நடந்து முடிந்த இஸ்ரேல்-பாலஸ்தீன போர் மேற்காசிய அரசியலில் அதிக மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் மதிப்பீடு செய்துவருகின்றன. இஸ்ரேல் பாலஸ்தீனத்தரப்பு மட்டுமல்ல அந்த பிராந்தியமே மாற்றத்தை நோக்கி நகர்கிறது.நாடுகள் ஒன்று சேர்ந்து உடன்பாடுகளையும் பேச்சுக்களையும் ஆரம்பிப்பதுடன் பொருளாதார வர்த்தக உறவுகளையும் இராணுவத் தொடர்புகளையும் ஏற்படுத்தி வருகின்றன. அது மட்டுமல்லாது வல்லரசுகளது கவனமும் அவற்றின் இடம்மாறுதல்களும் நிகழ ஆரம்பித்துள்ளது.மேற்காசியாவின் களம் மாறுதலடைகின்றதை தேடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
முதலாவது, 26.05.2021 அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்ரனி பிளிங்கன் இஸ்ரேலுக்கு பயணமான விடயம் அதிக மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது பயணம் இரு தரப்புக்குமான போர் நிறுத்தத்தை பலப்படுத்துவதுடன் இரு தரப்புடனும் அமெரிக்காவின் உறவை உறுதிப்படுத்தும் நோக்குடன் நகர்ந்திருந்தார். ஆனால் அவர் அங்கு பத்திரிகைகள் மத்தியில் உரையாடும் போது இரண்டு விடயங்களை முதன்மைப்படுத்தியிருந்தார்.அவை இரண்டுமே இஸ்ரேலுக்கு அதிக ஆத்திரத்தை ஏற்படுதியிருந்தது. அதில் ஒன்று ஜெரூசலத்தில் பாலஸ்தீனருக்கான அமெரிக்க தூதரகத்தை நிறுவப் போவதாக அறிவித்தமையாகும். அது தொடர்பில் ஹமாஸ்-இஸ்ரேல் தரப்புக்களுக்கிடையே போர் நிறுத்தத்தை உருவாக்கிய எகிப்து கோரியதன் பிரகாரமே அத்தகைய அமெரிக்க தூதரகத்தை அமைக்கவுள்ளதாக தெரியவருகிறது. ஏற்கனவே முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தை நிறுவியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இத்தகைய பாலஸ்தீனாவுக்கான அமெரிக்க தூதரக விவகாரம் இஸ்ரேலால் நிராகரிக்கப்பட்டதுடன் கண்டனத்தையும் பிரதமர் நெதனயாகு தெரிவித்துள்ளார். இரண்டாவது விடயம் ஈரானுடன் அமெரிக்கா மீளவும் அணுவாயுத் தொடப்பான பேச்சுக்களை ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தார். ஈரானுடன் எந்தவிதப் பேச்சுக்களையும் ஆரம்பிக்க கூடாது என குறிப்பிட்டுவந்த இஸ்ரேலுக்கு பிளிங்கனின் அறிவிப்பு அதிர்ச்சியானதாக அமைந்துள்ளது. அது மட்டுமன்றி அமெரிகட்க வெளியுறவுச் செயலாளர் எகிப்து ஜோடான் மற்றும் பாலஸ்தீனத்துக்கு விஜயம் செய்வதாகவும் தெரியவந்துள்ளது.
இரண்டாவது, சவுதியரேபியா-துருக்கி உறவு மீளவும் பலமடைகிறதற்கான நகர்வை துருக்கிய வெளியுறவு அமைச்சர் Cavusoglu-இன் (10.05.2021) சவுதியரேபியாவுக்கான இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் தொடக்கி வைத்தது. கடந்த 2018 இல் சவுதியரேபியாவின் பத்திரிகையாளரான ஜமால் ஹசகோக்கியின் படுகொலைக்குப் பின்னர் முறிந்த இரு நாட்டு உறவும் தற்போதே மீள உலுவாகியுள்ளது. இதுவும் பெருமளவுக்கு பாலஸட்தீனத்தில் இஸ்ரேல் நிகழ்த்திவரும் தாக்குதலையும் அதன் பாதிப்புகளையும் பற்றியதாக அமைந்தரிருந்ததுடன் இரு தரப்பு உறவுகளும் உரையாடியதாக தெரியவந்துள்ளது. மேலும் துருக்கிய தயாரிப்பான ஆளில்லா விமானங்களை சவுதியரேபியாவுக்கு வழங்குவது பற்றியும் இரு நாட்டுக்குமான வர்த்தக உறவு பற்றி உரையாடியதாகவும் அவர் தனது ருவிட்டரில் பதிவு செய்துள்ளார். இது அதிக ஆச்சரியத்தை மேற்காசியாவில் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அதிக முரண்பாடுகளைக் கொண்டிருந்த இரு தரப்பும் இணைந்திருப்பதுடன் துருக்கிய ஜனாதிபதி எட்டோகன் இஸ்ரேலுக்கு எதிராக வெளிப்படுத்திய தகவல்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்ததுடன் ரஷ்சியாவினதும் ஐ.நா வினதும் தலையீட்டுக்கு கோரிக்கை விடுத்திருந்தமை கவனிக்கத்தக்க விடயமாகும்.
