April 29, 2026
அரசியல் கட்டுரைகள்

ஈரானிய போர்க் கப்பல் தாக்குதலும் இலங்கையின் இறையாண்மையும்?

ஈரானின் போர்க் கப்பல் இலங்கையின் காலி கடல் கரையில் இருந்து 19 கடல் மைல் (44.448 கிலோமீட்டர்) தூரத்தில் தாக்கி அழிக்கப்பட்ட சம்பவம் இலங்கையின் இறைமை தொடர்பில் அதிக கேள்விகளை எழுப்பியுள்ளது. இலங்கை இறைமையுள்ள நாடு என்று முதன்மைப்படுத்தும் ஜே.வி.பி அரசாங்கம் கடலிலும் தரையிலும் ஆகாய வெளியிலும் இலங்கை அரசு எடுக்கும் தீர்மானங்களுக்கு அமைவாகவே உலகில் உள்ள அனைத்து நாடுகளும் இலங்கை உத்தரவுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் என ஜனாதிபதி அநுர குமாரதிஸநாயகா தெரிவித்துள்ளார். இலங்கை தமது கடல் எல்லைக்கு அப்பால் தாக்குதலை அமெரிக்க நீர்மூழ்கிகள் ஈரானிய போர்க் கப்பலை தாக்கி அழித்ததாக கூறுகின்றது. இது தமது இறைமைக்கு உட்பட்டது அல்ல என்றும்; அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளிப்படுத்தி உள்ளார். இக்கட்டுரை கடல் பொறுத்திருக்கும் சர்வதேச நியதிகளையும் இலங்கையின் கடல் இறைமையின் எல்லையையும் தேடுவதற்கும் உள்ளது.

சர்வதேச கடல் சட்டத்தின் (UNCLOS) பிரகாரம் மூன்று வலையங்களாக ஒரு நாட்டின் கரையோரத்தில் இருந்து கடல் பகுதி பிரிக்கப்பட்டுள்ளது. கரையோரத்தில் இருந்து முதல் 12 கடல் மைல் தூரம் (22.224 கி.மீ) அந்த நாட்டின் இறைமையுள்ள பிரதேசமாக குறிப்பிடப்படுகிறது. இதனை கரையோர அல்லது பிராந்திய நீர் வலையம் (Territorial Water) என அழைப்பதுண்டு. இரண்டாவது கடல் எல்லையானது கரையோரத்தில் இருந்து 24 கடல் மைல் தூரம் அந்த நாட்டின் அடுத்துரு (Contiguous Zone) வலையம் என்று அழைக்கப்படுகிறது. மூன்றாவது கரையில் இருந்து 200 கடல் மைல் பிரதேசம் விசேட பொருளாதார வலயம் (Special Economical Zone) என குறிப்பிடப்படுகிறது. மூன்று கடல் பகுதிகளையும் ஒரு அரசு தன்னுடைய இறைமைக்குள்ளும் செல்வாக்குக்குள்ளும் பொருளாதாரம் வாய்ப்புகளுக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என சர்வதேச சட்டம் கூறுகின்றது. இந்த சூழலிலே இலங்கையின் கடல் இறைமை என்பது அதன் கரையோரத்தில் இருந்து 12 கடல் மைல் தூரம் வரையுமானது என்று வரையறுக்கப்பட்டுள்ளது என்று கூறிவிட முடியாது. ஆனால் கரையோரத்தில் இருந்து 24 கடல் மைல் தூரத்தில் பிற நாட்டுக் கப்பல்கள் நடமாடவோ பயணம் செய்யவோ அந்த நாட்டிடம் அனுமதி கோருதல் வேண்டும். விசேட பொருளாதார வலையத்துக்குள் பிற நாட்டின் கப்பல்கள் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்படுமாக இருந்தால் அது தொடர்பில் அந்த கடல் பகுதியை கொண்டிருக்கும் நாட்டிடம் அனுமதி பெறுவது என்பதை விட அதற்கான அறிவிப்பை முறைப்படி அறிவிப்பது அவசியமானது. இத்தகைய சூழலிலே இலங்கையின் இறைமை தொடர்கள் பல கேள்விகள் எழுப்பப்படுகிறது. ஈரானிய போர்க் கப்பலுக்கு பாதுகாப்பு அளித்ததும் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் நியாயமாக அமைகின்றது. அதற்காக தற்போதைய அரசாங்கமும் ஆட்சியாளர்களும் மனிதாபிமானவாதிகள் என்று கூறிவிட முடியாது. தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கும் அதன் பின்னான சூழலுக்கும் இவர்களிடம் எந்த மானிதாபிமானமும் தென்படவில்லை என்பதை மறந்துவிட முடியாது. அதேவேளை மறுபக்கத்தில் கடல் தொடர்பில் ஓர் அரசுக்கு இருக்க வேண்டிய இறைமையின் அளவீடு என்பது அதிகம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இதனை விரிவாக நோக்குவது அவசியமானது.

