இலங்கையின் பிராந்திய அரசியல் நோக்கிய வெளியுறவு கொள்கை பல தரப்புகளால் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகின்றது. அதிலும் குறிப்பாக இந்தியாவையும், சீனாவையும் மையப்படுத்தி தற்போதைய அரசாங்கம் பின்பற்றி வரும் வெளியுறவுக்கொள்கையானது அதிக முரண்பாட்டை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்துள்ளது என்றும், மேற்குலக நாடுகளுக்கு எதிராக இலங்கையின் வெளியுறவு கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், இலங்கையின் எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டி வருகின்றது. எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட மூத்த உறுப்பினர்களும் அத்தகைய குற்றச்சாட்டை முன்வைக்கின்றன. இக்கட்டுரை இந்தியாவை கோபப்படுத்தும் விதத்தில் சீனாவுடனான உறவை பேணுகின்றது என்ற குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை தேடுவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அத்தகைய குற்றச்சாட்டின் பிரகாரம் எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்த கருத்துகளை முதலில் நோக்குவோம்.
மறைந்த ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தன 1977 திறந்த பொருளாதார கொள்கையை அறிமுகப்படுத்தி இந்தியாவை கோபப்படுத்தியமையால் இலங்கை முப்பது ஆண்டுகால யுத்தத்திற்கு முகங்கொடுக்கவேண்டிய சூழ்நிலை நேர்ந்தது. அவ்வாறே தற்போதைய அரசாங்கமும் சீனாவுடன் தேவைக்கதிகமான தொடர்புகளை பேணுவதன் மூலம் இந்தியாவை கோபப்பப்டுத்தும் வகையில் செயற்படுகின்றது . அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாட்டினால் தேசிய பாதுகாப்பு சர்வதேசத்தின் மத்தியில் பாரிய அச்சுறுத்தலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இலங்கையின் இறையாண்மைக்கு முரணாக துறைமுக நகர சட்டமூலம் கையெழுத்திடப்படுமானால் இலங்கை நீண்டகால நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கும் போது, சீனாவிற்கெதிராக இந்தியா, அமெரிக்க, அவுஸ்திரேலியா யப்பான், ஆகிய நாடுகள் பிரத்தியேகமான அமைப்பொன்றை உருவாக்கி (Quad) செயற்படுகின்றமை இதனால் சீனாவுடன் இலங்கை தேவைக்கதிகமாக நெருக்கமடையும் போது, இந்தியாவை கோபப்படுத்தும் வகையில் மட்டுமன்றி மேற்குலக நாடுகளையும் இலங்கை மீது முரண்படுகின்ற கொள்கையும் ஏற்படுத்தி வருவது ஆபத்தான விளைவுகளை தரக்கூடியதாக அமையும் என தெரிவித்துள்ளார்.
நளின் பண்டாரவின் குற்றச்சாட்டு ஆதரப்படுத்தும் விதத்தில் இலங்கையின் ஜனாதிபதி தெரிவித்ததாக சீன ஊடகங்களில் இடம்பிடித்த செய்தி ஒன்றினை அவதானித்தல் பொருத்தமானது.
