அரசியல் கட்டுரைகள்

ஆப்கானிஸ்தான் வல்லரசுகளின் வீழ்ச்சிக்கான மையமா?

‘இந்தியாவின் நிலப்பரப்பை நோக்கிய சீனாவின் நெருக்குவாரம் அதிகரித்து கொண்டு செல்கின்றது. இதற்கு பின்னால் தென்னாசியாவைப் பொறுத்த வரை இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையின் பலவீனம் முக்கிய காரணமாகும். சுதந்திர இந்தியா வகுத்துக்கொண்ட பிராந்திய கொள்கைகள் அனைத்துமே தோல்வி முகத்தையே எதிர்கொள்ள வைத்துள்ளது ‘யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் உரிமை மின்னிதழுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்

 

ஆப்கானிஸ்தானை மீண்டும் தமது ஆதிக்கத்தின் கீழ் தலீபான்கள் கொண்டுவந்துள்ளார்கள். இது பற்றி தங்களது பார்வை எப்படி இருக்கிறது?
செப்ரெம்பர்-11(9/11)  தாக்குதலுடன் ஏகாதிபத்திய வாதம் உலகளாவிய ஆயுதப் போராட்டங்களையும் மற்றும் விடுதலைப் போராட்டங்களையும் பயங்கரவாதப் போராட்ங்களாக அடையாளப்படுத்தி முடிபுக்கு கொண்டுவந்திருந்தன. ஆனால் அத்தகைய செம்ரெம்பர் தாக்குதலுக்கு காரணமான தலிபான்கள் ஆப்கானிஸ்தான் தரைத்தோற்ற அமைப்பாலும் அதன் புவிசார் அரசியல் சூழமைவினாலும் வெற்றிகரமாக தப்பிப் பிளைத்ததுடன் இஸ்லாமிய மதவாத தன்மைகள் அவர்களது இருப்புக்கும் மீள் எழுச்சிக்கும் காரணமாக அமைந்திருந்துள்ளது. தலிபான் அமைப்பினது முதலாம் நிலைத் தலைமைகளது சிதைவுகளுக்கு பின்னரும் அவ்வமைப்பினை கட்டமைத்து நெறிப்படுத்துவதில் இரண்டாம் மூன்றாம் தலைமைமுறைகளது தனித்துவமான பங்கை செலுத்தியுள்ளது. அது மட்டுமன்றி இஸ்லாம் மதத்தின் சிந்தனையும் அமெரிக்கா உட்பட மேற்குக்கு எதிரான எதிர்ப்புவாதமும் அவர்களது இருப்பினை மீளமைக்க உதவியுள்ளது. அதனுடன் மிகப்பிரதான விடயம் உலக ஒழுங்கில் ஏற்பட்டுவரும் மாற்றமாகும். அதாவது மேற்குலக ஏகாதிபத்தியங்களது சரிவும் கீழைத் தேச ஏகாதிபத்தியங்களது எழுச்சியும் தலிபான்களது மீள் எழுச்சிக்கு பின்னாலுள்ள வலுவான காரணியாகும். இதனை இன்னொரு வகையில் கூறுவதானால் அமெரிக்காவின் வீழ்ச்சியே தலீபான்களின் எழுச்சிக்கு வித்திட்ட உடனடி காரணியாக அமையும்.