முதலாவது சர்வதேச சட்டத்தின் பிரகாரம் ஈரான் கப்பல் மீதான தாக்குதல் இலங்கையின் கடல் எல்லைக்குள் நிகழவில்லை என்ற விவாதம் முன்வைக்கப்படுகிறது. ஆனால் கரையிலிருந்து 200 கடை மைல் தூரம் வரையுமான கடல் பரப்பில் ஓர் அரசு தன்னுடைய ஆளுகையை கொண்டிருக்க முடியும் என்பது சர்வதேச சட்டம் உறுதிப்படுத்துகின்றது. 24 கடல் மைல் பிரதேசத்துக்குள் பயணம் செய்யும் கப்பல் ஒன்றின் அனுமதி இலங்கையிடம் பெறப்படுதல் வேண்டும் எனவும் ஏனைய பிரதேசத்தில் தகவல் பரிமாற்றம் நிகழ்த்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடுகிறது. அப்படியானால் அமெரிக்காவின் தாக்குதலும் ஈரானின் போர்க் கப்பலின் பயணமும் 19 கடல் மைல் எல்லைக்குள்ளே நிகழ்ந்திருக்கின்றது என்பது இலங்கையின் இறைமை சார்ந்த விடயத்தை உறுதிப்படுத்தப்படுகிறது. அப்படியாயின் இலங்கைக்கு ஏதோ ஒரு அடிப்படையில் ஈரானைப் போன்று அமெரிக்காவும் இலங்கை அரசாங்கத்திடம் அனுமதி பெற்று இருக்க வேண்டும். அது மீறப்பட்டு இருப்பது என்பது இலங்கை இறைமை மீறப்பட்டதாகவே தெரிகிறது. 1978ஆம் ஆண்டிலிருந்து 1988ஆம் ஆண்டு வரை காலப்பகுதியில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்களும் அணு ஆயுத கப்பல்களும் இலங்கையின் கடல் பரப்பு கூடாக அனுமதி இன்றிய பயணம் செய்திருக்கின்றது. எனவே இது ஒன்றும் அமெரிக்காவுக்கு புதியது அல்ல. அமெரிக்கா உலகத்தில் உள்ள எல்லா கடலையும் நிலப்பரப்பையும் அரசுகளையும் தனது விருப்பத்திற்கு ஏற்ற வகையில் பயன்படுத்த முடியும் என்ற ஏகாதிபத்திய விதியை வரைந்து வைத்துள்ளது. இலங்கையின் இறைமை பற்றிய உரையாடல் என்பது அமெரிக்காவுக்கு முன் சாத்தியமற்றது. அது இலங்கைக்கு மட்டும் உரியதல்ல அருகிலுள்ள இந்திய நாட்டிற்கும் உரித்துடையது.

இரண்டாவது இலங்கை அமெரிக்காவோடு செய்து வைத்திருக்கும் உடன்படிக்கைகள் பாரியளவில் முக்கியத்துவம் பெற்றவையாக இருக்கின்றன. ஜே.வி.பி அரசாங்கம் 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் (14) அமெரிக்காவுடன் மேற்கொண்ட உடன்படிக்கையானது (U.S.-Sri Lanka State Partnership Program -SPP) அமெரிக்கா இலங்கையின் கடல் தரை மற்றும் ஆகாயம் ஆகிய எல்லைகளை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று ஒப்புதலை பெற்றுள்ளது. உடன்பாட்டின் பிரகாரம் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், அரசுகளின் கூட்டுத் திட்டத்தின் கீழ் அமெரிக்க அரசின் தேசிய காவல்படையுடன் கூட்டு சேர்ந்த 115 நாடுகளின் உலகளாவிய வலையமைப்பில் இலங்கை முறையாக இணைந்துள்ளது. கூட்டுப் பயிற்சி, கடத்தல் மற்றும் சட்டவிரோத இடம்பெயர்வை எதிர்ப்பதற்கான கடல்சார் ஒத்துழைப்பு, நெருக்கடிக்கான பதில் மற்றும் மனிதாபிமான உதவி, விமான நடவடிக்கைகள் மற்றும் இராணுவ சிவிலியன் பேரிடர் தயார்நிலையை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் இந்த கூட்டாண்மை ஒன்றிணைவை மேம்படுத்தும். அதன் அடிப்படையில் டித்வா புயலின் போது அமெரிக்கா இராணுவ விமானங்களில் இலங்கை தீவுக்கான வருகை உரையாடப்பட்டது. இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்கூட்டியே உடன்பாட்டின் மூலம் எத்தகைய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும் என்ற சூழ்நிலை ஏற்படுத்தி உள்ளது. ஈரானின் கடற்படை இலங்கைக்குள் இருந்தாலும் அதன் மீது மேலான நடவடிக்கை எடுக்கும் உரிமம் அமெரிக்காவுக்கே உரியதாக உள்ளதென்பது தெரிகிறது.