சீனாவுடனான இருதரப்பு உறவுகளில் வலுப்படுத்த முன்னுரிமை வழங்கியிருப்பதாகவும், சீனாவின் அபிலாசை சம்பந்தமான விடயங்களுக்கு கூடிய ஒத்துழைப்புகளை வழங்குவதாகவும், இலங்கையின் ஜனாதிபதி கூறியதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் பெங்கின் இலங்கை விஜயம் தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியிலேயே சீன ஊடகங்கள் மேற்குறித்த தகவலை வெளிப்படுத்தியுள்ளது. சீன பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயத்தின் போது சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராணுவம் உட்பட்ட பல்துறைகளில் ஒத்துழைப்புகளை வழங்குவதற்கான உடன்படிக்கைகள் கைச்சத்திடப்பட்டுள்ளதாகவும் அவ்ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதுமட்டுமன்றி, இலங்கை சுதந்திரமான வெளிநாட்டு கொள்கையை கடைப்பிடித்து வருகின்ற நாடு என்றும் பிராந்தியத்துக்கப்பால் உலக வல்லரசுகளின் அதிகாரங்களுக்கு அடிபணியாது எனவும், எந்த நாட்டுடனும் இலங்கை கூட்டணி அமைக்காது எனவும், இலங்கை ஜனாதிபதி சீன பாதுகாப்பு அமைச்சரிடம் தெரிவித்தகாதவும் சீன ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
இத்தகைய கருத்துக்களை அவதானிக்கின்ற போது இலங்கை மிகத்தெளிவாக சீனாவுடனான உறவை முதன்மையானதாக தெரிகிறது.
முதலாவது, பிராந்தியத்துக்கப்பால் உலக வல்லரசுகளுக்கு அடிப்பணியாது என்ற தகவல் மேற்கு நாடுகளை மட்டுமன்றி இந்தியாவையும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. அதாவது ஐரோப்பா, அமெரிக்கா, யப்பான், அவுஸ்திரேலியா கூட்டில் இருக்கும் இந்தியா சீனாவுக்கு எதிரான நாடு மட்டுமன்றி மேற்கின் நலன்களை பிரதிபலிக்கின்ற நாடாகவும் காணப்படுகின்றது. இதனால் இலங்கையினுடைய வெளிநாட்டு கொள்கை இந்தியாவையும் மேற்கு நாடுகளியும் ஒரே தளத்தில் வைத்தே அளவீடு செய்வது தவிர்க்க முடியாததாகும். ஆனால் இந்தியா புவிசார் அரசியலை அதிகம் பிரயோகிக்க கூடிய நிலையிலுள்ள நாடு என்பதை மறுக்க முடியாது.
இரண்டாவது, இலங்கையின் வெளியுறவு கொள்கை சுதந்திரமானது என்று குறிப்பிடுவதனூடாக அதன் தனித்துவத்தை அடையாளப்படுத்துகின்றது. அத்தகைய தனித்துவம் சீன சார்பானதாக அமைந்திருப்பதும் அதுவே இலங்கையின் சுதந்திரமான வெளியுறகொள்கை என்றும் கருதுவதன் மூலம் புவிசார் அரசியல் போக்கினை முற்றாகவே நிராகரிக்கின்றது என்பதை வெளிப்படுத்துகிறது. அதன் மூலம் இந்தியாவிற்கு தெளிவான செய்தியொன்றினை தெரியப்படுத்துகின்றது. அதாவது இந்தியாவை நிராகரிப்பதும் இந்தியாவுடன் சேர்ந்து பயணிப்பதும் இலங்கை அரசாங்கத்தின் சுதந்திரத்திற்குட்பட்ட முடிவாகும் அத்தகைய சுதந்திரத்தில் எந்த நாடும் தலையீடு செய்யமுடியாது என்பதை வெளிப்படுத்துவதாக அமைகின்றது .
மூன்றாவது, பிராந்தியத்தை முதன்மைப்படுத்தும் இலங்கையின் வெளியுறவுக்கொள்கை அத்தகைய பிராந்திய உறவு என்பது சீன சார்பானது என்பதை வெளிப்படுத்த முனைகின்றது. சீனாவுடனான ஒத்துழைப்பு அரசியல் பொருளாதார இராணுவ ரீதியான உறவு பிராந்தியத்தை முதன்மைப்படுத்துவதாக இருந்தாலும், பிராந்திய நாடான சீனாவை மையப்படுத்தியது எனவும், இந்தியாவுக்கு எதிராக செயற்படுவதோடு இந்தியாவை ஒரு பிராந்திய அரசு என்று கருதுவதை விட சர்வதேச அரசு என்று கருதுவதற்கு இலங்கை முனைகின்றதை புரிந்து கொள்ள முடியும்.