மூன்றாவது, கட்டார் இளவரசர் சேக் தமிம் பின் ஹமாட் அல் தானி சவுதியரேபியாவுக்கு அரச முறை விஜயம் செய்துள்ளமை மேற்காசிய அரசியலில் அடுத்த பதிவாக அமைந்துள்ளது. கட்டார் இளவரசர் சவுதியரேபியாவின் இளவரசர் முகமட் பின் சலமனுடன் இரு தரப்பு உறவு பற்றி உரையாடியதுடன் சர்வதேச பிராந்திய விடயங்கள் பற்றி உரையாடியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நான்காவது, துருக்கி இஸ்ரேல்-பாலஸ்தீன போர் தொடங்கிய மறுதினமே (11.05.2021) எகிப்துடன் போர் நிறுத்தம் பற்றிய உரையாடலைத் தொடக்கியிருந்தது. இஸ்ரேலின் நடவடிக்கையை கண்டித்த துருக்கி அதன் மீது சர்வதேச அளுத்தத்தினை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கியது. அது மட்டுமன்றி அமெரிக்காவின் பிராந்திய அதிகாரம் தொடர்பிலும் இரு நாடுகளும் உரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ஜோ பிடன் மீதான குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக வெளிப்படுத்திய துருக்கிய ஜனாதிபதி இரத்தத்தால் வரலாற்றை எழுதாதீர்கள் என எச்சரித்திருந்தமை கவனத்திற்குரியதாகும். அதாவது எகிப்தின் தலைமையில் நகர்வுகளை தூண்டிய நாடு துருக்கி என்பது புரிந்து கொள்ளக் கூடிய தகவலாக உள்ளது.
ஐந்தாவது, ஈரான் இஸ்ரேலை எதிர் கொள்ள புதிய உபாயம் ஒன்றினை உருவாக்கியுள்ளதை ஹமாஸ்-இஸ்ரேல் போர் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாதக நிதி உதவி உட்பட ஈரானே தமக்கான ஆயுததளபாட உதவிகளை மேற்கொண்டதாக ஹமாஸ் அமைப்பின் தலைமையான ஸ்மாயில் ஹனியா தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மீதான பாரிய ஏவுகணைத் தாக்குதலுக்கு ஈரானின் நடவடிக்கையே காரணம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அனைத்து ஏவுகணைகளும் ஈரான் தயாரிபபுக்கள் எனவும் இஸ்ரேலிய பிரதமர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஈரான் பிராந்திய ரீதியில் எழுச்சி பெற்றுள்ளதுடன் ஈரானிய ஆதரவு பெற்றுள்ள போராளிக்குழுக்களுடன் ஹமாஸ் உறவு வைத்துள்ளதற்கும் ஈரானே காரணமாகவுள்ளது. இதனால் லெபனான் சிரியா மற்றும் ஜோடான் பகுதியிலிருந்து இஸ்ரேல் மீதான தாக்குதல்களுக்கு அத்தகைய போராளிக்குழுக்களே காரணம் எனவும் கூறப்படுகிறது. ஒட்டு மொத்தமாக ஈரான் இப்போரை பின்புலத்திலிருந்து கொண்டு நிகழ்த்தியுள்ளது. ஏறக்குறைய ஈரான் பிராந்திஜய சக்தியாக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலைக்குள் இருக்கின்ற போது அதற்கான வாய்ப்பாக இந்த போர் அமைந்துள்ளது. இஸ்ரேலால் அதிகம் பாதித்துள்ள ஈரான் அதற்கான பதிலை வழங்கியுள்ளது எனக் குறிப்பிட முடியும். இத்தகைய உத்தியை ஈரான் எதிர்காலத்தில் அதிகம் கடைப்பிடிக்pக முயலும் என்பது அதன் நகர்விலும் ஹமாஸின் அணுகுமுறையிலும் தெரிகிறது.இது இஸ்ரேலுக்கு ஆபத்தான அரசியலாக மாறியுள்ளது என்பது கவனத்திற்குதரியதாகும்.
