அமெரிக்கா-சீன மோதல் தந்த விளைவை உலகம் தாங்கிக் கொள்ள முடியாது திணற வைத்துள்ளது. ஆனால் அத்தகைய மோதல் இடைவிடாது தொடர்கிறது. உலகத்தை ஆள்வது சீனாவா? அமெரிக்காவா? என்ற போட்டிக்குள் உலகம் அகப்பட்டுள்ளது. சிறிய நாடுகள் மட்டுமல்ல வறிய பொருளாதாரத்தில் பலவீனமான நாடுகளும் திட்டமிடற்ற தேசங்களும் அழிவின் வழிம்புக்குள் தள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக வறிய நாடுகள் கொவிட் தடுப்பூசியைக்கூட பெற்றுக் கொள்ள முடியாது அழிந்து கொண்டிருக்கின்றன. மனித வாழ்வின் அடிப்படையே குலைந்துவிட்டது. புதிய உலகத்தை மனிதன் தேடவேண்டிய நிலைக்குள் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது. இத்தகைய நிலையை கடந்தும் அமெரிக்கா மீண்டும் சீனாவின் வூஹான் ஆய்வகத்திலிருந்தே கொரனே பரவியதாகவும் அது தொடர்பிலான ஆதாரங்கள் புலனாய்வுத் துறையிடம் சிக்கியுள்ளதாகவும் அடுத்துவரும் மூன்று மாதங்களுக்குள் அதற்கான முழுத்தகவலையும் அமெரிக்கா நிர்வாகத்திடம் புலனாய்வுத் துறை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ஜோ பிடன் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரனோ பரவல் ஆரம்பித்து ஏறக்குறைய ஒன்றரை வருடங்களை கடந்துள்ள நிலையில் ஏன் அமெரிக்கா மீளவும் இத்தகைய குற்றச்சாட்டை தொடங்கியுள்ளது என்பது தவிர்க்க முடியாத கேள்வியாகும். இதற்கு பதிலளிக்க இக்கட்டுரை முயலுகிறது.
முதலாவது, வூஹானை நோக்கி உலக சுகாதார அமைப்பின் 10 பேர் அடங்கிய குழுவொன்று கடந்த பெப்ரவரி(2021) மாதம் சீனாவுக்கு விஜயம் செய்திருந்தது. வூஹானிலிருந்தே கொரனோ வைரஸ் பரவியதென்பதை கண்டறிவதற்கான பரிசோதனையை மேற்கொள்ள உலக சுகாதார நிறுவனத்தின் விஞ்ஞானிகள் குழு வூஹான் சென்றிருந்தது. அத்தகைய குழுவின் ஆய்வின் பிரகாரம் சீனாவின் ஆய்வகத்திலிருந்தே வைரஸ் உருவானது என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்பதை அக்குழு உறுதிப்படுத்தியிருந்தது.
இரண்டாவது, கொரனோ வைரஸ் இயற்கையாக உருவானது என்பதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என அமெரிக்க ஜனாதிபதியின் தலைமை மருத்துவ ஆலோசகரான அந்தோனி பாசி தெரிவித்துள்ளர். மேலும் அவர் தெரிவிக்கும் போது இது பற்றி திறந்த விசாரணை வேண்டும். உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து வெளிப்படைத்தன்மையுடன் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது, சீனாவின் வூஹான் ஆய்வகத்திலிருந்து கொரனோ வைரஸ் உற்பத்தியானது என்பதை உறுதி செய்யும் வகையில் அமெரிக்க உளவுத்துறையிடம் ஆவணங்கள் சிக்கியுள்ளதாக அமெரிக்க செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிடட்டுள்ளன. அதனை ஆதாரப்படுத்தும் தகவலாக சீனாவிலிருந்து கொரனோ தொற்று வெளிப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் சீனாவின் நுண்ணுயிரியல் ஆய்வகமான வைராலஜியில் பணியாற்றிய மூன்று விஞ்ஞானிகள் தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்பது தெரியவந்துள்ளதாக அத்தகவல் சுட்டிக்காட்டுகின்றது. ஆனால் சீனாவோ டிசம்பர்-08ஆம் திகதியே முதல் நோயாளி பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
எனவே, இத்தகைய குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் சரியானது அல்லது தவறானது என்பதற்கான ஆதாரங்கள் தேடுவதுடன் அது தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதும் வல்லரசுகளுக்கிடையிலான மோதலாகவே தெரிகிறது. ஆனால் ஏன் அமெரிக்கா இந்த விடயத்தை மீள எடுத்துள்ளது என்பதே பிரதான கேள்வியாகும்.
