April 24, 2026
அரசியல் கட்டுரைகள்

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இயலாமையின் தெரிவா ரஸ்சியா மீதான பொருளாதார தடை?

அமெரிக்க ரஸ்சிய தலைவர்களிடையே நடைபெற்ற ஜெனிவா பேச்சுவார்த்தை பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது. இரு தலைவர்களும் ஒன்றுசேர்ந்து ஊடக சந்திப்பினை நிகழ்த்தாது மட்டுமன்றி ரஸ்சிய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சுமுகமான பேச்சுவார்த்தை என குறிப்பிட்டதிலிருந்தே ஜெனிவா உரையாடல் தோல்விகரமானதென்பதை உணர்த்துகிறது. அத்தோல்வி அதிகம் அமெரிக்காவுக்கே ஏற்பட்டதாக ஊடகங்கள் கருத்து தெரிவித்துவருகின்றன. அத்தனை அடுத்து மீளவும் இருநாட்டுக்குமான முரண்பாடு தீவிரமடைய தொடங்கியுள்ளது. அமெரிக்கா ரஸ்சியா மீது புதிய பொருளாதார தடை ஒன்றை மேற்கொள்ள போவதாக தெரிவித்துள்ளமை தொடர்பில் இக்கட்டுரை கவனம் செலுத்துகிறது.

ரஸ்சியாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி மீதான ரஸ்சிய நடவடிக்கையை அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என குறிப்பிடும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு துறையினர் புதியதொரு பொருளாதார தடையை விதிக்க தாம் தயாராகி வருவதாகவும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்து முன்வைக்கும் போதே இதனை வெளிப்படுத்தியுள்ளார் அதாவது, அலெக்ஸி நவால்னியின் வழக்கில் ரஸ்சியாவிற்கு எதிராக பொருளாதார தடையின் மற்றொரு தொகுப்பை நாங்கள் தயார் செய்து வருகின்றோம். நாங்கள் சரியான இலக்குகளைப் பெற தொகுப்புக்களை உருவாக்கி உள்ளோம் என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் பொருளாதார தடை அறிவிப்பு வெளியாகும். அதனை செய்யும் போது இரசாயன ஆயுதங்கள் தொடர்பாகவும் மேலும் பொருளாதார தடைகளை விதிப்போம் எனக்குறிப்பிட்டுள்ளார். எனவே, நவால்னியை மையப்படுத்தி ரஸ்சிய எதிர்ப்பு அரசியலை அமெரிக்க மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. விளாடிமிர் புடின் குறிப்பிடுவத போல் சோவியத் யூனியன் சரிவின் பின்னர் ரஸ்சிய ஆட்சியாளர்களை அமெரிக்கா எப்படி கையாண்டதோ அதேபோன்றே நவால்னியை உருவாக்கி கையாள முற்படுகிறது. நவால்னி மேற்கினதும் ஐரோப்பாவினதும் பொம்மை என்பது அமெரிக்காவின் பொருளாதார தடைகள் உணர்த்துகின்றன. அதனடிப்படையில் அமெரிக்க-ரஸ்சிய முரண்பாடு என்பது இரு ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான முரண்பாடாகவே பரிணாமம் பெறுகிறது. உண்மையில் நவால்னியின் விடுதலை அமெரிக்காவின் இலக்கு என்பதை விட விளாடிமிர் புடினுக்கான நெருக்கடியே அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் நலனாகும். இதனை முழுமையாக நோக்குதல் அவசியமாகிறது.

ஒன்று, ரஸ்சிய மக்களை பொறுத்தவரை சோவியத் யூனியனது சரிவிற்கு அமெரிக்க காரணம் என்பதை நன்கு புரிந்து வைத்துள்ளார்கள். அமெரிக்க எதிர்ப்புவாதமே ரஸ்சிய அரசியலின் வெற்றி வாதமாகும். அதனால் இருநாட்டுக்குமிடையில் நிரந்தரமான பகைமை நீண்ட அரசியல் நெருக்கடியையும் போட்டித்தன்மையையும் உருவாக்கியுள்ளது. புடின் அமெரிக்க எதிர்ப்புவாதியாக இருக்கும் வரை அவர் அரசியலில் நிரந்தரமாக செயற்பட முடியும். அந்தவகையில் நவால்னி ரஸ்சிய அரசியலில் நிரந்தரமான ஆட்சியாளனாக எழுச்சி பெறுவது கடினமாகும். அதிலும் புடினுடைய ஆயுட்காலம் முழுவதும் ரஸ்சிய அரசியலினை நிரப்பீடு செய்யும் அரசியல் வரைபை கொண்டிருப்பதனால் நவால்னியின் அணுகுமுறை தோல்விகரமானதாகவே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக அரசியலின் இருதய நிலம் என்பதோடு காலநிலை அடிப்படையிலும் மொழி பண்பாட்டு மரபுகளிலும் ஐரோ-ஆசிய அடையாளங்களை கலந்த ஒரு தேசிய இனமாகவே ரஸ்சியர்கள் காணப்படுகின்றனர். அவர்களை ஏனைய தேசங்கள் போன்று அளவீடு செய்வது கடினமானது. இதனால் அமெரிக்காவின் உபாயம் இலகுவில் புடினை அகற்றுவதோ ஆட்சி மாற்றத்தை சாத்தியப்படுத்தவதோ கடினமாக அமையும்.

