April 25, 2026
அரசியல் கட்டுரைகள்

அமெரிக்காவுடனான நெருக்கடியை இலங்கையின் இராஜதந்திரம் வென்றுவிட்டதா?

சமகாலத்தில் இலங்கை-அமெரிக்க உறவு நெருக்கடிமிக்கதென்றாக பொதுஜன பெரமுன அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்பு நிலவியது. அதன் அதீத வெளிப்பாடு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்த பிற்பாடு அமைந்திருந்தது. அதனை அடிப்படையாகக் கொண்டு இரு நாட்டுக்குமான நெருக்கம் முடிபுக்கு வந்துவிடும் என்ற எதிர்பார்க்கை காணப்பட்டது. ஆனால் இலங்கை ஆட்சியாளர்கள் வெளியுறவுக்கொள்கையில் இராஜதந்திரரீதியில் செயல்படும் போக்கானது வெற்றிகரமானதாக அமைந்துவருகிறது. கடந்த காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளை அனைத்தையும் இலங்கை ஆட்சியாளர்கள் கச்சிதமாக எதிர்கொண்டு நகர்ந்து வருகின்றனர். இதே பகுதியில் பலதடவை அத்தகைய விடயம் முதன்மைப்படுத்தப்பட்டிருந்தது. இக்கட்டுரையும் இலங்கை-அமெரிக்க உறவில் ஏற்பட்டுவரும் மாற்றங்களையும் இலங்கை ஆட்சித்துறையின் இராஜதந்திர வெளிப்பாட்டையும் தேடுவதாக அமையவுள்ளது.

முதலாவது, அமெரிக்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ வெளியிட்டள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயம் கவனிக்கத்தக்க வேண்டியதொன்றாகும். இலங்கை அமெரிக்காவுடனான நீண்டகால நட்புறவை தொடரும் என்றும் அமெரிக்காவுடனான ஒத்துழைப்புக்களை விரிவுபடுத்திக்கொள்ளவும் நம்பிக்கையுடன் முன்னோக்கி பயணிக்கவும், தாம் எதிர்பார்ப்பதாகவும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் திணேஸ் குணவர்த்தனா அவர்கள் அமெரிக்க வெளியுறவுச்செயலாளர் அன்ரனி கிளின்டன்க்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்த விடயங்களை அவதானித்தால், அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமான இருதரப்பு மற்றும் பலதரப்பு விவகாரங்களில் பரஸ்பரம் நலன்களை முன்னிறுத்துவதற்காக அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற இலங்கை தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். அக்கடிதத்தில் அமெரிக்காவின் 245வது சுதந்திர தினத்திற்கான வாழ்த்தினை தெரிவித்துள்ளதோடு 1948இலிருந்து அமெரிக்காவுடனான இலங்கையின் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டது என்றும் பரஸ்பரம் இரு நாடுகளுக்குமிடையில் நன்மைபயக்கும் ஒத்துழைப்பினை மேற்கொண்டிருந்தது என்றும் இலங்கை மக்களின் முன்னேற்றத்திற்கான இந்த பண்முக மற்றும் துடிப்பான ஒத்துழைப்பினை மேலும் பலப்படுத்தி ஆழப்படுத்த வேண்டும் எனவும் நான் நம்புகின்றேன். இலங்கை உட்பட பின்தங்கிய நாடுகளுக்கு மில்லியன்கணக்கான தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கி வரும் அமெரிக்க ஜனாதிபதி பிடனின் சமீபத்திய முயற்சிகள் உட்பட கோவிட்19 தொற்று நோயை கட்டுப்படுத்த அமெரிக்கா வழங்கிய விலைமதிப்பற்ற ஆதரவையும் உதவியையும் இலங்கை அரசாங்கமும் மக்களும் நன்றியுடன் பாராட்டுகின்றது எனத்தெரிவித்துள்ளார்.

