April 21, 2026
அரசியல் கட்டுரைகள்

இந்து சமுத்திரத்தில் ஈரான்-ரஷ்சியா கூட்டுக் கடற்படை பயிற்சி அமெரிக்காவுக்கு ஆபத்தானதா?

ரஷ்சியாவின் உள்நாட்டு அரசியலில் எதிர்கட்சியின் தலைவர் என அழைக்கப்படும் அலெக்சி நவல்னிக்கு ஆதரவான போராட்டங்கள் அதிகரிக்கின்றன. ஜனாதிபதி புட்டினது ஆட்சிக்கு எதிராக எழுச்சி பெறும் தற்போதைய போராட்டங்கள் மேற்கு நாடுகளால் அதிகம் முதன்மைப்படுத்தப்படுகிறது. ரஷ்சிய ஆட்சியாளர்களால் நஞ்சூட்டப்பட்டார் நவல்னி எனக் குறிப்பிட்டு அவரது ஆதரவாளர்கள் ஜேர்மனிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு மீளவும் நாட்டுக்குள் வருகை தந்த பின்பு அவருக்கான ஆதரவுத் தளம் அதிகரிப்பதாக குறிப்பிடப்படுகிறது. அவரது ஆதரவாளர்களால் லெனின் என அழைக்கப்படும் நவல்னி அடிப்படையில் மேற்குலகத்தின் கைக்கூலி எனவும் மேற்கின் பொம்மை எனவும் எதிர்தரப்பால் விமர்சிக்கப்படுகின்றார். இவ்விடயம் தொடர்பில் அதிகம் அலட்டிக் கொள்ளாத புட்டின் ஈரானுடன் சேர்ந்து இந்துசமுத்திரத்தில் பாரியளவில் கடல்படைப் பயிற்சியை மேற்கொண்டுவருகின்றார். இக்கட்டுரையும் ரஷ்சியா மற்றும் ஈரானின் கடல்படை பயிற்சியின் முக்கியத்துவத்தையும் விளைவுகளையும் தேடுவதாக அமையவுள்ளது.

கடல் வர்த்தகத்தரின் பாதுகாப்பினை அதிகரிக்கும் நோக்கில் ஈரான் மற்றும் ரஷ்சியா என்பன இணைந்து கடல்படைப் பயிற்சியினை இந்து சமுத்திர கடல்பரப்பில் ஆரம்பித்துள்ளன. ஏறக்குறை 17 ஆயிரம் மீற்றர் பரப்பளவில் மேற்கொள்ளப்படும் இக்கடல் படைப்பயிற்சியில் சீனாவும் இணைந்திருப்பதுடன் இந்தியாவும் இணைய விருப்பம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். கடந்த இரு தினங்களாக (16-17.02.2021) ஈரானும் ரஷ்சியாவும் சீனாவுமே இப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இக்கடல்படைப் பயிற்சியின் அவசியப்பாடு ஈரான் குறிப்பிடுவது போல் தனித்து கடல் வர்த்தக பாதுகாப்பினை மட்டுமே இலக்காகக் கொண்டதா என்பது பிரதான கேள்வியாகும். காரணம் கடல் வர்த்தகத்தைக் கடந்து பல தேவைகளும் தந்திரங்களும் ஈடுபட்ட நாடுகளுக்குண்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஒன்று, அமெரிக்காவின் புதிய நிர்வாகத்திற்கு இத்தகைய பயிற்சியின் மூலம் தெளிவான செய்தியொன்று தெரிவிக்க முயன்றுள்ளது. அதாவது ஈரான் மீதான பொருளாதாரத் தடையையும் அணுவாயுத உற்பத்திக்கு எதிரான உடன்படிக்கையும் அப்படியே பேணிக்கொள்ள அமெரிக்க புதிய நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன் மூலம் ஈரானை தனிமைப்படுத்தவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி அடிபணியவும் செய்ய முனைகிறது. ட்ரம்ப் நிர்வாகத்திலிருந்து மாற்றத்தை ஈரானுடன் மேற்கொள்ள போவதாக ஜோ பிடன் அறிவித்தாலும் அடிப்படையில் அதிக மாற்றத்தை மேற்கொள்ள தயாராக இல்லை என்பதே அதன் அணுகுமுறைகளில் தெரிகிறது. அதனால் அத்தகைய சூழலை தகர்க்கவும் பலமான அணியில் ஈரான் இருப்பதாகவும் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் தெரியப்படுத்தவே ஈரான் இப்பயிற்சியை பயன்படுத்திக் கொண்டது. அது மட்டுமன்றி அமெரிக்கா ஈரானின் அணுவாயுத வளர்ச்சியை முடக்குவதற்கு எடுக்கும் நடவடிக்கைகளை தடுக்கவும் இரண்டு அணுவாயுத நாடுகளுடன் கூட்டாக பயிற்சியில் ஈடுபடுவதையும் தெரியப்படுத்தும் நகர்வையும் இதனூடாக மேற்கொண்டுவருகிறது.

