இந்திய சீன மோதல் நிலை இரு அரசுகளின் பலமான இராஜதந்திர உரையாடலினால் தணிந்துள்ளது. இத்தகைய போக்கு ஏன் என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் எழுவது இயல்பானது. யுத்தத்திற்கு இருநாடுகளும் நாள் குறித்து தொடங்குவதற்கான தயார்ப்படுத்தலை செய்துவிட்டு திடீரென பின்வாங்கியுள்ளமை அதிர்ச்சியான அல்லது சந்தேகிக்கப்படக்கூடிய விடயமாகவே காணப்படுகிறது. வெளிப்படையாக பார்த்தால் இரு நாடுகளும் சமாதானமாக செல்வதாக தோன்றும். எனிலும் உள்ளார்ந்த அர்த்தத்தில் இப்பார்வை சரியானதா? இதற்கான விடையை தேடும் நோக்கிலேயே இக்கட்டுரை முன்வைக்கப்படுகிறது.
முதலாவது, இந்திய தரப்பின் அண்மைக்கால போக்குகளை அவதானிப்பது பொருத்தமாக அமையும். இந்திய – அமெரிக்க நட்பு அரசியல், பொருளாதார உறவுகளை கடந்து இராணுவ உறவில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அமெரிக்கா, இந்திய கடற்படைக்கும் விமானப் படைக்கும் அவ்வாறே தரைப்படைக்கும் நவீன ஆயுதங்களை வழங்க முன்வந்துள்ளது. கொரோனா நெருக்கடியின் போது கடற்படை கப்பல்களிலிருந்து நீர்மூழ்கி கப்பல்களை தாக்கவும் நீர்முழ்கி கப்பல்களிலிருந்து நீர்முழ்கி கப்பல்களை அழிக்கவும் வல்லமையுடைய ஏவுகணைகளை வழங்கியிருந்தது. அவ்வாறே இந்திய தரைப்படை பெருமளவான துப்பாக்கிக்களை அமெரிக்காவிடமிருந்து அண்மைக்காலத்தில் இறக்குமதி செய்திருந்தது. தற்போது பிரான்ஸிடமிருந்து ரபேல் போர் விமானங்களை கொள்வனவு செய்வதற்கு இருநாடுகளுக்குமிடையிலே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஏறக்குறைய இந்திய நாணயப்படி அறுபத்தையாயிரம் கோடி ரூபாவுக்கு ரபேல் போர் விமானங்களை கொள்வனவு செய்ய 2016ஆம் ஆண்டிலிருந்து முயற்சித்து வருகிறது. அவ்வொப்பந்தத்தின் பிரகாரம் ஐந்து ரபேல் போர் விமானங்களை இந்திய விமானப்படையோடு சேர்த்துக்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. இவ்விமானத்தின் தொழில்நுட்பம் தென்னாசியாவுக்கு புதியது மட்டுமன்றி நீண்டதூர இலக்கை தாக்க ஏவுகணைகளை தாங்கி செல்லக்கூடியதுமாகவும் வானிலிருந்து வானத்தில் உள்ள இன்னொரு விமானத்தை தாக்கவும் பலமான ஏவுகணைகளை காவிச் செல்வதற்கு வலிமை கொண்டதாகவும் இருக்கின்றது. இவ்விமானம் 15.3M நீளமும், 10.9M அகலமும், 5.3M உயரமும் கொண்டது. மணிக்கு 2130KM வேகத்தில் பயணம் செய்யக்கூடியது. 1912KM வீச்சு எல்லையை இவ்விமானம் கொண்டுள்ளது. ஏறக்குறைய ரபேல் விமானத்தினை எதிரிகளால் கண்டறிவது கடினமான விடயம் எனக்கூறப்படுகிறது. இதில் பொருத்தப்பட்டுள்ள இரட்டை இயந்திரம் பயனுடையதாக கருதப்படுகிறது. 3D வரைபடத்தை எடுக்கக்கூடிய வசதியும் துல்லியமான தாக்குதலை செய்வதற்கு இலகுவானதாகவும் உள்ளது. அதுமட்டுமன்றி ரபேல் விமானம் மூன்று பரிமாணத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. விமானம் தாங்கி கப்பலில் பயன்படுத்தக்கூடிய விதத்திலும், தரை மீது தாக்குதலை நிகழ்த்த கூடிய விதத்திலும், மலைப்பிரதேசத்தை இலக்கு வைத்து தாக்கக்கூடிய வாய்ப்பையும் கொண்டுள்ளது. 