April 25, 2026
அரசியல் கட்டுரைகள்

அமெரிக்காவின் தலைமையில் நேட்டோ உலகளாவிய போருக்கு தயாராகிறதா?

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் ஐரோப்பிய விஜயத்திற்கு பின்னர் நேட்டோ நாடுகள் போருக்கான தயார்படுத்தலை அதிகரித்துள்ளன. ரஷ்சியாவையும் சீனாவையும் நெருக்கடிக்குள்ளாக்கும் இராணுவ நடவடிக்கைகளுக்கான நகர்வுகளை நேட்டோ தரப்பு அதிகரித்துவருகிறதைக் காணமுடிகிறது. அவ்வகை சூழல் ஒன்றுக்கான அரசியல் தோற்றப்பாடு காட்சிப்படுத்தப்படுவதை அவதானிக்கும் போது ஒரு போர்சூழல் ஏற்படுகிறதாகவே தெரிகிறது. அது உலகளாவிய போராக அமையுமா அல்லது மட்டுப்படுத்தப்பட்ட போராக அமையுமா என்பது தொடர்பிலேயே அதிக சந்தேகங்கள் தோற்றுவிக்கப்படுகிறது. இக்கட்டுரையும் அத்தகைய போருக்கான சூழல் காணப்படுகிறதா எனட்பதை தேடுவதாக அமையைவுள்ளது.

முதலில் Michael Beckley எழுதிய America is not ready for a war with China எனும் கட்டுரை வெளிப்படுத்தும் சாரம்சத்தை நோக்குவோம். அமெரிக்காவின் பனிப்போருக்கு பின்பான காலப்பகுதியில் இராணுவத்திற்கான செலவீனமாக 19 டில்லியன் அமெ.டொலரை ஒதுக்கிவந்துள்ளது. அதே காலப்பகுதியில் சீனாவோ 16 டில்லியன் அமெ.டொலருக்கு அதிகமான ஒதுக்கங்களை மேற்கொண்டு வருகிறது.அதிகமான ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள் அமெரிக்கா ஒரு அபாயமான போருக்கு போவதற்கு முடியாத நிலையிலுள்ளதாகவும் அதற்கு அதிக காலம் தேவைப்படுவதாகவும் அவ்ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. கடந்த மார்ச் (2021) இந்தோ-பசுபிக் படையணியின் தளபதி அட்மிரல் பிலப் டேவிட்சன் குறிப்பிடும் போது இந்தோ-பசுபிக் ஆதிக்கம் செய்வதற்கு குறைந்தது அடுத்த ஆறு வருடங்களாவது தேவைப்படும் எனவும் சீனாவின் படைப்பலம் அமெரிக்காவை விட உயர்வாக உள்ளதாகவும் கிழக்காசியாவை அமெரிக்கா பலப்பிரயோகத்தினாலேயே கைப்பற்ற வேண்டிய நிலை ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமன்றி அமெரிக்கா மரபுரீதியான இராணுவ பரிமாணத்தில் வீழ்ச்சியை அடையும் போது சீனா வளர்ச்சியடைவதாகவும் அமெரிக்காவின் பாதுகாப்பு கட்டமைப்பை விட அரசியல் கட்டமைப்பே வலுவானதாக உள்ளதாகவும் சீனா இரு முனைகளிலும் வலுவாக உள்ளதாகவும் அக்கட்டுரை விவாதிகிறது. மேலும் சீனாவின் இராணுவத்தினையும் அதன் விரிவாக்கத்தையும் தடுக்கும் விதத்திலேயே அமெரிக்காவின் பாரிய இராணுவ அரசியல் உபாயங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் மிக மெதுவாகவே அமெரிக்க இராணுவ மற்றும் பாதுகாப்பு தந்திரோபாயங்கள் சீனாவுடன் ஒப்பிடும் போது நகர்வதாக குறிப்பிடப்படுகிறது.

