இறையாண்மை என்பது ஓர் அரசு அல்லது ஆளும் அமைப்பு, வெளிப்புறத் தலையீடுகள் இன்றி, தனது நிலப்பரப்பு, கடல் எல்லை, ஆகாயம் மற்றும் மக்கள் மீது கொண்டிருக்கும் மேலான, சுதந்திரமான அதிகாரமாகும். அது சட்டங்களை இயற்றுதல் மற்றும் அமுல்படுத்துதல், வளங்களை நிர்வகித்தல், மற்றும் வெளியுறவுக் கொள்கையை நடத்துதல் ஆகிய அதிகாரங்களை உள்ளடக்கியது. அரசு பெற்றிருக்கும் உயர்வான அதிகாரத்தினையே இறைமை குறிக்கின்றது. அரசுக்கு உரித்தான இறைமை, சமூகத்தில் வேறு எந்த நிறுவனத்திற்கும் இல்லாத உயர் அதிகாரமாகும். .சட்டங்களை உருவாக்கவும், முழு அதிகாரத்தையும் பயன்படுத்திச் சட்டங்களை நடைமுறைப்படுத்தவும், சட்டங்களை மீறுவோரை தண்டிக்கவும் அரசுக்கு இருக்கின்ற ஏனைய நிறுவனங்களுக்கு இல்லாத அதிகாரம் என்பது இதன் கருத்தாகும். இந்த அதிகாரமானது ஏனைய நிறுவனங்களுக்கும் பிரஜைகளுக்கும் கட்டளைகளை பிறப்பிப்பதற்கும், ஏனையவர்களின் கட்டளைகளுக்கு அடிபணியாததுமான அதிகாரமாகும். ஆள்புல எல்லைக்குள்ளும் அதற்கு அப்பாலும் அரசு உயர்வான நிலையினை பெற்றிருக்கவும், அரசின் ஆள்புலத்தின் அனைத்து நபர்களும், அனைத்து நிறுவனங்களும் அரசுக்கு தமது அடிபணிவை காட்டுவதற்கும் அது கொண்டிருக்கும் இறைமை அதிகாரமே அடிப்படையாக அமைகின்றது.
இறைமை என்பதன் பொருள் மிக உயர்ந்த அதிகாரம் அல்லது மேலான அதிகாரம் என்பதாகும். இது மனிதனால் ஒழுங்கமைக்கப்படுகின்ற ஏனைய நிறுவனங்களிலிருந்து அரசை வேறுபடுத்திக் காட்டுகின்ற பிரதான மூலக்கூறாகும். வெஸ்ட்பாலியன் உடன்படிக்கையே இறைமையின் மூலக் கோட்பாடாகும். சர்வதேச சட்டத்தில் உள்ள அடிப்படைக் கோட்பாடாகும். இதன்படி, ஒவ்வொரு தேச-அரசும் வெளித் தலையீடுகளிலிருந்து விடுபட்டு, தனது பிரதேசம், உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு உறவுகள் மீது பிரத்தியேக இறையாண்மையையும் முழுமையான அதிகாரத்தையும் கொண்டிருக்கும். 1648 ஆம் ஆண்டின் வெஸ்ட்பாலியா உடன்படிக்கையில் (Westphalia Agreement) வேரூன்றிய இது சர்வதேசச் சட்டம் மற்றும் நவீன தேசிய அரசமைப்பின் அடித்தளமாக அமைகிறது.
இறைமை பல பிரிவுகளுக்கு அமைவான பண்புகளைக் கொண்டது. உள் இறைமை, (Internal Sovereignty) வெளி இறைமை (External Sovereignty) மக்கள் இறைமை(People’s/Popular Sovereignty), அரச இறைமை(State Sovereignty) தேசிய இறைமை (National Sovereignty). பங்கிடப்பட்ட இறைமை (Shared Sovereignty) என்பதாகும்.
