்காவுக்கு ஏற்படுத்துவதன் ஊடாக அதன் உலகளாவிய ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர முடியும் என கருதுகின்றனர். இதனால் ஈரானுக்கு எதிரான போர் நிலையான நீண்ட விளைவை அமெரிக்காவுக்கு ஏற்படுத்த வேண்டும் என்பதில் கவனம் கொண்டு செயல்பட முனைவதாக தெரிகின்றது. மறுபக்கத்தில் இப்போரின் அதிக விளைவு இஸ்ரேலை நெருக்கடிக்கு உள்ளாக்கும் என்ற மதிப்பீடும் காணப்படுகிறது. ஈரானின் பிரதான இலக்குகளில் ஒன்றாக இஸ்ரேலிய நிலப்பரப்பு காணப்படுகிறது. ரஷ்சியா, சீனாவின் இலக்கு அமெரிக்காவாக அமைய ஈரான் இஸ்ரேலை அழித்தெழிக்க திட்டமிடுகிறது. மறுபக்கத்தில் இஸ்ரேலும் ஈரானை இலக்கு வைத்துள்ளது.
இரண்டாவது இப்போரில் அமெரிக்கா வெற்றி பெறும் பட்சதிலேயே சீனாவுடனான பொருளாதாரப் போட்டியை சமப்படுத்திக் கொள்ளவும் அமெரிக்காவின் டெலரின் இருப்பினை தக்கவைத்துக் கொள்ளவும் முடியும் என கருதுகிறது. இராணுவ ரீதியாக இப்போர் முதன்மை பெற்றிருந்தாலும் அமெரிக்காவின் பொருளாதாரம் உலகளாவிய ரீதியான இழப்பீடுகளும் பலவீனங்களும் இவ்வகையான ஒரு போரை நிகழ்த்துவதன் மூலம் உலகத்தில் அமெரிக்காவின் இருப்பை பாதுகாக்க முடியும் என கருதுகிறது. அமெரிக்காவுக்கு எதிரான சக்திகள் வளர்ச்சி அடைந்திருப்பது என்பது அமெரிக்க நாணயமான டொலருக்கு எதிரான போர் நடவடிக்கையாகவே தெரிகிறது. இது அமெரிக்காவால் அதிகம் உணரப்படுகிறது. ஈரான் மீதான தாக்குதல் என்பது சீனா ரஷ்சியா மீதான பரிசோதனையாகவே பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அத்தகைய இரு சக்திகளின் ஆதரவு தளங்கள் மேற்காசியாவில் தகர்க்கப்பட்டிருக்கும் நிலையில் ஈரானின் வீழ்ச்சி ரஷ்சியா சீன போன்ற நாடுகளில் வீட்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. எனவே தான் இப்போர் பிரதான விடயமாக பொருளாதாரம், நாணயம், வர்த்தகம் என்பனவற்றை அடிப்படைகளாக கொண்டுள்ளது என் கருதப்படுகிறது. அமெரிக்காவில் உள்நாட்டுப் பொருளாதாரம் உலக பொருளாதாரத்தில் தங்கியிருக்கின்றது என்ற நியமத்துக்குள்ளே இப்போரின் போக்கு தீர்மானிக்கப்படுகிறது.
மூன்றாவது அமெரிக்க ஈரானிய போருக்கான வெற்றி தோல்வி என்பதை விட இப்போரின் நகர்வு ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான போராக தெரிகிறது. மேற்குலக நாடுகளின் ஏகாதிபத்தியங்களையும் கீழேதேச நாடுகளின் ஏகாதிபத்தியங்களையும் மையப்படுத்தியதாக விளங்குகிறது. ஐரோப்பா கிறிஸ்லாந்து மீதான போரை வெற்றிகரமாக ராஜீக ரீதியான உத்திகளினால் கையாண்டு தவிர்த்துள்ளது. இதே நேரம் அமெரிக்காவின் ஈரான் மீது போரை நகர்த்துவதில் ஐரோப்பிய அணியினர் வெற்றிகண்டுள்ளனர். ஈரான் மீதான போரில் ஐரோப்பா அமெரிக்காவோடு கூட்டுச்சேருகின்ற சூழல் என்பதும் ஈரானிய கிளர்ச்சிகள் அமெரிக்க போருக்கு எதிராக திசை திரும்பி உள்ளன என்பதும் பொதுவான மாறுதலுக்கான அடிப்படையாக தெரிகின்றது. இதன் விளைவு ஆபத்தானதாகவே தெரிகிறது. ஐரோப்பா அமெரிக்காவுடன் முரண்பட்டது போலவும் நேட்டோ சீர்குலைந்துள்ளது போலவும் தென்பட்டாலும் அடிப்படையில் அனைத்துமே ஒன்றிணைந்து ஈரானைத் தாக்குவதில் முனைப்பாக உள்ளன. ஈரானின் கடந்தகால அனுபவங்களே அதன் இருப்பைப் பாதுகாக்க முடியும்.
எனவே ஈரான் மீதான போர் அமெரிக்காவின் உலக முதல் நிலையை சாத்தியப்படுத்துவதா அல்லது சீனாவின் உலக முதல் நிலையை உத்தரவாதப்படுத்துவதா என்ற அடிப்படைகளை நோக்கி நகர்கின்றது. இத்தகைய போட்டியில் பலியிடப்படுபவர்களாக ஈரானிய மக்களும் மேற்காசியாகவும் அமையவிருக்கின்றது. இப்போர் பாரிய விளைவுகளை தரும் என்று எதிர்வு கூறப்பட்டாலும் தொழில்நுட்ப வளர்ச்சியின் பரிமாணம் இப்போரை இலகுவில் நகர்த்தி விடும் என்ற நம்பிக்கையும் எஞ்சியிருக்கின்றது என்பதையும் கவனத்தில் கொள்ளுதல் அவசியம். ஆமெரிக்க –சீன தொழில் நுட்பங்களுக்கு இடையிலான போராகவே அமைய வாய்ப்பு அதிகமுண்டு.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினகரன்)