இரண்டு, ரஷ்சியாவைப் பொறுத்தவரை ஈரான் தனது அணியில் இருப்பதை உறுதிப்படுத்துவதுடன் மேற்காசிய அரசியலில் ரஷ்சியாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த முடியாது என்பதையும் அமெரிக்காவுக்கு தெரியப்படுத்தியுள்ளது. ஏறக்குறைய அமெரிக்காவின் மேற்காசியா சார்ந்த கொள்கை ட்ரம்ப் ஆட்சிக்காலத்தில் சிதைந்துள்ளது. அதனை மீளக் கட்டியெழுப்ப ஈரானுடனான உறவை சரிசெய்வதன் மூலமும் சிரியா மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்ந்த அணுகுமுறைகளை மாற்றுவதன் மூலமும் வெற்றி கொள்ள அமெரிக்கா முனைகிறது. அதனை முற்றாகவே தடுக்கவும் மேற்காசியாவில் தனது இருப்பினை பாதுகாக்கவும் ரஷ்சியா எடுத்துவரும் நகர்வாகவே தெரிகிறது. அதிலும் ஈரான்-அமெரிக்க நட்புறவானது ரஷ்சியாவின் இருப்பினை பாதிக்கும் எனக்கருதுகிறது.

மூன்றாவது, இந்து சமுத்திர நாடுகளை மையப்படுத்தி அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நகர்வுகள் அதிகரித்துவருகின்றன. மேலும் கடந்த 2020 இறுதிக் காலப்பகுதியில்(டிசம்பரில்) இந்தியா, அமெரிக்கா, அவுஸ்ரேலிய ஆகிய நாடுகளின் கடல்படைப கூட்டுப் பயிற்சி இக்கடல் பகுதியில் நிகழ்ந்துள்ளது. அதனால் இப்பிராந்தியம் மீதான சீன ரஷ்சியாவின் ஆதிக்கம் மட்டுப்படுத்தப்பட்டதாகவும் இந்து சமுத்திர விழிம்பு நாடுகள் மீதான அமெரிக்க செல்வாக்கு அதிகரித்துவருவதாகவும் அந்த நாடுகள் கருதுகின்றன. அதனால் அத்தகைய நெருக்கடியை தடுக்கவும் முடிவுக்கு கொண்டுவரும் நோக்குடனேயே இத்தகைய கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டுவருகின்றன. இதில் ரஷ்சியாவும் சீனாவும் மிகப்பலமான நிலையை இந்து சமுத்திரத்திற்குள் கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுபவை. காரணம் பாதுகாப்பு நிலைகளில் மட்டுமல்ல பொருளாதார ரீதியிலும் வர்த்தக நோக்கிலும் இந்து சமுத்திரம் முக்கியமான பிராந்தியமாக உள்ளது. அத்துடன் தந்திரோபாய நிலத்தினை அதிகம் கொண்டுள்ள பிராந்தியமாகவும் வளமுடைய பிராந்தியமாகவும் காணப்படும் நிலை உலக வல்லரசுகளது போட்டிக்கான மையப்பகுதியாக உள்ளது.

நான்கு, அமெரிக்கா தலைமையிலான இந்தோ-பசுபிக் உபாயத்தினை முறியடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படும் சீனா இப்பிராந்தியத்திலுள்ள நாடுகளுடன் பொருளாதார மற்றும் வர்த்தக ரீதியில் நட்புறவைப் பலப்படுத்த அதிகம் முனைப்புக் கொண்டுள்ளது. சீனாவின் மேற்கு ஆசியா, தென்னாசியா, கிழக்கு ஆபிரிக்க நாடுகளுடனான வர்த்தக உறவின் மையமாக இந்து சமுத்திரமே காணப்படுகிறது. அதனால் இந்து சமுத்திரத்தை அண்டிய பகுதிகளில் அமெரிக்க கூட்டின் ஆதிக்கத்தை தடுக்க வேண்டிய உத்தியுடன் செயல்படுகிறது. சீனாவின் வர்த்தகத்தில் 60 சதவீதமானவை இந்து சமுத்திர நாடுகளை சார்ந்தே உள்ளது. அதனால் சீனா இப்பிராந்தியத்தை தக்கவைக்க அதிகம் பிரயத்தனம் கொண்டு செயல்படுகிறது.

