April 25, 2026
அரசியல் கட்டுரைகள்

இந்தியாவின் கடற்படை விரிவாக்க திட்டம் இலங்கை பொறுத்து சீனாவின் கொள்கைக்கு நெருக்கடியை ஏற்படுத்துமா?

இலங்கையை மையப்படுத்தி இந்திய-சீன போட்டி அதிக முக்கியத்தவத்தை பெற ஆரம்பித்துள்ளது. குறிப்பாக, சமுத்திரங்களை மையப்படுத்திய உலக அரசியல் நகர்வது போன்று இந்து சமுத்திரத்தை அண்டிய கடல்பகுதிகளை நோக்கிய ஆதிக்கத்துக்கான போட்டி சீனாவுக்கும் இந்தியாவுக்கும் நிகழ்ந்த வருவத கடந்த இரு தசாப்தங்களாய் அவதானிக்கக்கூடிய விடயமாக உள்ளது. ஆனாலும், இந்தியாவுடன் ஒப்பிடுகின்ற போது சீனா இந்துசமுத்திரத்தில் முன்னிலை பெற்றுவருவதும் இலங்கை மாலைதீவு நாடுகளை மையப்படுத்தி அத்தகைய நடவடிக்கைகளை சீனா அடைந்திருப்பதும் கவனிக்கத்தக்க விடயமாகும். இத்தகைய நிலை இந்தியாவை தனது எல்லைகளை பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தத்தக்கு தள்ளியுள்ளது. அதற்கான உத்திகளை மிகப்பிந்திய வாரங்களில் இந்தியா மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் இந்தியா தனது கடல் பாதுகாப்பை முதன்மைப்படுத்தும் விதத்தில் நகரும் விடயங்களை தேடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

முதலாவது, இந்தியாவின் நகர்வில் முதன்மையாக அமைந்திருப்பது இந்தியாவின் கிழக்கு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ஜென்ரல் அஜேந்திர பஹதூர் சிங் மன்னார் வளைகுடாவை நோக்கி கண்காணிப்பில் ஈடுபட்ட விடயம் அண்மைய வாரத்தில் (23.07.2021) கவனத்தை பெற்றுள்ளது. குறிப்பாக தமிழகத்திலிருந்து மன்னார் வளைகுடா ஊடாக இலங்கைக்கு கடத்தல்களும் சட்டவிரோத நடவடிக்கைகளும் 2009இற்கு பின்னர் தீவிரம் பெற்றுள்ளது. மன்னார் வளைகுடா கடற்பகுதியிலிருந்து சட்டவிரோத ஆள்கடத்தல்களும் சந்தேக நபர்கள் தமிழகமூடாக இந்தியாவிற்குள் நுழைவதும் வழமையான நடவடிக்கையாக அமைய தமிழகத்திலிருந்து இராமேஸ்வரம் வழியாக இலங்கைக்குள் தொடர்ச்சியான கடத்தல் நடவடிக்கைகள் நிகழ்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. கடலட்டை, மஞ்சள், கடல் பல்லி, கடல் குதிரை, கேரளா கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மன்னார் வளைகுடாவை கண்காணிப்பதையும் கரையோர பாதுகாப்பை உறுதிப்படுத்துவதையும் இரண்டு அதிநவீன ரோந்து கப்பல்கள் பாம்பன் பாலத்தை அண்டிய மீன்பிடித்துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளது. கிழக்கு கடற்படை தளபதி 23.07.2021அன்று இராமேஸ்வரம் சென்றதோடு அப்பகுதியில் கடற்படை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பார்வையிட்டதுடன் அங்கிருந்து உலங்கு வானூர்தி மூலம் மன்னார் வளைகுடா பகுதியிலிலும் மன்னார் தீவிலும் கண்காணிப்பை மேற்கொண்டதுடன், கடற்பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கடலியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுவது போல் கடல்கொள்ளையை கட்டுப்படுத்தவும் தமது கப்பல்களை பாதுகாப்பதற்காகவும் கடற்படையை விஸ்தரிக்கும் உபாயம் ஒன்றினைஉலக நாடுகள் கடைப்’பிடித்து வருகின்றன. இதனூடாக நாடுகள் கடலாதிக்கத்தை உருவாக்க முடியும். இக் கருதுகோள் இந்தியாவுக்கு வாய்ப்பான சூழலை இப்பிராந்தியத்தில் ஏற்படுத்தியுள்ளது. அதனை தற்போதே இந்தியா ஆரம்பித்துள்ளது. இதில் அமெரிக்கா பிரிட்டன் சீனா முன்னணி நாடுகள் என்பது கவனிக்கத்தக்கது.

