April 21, 2026
அரசியல் கட்டுரைகள்

லெபனானின் குண்டுவெடிப்பும் இஸ்ரேலின் பிராந்திய இருப்பும்

லெபனான் குண்டுத்தாக்குதல் அந்நாட்டின் அரசியலில் பாரிய நெருக்கடியை தந்துள்ளது. அதுமட்டுமன்றி உலகநாடுகளின் மத்தியிலும் அத் தாக்குதல் அதிக சந்தேகத்தினையும் நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. வெளிப்படையாகப் பார்த்தால் சாதாரண விடயமாக அக்குண்டுவெடிப்பு காணப்பட்டாலும் லெபலானின் பொருளாதாரத்தையும் ஆட்சித் துறையையும் அதிகமான தாக்குதலுக்கு தள்ளியுள்ளது. அதனால் ஏற்பட்ட ஒரு விடயமாகவே அந்நாட்டு பிரதமர் பதவி விலகியுள்ளார். அதனால் லெபலான் குண்டுவெடிப்பு உள்நாட்டிலும், பிராந்திய சர்வதேச மட்டத்திலும் அதிர்ச்சிகரமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இக் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததுக்கு பின்னால் காணப்படும் அரசியல் ரீதியான முக்கியத்துவத்தினை தேடுவதாக இக்கட்டுரை அமைய உள்ளது.

வெளிப்படையாக, பெய்ரூட் நகரில் அமைந்துள்ள இத்துறைமுகத்தில் களஞ்சியப்படுத்தியிருந்த 2500 தொன்க்கும் மேற்பட்ட அமோனியா நைத்திரைற்றினால் ஏற்பட்ட வெடிப்பின் பிரதிபலிப்பு என்று குறிப்பிடப்படுகிறது. இவ்வெடிப்பு தொடர்பில் ஏற்கனவே எச்சரிக்கை செய்யப்பட்டது என்றும், அதனை ஆட்சியிலிருந்த அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. ஏறக்குறைய இத்தாக்குதலில் 170க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் காணமலாக்கப்பட்டுள்ளதுடன், 6000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குண்டுவெடிப்பு நிகழ்ந்ததிலிருந்து 200 கி.மீ தூரம் அழிவுகள் ஏற்பட்டதாக தெரியவருகிறது. குறிப்பாக அரசாங்கத்தின் அசமந்த போக்கும், இராணுவத்தின் திட்டமிடலின் பலவீனமும் வெடிப்பு ஏற்பட வழிவகுத்துள்ளது என்று தெரியவருகிறது. இது மட்டுமன்றி வெடிப்பிற்கு பின்னரான சூழலில் லெபனான் நீதித்துறையின் பலவீனமான அணுகுமுறையினால ்பிரான்ஸ் உட்பட பல ஐரோப்பிய நாடுகள் சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விட்டுள்ளன.

இவ்வாறு, லெபனான் ஆட்சித்துறையில், அதன் இராணுவக் கட்டமைப்பில் பலவீனங்களை முன்வைத்தாலும், இதனைக் கடந்து வேறுபல அம்சங்களும் இவ்வெடிப்போடு தொடர்புற வாய்ப்புள்ளதென விளங்கிக்கொள்ள முடியும். அதாவது லெபனானின் எல்லையோரத்தில் அமைந்துள்ள இஸ்ரேல் 1947ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து இப்பிராந்தியத்தில் அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. குறிப்பாக ஈரான் மீதும் அதன் அணுவாயுத பரிசோதனை நிலையங்கள் மீதும் கொரோனா அச்சுறுத்தல் வலுப்பெற்ற சூழலிலும் பாரிய நெருக்கடி ஏற்பட்டமைக்கு இஸ்ரேல் மீதே ஈரான் குற்றம் சாட்டியது. அக்குற்றச்சாட்டுக்கு வலுவான காரணம் 2007ஆம் ஆண்்டு ஈரானின் அணு உலை மீது தானே தாக்குதல் நடத்தியது என இஸ்ரேல் பிரகடனப்படுத்தியது. அவ்வகையில் அவதானிக்கும் போது லெபனானின் குண்டுவெடிப்பின் பின்னால் இஸ்ரேல் இராணுவத்திற்கும் பங்கும் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக பலதடவை தீவிரவாத தாக்குதல்கள் மேற்கொண்டுள்ளன. அவ்வகைத் தாக்குதல் தவிர்க்கமுடியாது இஸ்ரேல் இருப்பினையும், அதன் பாதுகாப்பினையும், யூதர்களின் உயிர் வாழ்வையும் பாதிப்பதாக அமைந்துள்ளது. இதுமட்டுமன்றி யூதர்கள் தொடர்ச்சியாக நிலைத்திருப்பதற்கும் பாதுகாப்போடு செயற்படவும் லெபனானின் எல்லையோரத்தில் குடியேற்றப்பட்டிருக்கும் யூதர்களின் நலன்களை பாதுகாத்தல் என்பது அவசியமானது ஒன்றாக விளங்குகின்றது. இதனாலேயே லெபனானில் அதன் உள்நாட்டு கட்டமைப்புக்குள்ளேயே தகர்த்தெறியும் உத்தியை நிகழ்த்தியிருக்கலாம் என எண்ணப்படுகிறது. இவ்வாறே 2010ஆம் ஆண்டு பாரிய குண்டொன்று வெடித்து பொருளாதார நெருக்கடிக்குள் லெபனான் தள்ளப்பட்டது.

