உலக அரசியலின் போக்கு கணத்துக்கு கணம் புதிய மாற்றங்களை நோக்கி நகருகிறது. உலகளாவிய அமெரிக்க வல்லரசு பலம் வீழ்ச்சியை நோக்கிய முகத்தை கொண்டிருந்தாலும், அதிலிருந்து அமெரிக்காவோ அல்லது வெள்ளையர்களோ வெளியேறுவதற்கு தயார் இல்லை என்பதை அவர்களது நகர்வுகள் வெளிப்படுத்துகின்றன. உலக எயமானர்கள் தாமே எனக்கருதும் வெள்ளையர்கள் அதனை தொடர்ந்து தக்க வைக்க முயலுகின்றதைக் காணமுடிகிறது. அதில் ஒன்று, அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பிடன் ஜூன் 9 முதல் 16 வரை ஐரோப்பாவுக்கு மேற்கொள்ளும் விஜயம் உணர்த்துகிறது. மீளவும் அமெரிக்கா தனித்தோ அல்லது ஜரோப்பாவுடன் இணைந்தோ வல்லரசு பலத்தை தக்கவைப்பதை இலக்காக கொண்டு நகர்வதாகவே தெரிகிறது. இக்கட்டுரையும் ஜோ பிடனின் ஐரோப்பிய விஜயத்தின் முக்கியத்துவத்தை தேடுவதாக உள்ளது.
ஜூன்-09 ஐரோப்பியாவுக்குள் விஜயம் செய்யும் ஜோ பிடன் ஜூன்-10இல் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனை சந்தித்து உரையாட திட்டமிட்டுள்ளார். அநேகமான அமெரிக்க பிரஜைகள் பிரித்தானிய மூதாதையர் என்பது இருநாட்டுக்குமான உறவை விளங்கிக்கொள்வதற்கு போதுமானது. டொனால்ட் ட்ரம்பின் மிக நெருக்கமான நண்பன் எனக்கருதப்பட்ட பொரிஸ் ஜோன்சன் ஐரோப்பாவின் ட்ரம்ப் என வர்ணிக்கப்பட்டார். ஆனால் ட்ரம்ப்ன் தேர்தல் தோல்வியும் அவரது நடவடிக்கையும் பொரிஸ் ஜோன்சன் அவரை கைவிடும் நிலைக்குள் தள்ளியது. ஜோ பிடனுடன் நெருக்கமடைந்துள்ள ஜோன்சன் சர்வதேச விடயங்களில் இருநாட்டுக்குமான ஒத்துழைப்பினை அதிகரிப்பார்கள் என்பதை ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தனர். இத்தகைய உறவு நிலையை கொண்டுள்ள அமெரிக்க பிரித்தானிய தலைவர்கள் சந்திக்கும் போது இருநாட்டுக்கும் இடையிலான விவகாரங்களை உரையாடுவதோடு, காலநிலை மாற்றம், வர்த்தம், வட அயர்லாந்து தொடர்பாக எழுந்துள்ள விடயங்கள் பற்றி உரையாடல் அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானிய வெளியேறிய பின்னர் பிரித்தானியவுடனான வர்த்தக உறவை அமெரிக்கா அதிகம் முதன்மைப்படுத்தி இருந்தது. அதற்கான வாய்ப்பு தொடர்பாக ஜோன்சனும் ட்ரம்பும் பல தடவை உரையாடி உள்ளார்கள். அமெரிக்காவின் பிரித்தானியாவினுடைய முதலீடுகளும் சந்தை வாய்ப்புக்களும் சீனா பக்கம் திரும்பி விடாது கரிசனை காட்டியது. எனவே இச்சந்திப்பு இருநாட்டுக்குரிய பாரம்பரிய உறவை கட்டியெழுப்புவதுடன், சீனா ரஸ்சியாவுக்கு எதிராக ஒரு கூட்டு பாதுகாப்பினை அரசியலிலும், பொருளாதாரத்திலும், இராணுவத்திலும் கட்டமைக்கப்படுவதாக தெரிகிறது.
ஜூன்-11 முதல் 12 வரை ஜீ7 மாநாட்டில் கலந்து கொள்கின்ற ஜோ பிடன் உலகளாவியரீதியில் எழுந்துள்ள பாரிய கொரோனா பரவலை எதிர்கொள்ளுதல் அதனால் எற்பட்டிருக்கின்ற பொருளாதார சவாலை கையாள்வது பிரதான நிகழ்ச்சி நிரலாக காணப்படுகின்றது. ஜி7 நாடுகளிடையிலே முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் காலத்தில் ஏற்பட்ட குழப்பகரமான உறவை சரிசெய்வதும், அந்நாட்டு தலைவர்களுடன் இருபக்க உரையாடல்களை மேற்கொள்வதும் பிரதான நோக்கமாக கொண்டிருப்பதோடு காலநிலை மாற்றம், சீனாவின் எழுச்சி, ரஸ்சியாவின் அணுகுமுறைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் என்பன மிகப்பிரதான உரையாடல் அம்சங்களாக தெரிகிறது. ஜி7 தலைமைகளுடனான சந்திப்பு இந்நாடுகளுடனான வர்த்தக கூட்டினை பலப்படுத்துவதும் ஒரே அணியில் இணைந்து சீனாவின் பொருளாதார ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவதும் பற்றிய உபாயங்களை வகுப்பதாகவே அமைய வாய்ப்புள்ளது.