ஐந்து, இந்தியாவினை சுற்றிவளைத்துள்ள சீனா அதன் பொருளாதாரத்தையும் வர்த்தகத்தினை செயல்பட விடாது தடுக்கும் வலயமாக இந்து சமுத்திரத்தை கருதுகிறது. அதனால் இந்து சமுத்திரத்தின் மீதான செல்வாக்கினை பலப்படுத்துவதன் வாயிலாக அதன் சந்தையை இந்தியாவின் கைகளுக்குள்ளேயோ அல்லது பிற பிராந்திய நாடுகளுக்குள்ளேயோ செல்லவிடாது தடுத்து கொண்டு செயல்பட முனைகிறது. அதற்காகவே இந்து சமுத்திர நாடுகளின் துறைமுகங்களையும் தீவுகளையும் இலக்கு வைத்து செயல்படுகிறது. அதன் மூலம் இப்பிராந்திய நாடுகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் இந்தியாவையும் அதன் நட்பு நாடுகளது செல்வாக்கினை தடுக்கவும் சீனா முனைகிறது. அதற்காகவே தற்போதைய கூட்டு கடல்படைப்பயிற்சியை பயன்படுத்திக் கொள்கிறது.

ஆறு, சீனா-ரஷ்சியா ஆகிய இரு நாடுகளது நகர்வுகள் மீளவும் அமெரிக்கா உலகளாவிய அரசியல்ல் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டது என்பதன் பிரதிமையாகவும் உள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா மீளவும் ஜனநாயகம் மனித உரிமைகளை முன்னிறுத்த ஆரம்பித்துள்ளது. இது சீன-ரஷ்சியாவினது ஆதரவுத் தளத்தை பாதிக்கும் நகர்வாக அமைய வாய்ப்புள்ளது. மியான்மார் இலங்கை போன்ற நாடுகள் மீதும் ஈரான், சிரியா மீதும் மீளவும் ஆழுத்தத்தை அமெரிக்கா தரப்பு கொடுக்க ஆரம்பித்துள்ளது. இவை வளர்ச்சியடைவது ஆபத்தான விளைவை சீனா-ரஷ்சியத் தரப்புக்கு ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

ஏழு, ரஷ்சியா இராணுவ ரீதியில் பலமான கூட்டொன்றை கட்டியெழுபட்புவதே நோக்கமாக கொண்டுள்ளது. அதனையும் கடல்சார்ந்து மேற்கொள்வது இலாபகரமானதாக அமையும் எனக் கருதுகிறது. இந்து சமுத்திரத்தையும் பசுபிக் சமுத்திரத்தினையும் சீனாவுடன் சேர்ந்து கட்டுப்படுத்த முயலுகிறது. அதனால் அமெரிக்க தரப்பினை முறியடிப்பதும் அப்பிராந்தியத்தில் சீன-ரஷ்சிய செல்வாக்கினையும் உருவாக்குதல் என்ற இரட்டை நோக்குடன் ரஷ்சியா நகர்கிறது. ஆனால் இந்தியா இக்கடற்படைப் பயிற்சியில் ஈடுபாடு காட்ட முன்வந்திருப்பது ரஷ்சிய-இந்திய உறவுநிலை சார்ந்ததே அன்றி சீனா சார்ந்து அல்ல. ஆனால் இதனை ரஷ்சியா நடுநிலையோடு கையாள விரும்புகிறது.

எனவே ரஷ்சியா-ஈரான் கடல்படை பயிற்சியானது அமெரிக்காவின் புதிய நிர்வாகம் எடுத்துவரும் நடவடிக்கைக்கு எதிரானதாகவும் இந்து சமுத்திரத்தில் செல்வாக்குச் செலுத்தவும் முனைகிறது. இதில் ஈரானின் இருப்பும் மேற்காசியாவின் இருப்பும் ரஷ்சியாவின் செல்வாக்கு சார்ந்தது என்ற செய்தியை தந்துள்ளது. அமெரிக்காவுக்கு மீளவும் சவாலான காலமாகவே அமைய வாய்ப்புள்ளது. ட்ரம்ப் காலத்தில் அமெரிக்காவை பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாத ரஷ்சியா தற்போது அதனை எதிர் கொள்ள திட்டமிடுகிறது என்ற தகவல் உறுதிப்படுத்தப்படுகிறது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)