35KMக்கு அப்பால் உள்ள அனைத்து பொருட்களையும் கண்டறியும் திறன் இவ்விமானத்துக்கு உண்டென இதன் தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இவ்விமானத்தில் பொருத்தி இலக்கை தாக்குவதற்கான ஏவுகணைகளையும் பிரான்ஸே வழங்க முன்வந்துள்ளது. குறிப்பாக ஸ்கேல், மெடியல் மற்றும் ஹம்மர் போன்ற ஏவுகணைகளை பிரான்ஸிடமிருந்து இந்திய விமானத்துறை வாங்க தீர்மானித்துள்ளது. ஹம்மர் ஏவுகணை (HAMMER) நடுத்தர வீச்சு எல்லையை கொண்டிருந்தாலும் 60 – 70KM தூரத்தை தாக்கும் திறன் கொண்டது. அதிலும் குறிப்பாக வானிலிருந்து தாக்கும் திறன் கொண்டதாக காணப்படுகிறது. அதுமட்டுமன்றி ஹம்மர் ஏவுகணை அனைத்து காலநிலைக்கும் தாக்குப்பிடிக்க கூடியதும், எதிர்ப்புதிறன் கொண்டதும், வேகமாக விமானத்திலிருந்து பயன்படுத்தக்கூடியதுமான திறன் உடையது என கூறப்படுகிறது. இது பெருமளவான யுத்தக்களங்களை புதிய திசையில் கொண்டு செல்ல உதவுமென கூறப்படுவதுடன், 2007ஆம் ஆண்டு இவ்வகை ஏவுகணை பிரயோகம் அதிகரிக்கப்பட்டது. ஏறக்குறயை 250Kg வெடிகுண்டை காவிச்சென்று துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாக இவ்ஏவுகணை விளங்குகிறது. இதே போன்று மெடியல் மற்றும் ஸ்கேல் என்பனவும் துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளாகக் குறிப்பிடப்படுகின்றன.
மேற்குறித்த ஒவ்வொரு ஏவுகணைகளும் மலைப்பிரதேசத்திலும், நிலப்பரப்பிலும், பதுங்குகுழியிலும் வலிமையான தடுப்பு அரண்களை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டுள்ளன. இவ் ஏவுணைகள் இந்தியாவின் போரியல் உபாயங்களுக்கும் மிக வலிமையான பங்களிப்பை வழங்கும் என பாதுகாப்பு ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்தியாவின் மிகப்பிரதான அணுகுமுறைகளுள் ஒன்றாக தரைப்படை, விமானப்படை, கடற்படை மூன்றையும் ஒரே தளத்தில் குவிக்கவும் போர்முனைக்கு தயாராக்குவதிலும் உணர்வுரீதியான பலப்படுத்தலை ஏற்படுத்துவதிலும் படைகளுக்கான உற்சாகத்தை அளிப்பதிலும் இக்காலத்தை பயன்படுத்த முனைகிறது. இதற்கான அனைத்து நகர்வுகளையும் அமெரிக்காவின் பென்டகனும் CIAஉம் இணைந்து இந்தியாவுக்கு வழங்கி வருகின்றன. அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் தென்னாசியா நோக்கி அமெரிக்க இராணுவத்தை நகர்த்துவதற்கான திட்டமிடலை தான் கொண்டுள்ளதாக ஒன்றுக்கு மேற்பட்ட தடவை குறிப்பிடுகின்றார். பல ஊடகங்கள் சீன எல்லையிலிருந்து பின்வாங்கியதாகவும் கூறுகின்றன. ஆனால் நடைமுறையில் சீனா பின்வாங்கிய பிரதேசங்கள் 10,000அடிக்கு மேற்பட்டவெனவும் மனிதர்கள் தாக்குப்பிடிக்க முடியாத பிரதேசங்களாகவும் அமைந்துள்ளன என்றும் கூறப்படுவதோடு சீனா அமைத்த கூடாரங்கள் பதுங்குகுழிகள் என்பனவற்றை அப்படியே பராமரிப்பதற்காக ஒரு சூழலை ஏற்படுத்தி விட்டுச்சென்றுள்ளது. இதனோடு சீனாவின் விலகல் பிரதேசங்களில் போதியளவில் இராணுவம் நிலைத்திருப்பதோடு தாக்குதல் செய்வதற்கு ஏற்றவகையிலான சூழலமைவு இல்லாததும் குறிப்பிடத்தக்கது. அதேவேளை இந்தியாவோடு நெருக்கடிக்கு உட்பட்டு கைப்பற்றிய பிரதேசங்கள் பலவற்றை இன்னுமே கைவிடாது தொடர்ந்து பராமரித்து வருகிறது. எனவே இதனை வைத்து கொண்டு, சீனா இராணுவம் எல்லையை விட்டு வெளியேறியது எனச் சொல்வது பொருத்தமற்றதாகும். ஆனாலும் இந்தியா தொடர்ச்சியாக இராணுவரீதியாக தன்னைப்பலப்படுத்த திட்டமிடுவதும் எல்லைகளில் இராணுவத்தினரை நிறுத்தியுள்ளமையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளது.
