ஹமாஸ்-இஸ்ரேல் போருக்கு பின்னரான மேற்காசிய அரசியல் அதிக திருப்பங்களை நோக்கி நகர்கிறதை அவதானிக்க முடிகிறது. அதிலும் இஸ்ரேலிய அரசியலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சி முடிபுக்குவரும் நிலை எட்டியுள்ளது. ஏறக்குறைய கடந்த 12 வருடங்களாக இஸ்ரேலை ஆட்சி செய்த பிரதமர் நெதன்யாகுவின் அரசாங்கம் பெரும்பான்மையை இழந்துள்ளது. கடந்த நான்கு தேர்தல்களிலும் தனித்து எந்தக்கட்சியும் பெரும்பான்மை பெற முடியாத சூழலில் கூட்டரசாங்கங்களே ஆட்சியை அலங்கரித்து வருகின்றன. தற்போதும் புதிய கூட்டரசாங்கம் ஒன்றுக்கான வாய்ப்பே ஏற்பட்டுள்ளது. இக்கட்டுரையும் நெதன்யாகுவின் ஆட்சிக்கு எதிரான கூட்டணியின் எழுச்சிக்குப் பின்னாலுள்ள காரணங்களை தேடுவதோடு புதிய அரசாங்கத்தின் கட்டமைப்பினையும் புரியவைப்பதாக அமையவுள்ளது.
எட்டுக் கட்சிகள் அடங்கிய கூட்டணி கடந்த 01.06.2021 அன்று உடன்பாடொன்றில் கைச்சாத்திட்டுள்ளன. அதன்பிரகாரம் புதிய அரசாங்கம் அமைவதோடு பிரதமர் நெதன்யாகுவின் ஆட்சி முடிபுக்கு வருகிறது. இத்தகவலை யேஷ் அடிட் கட்சியின் தலைவர் யேர் லேபிட் (Yesh Atid party head Yair Lapid) அறிவித்துள்ளார். அமைந்துள்ள புதிய கூட்டணி சுழற்சி முறையில் பிரதமர் பதவியை பகிர்ந்து கொள்வதாக தீர்மானித்துள்ளன. அதன்படி வலதுசாரி யாமினா கட்சியின் தலைவர் நெப்தல் பென்னெட்(Naftali Bennett of the Yamina party) முதல் பிரதமராகவும் 2023 வரை பதவி வகிப்பார் என்றும் பின்னர் லேபிட்டிடம் பிரதமர் பதவி ஒப்படைக்கப்படுவதாகவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. கூட்டணி உடன்பாடு குறித்த இஸ்ரேலிய ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக கூட்டணி சார்பில் லேபிட் அறிவித்துள்ளார். ஆனால் இஸ்ரேலிய பாராளுமன்றமான நெசாட்(Knesset) இல் பெரும்பான்மையைப் பெற வேண்டும். இஸ்ரேல்-பாலஸ்தீன நெருக்கடி அதீதமான காலப்பகுதியில் நெத்தான்யாகு ஆட்சியை இஸ்ரேலிய எதிர்கட்சிகள் ஏன் குழப்புகிறார்கள் என்பதே தற்போதைய கேள்வியாகும்.
முதலாவது, நடந்து முடிந்த 11 நாள் ஹமாஸ்-இஸ்ரேலிய போர் என்பது நெதன்யாகுவின் ஆட்சியைப் பாதுகாப்பதற்கான உத்தியும் அடங்கியிருந்தது என்பதை இப்பகுதி முதலிலே குறிப்பிட்டுள்ளது. அதனையே எதிர்கட்சிகள் பிரதான குற்றச்சாட்டாக முன்வைத்துள்ளன. போரை நெதன்யாகு தவறாக பிரயோகித்திருப்பதாகவும் இஸ்ரேலிய தலைநகரங்கள் உட்பட காஸா பகுதிகளில் பாரிய சேதங்களை விளைவித்ததாகவும் அந்தக் குற்றச்சாட்டு நீள்கிறது. அது மட்டுமன்றி நெதன்யாகு மீதான ஊழல் குற்றச்சாட்டினை மறைப்பதற்கே அவர் ஆட்சியை தக்கவைக்க முயல்வதாகவும் எதிர்கட்சியின் ஒரு சாராரது கருத்துக்கள் காணப்படுகின்றன.
இரண்டாவது, ஹமாஸ்-இஸ்ரேலிய போரில் இஸ்ரேல் தோற்றுள்ளதாகவே ஊடகங்களும் அதிகமான யூதர்களும் கருதுகின்றனர். அதற்கு நெதன்யாகுவின் தவறான அணுகுமுறையே பிரதான காரணம் எனவும் அவர் மீதான நம்பிக்கையை யூதர்கள் இழந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. ஹமாஸின் வளர்ச்சிக்கு நெதன்யாகுவே பிரதான காரணம் எனக் கூறும் எதிர்கட்சியினர் சர்வதேச அளவில் பிராந்திய நாடுகள் மத்தியில் ஹமாஸ் செல்வாக்குமிக்கதாக மட்டுமன்றி பாலஸ்தீன அதிகார பிரதேசத்தில் பெரும் அமைப்பாக வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளன.