ஜூன்-13 பிரித்தானிய மகாராணி எலிசபெத்தை அரச முறை சந்திப்பாகவும் ஒரு இராஜீக உரையாடலுக்கான அமைய உள்ளது. அமெரிக்க-பிரித்தானிய உறவின் மரபார்ந்த நிகழ்வாக அமைவதாகும்.
ஜூன்-14 அமெரிக்க ஜனாதிபதி பிடனின் நேட்டொ சந்திப்பு நிகழவுள்ளது. 2018ஆம் ஆண்டுக்கு பின்னர் பிடன் இத்தகைய மாநாட்டில் நேட்டோ நாடுகளை சந்திப்பது மிகமுக்கிய விடயமாக உள்ளது. குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் காலத்தில் நேட்டோ நாடுகளுடனான விரிசலடைந்துள்ள அமெரிக்க உறவினை சரி செய்வதும், ஆக்ரோசமான ரஸ்சியாவின் நடவடிக்கைகளை பிராந்திய ரீதியில் எதிர்கொள்வது, சீனாவின் சைபர் தாக்குதல் நெருக்கடி, காலநிலை மாற்றம், ஆப்கானிலிருந்த துருப்புக்களை விலக்கி கொள்ளுதல் என மூலோபாய ரீதியான சவால்களை எதிர்கொள்வது பற்றிய உலையாடல்களாகவும் அமைய இருக்கிறது. குறிப்பாக துருக்கிய ஜனாதிபதி எர்டோகன்-உடனான சந்திப்பு முக்கியமான நேட்டொ விவகாரமாக பார்க்கப்படுகிறது.
ஜூன்-15 அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்குமிடையிலான வர்த்தக மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தமான மாநாடு ஒன்றை பிடன் எதிர்கொள்கிறார். 2014இற்கு பின்னரான முதற்சந்திப்பாக இது அமைகிறது. குறிப்பாக ட்ரம்ப் காலத்தில் பரிமாறப்பட்ட உற்பத்தி விடயங்களை கடந்து அதனுடைய தொழில்நுட்ப பரிமாற்றங்களையும் அவை தொடர்பான ஏற்றுமதி இறக்குமதி நடைமுறைகளை மீள அமைப்பதோடு வர்த்தக நடவடிக்கை சார்ந்த நீண்ட இடைவெளியை நிரப்புவதாகவும் அமெரிக்க – ஐரோப்பிய யூனியன் மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது.
ஜூன்-16 ரஸ்சிய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடனான சந்திப்பு ஒன்றினை ஜோ பிடன் திட்டமிட்டுள்ளார். இச்சந்திப்பு பல்வேறுபட்ட எதிர்பார்ப்புக்களை கொண்டிருந்தாலும் உக்ரைன் விவகாரம், அமெரிக்க மீதான தேர்தல் தலையீடு, ரஸ்சிய எதிர்க்கட்சி தலைவர் நவாலினி தொடர்பான புட்டினது நடவடிக்கைகள் பற்றியதாக அமைவதோடு தொழில்நுட்ப விடயங்கள் சார்ந்தம், சைபர் தாக்குதல் சார்ந்தும் உரையாட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
எனவே ஜோ பிடன் ஐரோப்பிய நாடுகளுக்கு மேற்கொள்ளும் விஜயம் பல விடயங்களை முன்னிறுத்தினாலும் பிரதான விடயங்களை விரிவாக விளங்கி கொள்ளுதல் அவசியமானது.
முதலாவது, முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் காலத்தில் விரிசலடைந்துள்ள அமெரிக்க – ஐரோப்பிய நாட்புறவை மீள பலப்பலப்படுத்தல்மூலம் மீளவும் உலகத்தின் மீது ஆதிக்கம் செலுத்தவதற்கான வாய்ப்பினை அதிகரிப்பதாகும். அதிலும் குறிப்பாக வர்த்தகரீதியலான உறவை பலப்படுத்துவதனூடாக சீனாவுடனான ஐரோப்பிய வர்த்தக உறவை பலவீனப்படுத்தல். அவ்வாறே காலநிலை தொடர்பதான உரையாடல் மேற்குநாடுகள் மற்றும் ஆசிய வல்லரசு நாடுகளிடையே முரண்பாட்டை தீவிரப்படுத்ததல் என்ற அடிப்படையில் நகர்வதற்கான வாய்ப்பை அதிகம் கொண்டுள்ளது. பனிப்போருக்கு முற்பட்ட காலப்பகுதியிலும், பனிப்போருக்கு பிந்தைய காலப்பகுதியிலும் ஐரோப்பாவுடனான கூட்டை அடிப்படையாக கொண்டு அமெரிக்கா உலக வல்லரசாக நிலைத்தது. அதனை நோக்கி மீள அமெரிக்க தயாராவதே ஜோ பிடனது ஐரோப்பிய விஜயம் வெளிப்படுத்தும் செய்தியாகும்.
