April 21, 2026
அரசியல் கட்டுரைகள்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் தடுப்பூசி அரசியல், உலகத்தோடு மீளிணைவுக்கான உத்தியா?

உலக நாடுகளை மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி வரும் கொவிட் 19 தொற்று அரசியல் முக்கியத்துவம் பெறுவதோடு பொருளாதார பெறுமானங்களில் கொண்ட பதிவுகளை முதன்மைப்படுத்த முனைகின்றது . இந்தியாவில் ஏற்பட்டுள்ள அதீதமான தாக்கம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் அரசியல் இருக்கையை நெருக்கடிக்கு தள்ளுகின்றது. தொற்றும் மரணங்களும் ஒரு புறம் அதிகரிக்க , மறுபக்கத்தில் அதனை தடுப்பதற்கான வழிமுறைகளிலும் நெருக்கடி காணப்படுவதோடு உடல்களை தகனம் செய்யவோ அடக்கம் செய்யவோ முடியாது அந்த மக்கள் அதிகத்துயரத்தை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் கொவிட் தொற்றினை கட்டுப்படுத்த அல்லது முடிவுக்கு கொண்டுவர தடுப்பூசியே சிறந்தது என்ற தெரிவு சந்தைப்படுத்தலையும் அதற்கான அரசியலையும் தீவிரப்படுத்தியுள்ளது. இக்கட்டுரை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் இரண்டாம் உலக யுத்தகாலப்பகுதியில் ஜனநாயகத்தின் களஞ்சியமாக அமெரிக்க விளங்கியது போன்று கொவிட் தொற்றை தடுப்பதற்கான தடுப்பூசி களஞ்சியமாக அமெரிக்கா விளங்கும் என வெளிப்படுத்தியுள்ள செய்தியில் அரசியல் பொருளாதார பெறுமானத்தை தேடுவதாக அமையவுள்ளது.

கொவிட் 19 பரவியது சீனாவின் நகரங்களில் ஒன்றான வூஹானில் இருந்து என்பது சீன மீதான அரசியலையும் பொருளாதார விடயங்களையும் பாதிப்புக்குள்ளாகும் விதத்தில் பேசப்பட்டது. அதனை தடுப்பதற்கான தடுப்பூசிக்கான கண்டுபிடிப்பும் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், சீனா, ரஷ்யா உட்பட நாடுகளுக்கிடையே போட்டி தன்மை நிலவியது சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில் தடுப்பூசிகளை அங்கிகரிப்பது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் நிபந்தனைகளை விதித்ததோடு அதற்கான அங்கீகாரத்தை வழங்க மறுத்திருந்தது . இதனால் சீன(சினோபாம்) மற்றும் ரஷ்யாவினது(ஸ்புட்னிக்-5) கொவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி பரிசோதனையில் அதன் விற்பனையில் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டது. ஆனால் சீனாவும் ரஷ்யாவும் தமது மக்களுக்கும் தமது நாட்டுக்குள் நுழையும் மக்களுக்கும் தமது நாட்டின் உற்பத்திகளையே எடுத்துக்கொள்ள வேண்டும் என நிபந்தனை விதித்ததோடு அத்தகைய தடுப்பூசிகளால் அந்தந்த நாடுகளை கொவிட் பரவலினுடைய அளவினை மட்டுப்படுத்தி இருக்கின்றன. அதேபோன்று அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் தமது உற்பத்தித் தடுப்பூசிகளை பிற நாடுகளுக்கு விற்பனை செய்யப்படுவதோடு இலவசமாகவும் கைமாற்றப்படுகின்றது. அத்தகைய இலவசம் எதிர்காலத்தில் பொருளாதார சந்தையை நோக்கிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை அந்த அரசாங்கங்களுக்கு உண்டு .