ஜோ பிடன் நிர்வாகம் சீனாவுக்கு எதிரான இராணுவ நகர்வை இரட்டிப்பாக்கிய போதும் அதன் நகர்வு ஏனைய துறைகளுடன் ஒப்பிடும் போது தீவிரமாக நகர முடியாது திணறுவதாகவும் அதற்கு காரணம் மிகப்பெரியளவான பாதுகாப்பு கட்டமைப்பை அமெரிக்கா உலகளாவிய ரீதியில் கொண்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. ஆனாலும் பிடன் நிர்வாகம் முழு அளவிலான திட்டமிடலுடன் ஆசியா முதலிடம் என்ற கொள்கையை பிரயோகப்படுத்தும் விதத்தில் பென்ரகன் சிஐஏ, காங்கிரஸ், செனற் மற்றும் இராணுவக்கட்டமைப்புக்களையும் பயன்படுத்த திட்டமிட்டு வருகிறது. ஆசியாவை முழுமையாகக் கைப்பற்றுவதே பிடன் தலைமையிலான அமெரிக்க நிர்வாகத்தின் முதல் இலக்காக உள்ளது. ஆனால் அவற்றை எல்லாம் இலகுவில் சீனா கைவிடும் என்ற கணிப்பில் அமெரிக்க செயல்பட முடியாது என்றும் அவ்ஆய்வு கூறுகிறது. அது மட்டுமன்றி சீனா ஒரு மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நகர்வை மேற்கொள்ளுமாயின் அது தைவானை கைப்பற்றுவதாகவே அமையும் எனவும் அவ்ஆய்வு தெரிவிக்கின்றது.

இவ்வாய்வின் படி முழுநீள போருக்கு செல்வதற்கான தயாரிப்பில் அமெரிக்கா தற்போது இல்லை என்பதையும் அதற்கான கால அவகாசத்தை கொண்டு அமெரிக்கா நகர்வதாகவும் அக்கட்டுரை தெளிவுபடுத்துகிறது. அப்படியாயின் ஏன் கருங்கடல் பகுதியிலும் அரபிக் கடலிலும் சிரியா, ஈராக் இலக்குகளிலும் அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ கூட்டாளி நாடுகள் இராணுவ நகர்வுகளை மேற்கொள்ள முனைகின்றன. அதனை விரிவாக அவதானிப்பது அவசியமானதாகும்.

முதலாவது, ஜோ பிடனின் ஐரோப்பிய விஜயத்திற்கு பின்பான நேட்டோவின் நகர்வுகள் இராணுவ கொதிநிலையை அதிகரிக்கச் செய்துள்ளன. நேட்டோவின் அங்கத்துவ நாடுகள் உக்ரையினை பாதுகாக்கும் விதத்தில் கருங்கடலை அண்டிய பகுதியில் போர்க்கப்பல்களை நடமாட்டத்தை அதிகரித்துள்ளன. குறிப்பாக பிரிட்டனின் போர்க்கப்பலான ஏச்.எம்.எஸ் எனும் நாசகாரி கருங்கடலை நொக்கி நகர்ந்ததும் ரஷ்சியாவின் வெளிவிவகார அமைச்சின் எச்சரிக்கை மட்டுமன்றி ரஷ்சியா தனது விமானப்படையை கண்காணிப்பில் ஈடுபடுத்தியதையும் காணமுடிகிறது. இது கடல்ரீதியாக ஒரு தாக்குதலை மேற்கு ஐரோப்பாவிலிருந்து எதிர்கொள்ளும் வழிகளையும் உபாயத்தை தயார் செய்து வருகின்றன. ரஷ்சியாவின் போர் தயாரிப்புகள் உக்ரையினை நோக்கி அமைவதனாலும் நேட்டோ நாடுகளை எச்சரிக்கும் நடவடிக்கைகளை ரஷ்சிய பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சுக்கள் வெளியிடுவதையும் எதிர்க்கும் நோக்கில் செயல்படுகின்றன. அது மட்டுமன்றி ரஷ்சியாவை நெருக்கடிக்குள் தொடர்ந்து வைத்திருப்பதன் மூலம் அதன் இயல்பான இராணுவ மற்றும் பொருளாதார வளர்ச்சியை தடுக்கலாம் என நேட்டோ நாடுகள் கருதுகின்றன. அதாவது ரஷ்சியாவின் வளர்ச்சியை மட்டுப்படுத்துவதே நேட்டோவின் முதன்மையான நோக்கமாகும். இதனால் போர் ஒன்றுக்கான சூழல் நிலவுவதுபோல் காட்டிக்கொள்ள நேட்டோ தரப்பு முயலுகிறது. கருங்கடலை அண்டிய பகுதியில் 32 நாடுகளது கடற்படைகளுக்கான பாரிய போர் பயிற்சி ஒன்றுக்கான நகர்வை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. இதனை அடுத்து ரஷ்சியாவும் பாரிய போர் ஒத்திகைக்கு தீர்மானித்துள்ளதாகவும் நேட்டோ நாடுகளுக்கும் குறிப்பாக பிரிட்டனுக்கு எச்சரிக்கை செய்துள்ளதையும் காணமுடிகிறது. உக்ரையினை மையப்படுத்தி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ரஷ்சியா சீனா அணியை போருக்குள் இழுத்துவிடுவதற்கான நடவடிக்கையை நேட்டோ தரப்பு ஆரம்பித்துள்ளது.