இரண்டாவது, சீனாவை பொறுத்தவரை தனது இராணுவத்தை முழுமையாக யுத்தத்துக்கு தயார்செய்வதோடு புதிதாக நீண்ட தூரம் தாக்கும் ஏவுகணையொன்றை பரிசோதித்திருப்பதோடு செயற்கை கோள்களையும் எவரெஸ்ட் உட்பட இந்தியாவின் எல்லையோர மலைப்பிரதேசங்கள் மற்றும் இந்தியாவை கண்காணிப்பதற்கான நகர்வுகளை அதிகமாக ஏற்படுத்தி வருகிறது. அதே போன்று ரஷ்யாவின் சமவலுவுள்ள ஆயுதங்களை பரிசோதிப்பதோடு ஒளியை விட பல மடங்கு வேகமான, ரஷ்ய தயாரிப்பான ஹைபோசொனிக்கை சீனா பரிசோதித்து வருவதாக குறிப்பிடப்படுகிறது. எனவே சீனாவின் இராணுவ ரீதியிலான வளர்ச்சி என்பது இந்தியாவுடன் ஒப்பிடும் போது அதிதீவிரமான போர் மரபுகளை முதன்மைப்படுத்திய உத்திகளை கொண்டதாகவே உள்ளது. இந்தியாவை பல அடுக்கமைவாக சீனா சுற்றிவளைத்து வருகிறது. முதலாவது லடாக் பகுதியிலிருந்து அருணாச்சல பிரதேசம் வரையிலான சுற்றிவளைப்பை தரைவழியூடாகவும், குவாடன் துறைமுகம், ஹம்பாந்தோட்டை, சிற்சுவை கடல்சார்ந்த சுற்றிவளைப்பையும் கொண்டிருக்கிறது. இதன் இரண்டாவது சுற்றிவளைப்பாக ஈரான், வடகொரியா சார்ந்து புதிய பட்டுப்பாதையினூடாக மத்திய ஆசியாவையும் இணைத்து ஓர் அணியை மேற்கொண்டுள்ளது. இத்தகைய சுற்றிவளைப்பில் முதல் அடுக்கை இந்தியாவின் மையப்பகுதியை நோக்கி நகர்த்த முனைகிறது. வெளிப்படையாக பார்த்தால் இந்தியாவை அங்கீகரிக்கின்ற இயல்புகளோடு அதன் தொடர்பு காணப்பட்டாலும் அரசியல் இராணுவ பொருளாதார தளத்தில் இந்தியாவின் இருப்புக்கு நெருக்கடி கொடுக்கும் அணுகுமுறையையே சீனா பின்பற்றி வருகிறது.
எனவே, அமெரிக்கா தென்னாசிய பிராந்தியத்தில் இந்தியாவை முன்னிறுத்திக் கொண்டு ஒரு போரை தயார்செய்ய ஆரம்பித்துள்ளது. இந்தியாவை இராணுவ ரீதியாக வளர்த்துவிடுவதன் மூலம் அத்தகைய போரை சாத்தியப்படுத்தலாம் எனக் கருதுகிறது. ஆனால் இந்தியாவின் உட்கட்டமைப்பானது சமூகரீதியில் உறுதியற்ற தன்மையும் பொருளாதார ரீதியில் நெருக்கடி மிக்கதாகவும் காணப்படுகிறது. அத்தோடு கொரோனா தொற்று அதீதமான பொருளாதார நெருக்கடியையும் சமூக நெருக்கடியையும் ஏற்படுத்தி உள்ளது. இதனை எதிர்கொள்வதற்கு அல்லது வெற்றி கொள்வதற்கு தயார் இல்லாத இந்தியா சீனாவுடனான ஒரு யுத்தத்தை சாத்தியப்படுத்துமாயின் எதிர்கால இருப்பு கேள்விக்குறியாக மாறும்.
இதன்மூலம் புவிசார் அரசியல் ரீதியிலான இணக்கப்பாட்டை காணவேண்டிய இரு அரசுகளையும் மோதவிட்டு இரு அரசுகளின் பலத்தையும் அழிப்பதே அமெரிக்காவின் நோக்கமாகும். சீனா ஒரு சோசலிச சர்வதிகாரத்தை கொண்ட நாடு என்பதால் எதிர்காலத்தில் இந்தியாவே அமெரிக்காவிற்கு அல்லது மேற்கிற்கு ஆபத்தான அரசாக இருக்கும் என்பதை மேற்குலகு உணர்ந்து முன்கூட்டியே அதற்கு எதிராக செயற்பட விளைகிறது.
-கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)