மேற்குறித்த இரு பதிவுகளும் இலங்கையின் மிக உயர் பதவிகளிலுள்ள இராஜதந்திர உரையாடலாக உள்ளது. ஜனாதிபதியும் வெளிவிவகார அமைச்சரும் அமெரிக்காவை நோக்கி இசைவான ஒரு அரசியல் களத்தை கட்டமைப்பதற்கான ஒத்துழைப்பினை மேற்கொண்டுள்ளனர். ஜெனீவா தீர்மானம், காங்கிரஸில் முன்மொழியப்பட்டுள்ள தீர்மானம் போன்றவை அமெரிக்காவை அடிப்படையாய் கொண்டே நகர்ந்துள்ளது. எனவே இதனை கையாள வேண்டிய பொறுப்பானது ஜனாதிபதிக்கும் வெளிவிவகார அமைச்சுக்கும் உரித்துடையதாகும். இலங்கை சீனாவுடன் பயணிக்கின்றது என்ற குற்றச்சாட்டு அமெரிக்க மற்றும் மேற்குலகிற்கு அதிக நெருக்கடியையும் குழப்பத்தையும் தந்திருந்தது. அத்தகைய குழப்பத்தின் உச்ச வெளிப்பாடே அமெரிக்க காங்கிரஸின் முன்மொழிவர்கும். அதுவும் வெறுமையான முன்மொழிவாக மட்டுமே உள்ளது. அது ஒரு அரசியல் பெறுமானம் கொண்டதேயன்றி ஒரு அதிகார பெறுமானம் கொண்டதல்ல. அதனை அடுத்தே ஐரோப்பிய யூனியன் தீர்மானங்கள் அமைந்திருந்தது. எனவே இவை அனைத்தும் இலங்கை அரசின் மீதான அழுத்தத்தை அதிகரித்தாலும் ஐரோப்பிய யூனியன் மற்றும் ஜெனீவா தீர்மானங்களே அதிகார அழுத்தத்துக்கான தீர்மானங்களாக உள்ளன. ஆனால் அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம் ஒரு அரசியல் பெறுமானத்தை மாத்திரமே கொடுத்துள்ளது. எனினும் ஐரோப்பிய யூனியன் மற்றும் ஜெனீவா தீர்மானங்களுக்கு தலைமை தாங்குவது அமெரிக்கா என்பது மட்டுமன்றி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமைப்பீடமும் அமெரிக்கா என்பதாலும் இலங்கை தமிழருக்கு ஆதரவான அமெரிக்க அணுகுமுறை ஆபத்தானதென இலங்கை அரசாங்கம் கருதுகிறது. இதனாலேயே அமெரிக்காவை நோக்கி இலங்கை அரசாங்கம் தனது இராஜீஜ நோக்கை கையாய வேண்டிய பொறுப்புக்குள் உள்ளது. இதனாலேயே அமெரிக்காவை திருப்திப்படுத்தும் விதத்தில் காங்கிரஸ் தீர்மானத்தின் அரசியல் வெளியை இலங்கை ஆட்சியாளர்கள் பயன்படுத்த ஆரம்பித்தள்ளனர். அத்தகைய அரசியல் வெளியே தமிழ் தலைமைகள் கருத்தில் கொள்ளவில்லை என்பதும் இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட வேண்டிய விடயமாகும். எனவே இலங்கை ஆட்சியாளர்கள் அமெரிக்காவுடனும் இந்தோ-பசுபிக் உபாய நாடுகளுடன் ஒத்துழைப்பது என்ற முடிவோடு நகர தொடங்கியுள்ளனர். இவையே சுதந்திர இலங்கையின் வரலாற்றில் நிகழ்ந்துவரும் இராஜதந்திர நகர்வுகளாகும். அதுமட்டுமன்றி தற்போதைய இலங்கை அரசாங்கம் இந்தியாவையும் புறந்தள்ளிவிட்டு நேரடியாக அமெரிக்காவுடன் உறவு மேற்கொள்ளும் பொறிமுறையை உருவாக்கி உள்ளது. அதாவது புவிசார் அரசியலையும் பூகோள அரசியலையும் வேறு வேறாக்கி கையாளும் உபாயத்தை இலங்கை ஆட்சியாளர்கள் தமதாக்கி உள்ளனர். இதில் தற்போதைய நிதி அமைச்சரும் பொதுஜன பெரமுனாவின் ஸ்தபாகருமாகிய பசில் ராஜபக்ஸாவிற்கு முக்கிய பங்குண்டு. அவரது அமெரிக்க விஜயம் இலங்கை அமெரிக்க உறவை மீளமைத்ததோடு இன்றைய நகர்வுகள் ஒவ்வென்றையும் பிரதான பங்கெடுப்பாளாராக இரட்டை குடியுரிமை உடைய நிதி அமைச்சரையே சாரும்.

