ஆசியாவை நோக்கிய போருக்கான முனைப்புகள் அதிகரித்தவண்ணம் உள்ளது. அத்தகைய நகர்வுகள் அதிகம் தென்னாசிய நாடுகளுக்கிடையே உருவாவதைக் காணமுடிகிறது. சீனாவுக்கு எதிரான போரை ஊக்குவிப்பது போல் காணப்பட்டாலும் அது பெருமளவுக்கு தென்னாசியப் பிராந்தியத்தினை மையப்படுத்தியதாகவே தெரிகிறது. சீனா சார்ந்து அதன் எல்லை நோக்கிய பரவலின் பிரதிபலிப்பாக எழும்பும் முரண்பாடுகளும் மோதல்களும் புதிய ஒழுங்கிற்கான கருவாக அமைந்துள்ளது. சீனா – இந்தியாவிற்கு இடையில் ஏற்பட்ட எல்லைப் பிரச்சினை இன்று தென்னாசியா நாடுகள் அனைத்திற்கும் பொதுவானதாக மாறியுள்ளது. இக்கட்டுரையும் தென்னாசியாவை மையப்படுத்தி ஏற்பட்டுவரும் போர்ச்சூழலைப் பற்றிய தேடலாக அமையவுள்ளது.
மிகப்பிந்திய முரண்பாடாக காணப்படும் பூட்டான் – சீனா எல்லைப் பிரச்சினை தென்னாசிய அரசியலில் அதிக தாக்கத்தினை ஏற்படுத்துவதாக மாறிவருகிறது. குறிப்பாக சீனா கிழக்கு பூட்டானில் அமைந்துள்ள சாக்டெங் வனவிலங்கு சரணாலயத்தை விருத்தி செய்யும் நோக்கில் பூட்டான் அரசாங்கம் மேற்கொண்டுவரும் அனைத்து நடவடிக்கையையும் தடுத்து நிறுத்த முயன்றுள்ளது. குறிப்பாக பூட்டான் அப்பகுதியை துரிதகெதியில் விருத்தி செய்ய பாரிய நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டுள்ளது. சீனா அந்த நிலப்பகுதியை உரிமை கோரியிருப்பதுடன் அது தனது எல்லைக்குள் அமைந்துள்ளதாக குறிப்பிட்டு வருகிறது. இப்பகுதி சுமார் 650 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கத்தினை சுற்றுச்சூழல் வசதி கவுன்சிலில் வழங்க முன்வந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். பூட்டானுக்கு என அந்த ;சுற்றுச்சூழல் அமையத்தின் பிரதிநிதி யாரும் கிடையாது. இந்தியாவே பூட்டானைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றது. அத்துடன் கடந்த செப்ரெம்பர் 2017 முதல் பங்களாதேஷ் பூட்டான் மற்றும் இலங்கைக்கான பிரதிநிதியாக இந்தியாவே விளங்குகிறது.
இதுபற்றி சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது சீனா – பூட்டான் இடையேயான எல்லை இதுவரை சரியாக வரையறுக்கப்படவில்லை. எனவே பூட்டானுடன் எல்லை பிரச்சினையானது மிக நீண்டகாலமாக உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண கடந்த 1984 முதல் 2016 ஆம் ஆண்டு வரை 24 முறை சீனா – பூட்டான் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. அத்துடன் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் திட்டங்களை சீனா தன்வசம் வைத்துள்ளது என்றும் சீனாவை குற்றம் சாட்ட உலக நாடுகளுக்கும் பூட்டானுக்கும் உரிமை கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கான பிரதான காரணம் பூட்டானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலவும் சுமூகமான உறவேயாகும். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே சிறிய நிலப்பரப்பினைக் கொண்ட பூட்டானின் இறையாண்மையை இந்தியா பாதுகாத்து வருவதேயாகும்.
அது மட்டுமன்றி பூட்டான் -சீனா முரண்பாட்டுக்கு காரணம் இந்திய மாநிலமான அருணாசலப் பிரதேசம் மீதான சீனாவின் உரிமை கோரலாகவே தெரிகிறது. ஏறக்குறைய அருணாசலப் பிரதேசத்தின் சரிசமமான பகுதியை சீனா 1962 போரில் கைப்பற்றி வைத்துள்ளது. அதன் மீது தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் நடவடிக்கைகளையும் சீனா தொடர்ந்த வண்ணம் உள்ளது.