இரண்டாவது, அமெரிக்க மற்றும் ஜி7 நாடகளுடனான உறவு மீண்டும் ஒரு நேர்க்கணியத்துடன் செயற்பட வேண்டுமாயின் பொருளாதார பிணைப்பினாலேயே சாத்தியமாகும். அத்தகைய பொருளாதார பிணைப்பை முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் அதிகம் பலவீனப்படுத்தி இருந்தார். ஜோ பிடன் அத்தகைய சூழ்நிலையை மாற்றுவதன் மூலம் சீனாவின் ஒரே சுற்று ஒரே பாதை என்ற இலக்கை ஐரோப்பாவிற்குள் எழுச்சி பெறாமல் தடுப்பதற்கு திட்டமிஜடுவதாக தெரிகிறது. கொவிட்-19 பின்னான சீன ஐரோப்பிய உறவு பலமானதாக மாறிவருகிறது. அதனை தடுப்பதும் அதற்குள் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதும் ஐரோப்பிய விஜயத்தின் மூலம்’ சாத்தியப்படுத்த பிடன் முயலுகிறார்.
மூன்றாவது, நேட்டோவை பலப்படுத்தவதனூடாகவும், பிரிந்தள்ள நேட்டோ நாடுகளை ஒன்றினைப்பதனூடகவும் கிழக்கு ஐரோப்பாவிற்குள்ளும் மேற்காசியா குடியரசுகளிற்குள்ளும் ரஸ்சிய பலத்தை கட்டுப்படுத்த ஜோ பிடன் திட்டமிடுகிறார். உக்ரைன் விவகாரத்தை முன்னிறுத்துவதனூடாக ரஸ்சியாவின் எல்லையையும் ரஸ்சியாவின் பொருளாதார நகர்வுகளை நெருக்கடிக்கு உள்ளாக்கலாமென ஜோ பிடன் கருதுகிறார். எனவே இவரது நேட்டோ சந்திப்பு பிரதான எதிரியான ரஸ்சியாவையும் புடினையும் தோற்கடிப்பதற்கான நகர்வாகவே தெரிகிறது.
நான்காவது, சீனாவை வர்த்தகரீதயில் பொருளாதார ரீதியில் எதிர்கொள்வது மற்றும் ரஸ்சியாவை இராணுவரீதியில் எதிர்கொள்வது என்ற இரட்டை இலக்கை ஐரோப்பிய நாடுகளை முதலீடா கொண்டு நகரவே பிடன் முயலுகிறார். எனினும் இத்தாலி, ஜப்பான், ஜேர்மனி, ஸ்பெயின், கிரேக்கம் போன்ற நாடுகள் சீனாவுடனான வர்த்தக உறவை நிராகரிக்காத போதிலும் மறுபக்கத்தில் துருக்கி – ரஸ்சிய உறவின் நெருக்கமான பலமும் ஜோ பிடனது திட்டமிடலுக்கு சவாலான விடயங்களாகவே தெரிகிறது.
எனவே, பிராந்திய அடிப்படையில் அமெரிக்கா ஐரோப்பவை அரவணைத்துக்கொண்டாலும் சீனாவுடனான வர்த்தக பொருளாதார உறவை ஐரோப்பிய நாடுகள் நிராகரித்து செயற்படமா? என்பது சந்தேகமான விடயமாகும். அவ்வாறே இராணுவரீதியில் ரஸ்சியாவின் சுனாமி ஆயுதம், எஸ்-4000 மற்றும் ஐந்தாம் தலைமுறை விமானம் போன்றவை அதன் இராணுவ வளர்ச்சியையும் கிழக்கு ஐரோப்பாவிற்குள்ளும் மேற்கு ஆசியாவினுள்ளும் அதன் பலத்தை அதிகரிக்க செய்தன. எனவே ஜோ பிடன் பிரதான எதிரியான சீனாவையும் ரஸ்சியாவையும் வெற்றி கொள்ள அரசியல் பொருளாதார இராஜதந்திர நடவடிக்கைகளை தாண்டி போரொன்றினை தெரிவு செய்வதே பொருத்தமானதாக அமையுமென சர்வதேச ஆய்வாளர்கள் குறிப்பிடு;கின்றனர். அதனை நோக்கி அமெரிக்க செயற்படுமா? மீளவும் உலக வல்லரசாக மாற அமெரிக்கா பலவீனங்களை சரிசெய்யுமா?
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தீம்புனல்)