இரண்டாவது,இந்திய பாதுகாப்பு அமைச்சு ஜூலை-20இல் (2021) வெளிநாடுகளின் ஒத்துழைப்புடன் ஆறு புதிய வகை மரபுசார் நீர்மூழ்கிக்கப்பல்களை தருவிப்பதற்கு உடன்பாடு செய்துள்ளது. குறிப்பாக, ஐந்துக்கு மேற்பட்ட வெளிநாட்டு கம்பனிகளை அணுகி Mega Diesel – Electric Submarine-களை உருவாக்குகின்ற திட்டமிடல் ஒன்றை Project-75 India (P75) என அழைக்கப்படும் திட்டமொன்றை உருவாக்கியுள்ளது. குறிப்பாக DCNSஎனும் பிரான்ஸ் நாட்டினுடைய கம்பனியுடனும் Rosoboronexprot எனும் ரஷ்சிய கம்பனியுடனும் Tsyssenkrupp marine Systems எனும் ஜேர்மானிய கம்பனியுடனும் Navantia என்ற ஸ்பெயின் நாட்டு கம்பனியுடனும் மற்றும் Daewoo எனும் தென்கொரிய கம்பனியுடனும் நீர்மூழ்கிகளை இந்தியாவிற்கு தருவிப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது. இதற்கான ஒப்புதல்களை பாதுகாப்பு அமைச்சு மற்றும் இந்தியா DAC என்பன வழங்கி இருப்பதோடு அதற்கான பூர்வாங்க வேலைகள் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மூன்றாவது, கடந்த முப்பது வருடங்களாக உள்நாட்டு தொழில்நுட்பத்தையும் ரஷ்சியாவின் தயாரிப்பு நீர்மூழ்கிகளையும் ரஷ்சிய – இந்திய கூட்டு தயாரிப்புக்களையும் முதன்மைப்படுத்தி வந்த இந்தியா தற்போது விசேட இந்திய பாதுகாப்பு நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைவாக செயல்பட ஆரம்பித்துள்ளது. 2019ஆம் ஆண்டு இந்திய பாதுகாப்பு அமைச்சு மற்றும் இந்திய அமைச்சரவை வழங்கிய ஆலோசனைகளுக்கு அமைவாகவும் இந்தியா கடற்படை சார்ந்த ஆயுத தளபாடங்களையும் கடற்படைக்கான போர்க்கப்பல்களையும் தருவிக்க திட்டமிட்டுள்ளது. குறிப்பாக தரையிலிருந்தும் கடலிலிருந்தும் நீர்மூழ்கிகளிலிருந்தும் போர்க்கப்பல்களிலிருந்தும் தாக்குதல்களை நடாத்தக்கூடிய குறுந்தூர மற்றும் நெடுந்தூர ஏவுகணையை கொண்ட கடற்படையை கட்டுவது என்றும் அணுவாயுதங்களை தாங்கிச்செல்லக்கூடிய தாக்குதல் நீர்மூழ்கிகள் ஆறினை இந்திய கடற்படையோடு இணைப்பது என்றும் திட்டமிடப்பட்டுள்ளது. 2019இல் அமைச்சரவையால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளுக்கு அமைவாகவே இத்தகைய நடவடிக்கைகளை இந்திய பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்படுகிறது.