ஆப்கானிஸ்தான் இராணுவமே தலிபான்களை எதிர்த்து பேராடாத போது நாங்கள் என்ன செய்ய முடியும் என ஜோ பிடன் கூறியதன் மூலம் அமெரிக்காவின் நிலைப்பாட்டை நியாயப்படுத்திவிட முடியுமா?
ஜோ பிடனின் வார்த்தைகள் ஒரு வல்லரசு நாட்டின் ஜனாதிபதியின் வார்த்தைகளாக தெரியவில்லை. அமெரிக்காவின் இயலாமையும் அதன் மீது எழுந்துள்ள நெருக்கடியும் ஜோ பிடனது உரையில் தெரிகிறது. கந்தகார் விமான நிலையத்தில் குவிந்திருக்கும் தனது அமெரிக்க பிரஜைகளையும் கடந்த 20 வருடங்களாக அமெரிக்காவிற்கு கூலியாட்களாக பணிபுரிந்த ஆப்கான் மக்களையும் மீட்டெடுப்பதிலே அவசரம் காட்டாத ஒர் அமெரிக்காவாக ஜோ பிடனது கருத்துக்கள் பிரதிபலிக்கின்றது. 20 வருடங்களுக்கு முன்னால் ஆப்கானிஸ்தான் மீது இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிராக தீவிர போர் புரிந்த அமெரிக்கா தனது பொருளாதாரத்தையும் இராணுவ வலிமையையும் இழந்திருக்கிறது என்பதையும் தலிபான்களின் போர் உத்திகளால் அமெரிக்காவால் நிலைத்திருக்க முடியாது என்பதனையும் அவரது உரை தெளிவுபடுத்துகிறது. ஆப்கானிஸ்தான் வல்லரசுகளின் வீழ்ச்சிக்கான மையமா என்ற கேள்வியை மீளவொரு தடவை உறுதிப்படுத்தியுள்ளது. இத்தகைய அரசியலுக்கு பின்னால் ரஸ்சியாவும் சீனாவும் பின்களப்பணியை ஆற்றுகின்றன என்பதை புரிந்து கொள்ளுதல் வேண்டும். முன்னாள் ஜனாதரிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்படுத்திய கொள்கைகளை தவிர்க்க முடியாது ஜோ பிடன் பின்பற்றும் துயரம் அமெரிக்காவின் உலக ஆதிக்கம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது என்பதை காட்டுகிறது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் நட்புரீதியான உறவை மேம்படுத்த தயாராக இருப்பதாக சீனா அறிவித்திருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
அமெரிக்காவால் தோற்றுவிக்கப்பட்டு சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்காக பயன்படுத்திக்கொண்ட தலிபான் அமைப்பை தற்போது சீனர்கள் தத்தெடுத்துள்ளனர். அரசியல் புவியியலாகவும் புவிசார் அரசியலாகவும் இப்பிராந்திய நாடுகளோடு சீனாவுக்கு நெருக்கமான உறவுகள் உண்டு. ஆப்கானிஸ்தானின் அரசியல் புவியியல் போருக்கான களம் மட்டுமன்றி வளங்கள் நிறைந்ததும் பலவீனமான பொருளாதாரத்தை கொண்டதுமான ஒரு நாடாக உள்ளது. அமெரிக்க எதிர் சீனா என்ற உலக ஒழுங்கு முறை படிப்படியாக விருத்தி பெற்று வரும் சந்தர்ப்பத்தில் தலீபான்களது எழுச்சியும் சீனாவுடனான உறவும் வலுவான புவிசார் அரசியல் நகர்வகளை அதிகரிக்க வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனா தென்னாசிய பிராந்தியத்தின் பெருமளவான நாடுகளை தனது செல்வாக்குக்குள் கொண்டு வந்ததோடு இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு அதன் நடவடிக்கைளை தனதாக்கி உள்ளது. தனது எல்லைக்குள் காணப்படும் உய்குர் முஸ்லீம் பிரச்சினைகளையும் எல்லை தாண்டிய இஸ்லாமிய தீவிரவாத நெருக்கடிகளையும் இஸ்லாத்துக்கு எதிரான சிந்தனையுடைய நாடென்ற எண்ணப்பாங்கினையும் தலீபான்களை அணைத்து கொள்வதால் சீனா கையாள முயலுகிறது. அதுமட்டுமன்றி அமெரிக்க எதிர்ப்புவாதத்தை கொண்டுள்ள தலீபான்களையும் ஏனைய இஸ்லாமிய அமைப்புக்களையும் அரவணைப்பதன் மூலம் மத்திய ஆசியா, தென்னாசியா மற்றும் மேற்காசிய பிராந்தியங்களில் உள்ள இஸ்லாமியரின் உறவை மேலும் பலப்படுத்த சீனா திட்டமிடுகிறது. இதன் நேரடி விளைவுகள் இந்தியாவுக்கானதாகவே அமைய வாய்ப்புள்ளது.