மூன்றாவது இலங்கையில் சீனாவின் 99 வருட குத்தகைக்கான உடன்படிக்கை ஹம்மாந்தோட்டையை மையப்படுத்தி காணப்படுகிறது. சீன இலங்கை உடன்படிக்கை பிரகாரம் அதிக இறைமை பொருந்திய அரசாக விளங்குகிறது. அவ்வாறே அதன் கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான உடன்பாடும். ஆனால் ஈரான் போர்க்கப்பல் தாக்கப்பட்டமை காலி கடற்கரை ஓரத்தில் இருந்து 19 கடல்மைல் தூரத்தில் அமெரிக்காவின் தாக்குதல் என்பது சீனாவுக்கும் ஒரு எச்சரிக்கையை கொடுப்பதற்கானதாகவே நோக்கப்படுகிறது. இலங்கை தீவில் எப்பகுதியிலும் அல்லது உலகின் எப்பகுதியிலும் அமெரிக்கா தனது நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பதை தெரிவித்துள்ளது. இதுவே அமெரிக்க இலங்கை இறைமை சார்ந்த உரையாடல் காணப்படுகிறது. இறைமை என்பது மேலான அதிகாரம் என்று குறிப்பிடுவது இலங்கை அரசுக்கு மட்டுமானதல்ல. இலங்கை மீது அமெரிக்காவின் மேலான அதிகாரம் பிரயோகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை இத்தகைய நடவடிக்கையின் வெளிப்பாடாகும். இலங்கை தீவில் ஈரான் தொடர்பில் ஜே.வி.பி. ஆட்சியாளர்கள் எடுத்திருக்க முடிவானது உலக அரசியலிலும் ஏற்பட்டு வரும் மாற்றங்களை சார்ந்ததாகவே பார்க்கப்படுகிறது. இலங்கை ஜே.வி.பி ஆட்சியும் அமெரிக்காவின் செல்வாக்குக்குள் அகப்பட்டதென்றே.

எனவே இலங்கைத் தீவு இறைமை என்பது இன்னொரு தேசத்தின் இறைமையினால் கட்டுப்படுத்தப்படுகின்ற போது பலவீனம் அடைகின்ற சூழல் தவிர்க்க முடியாதது. அமெரிக்கா இலங்கையின் கடற்பரப்புக்குள்ளேயும் சர்வதேச கடல் பரப்பிலும் தாக்குதல் நடத்துகின்ற மேலான அதிகாரத்தை கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் தற்போதைய நடவடிக்கைகள் அனைத்தும் சர்வதேச விதிகளை முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாகவே உள்ளது. எனவே இலங்கையின் இறைமை என்பது இலங்கையின் ஆட்சியாளர்கள் கூறுவது போல் அவர்களுடைய எல்லைக்குள் கட்டுப்படக் கூடியது ஒன்றாக இல்லை. இறைமையின் பரிமாணம் மக்கள் சார்ந்துதாக அளவீடு செய்யப்படுகின்ற காலத்தில் மீண்டும் அரசிறமைக்குரிய வடிவங்களை நோக்கி அமெரிக்காவும் ஐரோப்பிய தராண்மைவாத அரசுகளும் நகர ஆரம்பித்துள்ளனர். முன்கூட்டியே சீனா அரசிறமையை முதன்மைப்படுத்திக் கொண்டு செயல்படுகின்ற போது ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கா போன்றவையும் மக்கள் இறைமை சார்ந்த உரையாடலை கைவிட்டு அரசிறமையை முதன்மைப்படுத்த ஆரம்பித்துள்ளனர். இது சீனாவின் அதே பாணிக்குள் மேற்கு நாடுகளும் நுழைகின்ற தேவைப்பாடு தவிர்க்க முடியாத பரிமாணமாக தந்துள்ளது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)