மறுபக்கத்தில் சீனாவை கையாளவும் சீன-இலங்கை உறவை பலப்படுத்தவும் பிரதமரும் முன்னாள் நிதி அமைச்சருமாகிய மகிந்த ராஜபக்சாவை இவ்அரசாங்கம் முன்னிறுத்தியுள்ளது. குறிப்பாக சீனா கொம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிகழ்வில் உரையாற்றும் போது, இலங்கையின் இருப்புக்கு சர்வதேச ரீதியாக ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கும் சீனா பாரிய பங்களிப்பை வழங்கியது என்றும் அதனாலேயே இலங்கை இறைமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாத்தது என்றும் சீனாவே இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு பாரிய பங்காற்றி வருகிறதென்றும் தெரிவித்ததோடு ஆசியாவின் முன்னேற்றத்திற்கு சீனாவின் முன்னேற்றமே அடிப்படையானது என்றும் தெரிவித்ததன் மூலம் சீனா இலங்கை நட்பை இலங்கை மக்கள் மத்தியில் பலப்படுத்துகின்ற உத்தியை கொண்டிருக்கின்றது. எனவே சீனாவை அங்கீகரிப்பது சீனாவினுடனான உறவை பலப்படுத்துவது பிரதமரது உரை மூலம் அறிய முடிகிறது. அதனைவிட இலங்கை சீனா உறவில் உத்தரவாதப்படுத்தப்பட்ட நெருக்கத்தினை காட்டுகின்ற விதத்தில் சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டுக்கான நாணயம் வெளியிட்டமை, இரு நாட்டுக்குமான புதிய பட்டுப்பாதை உறவை பலப்படுத்தம் விதத்தில் சீன தூதரகத்தின் நூல் வெளியீட்டை இலங்கை ஆட்சியாளர்கள் முதன்மைப்படுத்தியிருப்பது கவனத்திற்குரிய விடயமாகும்.

எனவே, அமெரிக்க சீனா ஆகிய இருநாடுகளையும் சமதூரத்தில் கையாளுகின்ற பொறிமுறையை இலங்கை ஆட்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். இலங்கையின் அமைவிடம், அதுசார்ந்த அதன் முக்கியத்துவம் உலகளாவிய ரீதியிலான வல்லரசுகளை அணைத்துக்கொள்ள வேண்டிய தேவைப்பாட்டை எழுப்பி உள்ளது. அதனை நோக்கி இலங்கை ஆட்சியாளர்களின் இருப்பும் கட்டமைப்பும் அரசியல், பொருளாதார, இராணுவரீதியில் உறுதிப்படுத்துவதோடு நீண்டு நிலைத்திருக்கக்கூடிய இராஜதந்திர உரையாடல்களை ஏற்படுத்த முயலுகிறது. இதன் பிரகாரம் இலங்கையின் வெளியுறவு மீண்டுமொரு நெருக்கடியை கையாளுகின்ற உத்தியை தனதாக்கியுள்ளது. இதன் விளைவுகளை நோக்குதல் அவசியமானது.

ஒன்று, இலங்கை தமிழர்களுக்கு சார்பான அமெரிக்க அணுகுமுறை இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திர முயற்சியால் நெருக்கடிக்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகதித்துள்ளது. ஜெனீவாவும், காங்கிரஸ் தீர்மானமும், ஐரோப்பிய யூனியன் நெருக்கடியும் இத்தகைய அணுகுமுறையால் தமிழர் அரசியலில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகும்.

இரண்டு, இலங்கையினுடைய இராஜதந்திரம் நெருக்கடியான சூழ்நிலையை கடந்து செல்வதற்கான அனுபவத்தை கொண்டுள்ளது என்பதை மீளவும் நிலைநிறுத்தி உள்ளது. இது மேற்குலகு நாடுகளில் இரந்த ஏற்பட்ட அழுத்தங்கள் அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பை தனதாக்கி உள்ளது. இதனால் இனைத்து நெருக்கடிகளையும் இலங்கையின் ஆட்சித்தறை கடந்து செல்லக்கூடிய வாய்ப்பை அடைந்துள்ளது.

மூன்று, பிராந்திய அரசியல் சூழலையும் சர்வதேச அரசியல் சூழலையும் தனித்தனியாக கையாளும் உத்தியை இலங்கை ஆட்சியாளர்கள் தமதாக்கி உள்ளதோடு மேற்கை ஒரு வகையிலும் ஆசிய நாடுகளை இன்னொரு வகையிலும் அரவணைத்து செயற்பட துணிந்துள்ளது.
நான்கு, இந்தோ-பசுபிக் உபாயத்தில் இலங்கையின் பங்களிப்பை உறுதிப்படுத்தவதை கடந்து சீனாவுடனான புதிய பட்டுப்பாதை ஒத்தழைப்பை முதன்மைப்படுத்தவதனூடாக அரசியல் பொருளாதார இராணுவ நலன்களை தனதாக்கி கொள்வதில் வெற்றி கண்டுள்ளது.

எனவே, இலங்கை-அமெரிக்க உறவ பலமான ஒத்துழைப்புக்குள் உருவாகும் அதேவேளை சீனா-இலங்கை உறவும் நெருக்கமான வாய்ப்புக்களை இலங்கைக்கு ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. பொதுஜன பெரமுன அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலப்பகுதியிலிருந்து நெருக்கடியாக எதிர்கொண்ட அமெரிக்க உறவை தற்பொது சுமுகமாக்கி உள்ளது. அத்தகைய சுமுக தன்மை இலங்கை ஆட்சியாளர்களின் இராஜதந்திர செழிப்பினால் ஏற்பட்டதாகும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)