ஒன்று, சீனாவின் அபரிமிதமான வளர்ச்சியை அமெரிக்காவால் ஒரு திசையிலும் கட்டுப்படுத்த முடியாதுள்ளது. அதாவது பொருளாதாரத்தில் மிகப்பலமான வளர்ச்சியை எட்டியுள்ளது. முதல் காலாண்டிலும் 18.36 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது. உலகில் அனேக நாடுகள் மிக மோசமான வளர்ச்சியை பெற சீனா மட்டும் எப்படி அத்தகைய வளர்ச்சியை எட்டியுள்ளமை கவனிக்கத்தக்கது. சீனா தனது உற்பத்திகளில் விலையினை அதிகரித்துள்ளதுடன் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தினை அதிகரித்துள்ளது என உலக வங்கி அதற்கான காரணமாக குறிப்பிடுகிறது. அது மட்டுமன்றி உள்நாட்டு உற்பத்தியை இரட்டிப்பு மடங்காக சீனா அதிகரித்துள்ளதாகவும் உலக வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அமெரிக்காவுக்கு மட்டுமல்ல ஐரோப்பிய மற்றும் இந்தியாவுக்கும் பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது.
இரண்டு, சீனா பாரிய ஆயுதங்கள் உற்பத்தியை விடுத்து தொழில்நுட்ப ஆயுதங்களின் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. குறிப்பாக லேசர் மற்றும் சைபர் தொழில் நுட்பத்தினைக் கொண்டு தாக்குதலை மேற்கொள்ளும் ஆயுதங்களை உருவாக்கி வருவதாக அமெரிக்கப் புலனாய்வுத்துறை தனது அறிக்கையில் அமெரிக்க நிர்வாகத்திற்கு தெரிவித்திருந்தது. அதனால் ஏற்படுத்தப்போகும் அழிவுகள் வூஹான் குண்டினை விட அபாயமானதாக அமையும் எனவும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது.
மூன்று, சீனா அண்டவெளித் தொழில்நுட்பத்தில் அதிக கரிசனை எடுத்து வருகிறது. குறிப்பாக விண்வெளியில் செயற்கைக்கோள்களை நிறுத்துவது முதல் செவ்வாய் நோக்கியும் சந்திரன் நோக்கியும் அதன் நகர்வுகள் அதிகரித்து வருகிறது. அண்மையில் தனியான விண்வெளி மையத்தினை நிறுவுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்ட போதும் அது தோற்றுள்ள நிலையில் மீளவும் அதனை அமைப்பதில் முனைப்பாக ஈடுபட்டு வருகிறது. ரஷ்சியா அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் விண்வெளி தொடர்பில் சீனா வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. ஏறக்குறை தரையிலும் கடலிலும் ஆகாயத்திலும் மட்டுமல்லாது விண்வெளியிலும் தனது இருப்பினை பலப்படுத்துவதில் சீனா முன்னேறியுள்ளது.
நான்கு, தென் சீனக் கடலில் நிறுவிய தீவகள் (Manmade Island) போன்ற ஒரு வெற்றிகரமான நகர்வை கொமும்புத்துறைமுகத்திலும் சீனா நிறுவியுள்ளது. இது இந்து சமுத்திரத்தின் மையப்பகுதி மட்டுமல்லாது அமெரிக்கா தலைமையிலான இந்தோ-பசுபிக் இணைப்பின் வேலிகளை தகர்ப்பதாக அமைந்துள்ளமை கவனத்திற்குரியதாகும். உலக வல்லரசுகளது போட்டியில் இந்து சமுத்திரம் வரலாற்றுக் காலம் முதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதன் முக்கியத்துவத்தில் இலங்கைத்தீவு மிகப்பிரதான இடத்தினை எப்போதும் பெற்றிருந்தது. குறிப்பாக வல்லரசுகளது ஆதிக்கம் நிலவிய போதெல்லாம் இலங்கைத்தீவை தமது செல்வாக்குக்குள் வைத்துள்ளன. பிரித்தானியர் பின்பு அமெரிக்கர்கள் தற்போது சீனர்கள் என்ற நிலை இலங்கைத்தீவுக்குரியதாகிறது.