இரண்டு, அமெரிக்கா விதிக்கும் பொருளாதார தடை ரஸ்சியாவின் அரசியல் விருப்புக்கான ஏகாதிபத்தியத்தை இலகுவில் முடிவிற்கு கொண்டு வந்திட முடியாது. காரணம், கடந்த காலங்களில் அவ்வகை பொருளாதார தடைகளை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஆனால் விளாடிமிர் புடினுடைய சர்வதிகார அதிகார முறைமை மேலும் அதிகரித்து செல்கின்றது. அதுமட்டுமன்றி இத்தகைய பொருளாதார தடைகளால் ரஸ்சியா தனது கூட்டாண்மை நாடுகளுடன் சேர்ந்து வர்த்தகத்தையும் சந்தையையும் விரிவாக்கி செல்கின்றது. குறிப்பாக, சங்காய் கூட்டமைப்பு, பிரிக்ஸ் ஆசியான்-ரஷ;சிங ஒத்துழைப்பு ஈரோசியன் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு மட்டுமன்றி மத்திய ஆசிய குடியரசுகளுடனான எண்ணெய்வள ஒத்துழைப்பு மேற்காசிய நட்புகளுடனான நெருக்கமான பொருளாதார உறவு என ஓர் ஆரோக்கியமான வர்த்தக பொருளாதார சந்தையை தயார் செய்து வருகிறது. ரஸ்சியா ஐரோப்பாவை கடந்து கிழக்காசியா, மத்திய ஆசியா, மேற்காசியவுடன் இணைந்து வர்த்தக சந்தை கட்டமைப்புக்களை உருவாக்குவதற்கான அரசியல் மூலோபாயத்தை வகுத்த வருகிறது. சீனாவை ஆசியாவிற்குள்ளும், ரஸ்சியாவை ஐரோப்பாவிற்குள்ளும் கட்டுப்படுத்தம் அமெரிக்க உத்தி தோல்வியடைந்து விட்டது. ரஸ்சியா, சீனா, ஈரான் மற்றும் சிரியா போன்ற நாடுகள் ஓரணியாக ஒரு பண்டப்பரிமாற்றத்தை தமக்குள் ஏற்படுத்துவது வெற்றி கண்டுள்ளன. எனவே இது அமெரிக்க பொருளாதார தடைகளால் இலகுவில் தகர்ந்து விடுமென கூற முடியாது.

மூன்று, அமெரிக்காவின் நீண்ட அரசியல் இராணுவ உபாயங்களில் ஒன்றாக பொருளாதார தடை காணப்படுகிறது. வடகொரியா, ஈரான், சிரியா போன்ற நாடுகள் மீது பொருளாதார தடைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது. அந்நாடுகள் அனைத்தம் ஒன்று சேர்ந்து ஓர் அணியாக மாற்றமடைய ஆரம்பித்து விட்டன. இத்தகைய மாற்றத்துக்கு சீனாவும், ரஸ்சியாவும் தலைமை தாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதோடு கீழைத்தேச ஏகாதிபத்தியத்தின் வெடிப்பு தவிர்க்க முடியாது எழுச்சி பெற ஆரம்பித்துள்ளது. அவ்வகை எழுச்சிக்குள் அமெரிக்க அரசியல் பொருளாதாரம் நெருக்கடிக்குள் தள்ளப்படும் சூழல் ஒன்றை அடையாளப்படுத்தியுள்ளது. குறிப்பாக, மத்திய ஆசியா ஊடாக ஐரோப்பிய நாடுகளுடன் ரஸ்சியா பின்பற்றி வரும் மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய் மூலமான ஏற்றுமதி மேற்காசியா நாடுகளுடன் இணைந்து விலை நிர்ணயத்துக்கும் உற்பத்தியின் மட்டுப்பாட்டுக்கும் தீர்மானிக்கும் சக்தியாக காணப்படுவது குறிப்பிடக்கூடிய விடயமாகும். அவ்வகை ஐரோப்பிய ரஸ்சிய உறவு மட்டுமன்றி ஒபெக்-ரஸ்சிய உறவினூடாக எண்ணெய் வள சந்தையின் கட்டமைப்பு நிர்வகிக்கப்படுகிறது. எண்ணெய் குழாய் அரசியல் என்று வர்ணிக்கப்படும் ரஸ்சிய-ஐரோப்பிய-ஒபெக் உறவானது ரஸ்சியாவினாலேயே அதிகம் தீர்மானிக்கப்படுகிறது.