மூன்றாவது, நெதன்யாகுவைக் காட்டிலும் புதிய பிரதமர் நெப்தல் பென்னெட் தீவிர போக்குடைவர் எனவும் யூதர்களது மீள் கட்டுமானத்தில் கருசனை கொண்டவர் எனவும் அமெரிக்க வாழ் யூத சமூகத்தினர் கருதுகின்றனர். ஏனெனில் தற்போதைய ஆட்சி மாற்றத்திற்கு பின்னால் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் யூத சமூகமே பிரதான காரணம் எனக் கருதப்படுகிறது. அது மட்டுமன்றி அமெரிக்க வாழ் ஜனநாயகத்தரப்பினர் குடியரசுக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி டொனாட் ட்ரம்ப்ன் அணுகுமுறை தோல்வியடைந்து விட்டதாக கருத்து தெரிவித்துள்ளன. ட்ரம்ப்-நெதன்யாகுவின் இறுதிக்கட்ட மேற்காசிய நாடுகளுடனான உடன்படிக்கைகளும் பேச்சுவார்த்தைகளும் போர் ஆரம்பித்த மறுகணம் தோல்வி அடைந்துள்ளன. துருக்கி-சவுதியரேபிய நெருக்கம், கட்டார்-சவுதியரேபிய நெருக்கம், ஈரான்-ஹமாஸ் உறவு மற்றும் ரஷ்சியா-சீனா இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட்ட தரப்பினை ஆதரித்தமை என்பனவற்றைக் குறிப்பிடலாம்.
நான்காவது, ஈரான் அணுவாயுத உடன்படிக்கை பற்றிய நெதன்யாகுவின் அணுகுமுறை அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பிடன் நிர்வாகத்திற்கு பெரும் நெருக்கடியாக அமைந்துள்ளது. வியன்னாவில் நடைபெற்ற ஈரான்-ஐரோப்பிய நாடுகளுடனான சந்திப்பில் அமெரிக்கா மறைமுகமான ஆதரவை கொடுத்ததுடன் இரகசியப் பேச்சுக்களை ஈரானுடன் நடாத்தியதாகவும் குறிப்பிடப்படுகிறது. இதனை முழுமையாக நிராகரித்துள்ள நெதன்யாகு ஈரான் அணுவாயுத விஸ்தரிப்புக்கு அமெரிக்கா உதவுவதாக குற்றம்சாடட்டியுள்ளமை கவனத்திற்குரியதாகும். இதனால் இரு நாட்டுக்குமான பதட்டம் அதிகரித்ததுடன் ஹமாஸ் உடனான போரை நிறுத்துவதில் நெதன்யாகு அமெரிக்காவை அலட்சியம் செய்ததாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமன்றி அமெரிக்காவுக்கான பாலஸ்தீன தூதரகத்தை ஜெரூசலத்தில் நிறுவப்போவதாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் அறிவித்த போது நெதன்யாகு அதிக அதிருப்தியுடன் கண்டனங்களை வெளியிட்டதாவும் தெரியவருகிறது. அமெரிக்கா ஒரு சுமூகமான உறவையே ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனத் தரப்புடன் மேற்கொள்ள விரும்புகிறது.
ஐந்தாவது, யூதர்கள் எப்போதும் போரில் மட்டுமல்ல பேச்சுக்களிலும் தாமே வெற்றி பெறவேண்டும் எனக்கருதுபவர்கள். அண்மைய போரில் ஹமாஸ் அல்லது பாலஸ்தீன மக்களுக்கு சாதகமான விடங்கள் நிகழ்ந்துள்ளன. போரில் தாம் வெற்றி பெற்றதாகவே பாலஸ்தீன மக்கள் கருதுகின்றனர். அதனை உலகிலுள்ள இஸ்லாமிய தரப்பும் கருதுகிறது. அதனால் போரின் தோல்வியை நெதன்யாகுவின் தலையில் போட்டுவிட்டு போரை சரியாக நடாத்தியிருந்தால் தாம் வெற்றிருக்கலாம் என்ற உளரீதியான பலத்தை யூதர்களுக்கு ஏற்படுத்திக் கொண்டு நகர்வதே அவர்களது பிரதான நோக்கமாகும். இவ்வாறு நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் யூதர்களது அணுகுமுறை பின்வாங்குவது போல் அமையும். குறிப்பாக காம்டேவிட் உடன்படிக்கை(1979), ஒஸ்லோ உடன்படிக்கை(1995), காஸா-ஜெரீக்கோ உடன்படிக்கை(1993), வைநதி உடன்படிக்கை(1998), இருநாட்டத் தீர்வுத்திட்ட உடன்படிக்கை(2003) என்பனவற்றை யூதர்களின் உபாயமாகக் கருதலாம். அதன் ஒரு கட்டமாக முன்னாள் பிரதமர் ஜிஞ்சாக் ராபினையும் சுட்டுக் கொன்றவர்கள் என்பதை மறுக்க முடியாது.