இவ்வாறு இந்தியா தனது கடற்படையை விஸ்தரிப்பதற்கான திட்டமிடலை துரிதப்படுத்தி இருப்பதற்கான காரணங்களை விளங்கிக்கொள்வது அவசியமாகும். சுதந்திர இந்தியாவின் காலப்பகுதியில் வரலாற்றாசிரியராகவும் இராஜதந்திரியாகவும் விளங்கிய பணிக்கர் அவர்கள் முன்வைத்த எண்ணங்களை தவறவிட்ட இந்தியா மீளவும் அதே எண்ணங்களுக்குள் பிரவேசிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. பணிக்கர் குறிப்பிடும் போது இந்த சமுத்திரத்தில் எழுந்துவரும் அலைகளின் பாதுகாப்பிலேயே இந்திய தேசத்தின் பாதுகாப்பு அமைந்திருக்கும் என்றார். அத்தகைய இந்து சமுத்திரத்தை கடந்த காலத்தில் அமெரிக்காவும் அதற்கு முன்னர் பிரிட்டனும் தற்போது சீனாவும் ஆதிக்கம் செய்துள்ள சூழலே இந்தியாவின் பாதுகாப்பின் தனித்துவம் இல்லாது போயுள்ளது. அந்தவகையிலே, இந்திய தரப்பு காலந்தாழ்த்திய போதும் ஒரு ஆரோக்கியமான கடற்படையை கட்டி வளர்ப்பது என்பது பிராந்திய பாதுகாப்புக்கும் பிறசக்திகளின் ஆதிக்கத்தை தடுப்பதற்கும் வழிவகுக்கும். அதனடிப்படையினை முழுமையாக நோக்குதல் அவசியமானது.

ஒன்று, இந்து சமுத்திரம் நோக்கிய சீனாவின் விஸ்தரிப்பு இந்தியாவின் தாய்நிலத்தை நெருக்கடிக்கு உள்ளாக்க ஆரம்பித்து விட்டது. அசாம் – மிசோரம் மோதல் சில செய்திகளை வெளிப்படுத்தியுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவின் கடல் என்பது இந்து சமுத்திரம் என்பதை கடந்து குடாநாட என்ற அடிப்படையில் 7516கி.மீ கரையோர பிரதேசத்தை கொண்டிருக்கிறது. எனவே இதனை பாதுகாத்தல் இந்தியாவின் இருப்பை பாதுகாப்பதற்கான விடயமென இந்திய பாதுகாப்பு ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதாவது சீனாவின் கரையோர செல்வாக்கிலிருந்து இந்தியாவை பாதுகாத்தல் இந்தியாவிற்கு தற்போது எழுந்துள்ள பிரதான சவாலாகும். ஏற்கனவே கிழக்கு கடற்பாதுகாப்பை இராமேற்வரத்தை மையப்படுத்தியும் அந்தமான் நிக்கோபா தீவுகளை மையப்படுத்தியும் இருமுனையமாக கையாண்டு வரும் இந்தியா மேலும் பல முனையங்களை கிழக்கு கடற்பிராந்தியத்தில் திறக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதென இந்தியா பாதுகாப்பு நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