பூகோள அரசியல் போட்டிபற்றி நாம் அதிகம் பேசிக்கொண்டிருக்கிறோம். தலிபான்களிடமிருந்து நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினைகள் என்ன?
தலீபான்களின் மீளெழுச்சிக்கான அடிப்படையான காரணி அதன் அரசியல் புவியியலும் புவிசார் அரசியலுமாகும். ஆனால் பூகோள அரசியலில் நிலவிய அமெரிக்க மேலாதிக்கவாதத்தை தலீபான் எதிர்கொள்வதற்கு அல்லது தப்பி பிழைப்பதற்கு மேற்குறித்த இரு காரணிகளும் வலுவாக பங்களித்ததோடு இஸ்லாமிய மதவாதம் தலீபான்களின் இருப்புக்கான அரணாக காணப்பட்டது. கடந்த 20 வருடங்களில் நிலவிய பூகோள அரசியலினை பொறுமையோடு எதிர்கொண்டதம் காத்திருந்ததும், பின்வாங்கிக்கொண்டதும், புதிய தலைமைகளை உருவாக்கிக்கொண்டதும் அவர்களின் நிலையான மீளெழுச்சிக்கு வழிவகுத்துள்ளது. இவையணைத்துக்கும் அணிசேர்ப்பது போல் ஆப்கானிஸ்தானின் அரசியல் புவியிலும், புவிசார் அரசியலுமே மூலோபாயமாக உள்ளது.

கொரனோ நெருக்கடிகள் ஜெனீவா நெருக்கடிகள் பொருளாதார நெருக்கடிகள் என சிக்கித் தவிக்கும் இலங்கை ஆட்சி குறித்து என்ன புரிதல் உள்ளது?
அனைத்து நெருக்கடிகளையும் எதிர்கொள்வதற்குரிய எண்ணத்தை இலங்கை ஆட்சியாளர்கள் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் வெற்றி கொள்ள முடியாமல் இருப்பது கொரோனா நெருக்கடி மாத்திரமே ஆகும். ஜெனீவாவை கையாள்வதற்கு அமெரிக்காவையும் இந்தியாவையும் கையாள அதற்கான வழிவரைபடங்களை வரைய தொடர்ச்சியாக முயற்சித்து கொண்டுள்ளனர். அவ்வாறே பொருளாதார நெருக்கடியை சரிசெய்ய சீனாவுடன் மாத்திரமின்றி மேற்குலகுடனும் நிதி பெறுவதற்கான முனைப்புக்களை உருவாக்கி வருகின்றது. இலங்கை அமைச்சரவை மாற்றத்திற்கு பின்னால் மறைந்திருக்கும் முக்கியமான அம்சம் இலங்கையின் வெளிவிவகாரத்தை தாராளவாத முகத்தினால் எதிர்கொள்வதற்கான உபாயமும் ஒன்றாக அமைந்திருக்கிறது. அதேநேரம் குவாட் நாடுகளோடும் ஐரோப்பிய நாடுகளோடும் இலங்கை நெருக்கமடைந்து விடும் என்பதற்காகவே சீனா தொடர்ச்சியாக நன்கொடைகள், சலுகைகள் மற்றும் முதலீடுகளை அதிகரித்து வருகின்றது. இது இலங்கை ஆட்சியாளருக்கு பலமான வாய்ப்புக்களை ஏற்படுத்த உதவுகிறது. எனவே பொருளாதார நெருக்கடி ஜெனிவா நெருக்கடி என்பவற்றை விட கொரோனா பெருந்தொற்றே இலங்கை ஆட்சியாளர்களால் எதிர்கொள்ள முடியாத நெருக்கடியாக காணப்படுகிறது. ஏனையவற்றிலிருந்து இலங்கை மீண்டுவிடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இலங்கை பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் என இந்தியாவை சீனா சுற்றிவளைகிறதே. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தோற்றுப் போய்விட்டதா?
சீனா ஏற்கனவே முத்துமாலை தொடர் என்கின்ற உபாயத்தின் மூலம் இந்தியாவை கடல்ரீதியாகவும் தரைரீதியாகவும் சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தது. குறிப்பாக திபெத்திலிருந்து காஸ்மீரின் எல்லையோரமாக பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்திலிருந்து மாலைதீவு, அம்பாந்தோட்டை, சிட்டகொங், கிரேட் கொக்கோஸ் தீவுகள், சிச்சுவே போன்ற துறைமுகங்களினூடாக மலாக்கா நீரிணை வழி சீனாவின் தாய்நிலத்துக்கு அடைவதற்கான பாதை இந்தியாவை தரையாலும் கடலாலும் சுற்றி வளைக்கும் உபாயத்தை கொண்டுள்ள சீனாவுக்கு தற்போது கிடைத்துள்ள ஆப்கானிஸ்தான் மேலுமோர் சுற்றி வளைப்பின் எல்லையோர வாய்ப்பாக மாறி இருக்கிறது. இந்தியாவின் நிலப்பரப்பை நோக்கிய சீனாவின் நெருக்குவாரம் அதிகரித்து கொண்டு செல்கின்றது. இதற்கு பின்னால் தென்னாசிய பொறுத்து இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையின் பலவீனம் முக்கிய காரணமாகும். சுதந்திர இந்தியா வகுத்துக்கொண்ட பிராந்திய கொள்கைகள் அனைத்துமே தோல்வி முகத்தையே எதிர்கொள்ள வைத்துள்ளது. பிராந்திய நாடுகள் மீதான ஆக்கிரமிப்பு கொள்கையும் அமெரிக்க உட்பட மேற்குடனான முகாந்திரமற்ற ஒத்துழைப்பும் இந்தியாவின் பிராந்தியரீதியிலான உறவை பலவீனப்படுத்த காரணமாகி உள்ளது. சமகாலத்தில் கூட இந்தியா தனது போர்க்கப்பல் நான்கினை தென்சீனக்கடலுக்கு அனுப்பி உள்ளது. தனது எல்லைகளையும் எல்லை நாடுகளையும் சீனா அரவணைத்துக்கொண்டு செல்ல இந்தியா அமெரிக்க ஐரோப்பிய நலன்களுக்காக தென்சீனக்கடலை நோக்கி நகருகின்றது.