இதுமட்டுமன்றி இஸ்ரேல் தனது நட்பு நாடான அமெரிக்காவின் ஒத்துழைப்பும் பலமும் மட்டுப்படுத்தப்படுகிறது எனக் கருதுவதால் பிராந்தியங்களிடையே அச்சுறுத்தலூடாக தனது இருப்பை உறுதிப்படுத்த முயலுகிறது. ஆனால் இஸ்ரேல் அணுகுமுறை அமெரிக்க சார்ந்தும், அத்துடன் சீனா, வடகொரியா, ரஷ்ய, சிரியா சார்ந்தும் உருவாகி உள்ளது. காரணம், அமெரிக்காவுடைய நட்பும், இஸ்ரேலின் விருப்புக்கு இயங்கும் குடியரசுக்கட்சியின் தேர்தல் நெருக்கடி இஸ்ரேலுக்கு ஒரு எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க தேர்தலில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெறுமாயின், ஒபாமாவின் கொள்கைகள் பின்பற்றப்படும் நிலை ஏற்படுமாயின் இஸ்ரேல் உள்ளார்ந்த ரீதியிலும் பிராந்தியசர்வதேசத்திலும் அதிக நெருக்கடியை எதிர்கொள்ளலாம். அதனை கருத்திற்கொண்டே முன்கூட்டியே சில நகர்வுகளை இஸ்ரேல் மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டது. அதன் ஓர் அம்சமே லெபனான் குண்டுவெடிப்பு. அதன் இரண்டாம் அம்சமாகவே கடந்த ஆகஸ்ட் 13இல் ஐக்கிய அரபு எமிரட்சுடன் இஸ்ரேல் செய்துகொண்ட சமாதான உடன்படிக்கை காணப்படுகிறது. இதனுடன் ஈரானின் அணுவாயுதத்தை ஆரம்பகட்டத்தில் அழித்துவிட இஸ்ரேல் மேற்கொண்ட முயற்சிகள் முழுமை பெறாததும் இன்னொரு பிரதான காரணமாகும். எனவே லெபனான் குண்டுவெடிப்புக்கு பின்னால் இத்தகைய காரணியொன்று வலுவான அம்சமாக இருப்பதற்கு வாய்ப்புண்டு.

இவ்வாறே லெபனானின் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிப்புக்கு ரஷ்யாவின் போர்க்கப்பல் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக வட ஆபிரிக்க நாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றிவந்த கப்பலொன்று லெபனான் துறைமுகத்தில் தரித்து நின்றது என்றும், அதற்கான காரணம் உக்ரன் ரஷ்ய முரண்பாடு என்றும் அதாவது உக்ரைன் மாலுமிகள் ரஷ்யக் கப்பலில் ஆயுதம் ஏற்றிவந்தது என்றும் இருநாட்டுக்கும் யுத்தம் ஏற்பட்டபோது லெபனானின் தனித்துவிடப்பட்டது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அத்தகைய ஆயுதக் கப்பல் லெபனான் துறைமுகத்தில் நீண்டகாலம் தரித்து நின்றது என அத் தகவல் மேலும் உறுதிப்படுத்துகிறது. எனவே ரஷ்யக் கப்பலில் ஏற்பட்ட வெடிப்பே லெபனானில் பாரிய அழிவை ஏற்படுத்தியது எனவும் கருத்து நிலவுகின்றது.

எனவே லெபனான் குண்டுவெடிப்பு மேற்குறித்த சந்தேகங்களை அதிகம் கொண்டிருந்தாலும் பிராந்திய ரீதியில் இஸ்ரேல் பின்பற்றும் அணுகுமுறை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு பக்கம் அமெரிக்காவால் ஏற்படும் நெருக்கடி மறுபக்கம் சீனா, வட கொரியா, ரஷ்யா, சிரியா என்பவற்றால் ஏற்படும் அச்சுறுத்தல் என்பவற்றுக்கிடையே தனது பாதுகாப்பையும் உறுதிப்பாட்டையும் நிலைநிறுத்திக் கொள்வதற்கு சில உத்திகளை இஸ்ரேல் உருவாக்க ஆரம்பித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களாக ஈரானின் எல்லைக்குள் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கள், ஏவுகணைத் தாக்குதல், விண்ணுக்கு அனுப்பட்ட செயற்கைக்கோள் மூலம் ஈரான் தொடர்பில் திரட்டப்பட்ட தகவல்கள், ஐக்கிய அரபு எமிரட்சுடன் அண்மையில் இஸ்ரேல் மேற்கொண்ட சமதான ஒப்பந்தத்ததையும் அவதானிக்கையிலும் இஸ்ரேல் தனது இருப்பை உறுதிப்படுத்த லெபனானனை அச்சுறுத்த முயற்சித்திருக்கலாம். இதற்கு இன்னொரு உதாரணம்லெபனானின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி பெற்றுள்ளது.

ஜப்பானில் வீசப்பட்ட அணுகுண்டின் 1/10 பங்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு பின்னர் அமெரிக்கா உலக நாடுகளில் முதன்மைபெற்றது போன்றே லெபனானும் மாறியுள்ளது. பிரான்ஸ், ஜேர்மன் உட்பட அனைத்து ஐரோப்பிய நாடுகளும் லெபனானுக்கு உதவியையும் ஒத்துழைப்பையும் வழங்க முன்வைந்துள்ளன.

இதனால் லெபனானின் பொருளாதாரம் மாற்றம் ஏற்படுகின்றதோ தெரியவில்லை ஆனால் இவ் ​வெடிப்பு சம்பவம் தெளிவான ஒரு அரசியல் இராணுவ உத்திகளோடு நிகழ்த்தப்பட்டது என்பதை தெளிவாக காட்டுகிறது.

-கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)