April 21, 2026
அரசியல் கட்டுரைகள்

மீண்டும் உருவாகுமா இரு துருவ உலக பொருளாதார ஒழுங்கு ?

அமெரிக்க- சீன மோதல் போக்கு அதிகரித்துவரும் சூழல் ஒன்றுக்குள் உலக அரசியல் செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது. கொவிட்-19 ஏற்படுத்திய அரசியல் பரப்பில் இரு அரசுகளும் பயணிப்பதுடன் அதில் அமெரிக்கா சீனாவுக்கு எதிரான ஓர் அணியை பலமான திட்டமிடலுடன் தயார்; செய்து வருகிறது. அதில் தென் சீனக்கடல் விடயம் இந்திய சீன எல்லைத் தகராறு பீட்டான் சீன முறுகல் என்பனவற்றுடன் பொருளாதார ரீதியில் சீனாவுக்கு எதிரான நடவடிக்கையினை அமெரிக்கா முதன்மைப்படுத்தி வருகிறது. தற்போது இரு நாடுகளுக்குமான பிராந்திய தூதரகங்களை மூடும் நிகழ்வு ஆரம்பித்துள்ளது. இதன் விளைவுகளையும் உலகம் எதிர்நோக்கவுள்ள அரசியலையும் தேடுவதாக இக்கட்டுரை அமையவுள்ளது.

முதலில் இரு நாடுகளுக்குமிடையில் ஏற்பட்டுள்ள தூதரக விவகாரத்தை நோக்குவோம்.

கடந்த வார இறுதியில் (26.07.2020) அமெரிக்காவில் அமைந்துள்ள சீன துணைத் தூதரகத்தினை 72 மணித்தியாலத்தில் மூடுமாறு அமெரிக்கா அறிவித்தது. அதற்கான காரணங்கள் பலவற்றை அமெரிக்கா அறிவித்தது. குறிப்பாக அமெரிக்க மக்களின் தனிப்பட்ட அறிவுடமையான சொத்துக்களை பாதுகாக்கவும் அமெரிக்காவின் சான்பிரான்ஸ்கோ நகரத்தில் உள்ள சீனத் தூதரகத்தில் சீன விஞ்ஞானி டாங்ஹூவான் பதுங்கியிருப்பதாகவும் அவருக்கும் சீன இராணுவத்திற்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதாகவும் அவர் அமெரிக்காவின் விஞ்ஞான தொழிநுட்ப இரகசியங்களையும் மற்றும் கொவிட்-19 எதிரான மருந்து உற்பத்தி குறித்த இரகசியங்களையும் கண்டறியவும் வேவுபார்க்கவும் முயற்சிப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதன் பயனாகவே ஹூஸ்டனில் அமைந்துள்ள சீனத் தூதரகத்தை மூடுமாறு பணித்ததாக அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். பாம்பியோ மேலும் தெரிவிக்கையில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க நிறுவனங்களின் தகவல்களை திருடியதாக இரு சீனர்கள் மீது அமெரிக்க நீதித்துறையில் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள செங்குடு நகரில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தினை 72 (27.07.2020) மணித்தியாலத்தில் மூடுமாறு உத்தரவிட்டிருந்தது. இது குறித்து சீன வெளிவிவகார அமைச்சு குறிப்பிடும் போது அமெரிக்காவின் நேர்மையற்ற செயலுக்கான பதிலடி இதுவாகும் என்றும் சீன அமெரிக்க உறவின் தற்போதைய சூழலை சீனா பார்க்காது என்றும் இதற்கொல்லாம் அமெரிக்காவே காரணம் என்றும் தெரிவித்துள்ளது. இங்கிருந்த அமெரிக்கத் தூதரகத்தின் முக்கியத்துவம் ஒப்பீட்டடிப்படையில் முக்கியமானது என்றும் தீபெத்தினதும் சீனாவினதும் கிழக்கு இராணுவ மையத்துக்கு அண்மையானது என்றும் குறிப்பிடப்படுகிறது.

கொவிட் -19இன் பின்பான உலக ஒழுங்கொன்று வரையப்படுவதாகவே தெரிகிறது. இது பற்றிய பதிவுகள் ஏற்கனவே தெரியப்படுத்திய போதும் தற்போது அது மிகத் துல்லியமாக வெளிப்பட ஆரம்பித்துள்ளது. அதாவது உலகம் மீளவும் ஒரு இரு துருவ அரசியல் ஒழுங்குக்குள் செல்ல ஆரம்பித்துள்ளது. அதில் சீனா ஒரு சக்தியாகவும் அமெரிக்கா இன்னோர் சக்தியாகவும் நிலைத்திருக்கும் அரசியல் மோதலை உருவாக்க முனைகின்றன. அதனை வெளிப்படையாக கொவிட் -19 இன் பின்னர் அவதானிக்க கூடியதாக இருந்தது. ஆனால் அத்தகைய உலக ஒழுங்கானது பழைய பனிப்போர் போன்றோ அல்லது இருதுருவமாகவோ அமையப் போவதில்லை என்றே கூறலாம். காரணம் சீனாவின் சோசலிஸமானது 1980 களுக்கு பின்னர் சந்தை சோசலிஸமாக மாறிவிட்டது. ஏறக்குறைய நவதாராளவாத சிந்தனைக்குள் சீனாவின் பொருளாதார களம் தயாராகிவிட்டது. ஆனால் அதன் அரசியல் தான் ஆபத்தானதாக அமைந்துள்ளது. இரும்புத்திரை அரசியலும் நவதாராளவாத பொருளாதாரமும் இணைந்த ஒரு போக்கினை பின்பற்றும் தேசமாக சீனா உள்ளது. அதனால் அது பொருளாதாரத்தில் தளர்வும் அரசியலில் இறுக்கமும் உடைய ஒரு பொறிமுறை கட்டமைப்பினை உருவாக்க முனையும். அது முன்னாள் சோவியத் யூனியனது சிந்தனை போன்றதல்ல. மாறாக முதலாளித்துவத்தையும் சோசலிஸத்தையும் கலந்த ஒரு கலவையாக அமையும்.