இரண்டாவது, அராபியக்கடலை நோக்கி நேட்டோவின் அணிநாடுகள் தமது போர்க்கப்பல்களை நகர்த்துகின்றன. அப்பிராந்தியத்தின் முக்கியத்துவத்தில் அதிக பாதிப்பினை நேட்டோ நாடுகள் எதிர்கொண்டிருப்பதுடன் கடல் பகுதியை ஏறக்குறைய ரஷ்சியாவிடமும் சீனாவிடமும் இழந்துள்ள போக்கானது இராணுவரீதியில் மேற்குக்கு துரதிஸ்ரவசமானதே. அதனால் இந்தோ-பசுபிக் கடலை கைப்பற்றும் விதத்தில் ஆசியாவினது அல்லது இந்துசமுத்திரத்தினது கடற் பிராந்தியங்களை கண்காணிப்பதுவும் அதனை அடுத்து கைப்பற்றுவதுமான நடவடிக்கையை நேட்டோ தரப்பு ஆரம்பித்துள்ளது. இதனால் கருங்கடலில் குவிந்துள்ள நெருக்கடியை பயன்படுத்தரிக் கொண்டு அராபிக் கடல் பகுதியில் கவனத்தை திசைதிருப்ப முடியுமென நேட்டோ அணி கருதுகிறது. இது ரஷ்சியாவையும் சீனாவையும் நெருக்கடிக்குள்ளாக்குவதன் மூலம் போர் என்ற எச்சரிக்கையுடன் இரு நாடுகளது இயல்பான போக்கினையும் தகர்க்க முடியுமென உத்தி கொள்கின்றன.