இரண்டு, இந்தியாவின் கடற்பாதுகாப்பு என்பது அதன் கரையோரத்திலிரந்த 200 கடல் மைல் தூரத்தை பாதுகாப்பதாகும். காரணம், கரையோரம், அடுத்துரு வளையம், விசேட பொருளாதார வளையம் என வளங்கள் குவிந்திருக்கும் பிரதேசமாக பாரிய கரையோர கடற்பகுதி இந்தியாவுக்கு உரியதாக காணப்படும். அதனடிப்படையில் இந்திய கடற்படையின் திட்டமிடலுக்குள்ளேயே இந்திய பொருளாதாரம், இந்திய போக்குவரத்து, இந்திய பாதுகாப்பு என்பன உள்ளடங்கியுள்ளன. தென்னாசிய நாடுகள் தொடர்பான ஒத்துழைப்பை அடிப்படையாக கொண்ட இந்திய பாதுகாப்பு முடிவுக்கு வந்திருப்பதுடன் இந்தியாவின் பாதுகாப்பு முழுமையாக இந்திய பாதுகாப்பு படையிடமே முழுமையாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மூன்று, இந்திய கடற்படை நீர்மூழ்கிகளை அடிப்படையாக கொண்ட பாதுகாப்பு என்பது அதன் ஆழ்கடல் பகுதியை பாதுகாப்பதற்கான திட்டமிடலாகவே இந்தியா பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதனடிப்படையிலேயே சீனாவுடன் போட்டியிடவும் சீனாவை எதிர்கொள்ளவும் முடியுமென்ற நிலையை இந்தியா கொண்டுள்ளது. ஆழ்கடல் பாதுகாப்பின் மூலம் இந்தியா மீதான போர் உத்திகளும் அச்சுறுத்தல்களும் தடுத்து நிறுத்தப்படவும் இந்து சமுத்திர பிராந்தியத்தில் இந்தியா நிலையான இருப்பை சாத்தியப்படுத்தவும் உதவுமென கருதப்படுகிறது.

இவ்வாறு இந்தியா தனது கடற்படையை வலுப்படுத்தவும் இந்து சமுத்திரத்தின் மீது செல்வாக்கு செலுத்தவும் பல்வேறு திட்டங்களை சுதந்திரம் பெற்ற காலப்பகுதியிலிருந்து மேற்கொண்டு வருகின்றது. அவை எவற்றிலும் இந்தியா வெற்றி பெற்றதாக கூறிவிட முடியாது. இந்திரா காந்தியின் மரணத்திற்கு பின்னர் இந்தியாவின் பாதுகாப்பு துறை ஊழல்வாதிகளாலும் பலவீனமான அரசியல் தலைமைகளினாலும் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றது. இந்தியாவின் நெருக்கடி என்பது அரசியல் தலைமைகளாலும் ஊழல்வாதிகளாலும் கட்டமைக்கப்பட்ட ஒன்றாகவே விளங்குகின்றது. சீனா இப்பிராந்தியத்தில் ஏறக்குறை 65 நீர்மூழ்கிகளை நடவடிக்கையில் ஈடுபடுத்தி வருவதாக தெரிய வருகின்றது. இந்தியாவுடன் ஒப்பிடுகையில் பலமடங்கு நீர்மூழ்கிகளை சீனா கொண்டிருப்பதாகவும், இந்துசமுத்திரமல்லாத நாடொன்றின் நடவடிக்கை என்றும் இந்திய பாதுகாப்பு ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

எனவே, இலங்கை பொறுத்த சீனாவின் விஸ்தரிப்பு திட்டங்கள் இந்தியாவின் பாதுகாப்பையும் இந்தியா கடற்பாதுகாப்பையும் அச்சுறுத்தலுக்கு தள்ளியுள்ளது. இத்தகைய நெருக்கடியிலிருந்து இந்தியாவை பாதுகாப்பது என்பது நீர்மூழ்கிகளை தருவிப்பதனால் மட்டும் முடியுமா என்பது நியாயமான கேள்வியாகும். அத்தகைய நீர்மூழ்கிகளை தருவிப்பதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் ஊழல்வாதிகளிடமிருந்து பாதுகாக்கப்படுதல் அவசியமானதொன்றாக கருதப்படுகிறது. ஆனாலும் இந்தியா இப்பிராந்தியத்த்தில் நம்பிக்கையூட்டும் சக்தியாக எழுச்சியடைய வேண்டுமென்பதே இப்பிராந்திய பாதுகாப்புக்கும் உறுதிப்பாட்டுக்கும் உத்தரவாதம் கொடுப்பதாக அமையும்.

-போரசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)