இதனை முதலாளித்துவ அமெரிக்காவும் அதன் நட்புக்களும் எதிர்கொள்வது கடினமானதாகவே அமையும். காரணம் சீனாவினது இரட்டை முகம் உலகத்தினை இலகுவில் வெற்றி கொள்ள முடியும் என்ற நிலை தவிர்க்க முடியாததாகும். அது மட்டுமல்ல அமெரிக்கா உள்ளடங்கலாக ஐரோப்பிய அரசுகளிடம் காணப்பட்ட தூய நவதாராளவாதமானது கொவிட்-19 எதிர்கொள்ள முடியாத நெருக்கடியை தந்துள்ளது. அதாவது எல்லையில்லாத தனியார் மயமாக்கமானது பொருளாதார ரீதியில் இலாபத்தையும் செழிப்பினையும் ஏற்படுத்தினாலும் நடைமுறையில் தனது பிரஜைகளை பாதுகாக்க முடியாத சூழல் ஒன்றினை ஏற்படுத்தியிருந்தது. அதனால் அத்தகைய நிலையிலிருந்து மாறுதல் நோக்கிய நகர்வினை அமெரிக்கா சார்ந்த தேசங்கள் ஏற்படுத்த வேண்டிய நிலை தவிர்க்க முடியாததாகும். அதற்கான தயாரிப்புடனேயே அமெரிக்க தேர்தல் நகர்கின்றது. ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் பேடன் அத்தகைய கொள்கைகளை தனது அரசாங்கம் ஏற்படுத்தும் என்ற தேர்தல் வாக்குறுதியை வழங்கிவருகிறார். ஐரோப்பிய நாடுகளும் அதன் புலமையாளர்களும் அத்தகைய எண்ணங்களையே வெளிப்படுத்தி வருகின்றன. இந்த விடயத்தில் சீனர்கள் அதிகமான முன்னேற்றத்தினை கடந்த காலத்திலேயே எட்டியுள்ளனர். அதனால் சீனாவின் கவனம் முழுவதும் பொருளாதாரத்தை மையப்படுத்தியதாக அமைய வாய்ப்புள்ளது. எனவே இரு தரப்பும் நவதாராளவாதத்தையே பின்பற்ற விழைகின்றன. ஆனால் மேற்குலகம் தூய தாராளவாதத்துக்குள் ஏற்கனவே சென்றுள்ளதால் அதிலிருந்து விடுபடுவது கடினமானதாகவே அமையும். குறிப்பாக சுகாதாரம் மருத்துவம் போக்குவரத்து கல்வி போன்றவற்றில் பொதுத்துறையின் செல்வாக்கினை அதிகரிக்க வேண்டிய நிலை மேற்குலகத்துக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சீனா ஏற்கனவே நகர்ந்துவிட்டது.

ஆனாலும் அமெரிக்க -சீன இரு துருவ அரசியலுக்கான அதிக விருப்பினை சீனத் தரப்பே பின்பற்ற முனைகிறது. கொவிட்-19 மட்டுமல்ல சீனாவின் வர்த்தக மற்றும் பொருளாதார போரானது சீனாவின் தூண்டலால் அமெரிக்காவால் மேற்கொள்ளப்படும் விடயமாக தெரிகிறது. அதாவது சீனா ஒர் இரு துருவ அரசியல் ஒழுங்குக்குள் செயல்பட தயாராகிவிட்டது. அமெரிக்கா இலக்கம் -1 என்ற நிலையிலிருந்து கீழிறங்கி செல்வதற்கு தயாராக இல்லாத போக்கும் இதில் தெரிகின்றது. ஆனால் எதுவாயினும் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் சீன எதிர்ப்புவாதத்தினால் கட்டியெழுப்பப் போகும் ஒரு தேர்தலாகவே அமையும். அதன் வெற்றியாளர் சீனா எதிர்ப்புவாதியாகவும் ரஷ்ய எதிர்ப்புவாதியாகவும் அமைதல் அவசியமானதாக காணப்படும். தற்போதைய சீனத் தூதரக மூடலானது அத்தகைய தேர்தல் நோக்கிய நகர்வு என்ற விமர்சனம் உண்டு.

எதுவாயினும் இரு துருவ அரசியல் ஒழுங்குக்கான உலகம் வடிவாகிறது. அது வேகமாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. அதன் கீழ் உலக நாடுகள் அணிதிரட்டப்படவும் அரசியல் பொருளாதார இராணுவ ஒழுங்குகள் நிர்ணயிக்கப்படவும் உள்ளது. இதற்கு சீனா தயாராகிவிட்டது. அமெரிக்கா தனது இருப்பில் ஏற்பட்ட நெருக்கடியை தீர்க்கும் வரை காத்திருக்க விரும்புகிறது மட்டுமல்ல மீண்டும் இலக்கம் ஒன்றினை தக்க வைக்க முடியுமா எனத் தேடுகிறது.

-கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)