நான்காவது, கொழும்பு துறைமுகத்தின் சட்டமூலம் தொடர்பிலும் கிழக்கு முனைம் தொடர்பிலும் சீனாவிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் வெளிப்படையாக அடையாளம் காணமுடிகின்றது . அதேநேரம் இந்தியா தொடர்பான நிராகரிப்பு அவதானிக்க முடிகின்றது அவ்வாறே வடக்கு பிரதேசத்தில் இந்தியாவுக்கு அருகாமையில் உள்ள தீவுகளை சீனாவின் பொருளாதார நடவடிக்கைக்கு வழங்கியிருப்பதன் மூலமும் அத்தகைய நிராகரிப்பு வாதத்தையும் உணர முடிகின்றது.
எனவே , இந்தியா தொடர்பாக இலங்கையின் எதிர்கட்சி குறிப்பிடுவது போல் நிராகரிப்பு வாதத்தை முதன்மைப்படுத்தியிருக்கும் இலங்கை அரசாங்கம் சீனாவை முன்னிருத்தி அதனை மேலும் முரண்பாட்டு உட்படுத்த முனைகின்றது என்ற குற்றச்சாட்டு காத்திரமானதாகவே உள்ளது. அதில் இருந்து விடுபடுவதற்கு இந்த அரசாங்கம் எத்தகைய முயற்சியையும் மேற்கொள்ளாது மேலும் அத்தகைய விரிசலை அதிகரிக்க வழிவகுக்கின்றது . இதனை கருத்தில் கொள்ளும் இந்தியா சீன பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் நிறைவு செய்த மறு சந்தர்ப்பத்தில் இலங்கைகான இந்திய தூதுவர் கோபால் பால்கே இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்ததன் மூலம் உணரமுடின்றது. அவ்வறே இந்தியா செயற்பட்ட போதும் இந்தியாவினுடைய எல்லை இலங்கையின் ஜனாதிபதியோடு உரையாட தயாரில்லாத சூழலும் அதன் அணுகுமுறைகளிலுள்ள பலவீனங்களை அடையாளப்படுத்துகின்றது இதன பலவீனமாக கொள்வதா? அல்லது எதிர்கால நகர்வுக்களுக்காக காத்திருக்கின்றதா? இந்தியா என்ற சந்தேகத்துக்கிடமான தகவலை வெளிப்படுத்தியுள்ளது. இது புவிசார் அரசியல் மீது இலங்கைக்கு மிக அருகில் உள்ள நாடு என்ற அடிப்படையிலும் இலங்கையின் பாதுகாப்பு இந்தியாவின் நலனுக்குட்பப்பட்டது என்ற அடிப்படையிலும் சீனாவுடன் ஒப்பிடும் போது இந்தியா இலங்கையுடனான உறவு பலவீனமான நிலைக்குள்ளயே தள்ளப்பட்டுள்ளது. இதனை சரி செய்வது என்பதும் இந்தியாவுக்கு கடினமனது என்பது மட்டுமன்றி இலங்கைக்கும் அது கடினமகவே உள்ளது .
எனவே ஐக்கிய மக்கள் சக்தியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் இலங்கையின் எதிர்காலத்திற்கான எண்ணப்பட்டாகவும், கருத்து நிலையாகவும் உள்ளது. இலங்கை இந்தியாவை நிராகரிப்பதன் ஊடாக பல நெருக்கடிகளை கடந்த காலத்தில் எதிர்கொண்டிருந்தது என்பதும் அதனை கருத்தில் கொண்டே ஐக்கிய மக்கள் சக்தியினுடைய உரையாடல் அமைந்துள்ளது என்றும் விளங்கிக்கொள்வது பொருத்தமானதாகும்.
-பேராசிரியார். கே.ரீ. கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)