அதனை விட உலக சுற்றுச் சூழலுக்கான அமையத்தின் உருவாக்கம் முதல் நிதி வழங்கும் உரிமத்தினை அமெரிக்கா கொண்டிருப்பதுவும் சீனாவுக்கு அதிக முரண்பாடாக உள்ளது. அதாவது 1992இல் அமைக்கப்பட்ட இவ்வமைப்பு சுற்றுச்சூழல் துறையின் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கான அமெரிக்காவை தளமாக கொண்ட உலகளாவிய அமைப்பாகும். இதுவரை நிதியளிப்பதில் கருத்தில் கொள்ளாதிருந்த அந்நாடு அது திடீரென நிதியளிப்பிற்கான வரையறைக்குள் கொண்டு வரப்பட்டதன் பின்னால் அமெரிக்கா உள்ளமையே சீனாவின் இந்த முரண்பாட்டுக்கு முக்கிய காரணம் எனத் தெரிகிறது.
சீனா ஏற்கனவே இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளுடன் கொண்டுள்ள நெருக்கமான உறவினால் இந்தியாவை சுற்றிவளைத்துள்ளது என்ற விமர்சனம் காணப்படுகிறது. பாகிஸ்தான் நேபாளம் இலங்கை பங்களாதேஷ் போன்ற நாடுகள் சீனாவின் பிடிக்குள் அகப்பட்டுள்ளன. அதனை மேலும் விரிவாக்குவதற்கான திட்டங்களை சீனா மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் இந்தியாவின் மற்றொரு அயல் ;நாடான பங்களாதேஷுடன் நெருக்கமான உறவை கொண்டிருக்கும் சீனா மேலும் பல சலுகைகளை அந்த நாட்டுக்கு வழங்க முன்வந்துள்ளது. அதாவது பல ஆண்டுகளாக பங்களாதேஷ் தனது ஏற்றுமதிகளுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டுமென சீனாவிடம் கோரிவந்த நிலையில் தற்போது சீனா அதிரடியாக பங்களாதேஷ் ஏற்றுமதி செய்யும் 97 சதவீத பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்க முன்வந்துள்ளது. இதே போன்று இலங்கை, மியன்மார், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பெருமளவு பணத்தை முதலீடு செய்வதன் மூலம் அந்நாடுகளை தன் வசப்படுத்தும் முயற்சியை சீனா மேற்கொண்டு வருகின்றது.
இவற்றுக்கு எதிராக அமெரிக்க-இந்தியக் கூட்டு பலமான எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட ஆரம்பித்துள்ளது. அமெரிக்கா ஆப்கானிஸ்தானிலிருந்தும் ஜேர்மனியிலிருந்தும் விலக்கிக் கொள்ளும் படைகளை தென்னாசிய பகுதிகளில் குவிப்பதற்கு முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அத்துடன் சீன- – இந்திய போர் ஏற்பட்டால் அதில் அமெரிக்கப் படைகளும் ஆயுத தளபாடங்களும் இந்தியாவுக்கு வழங்கப்படுமென அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் பாம்பியோ தெரிவித்துள்ளமை கவனத்திற்குரியதாகும்.
எனவே இந்திய -சீன எல்லையில் நிகழவிருந்த போர் தணிந்தாலும் எதிர்காலத்தில் அத்தகைய போருக்கான தயார்படுத்தல்களில் இரு அரசுகளும் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அத்தகைய போர் முஸ்தீபுகளை தென்னாசியாவுக்குள் நகர்துவது என்ற எண்ணத்துடன் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் முனைகின்றன. இதில் இந்தியாவினதும் சீனாவினதும் பங்கே போரை தீர்மானிப்பதாகவுள்ளது. அதிலும் புவிசார் அரசியல் பரப்பில் நெருக்கமான சீனாவை நிராகரித்துவிட்டு அமெரிக்காவுடன் கைகோர்த்துக் கொண்டு ஒரு போரை இந்தியா திட்டமிடுமாக இருந்தாலும் அது பெரும் ஆபத்தானதாகவே இந்தியாவுக்கு அமையும். இந்தியா அமெரிக்;காவின் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு செயல்படுமாயின் ஆசியாவினது நூற்றாண்டு கனவு சாத்தியமாக வாய்ப்புள்ளது.
-கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினகரன்)