உள் இறைமை என்பது உள்நாட்டில் அரசிற்கு சமமாக வேறு அதிகாரபீடம் எதுவும் இருக்கமுடியாது என்பதனைக் குறிக்கின்றது.. அதாவது உள்நாட்டு சக்திகளின் கட்டுப்பாடு எதுவுமின்றி சுதந்திரமாகவும் தன்னாதிக்கத்துடனும் சுயாதிபத்தியத்துடனும் வரையறுக்கப்பட்ட பிரதேசத்தில் அரசு மேலான அதிகாரத்துடன் செயற்படுவதாகும். வெளி இறைமை என்பது ஓர் அரசு வெளிநாட்டுச் சக்திகளின் கட்டுப்பாடின்றி சுதந்திரமாகவும் தன்னாதிக்கத்துடனும் சுயாதிபத்தியத்துடனும் சர்வதேச சமூகத்தில் மேலான அதிகாரத்துடன் செயற்படுவதாகும். மக்கள் இறைமை: ஓர் அரசின் ஆட்சிமுறையின் இறுதி அதிகாரமும் சட்டப்பூர்வத் தன்மையும் மக்களிடமே உள்ளது என்றும், அவர்கள் அதை பிரதிநிதித்துவ அமைப்புகள் மூலம் செயல்படுத்துகிறார்கள் என்றும் கூறும் ஒன்றே மக்கள் இறைமையாகும். அரச இறைமை என்பது, வெளிப்புறத் தலையீடுகளிலிருந்து விடுபட்டு, ஓர் அரசு தனது நிலப்பரப்பு மற்றும் மக்கள் மீது கொண்டிருக்கும் மேலான, சுதந்திரமான அதிகாரத்தை வரையறுக்கும் அரசியல் மற்றும் சட்டக் கருத்தாகும். தேசிய இறைமையானது சர்வதேசச் சட்டத்தின் அடித்தளமாக விளங்குவதோடு, சுயநிர்ணயத்தின் அடிப்படையில் சட்டங்களை இயற்றவும், வளங்களை நிர்வகிக்கவும், வெளிநாட்டு உறவுகளை நடத்தவும் நாடுகளுக்குத் தன்னாட்சியை வழங்குவதைக் குறிப்பதாகும். பகிரப்பட்ட இறையாண்மை என்பது ஒரு அரசியல் கருத்தியலாகும், இதில் ஒரு நாட்டிற்குள் உள்ள குறிப்பிட்ட பிரச்சினைக்கான பகுதிகளில், உள் மற்றும் வெளித் தரப்பினர் தாமாக முன்வந்து அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர். இது பெரும்பாலும், நிலையற்ற அல்லது சர்ச்சைக்குரிய பிரதேசங்களில் ஆளுகையை மேம்படுத்துவதற்காக வளங்களைத் திரட்டுவதையோ அல்லது சர்வதேசப் பொறுப்புடைமைகளை உருவாக்குவதையோ உள்ளடக்கியது அதே சமயம், இது சர்வதேச ஒருங்கிணைப்பையும் உள்ளூர் சுயநிர்ணய உரிமையையும் சமநிலைப்படுத்துகிறது. ஆயினும் அரசுகள் சர்வதேச உறவில் அதிகாரம், சட்டம் என்றவடிவில் பிரயோகிக்கப்படும் .அரசின் சட்டம் எல்லோரையும் ஒன்றாக பிணைத்து வைத்திருப்பதுடன் சட்டத்தை மீறுபவர்களை உரிய முறையில் அரசு தண்டிக்கவும் செய்கின்றது. இறைமை அரசிற்கு வலிமையளிக்கும் எண்ணக்கருவாகும். ஒரு தேசம் இறைமையினை பெற்றுக் கொள்ளாதவரை அரச பண்பினை (Statehood) பெற்றுக் கொள்ளமுடியாது. அரசாங்க மாற்றத்தின் போது அரசு தன் இறைமையினை இழந்து விடுவதில்லை. ஆனால் ஒரு வெளிநாட்டு ஆக்கிரமிப்புச் சக்தியினால் கைப்பற்றப்படும் போது இறைமையினை இழந்துவிடுகின்றது.
(Source: Hinsjy.F.H.(1986), Sovereignty, Cambridge University Press, London)