இத்தகைய நிலையினால் அமெரிக்க உலகளாவிய வல்லரசு என்ற தனித்துவத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஆசியாவின் பிராந்தியங்களை சீனா தனது பொருளாதார கொள்கைகளால் கைப்பற்றி வருகிறது. தென்னாசியாவில் இந்தியாவின் நிலை மிக மோசமடைந்து வருகிறது. தனித்து பூட்டானுடனேயே நெருக்கமான உறவை கொண்டுள்ள இந்தியா அமெரிக்க நலன்களை பாதுகாக்கும் இந்து சமுத்திர நாடாக விளங்கியமை குறிப்பிடத்தக்கதாகும். அவ்வாறே மேற்காசியாவில் இஸ்ரேலையும் இழக்காமல் இருக்க அமெரிக்கா பேராடிவருகிறது. கிழக்காசியா, மத்திய ஆசியா, தென் கிழக்காசிய என்பனவும் சீனாவின் பொருளாதார வலையத்துக்குள் இருப்பதுடன் பலமான பொருளாதார உறவுள்ள நாடுகளாக விளங்குகின்றன. ஜப்பான் தென்கொரியா பிலிப்பைன்ஸ் வியட்னாம் அவ்வப்போது மோதுண்டாலும் சீனாவுடன் நெருக்கமான பொருளாதார உறவைப் பேணிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். சீனா ஐரோப்பாவுக்குள்ளும் நெருக்கமான பொருளாதார உறவை பேணிவருகிறது. அண்மைய ஜி-7 செயலாளர்கள் சந்திப்பில் சீனாவுக்கு எதிரான தீர்மானங்களை முன்வைக்கப்பட்ட போது இத்தாலி, ஜப்பான் என்பன எத்தகைய கருத்தும் வெளியிடாது மௌனம் சாதித்தமை சுட்டிக்காட்ட வேண்டிய விடயமாகும்.
எனவே, அமெரிக்காவின் காலதாமதமான நகர்வுகள் அதன் பலவீனத்தைக் காட்டுகிறது. குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி டொனாட் ட்ரம்ப் காலத்தில் வூஹான் பற்றிய அதிக உரையாடல்களும் குற்றச்சாட்டுகளும் எழுப்பப்பட்டன. ஆனால் அவை எதுவும் சீனாவை தோற்கடிக்கவோ நெருக்கடிக்குள்ளாக்கவோ முடியவில்லை. மாறாக ட்ரம்ப் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டமையே நிகழ்ந்தது. மீண்டும் ஜோ பிடன் அத்தகைய குற்றச்சாட்டினை தொடக்கியுள்ளார். இதனால் ஏற்படப் போகும் விளைவுகள் எவையும் சீனாவைப் பாதிக்குதோ தெரியாது ஆனால் அமெரிக்காவை நெருக்கடிக்கு தள்ள வாய்ப்புள்ளது. அமெரிக்கா இத்தகைய நடவடிக்கைக்காக 600 பில்லின் அ.டொ. ஒதுக்கியுள்ளதாக செய்திகள் உண்டு. எப்படியாவது அமெரிக்கா சீனாவின் செல்வாக்கினை முடிபுக்கு கொண்டுவர வேண்டும் எனக்கருதுகிறது. ஆனால் அதற்கான காலத்தை ட்ரம்ப் தனது ஆட்சியின் போது தவற விட்டுள்ளார். அதனை மீளத் தோண்டுவதும் உயிர் கொடுப்பதற்குள்ளும் சீனா அடுத்த இலக்கினை எட்டிவிட வாய்ப்புள்ளது. அமெரிக்காவின் இயலாமையே அது வூஹானை மீண்டும் முதன்மைப்படுத்தக் காரணமாகவுள்ளது. அதாவது அமெரிக்காவுக்கு சீனாவை எதிர்கொள்ள இராணுவரீதியான விடயமோ இராஜதந்திர நகர்வோ அல்லது பொருளாதாரரீதியான நடவடிக்கையோ இல்லாத சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளது. அதனாலேயே வூஹான் விடயத்தை முன்னெடுத்துள்ளது. அதிலும் ஐ.நா. ஏற்கனவே சில முடிபுகளை வெளிப்படுத்திவிட்டது. இதுவும் ரஷ்சியா அமெரிக்க தேர்தலில் தலையிட்டது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டுப் போன்றே அமையவாய்ப்புள்ளது. இவை அனைத்தும் ஒரு தெளிவான செய்தியை தருகிறது. அது அமெரிக்கா உலகளாவிய அதிகாரத்தை இழக்கிறதென்பதாகும்.
-பேராசிரியர்கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தீம்புனல்)