தலிபான்களின் எழுச்சி இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு புத்துயிர் அளிக்கும் எனக் கருதுகிறீர்களா?
ஜபியுல்லா முஹாஜித் எனும் தலிபான்களின் பேச்சாளர் செய்தியாளர் சந்திப்பில் 17.08.2021 அன்று குறிப்பிடும் போது தெரிவித்த விடயங்கள் அவர்கள் கடந்த காலத்தை விட மாற்றங்களை உள்வாங்கியுள்ளார்கள் என்பதைக் காட்டுவதாக உள்ளது. ஆனாலும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை நோக்கிய நிலையிலேயே அவர்களது சட்டங்களும் வரைபுகளும் அமையவுள்ளதாக ஜபியுல்லா முஹாஜித் தெரிவிக்கின்றார். அவர் மேலும் குறிப்பிடும் போது பெண் மருத்துவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு உரிமை வழங்கப்படும் என்றும் ஊடகங்கள் சாதரணமாக செயல்பட அனுமதிக்கப்படுவர் என்றும் அவர்கள் பாரபட்சமின்றி செயல்படுவதுடன் இஸ்லாமியக் கொள்கைகள் மற்றும் தேசிய மதிப்பினை மீறவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். அது மட்டுமன்றி பிந்திய சில செய்திகள் தலிபான்களது பழைய பாணியிலான தண்டனைகளும் நடவடிக்கைகளும் நிகழ்வதாக தெரியவருகிறது. அவற்றை உறுதிப்படுத்துவது கடினமாக உள்ளது என்பதும் கவனிக்கப்பட வேண்டும். ஆனால் தலிபான்கள் கூறுவது போல் ஆப்கானிஸ்தான் இனி மோதல் போர்களமல்ல. நாங்கள் அமைதியாக வாழவிரும்புகிறோம் என்பது எந்தளவுக்கு யதார்தமாகும்.

(நன்றி: உரிமை மின்னிதழ்)