ஆறாவது, வல்லரசுகளது இடம்மாறும் காட்சியையும் இந்த பேரில் காண முடிந்தது. குறிப்பாக இஸ்ரேல் அமெரிக்க கூட்டு போரின் இலக்கை அடைய முடியவில்லை. ஏறக்குறைய போர் இஸ்ரேலுக்கு தோல்வியாகவே பதிவாகியுள்ளது. மறுபக்கத்தில் ரஷ்சியாவின் அணுகுமுறை சீனாவின் நடவடிக்கை என்பனவும் இத்தகைய மாற்றத்திற்கு காரணமாக அமைந்திருக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக ரஷ;சிய தயாரிப்பு விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இஸ்ரேலின் அணுவாயுத நிலையத்திற்குள் வீழ்ந்து வெடித்தமை இஸ்ரேலுக்கு அதிர்ச்சியான செய்தியாகும். அது பாரிய வெடியோசையை எழுப்பவியதாகவும் தகவல்கள் உண்டு. அது மட்டுமன்றி ரஷ்சிய விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இஸ்ரேலின் அணுவாயுத நிலையத்திற்குள் (Negev) வீழும் போது இஸ்ரேலது ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்கள் எவையும் இயங்க முடியாது ரஷ்சிய இராணுவ தொழில் நுட்பம் செயல்பட்டதாக தெரியவந்துள்ளது. எனவே இந்தப் போரில் ரஷ்சியா தனது நகர்வுகளை மேற்கொண்டதுடன் போர் முடிந்ததும் சிரியாவின் எல்லையில் எஸ்-500 ரக ஏவுகணைகளை நகர்த்தியுள்ளது(27.05.2021) குறிப்பிடத்தக்கதாகும். ஏற்கனவே எஸ்-300 மட்டுமே சிரியாவின் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதன் வலு எஸ்-500 ஆக அதிகரித்துள்ளது. எனவே ரஷ்சியாவின் நகர்வு மேற்காசியாவில் புதிய மாற்றங்களை தரக் கூடியதாக அமைய வாய்ப்புள்ளது.
எனவே இஸ்ரேல் இத்தகைய மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு நகரப் போகிறதா அல்லது மீண்டும் பாலஸ்தீனம் மீது தாக்குதலை ஆரம்பிக்கப் போகிறதா என்பதே தற்போதைய கேள்வியாகும். இஸ்ரேல் ஒர் அணுவாயுத அரசு என்ற வகைக்குள் மேற்காசியாவை மிரட்டிவந்தது. ஆனால் அத்தகைய மிரட்டலுக்கு பதிலளிக்கும் நிலையை மேற்காசிய நாடுகள் உருவாக்கியுள்ளன. அதற்கு சீனா ரஷ்சியா போன்ற வல்லரசுகளது பலம் பிரதான காரணமாகும். அதனை முன்னிறுத்தியே ஈரான் துருக்கி சிரியா போன்ற நாடுகள் செயல்பட ஆரம்பித்துள்ளன. அத்தகைய பட்டியலில் சவுதியரேபியாவும் கட்டாரும் எகிப்தும் இணையுமாயின் அது ஒரு பலமான அணியாக மாறும். இதில் ஹமாஸ் மற்றும் ஹஸ்புல்லா போன்ற அமைப்புக்களும் இணையுமாயின் இஸ்ரேல் அதிக விலை கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் தள்ளப்படும். அமெரிக்காவும் இஸ்ரேலை கட்டுப்படுத்த முனைகிறதை கண்டு கொள்ள முடிகிறது. ஆனாலும் இஸ்ரேல் தனது பாதுகாப்பினை தக்கவைத்துக் கொள்ள போராடும் என்பதை கடந்த காலம் முழுவதும் வெளிப்படுத்தியிருந்தது. எதுவாயினும் ஹமாஸ்-இஸ்ரேல் போருக்கு பிந்திய நிலை நாடுகள் மட்டுமல்ல இஸ்லாமிய மக்களும் தலைமைகளும் மேற்காசியாவில் மாற்றத்தை நோக்கி நகருகின்றன.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