இதுமட்டுமன்றி, தென் பூகோள நாடுகளில் வறுமையில் பொருளாதார நெருக்கடியில் அரசியல் முரண்பாடுகளால் தடுப்பூசியை கொள்வனவு செய்கின்ற அல்லது இறக்குமதி செய்கின்ற எத்தகைய கரிசனையும் இல்லாத நாடுகளாக காணப்படுகின்றன. இதனால் ஏற்படுகின்ற பாதிப்புகள் இந்த நாடுகளின் மக்களை பாரியளவில் பாதிப்புக்குள்ளாக்கி வருகின்றது. இவ்விடயம் தொடர்பில் ஐக்கிய நாடு சபையின் உலக சுகாதார நிறுவனமும் கண்டனம் தெரிவிப்பதோடு உலகில் உள்ள அனைத்து மக்களும் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என கோரிக்கையை வைத்தனர். இத்தகைய சூழலில் அமெரிக்க ஜனாதிபதியினுடைய மேற்குறித்த செய்தி பெரிய முக்கியத்துவத்தை பெறுவதாக பார்க்கப்படுகின்றது. அவ்வாறு தடுப்பூசிகளின் களஞ்சியமாக அமெரிக்கா விளங்குவதன் மூலம் எற்படக்கூடிய மாற்றங்கள் அதிக மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியது. அவற்றை நோக்குதல் அவசியமாகும்.

ஒன்று, ஏதோவொன்றின் அடிப்படையில் சீனாதான் இதற்கான மூலகாரணமாக கருதப்பட்டபோதும், அதனால் ஏற்படுத்தப்பட்ட விளைவுகளை அல்லது பயன்களை அமெரிக்கா அனுபவிக்க முனைகின்றது என்பதை அமெரிக்க ஜனாதிபதியின் உரை உணர்த்துகின்றது. கொவிட்க்கு எதிரான தடுப்பூசி என்பது ஒரு வர்த்தக பெறுமானத்தையும் ஒரு சந்தை பெறுமானத்தையும் ஒப்புவிக்க தயாராகின்றது. காரணம் நவதாராளவாதத்தின் கண்டுபிடிப்புக்கள் சந்தைக்கும் உலக பொருளாதார வாய்ப்ப்புக்களுக்கும் அதிக பங்கினையாற்றுகின்றது. அந்த வரிசையிலே தடுப்பூசி வர்த்தகம் உலகம் முழுவதுக்குமான பரிமாற்றத்தை அமெரிக்காவில் இருந்து மேற்கொள்ளுகின்ற போது அதனால் ஏற்படுகின்ற பொருளாதார வர்த்தக சந்தை உறவாடல் அதற்கான அரசியல் பெறுமானத்தை ஒப்புவிக்க உதவும்.

இரண்டு, கொவிட் பரவல் மூலம் சீனா ஒரு அரசியல் பெறுமானத்தையும் பொருளாதார பெறுமானத்தையும் எட்டுவதற்கு முயற்சித்தது. அத்தகைய பொருளாதார பலத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் அணுகுமுறை நெருக்கடிக்குள் தள்ளிவிட்ட்டது .உலக நாடுகள் மத்தியில் உலக சந்தையில் அமெரிக்க தயாரிப்பான Pfizer-BioNTech அதிக மாற்றத்தை அமெரிக்காவிற்குள்ளும் அதனை கொள்வனவு செய்த நாடுகளுக்குள்ளும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் தடுப்பூசியுடன் சீனாவின் Sinovac போட்டியிட முடியாத சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசி தொடர்பான உலக சந்தை அமெரிக்காவிடம் கைமாறியுள்ளது. எதிர்கால உலகத்தில் இத்தகைய பாரிய தொற்றுகள் ஏற்படுத்தகூடிய அரசியலையும் பொருளாதார இருப்பையும், ஐரோப்பாவும் அமெரிக்காவும் தமது கட்டுபாட்டில் வைத்திருக்கவே பிரயத்தனம் செய்கின்றன. அதனாலேயே அமெரிக்கா தடுப்பூசிகளின் களஞ்சியமாக விளங்கும் என்ற செய்தியை ஜோ பிடன் முன்வைத்துள்ளார். எவ்வாறு ஜனநாயகத்தின் பெயரால் உலகத்தை தமது கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தவர்களோ, அதேபோல கொவிட்- 19க்கு எதிரான தடுப்பூசியின் மூலம் உலகத்தை தமது கட்டுபாட்டுக்குள் கொண்டுவர திட்டமிட்டுள்ளனர் என்பதை உணர்த்துகின்றது.

