உலக ஒழுங்கில் முன்னும் பின்னுமான அரசுகள் காணாமல் போகும் நெருக்கடிக்குள் அகப்பட்டுள்ளதுடன் உலகமே நிமிர முடியாது துயரத்துடன் செயல்படுகிறது. ஆனாலும் அவ்வப் போது உலக அரசியல் பரப்பிலுள்ள ஆதிக்க சக்திகள் தமது அரசியல் இருப்பினைப் பலப்படுத்தும்’ நகர்வில் ஈடுபட்டுக் கொண்டே உள்ளன. குறிப்பாக தென் சீனக் கடலில் அமெரிக்க விமானம் மீது சீனக்கடற்படைத் தாக்குதல் நிகழ்த்தியது போல் பிரிட்டன் எல்லைக்குள் ரஷ்ய விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக பிரிட்டன் தெரிவித்தது. அவ்வாறே ட்ரம்பின் போர் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் தீர்மானம் இரு சபைகளிலும் நிறைவேறியது.இந்த வரிசையில் ஈராக்கிலுள்ள அமெரிக்க கூட்டுப்படைகளின் தளங்கள் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இக்கட்டுரையும் அமெரிக்காவின் ஈரான் மீதான நகர்வுகளை தேடுவதாக அமையவுள்ளது.
இரண்டாவது ஈராக்கில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் கூட்டுப்படைகள் நிலை கொண்டுள்ள பகுதியில் மீண்டும் ரொக்கற் குண்டுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஈராக்கின் வடக்குப் பகுதியில் டாஜி இராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டதுடன் 12 படைவீரர்கள் காயமடைந்துள்ளனர். இதில் அமெரிக்கப்படை வீரர் ஒருவர் உட்பட இரு படையினரும் ஒரு பிரிட்டன் படையினரும் கொல்லப்பட்டுள்ளனர். ஏற்கனவே 100 மேற்பட்ட படைமயினர் பாரிய பாதிப்புக்குள்ளாகியிருப்பதுடன் தற்போது வீசப்பட்ட 18 ரொக்கட் குண்டுகளும் முகாம் மீது வீழ்ந்து வெடித்தாக ெதரியவருகிறது. இத்தகைய தகவலை அமெரிக்க படைத் தரப்பே அறிவித்துள்ளது. அதனால் ஏற்பட்டுள்ள சேதவிபரம் தொடர்பில் சந்தேகம் இன்னும் நிலவுகிறது.
மேற்குறித்த இரு சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டதாகும். சிலவேளைகளில் அமெரிக்காவின் இரு சபைகளதும் தீர்மானம் அமெரிக்க ஜனாதிபதியின் எதிர்கால போர் நகர்வுகளை கட்டுப்படுத்த திட்டமிடுவதை விட அதனை மிக நேர்த்தியாக நகர்த்த திட்டமிடுகிறது எனக் குறிப்பிட முடியும். எதிர்காலத்தில் ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா திட்டமிடுவதனை குறிப்பிடுவதாகவே தெரிகின்றது. அதற்கான நகர்வை தொடக்கிவைக்கும் விடயமாக பார்த்தல் பொருத்தமானதாகும். அமெரிக்க ஜனாதிபதியின் அரசியல் நகர்வுகளில் காணப்படும் பலவீனங்களை சரிசெய்யும் விடயமானது சரியான தீர்மானத்தை மேற்கொள்வதற்கான போக்காகவே அமையும். எதிர்காலத்தில் அமெரிக்கா ஈரான் மீதான போரை திட்டமிடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அத்துடன் அது ஏற்கனவே அத்தகைய முயற்சிகளுக்குள் அமெரிக்க படைகளையும் புலனாய்வுத் தகவல்களையும் திரட்ட ஆரம்பித்துள்ளது. ஈராக்கிலிருந்து படைவிலகல் ஆப்கானிஸ்தானிலிருந்து படை வாபஸ் போன்றன ஏறக்குறைய ஒரு போருக்கான நகர்வை நோக்கியதாகவே தெரிகிறது. ரஷ்யாவின் முன் நகர்வுகள் இல்லாது விட்டிருக்குமாயின் ஒரு போரை அமெரிக்கா இலகுவில் சாத்தியப்படுத்தியிருக்கும். தற்போது அதனிடம் உள்ள குழப்பமும் ரஷ்யா பற்றிய விடமேயாகும். சிரியா துருக்கி மோதலும் சாத்தியமற்றதாகப் போனமை அமெரிக்காவுக்கு பெரும் குழப்பமாகிவிட்டுள்ளது. சுரைலமானியின் படுகொலையை ஒரு போராக மாற்ற எடுத்த முயற்சியை ரஷ்யா தடுத்துவிட்டதாவே பென்ரகன் கருதுகிறது. ஆனாலும் இத்தகைய உத்திகளுடன் ஒரு போரை அமெரிக்கா திட்டமிடுகிறது. அதனை தனித்து எதிர்கொள்ளாது கூட்டுப்படைகளின் தாக்குதலாக மாற்றிக் கொள்ள விரும்புகிறது. அதற்கு ஏற்ற வகையிலேயே நேட்டோ படைகளையும் அவற்றுடனான ஒப்பந்தங்களையும் கையாண்டு வருகிறது.
எனவே அமெரிக்காவின் இரு சபைகளும் எடுத்த முடிவானது முழுமையான போருக்கு திட்டமிடுவது போல் அமைந்துள்ளது. அமெரிக்கா ஒரு போரை உருவாக்கும் உத்திகளை அவ்வப் போது ஏற்படுத்தும். அவ்வாறே அதனை கூட்டாக எடுக்க முயலும். அது சிலவேளைகளில் இஸ்ரேலுக்கு ஆதரவாகவோ அல்லது அமெரிக்காவுக்கு ஆதரவானதோ எதுவானதாகவும் அமையலாம். இரு விடயமும் ஒன்று என்றே அமெரிக்கா கருதுகிறது. இரு தரப்பினது நலன்களும் ஒன்றானதே. இஸ்ரேலின் அரசமைப்பினைக் கட்டுப்படுத்தும் வல்லமை அமெரிக்காவுக்கு இருக்கிறது என்பதை விட அமெரிக்காவைக் கட்டுப்படுத்தும் திறன் இஸ்ரேலுக்கு உண்டு என்பதை நிராகரிக்க முடியாது. அமெரிக்கா இஸ்ரேலின் நலன்களுக்காகவே மேற்காசியா முழுவதும் தனது படையையும் தாக்குதலையும் மேற்கொண்டு வருகிறது.
-கலாநிதி கே.ரீ. கணேசலிங்கம்-
(நன்றி: தினகரன்)