மூன்றாவது, சிரியா மற்றும் ஈராக்கில் அமைந்துள்ள ஈரான் ஆதரவு பேராளிப்படைகள் மீது அமெரிக்கா விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளன. குறிப்பாக 27.06.2021 அன்று ஹெஸ்புல்லா மற்றும் அல்சுகாதா அமைப்புக்கள் மீது சிரியாவிலும் ஈராக்கிலும் தாக்குதல் நிகழ்த்தியதாகவும் ஐந்துக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாகவும் பென்டகன் அறிவித்துள்ளது. இத்தாக்குதலால் அமெரிக்க இராணுவத்தை பாதுகாக்கவும் வன்முறைகள் அதிகரிக்காமல் இருக்கவும் நிகழ்த்தியதாக பென்டகன் மேலும் தெரிவித்தது. ஆனால் இந்த தாக்குதல் ஈரான் பேராளிக்குழுக்களை இலக்கு வைத்திருபவ்பதுடன் ஈரான்-ரஷ்சியா-சீன-சிரியா கூட்டிற்கு எதிரான நடவடிக்கையாகவே தெரிகிறது. கருங்கடல் முதல் சிரியா எல்லை வரையும் அத்தகைய நெருக்கடியை தொடர்ந்து நகர்த்துவதன் மூலம் குழப்பத்தை ரஷ்சியா சீனாவுக்கு ஏற்படுத்துவதனைக் காணமுடிகிறது. காரணம் மேற்காசியப் பிராந்தியம் முழுமையாக இழக்கும் நிலையில் அமெரிக்காவும் நேட்டோவும் காணப்படுகின்றன. நேட்டோவின் அங்கத்துவ நாடான துருக்கி அமெரிக்காவுக்கு எதிரான நகர்வுகளை மேற்கொள்வதும் ரஷ்சியாவுடன் கைகோர்த்துள்ளமையும். சிரியா ஈரான் நாடுகளுடன் சீனா ரஷ்சியா நெருக்கமடைந்திருப்பதுவும் பாரிய நெருக்கடியை முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் காலத்தில் அமெரிக்கா எதிர்கொண்டது. அது நேட்டோவையும் பாதித்திருந்ததுடன் மேற்காசியாவின் இழப்பானது அமெரிக்க இருப்பை நெருக்கடிக்கு தள்ளியது.

எனவே உலகளாவிய ரீதியில் அமெரிக்கா போர் ஒன்றுக்கான வாய்ப்பினை உருவாக்க முயன்றாலும் அதற்கு தயாரில்லை என்பதை அதன் நகர்வுகளும் நடவடிக்கைகளும் காட்டுகிறது. மைக்கல் குறிப்பிடுவது போல் ஒரு தயாரிப்புக் காலமாகவே அமெரிக்க தற்போதைய காலத்தை கருதுகிறது. முழு நீள போரை தவிர்ப்பதுடன் அதற்கு தயாராகாத நிலையும் அதே நேரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள போர் ஒன்றுக்கான நகர்வையும் அமெரிக்கா சார்ந்த நேட்டோ தரப்பு மேற்கொள்ள முனைகிறது. ரஷ்சியா மற்றும் சீனாவை இயல்பான வளர்சியில் செல்லவிடாது தடுப்பதன் மூலம் நெருக்கடியை ஏற்படுத்தி அதனை ஒரு போர் சூழலாக மாற்றி குழப்பத்தினை அடைய முனைகிறது. அதாவது மட்டுப்படுத்தப்பட்ட அளவு என்பது உக்ரைன்-ரஷ்சிய போராகவோ அல்லது ஈரான் எதிர் மேற்காசிய நாடுகள் போராகவோ அல்லது சிரியா-துருக்கி போராகவோ அல்லது சீனா -தைவான் போராகவோ உருவாக்கவும் அதில் ஓரணிக்கு ஆயுத தளபாடங்களையும் ஆலோசனைகளையும் வழங்கி எதிரணியைத் தோற்கடிப்பதன் மூலம் தனது ஏகாதிபத்திய அமைவை தக்கவைக்க முயலுகிறது. இதனையே ஒரு போர் அரங்காக அமெரிக்காவும் நேட்டோவும் கருதுகின்றன. அதனை நோக்கிய நகர்வையே உலகளாவிய ரீதியில் ஏற்படுத்த முனைகிறது. இதற்கான பதில்களும் எதிர் தரப்பான ரஷ்சிய, சீனா, ஈரான், சிரியா, மற்றும் வடகொரியா போன்றவற்றின் தீர்மானங்களிலும் தங்கியுள்ளது. காரணம் அண்மையில் சீனாவும் ரஷ்சியாவும் மீளவும் தமக்கிடையிலான உடன்பாடுகளை நீடித்துள்ளன.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தீம்புனல்)