நான்கு, ஜெனிவா சந்திப்புக்கு பின்னர் அமெரிக்க அரசியலில் பலவீனமான ஒரு கட்டத்தை அவதானிக்க முடிகின்றது. காரணம், அமெரிக்க புலனாய்வு துறையினரதும், தேசிய பாதுகாப்பு துறையினரதும் இலக்குகளும் நலன்களும் பேச்சுவார்த்தையில் எதனையும் ரஷ;சியாவிடமிருந்து அடையமுடியவில்லை என்பதை உணர்த்தியுள்ளது. இதனாலேயே பொருளாதார தடை என்ற தெரிவை அமெரிக்கா மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டள்ளது. இது அமெரிக்க அரசியலில் அல்லது ஏகாதிபத்தியத்தியத்தின் முனைப்புக்களில் உள்ள பலவீனமாகவே தெரிகிறது. ஐரோப்பா அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து சீனாவையும் ரஸ்சியாவையும் எதிர்கொள்ள முனைந்தபோது அது சாத்தியப்பாடற்று போகவே மீளவும் பலவீனமான நடைமுறையில் நகர வேண்டிய நிர்ப்பந்தம் தவிரக்க முடியாததாகவே உள்ளது. இதை நீண்ட காலத்தில் அமெரிக்க-ரஸ்சிய இருப்பை பாதிப்பதோடு உலகளாவிய தளத்தில் ஆயுத போட்டியையும் வர்த்தக சந்தை போட்டியையும் பல முனைகளில் ஏற்படுத்துகின்ற விதத்தில் கட்டமைக்கப்படுவதாகவே தெரிகிறது. முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விட்டுச்சென்ற இடத்திலிருந்தே ஜோ பிடன் நிர்வாகம் செயற்பட ஆரம்பித்துள்ளது. அதாவது சீனா, ரஸ்சிய எதிர்ப்புவாதம் என்பது அமெரிக்காவுக்கான இருப்புவாதமாகும். அதனை கைவிட்டு அமெரிக்க-ஐரோப்பிய கூட்ட ஏகாதிபத்தியத்தின் நிலையான அரசியலை உருவாக்க முடியாத ஒரு உலக ஒழுங்குக்கு உலக அரசியல் பொருளாதாரம் கட்டமைத்துள்ளது.

எனவே, அமெரிக்காவின் ரஸ்சியா மீதான பொருளாதார தடைக்கு அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிந்தெடுத்திருக்கக் காரணம் அமெரிக்காவின் பலவீனத்தைக் காட்டுகிறது. இது ஓர் ஏகாதிபத்திய அரசின் தெரிவாக இருப்பது கடினமானதாகும். ரஸ்சியா தயாரித்துள்ள ஆயுதங்களை அவற்றின் பரிசோதனைகளும் அமெரிக்க உட்பட்ட அnரிக்க-ஐரோப்பிய அரசுகளுக்கு பெரும் அச்சுறுத்லாக மாறியுள்ளது. அத்தகைய அச்சுறுத்தலால் அமெரிக்க-ஜரோப்பிய கூட்டை கிழக்கு ஐரோப்பாவிற்குள்ளும், மத்திய ஆசியாவிற்குள்ளும், மேற்காசிவிற்குள்ளும் நிலைத்திருக்க முடியாத சூழலை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் ரஸ்சியாவின் மிகப்பிந்திய பரிசோதனைக்கு உட்படுத்திய சுனாமி ஆயுதம் மிக ஆபத்தான அரசியல் இருப்பை ஏனைய ஏகாதிபத்திய அரசுகளுக்கும் ஏற்படுத்தியுள்ளது. எனவே அதனை எதிர்கொள்வதே அமெரிக்காவின் பிரதான நோக்கமாகும். அமெரிக்க துருப்புக்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவது ரஸ்சிய குடியரசுகளையும், மேற்காசியாவையும் கையாளும் மையமான புவிசார் அரசியல் இழப்பதற்கு சமமானதாகும். அதனால் அமெரிக்காவின் ஆசியப்பிராந்திய அதிகாரம் அதிகளவில் பாதிக்கும் விடயமாக அமைந்துள்ளது. அமெரிக்கா ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதற்கான அடிப்படை காரணமே ரஸ்சியாவின் நடவடிக்கையாகும். இவ்வாறு மேற்காசியா, கிழக்காசியா, மத்திய ஆசியா குடியரசுகள் முழுவதம் ரஸ்சிய நலன் வளர்ச்சியடைந்து செல்கிறது. மறுவார்த்தையில் கூறுவதாயின் அமெரிக்க நலன் நெருக்கடிக்குள்ளாகிறது. ஈரானின் ஜனாதிபதி அமெரிக்காவை வெளிப்படையாக எதிர்க்கும் தீவிர எதிர்ப்புவாத கருத்துநிலை கொண்டவர். அதனால் ரஸ்சிய-ஈரானிய உறவு மேலும் பலமடைய வாய்ப்பு அதிகரித்துள்ளது. இவைகளே ரஸ்சிய மீதான பொருளாதார தடைக்கு உள்ள முக்கிய காரணிகளாகும். இவற்றுக்காக அமெரிக்க பயன்படுத்தும் ஒரு விடயமாகவே ரஸ்சிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி காணப்படுகின்றார். இதனை அவதானிக்கும் போது அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் இயலாமையின் தெரிவே ரஸ்சியா மீதான பொருளாதார தடையென விளங்கிக் கொள்ளலாம்.

-பேராசியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தீம்புனல்)