நெதன்யாகு மீதான நகர்வுகள் ஒன்றும் இஸ்ரேலுக்குள் எழுந்த நிகழ்வுகளல்ல. மாறாக பிராந்திய சர்வதேச பொறிமுறையாக புரிந்து கொள்ளப்படவேண்டிய விடயமாகும். யூதர்கள் அனைத்து நெருக்கடியையும் கையாளும் வல்லமை கொண்டவர்கள். அதிலும் அமெரிக்க வாழ் யூதர்கள் எப்போதும் இஸ்ரேலைப் பாதுகாப்பதற்கேற்ப அமெரிக்க அரசியலையும் உலக அரசியலையும் தயார் செய்பவர்கள். அதனால் நெதன்யாகுவின் அரசியல் இருப்பை தீர்மானிப்பதில் பல்வேறுபட்ட விடயங்களின் மையப்படுத்தலே பிரதான காரணியாகும். ஆனால் இத்தகைய எட்டு கட்சிகளின் கூட்டணியில் அரசின் நிலைத்திருப்பு தற்காலிகமானதாகவே தெரிகிறது. குறிப்பாக ஐந்தாவது தேர்தல் ஒன்றைத் தவிர்ப்பதற்கான நகர்வாகக் கூட அமைய முடியும் என இஸ்ரேலிய ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். அதிலும் அடுத்த இரண்டு வருடங்கள் இலக்கு எனவும் எதிர்கட்சிகள் கருதுவதாகவும் தெரியவருகிறது. அதனைவிட நெதன்யாகுக்கு எதிரான நகர்வுக்கு ஈரான் அணுவாயுதம் காரணம் அல்ல எனவும் ஹமாஸ் அமைப்பின் ஏவுகணைகளே காரணம் எனவும் இஸ்ரேலிய ஊடகங்கள் கருத்து முன்வைத்துள்ளன. மேலும் எட்டுக் கட்சி கூட்டணிக்கு ஆதரவு வழங்கும் பாலஸ்தீன மக்களின் ஆதரவு பெற்ற கட்சியான ஐக்கிய அரபு (United Arab) இணைந்திருப்பதை நிராகரித்து புதிய கூட்டணி அரசாங்கத்திற்கு எதிராக நூற்றுக்கு மேற்பட்ட யூதர்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். ஆனால் அதனையும் கடந்து அக்கட்சியுடன் பிரதான கட்சிகள் உடன்பாடு செய்துள்ளன. குறிப்பாக வரவு செலவுத் திட்டம் மற்றும் அரசாங்கத்திற்கான ஆதரவு கோரல்களின் போது வாக்களிப்பதாகவும் நெதன்யாகுவின் ஆட்சியை அகற்றுவதே தமது நோக்கம் எனவும் அக்கட்சியின் தலைவர் மன்சூர் அபாஸ் (Mansour Abbas) தெரிவித்துள்ளார்.
எனவே, நெதன்யாகுவிற்கு எதிரான நகர்வு என்பது யூதர்களதும்-அமெரிக்கர்களதும் புதிய உபாயமாகவே தெரிகிறது. ஹமாஸ் மற்றும் அரபு உலகத்தின் அண்மைய நகர்வுகளை எதிர்கொள்ளவும் மேற்காசியாவில் அமெரிக்காவின் நிலைத்திருப்பை உறுத்திப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகவே உள்ளது. இது உடனடியாக யூதர்களுக்கும் நீண்ட காலத்தில் அமெரிக்கர்களுக்கும் இலாபமளிக்கும் நகர்வாக அமைய வாய்ப்புள்ளது. ஆனால் இதனை அரபு உலகமும், ஈரானும், ரஷ்சியா, சீனா போன்ற நாடுகள் எப்படி எதிர்கொள்ளப் போகின்றன என்பதிலேயே தங்கியுள்ளது. இதன் மறுபக்க அணுகுமுறைகளும் எதிர்வரும் நாட்களில் தொடங்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே ஈரானின் கப்பல் ஒன்று வளைகுடாவில் எரிந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு மாறிமாறி நகர்வுகள் அமையவாய்ப்புள்ளது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)