மூன்று , மேற்குலகின் உற்பத்திகளை கீழைத் தேசங்களுக்கு நுகர்வுகாக கைமாற்றும் போது இலவசமாகவே பரிமாற்றப்படுவது வழமையானது. அதில் ஆங்கில கல்விக்கூட விதிவிலக்கல்ல . மதுபானங்களும் தேயிலையும் வெள்ளை சுருட்டையும் ஐரோப்பியர்கள் குடியேற்ற நாடுகளில் இலவசமாகவே கைமாற்றினர். எனவே அவற்றில் இருந்து அந்த மக்கள் மீளமுடியாத நிலையினை அடையும் போது அப்பொருட்களை பணப்பெறுமான முடிவுப்பொருட்களாக மாற்றிகொண்டு சந்தைகளில் போட்டி போடவைத்தார்கள். உள்ளூர் உற்பத்திகளை முடிவுக்கு கொண்டுவந்து ஐரோப்பிய உற்பத்திகளே சிறந்தவை என்ற எண்ணத்தை உருவாக்கி, பொருளாதார இலாபங்களை தமதாக்கி கொண்டனர். இவ்வாறு கொவிட்- 19க்கு எதிரான தடுப்பூசி, அதன் வர்த்தகத்தையும் சந்தையையும் உலக அரசியலில் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் செல்வாக்கு மீளமைக்க முயல்கின்றது என்பது தெளிவாகிறது.

நான்காவது உலகளாவிய அரசு டொனால் ட்ரம்பின் காலப்பகுதியில் ஏற்பட்ட நெருக்கடி நிலையை சரி செய்வதற்கு ஜனாதிபதி ஜோ பிடன் எடுக்கும் பிரதான நகர்வாக கொவிட்க்கு எதிரான தடுப்பூசி அமைந்துள்ளது. இரு நாடுகளை இணைக்கவும் உறவு நிலைகளை பலப்படுத்தவும் பொருளாதார வாய்ப்புகளை அதிகரிக்கவும் இரு துருவ, பலதுருவ உடன்பாடுகளை சாத்தியப்படுத்தவும் முனைவதனை காணலாம். இதற்கதிகமாக தென் பூகோள நாடுகள் அகப்பட்டிருப்பதோடு அவற்றின் மீதான போட்டித்தன்மை வல்லரசு நாடுகளுக்கிடையிலே அதிகரிக்க வழிவகுப்பதாக அமைந்துள்ளது.

ஐந்தாவது, இத்தகைய அமெரிக்க சீன அரசியல் போட்டி அதிகமான இழப்பீடுகளையும் தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளையும் தென்பூகோள நாடுகள் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தியா போன்ற துயரமொன்றை தென் பூகோள நாடுகள் அனுபவிப்பது என்பது தவிர்க்க முடியாத நெருக்கடியாக மாறவுள்ளது. அதனை எதிர்க்கொள்வது அதிலிருந்து வெளியேறுவது என்பது வல்லரசுகளிடமே தங்கியுள்ளது.

எனவே, கொவிட் தொற்று எந்தளவிற்கு ஒரு அரசியல் பொருளாதார பெறுமானத்தை எற்படுத்தியதோ அதேயளவிற்கு அதற்கெதிரான தடுப்பூசியும் ஏற்படுத்திவருகிறது. சீன பொருளாதாரம் செழிப்பு நிலையை அடைந்திருந்தாலும் அரசியல் மற்றும் இராணுவத் திறனில் அமெரிக்க முதன்மை நாடாகவே காணப்படுகிறது. எனவே இதன் உலக அரசியலில் ஒரு போட்டிதளத்திற்குரிய பரிமாணாமாகவே அவதானிக்க முடியும். அத்துடன் அமெரிக்க ஜனாதிபதியினுடைய வெளிப்படுத்துகை சீன ரஷ்யாவிற்கு எதிரான அணுமுறையாகவே தெரிகிறது.

-பேராசிரியர் கே.ரீ. கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)