அரசியல் கட்டுரைகள்

நெருக்கமடையும் அமெரிக்க-இலங்கை உறவும் நெருக்கடிக்குள்ளாகும் ஈழத்தமிழர் அரசியலும்

இலங்கை-அமெரிக்க உறவு ஆரோக்கியமாக மீளமைக்கப்படுகின்ற சூழலை சமகாலத்தில் அவதானிக்க முடிகிறது. அதில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்ளிற்ஸ் (Alaina Theplitz) பங்கு தனித்துவமானதாகும். அவருடைய காலப்பகுதியில் இலங்கை-சீனா உறவை திசைதிருப்புவதில் அதிக முனைப்புக்களை எடுத்துள்ளதோடு இலங்கை பாரிய வர்த்தக மற்றும் சந்தை ஆற்றல் கொண்ட நாடென்பதை விளங்கிக்கொண்டிருப்பதுடன், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப்படை வெளியேறியதன் பிற்பாடு குவாட் நாடுகளின் மூலோபய நிலமாக இலங்கையை கருதுகின்ற அவரது நிலைப்பாடு அண்மைய உரைகளில் வெளிப்படுத்தப்படுகிறது. இக்கட்டுரையும் அமெரிக்க-இலங்கை நட்புறவு வலுவடைவதற்கான யதார்த்தங்களை தேடுவதாக அமையவுள்ளது.

முதலாவது, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா அண்மையில் ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியொன்றில் தெரிவித்த கருத்தில் முதன்மையானது துறைமுக நகர முதலீடுகளில் இலங்கை அரசாங்கம் அதிகளவு இலாபமீட்ட விரும்புவதை தான் அங்கீகரிப்பதாக குறிப்பிட்டார். அதற்கான கரிசனை சர்வதேச தரத்தை முதன்மைப்படுத்தியும் சட்ட அமுலாக்கம் மற்றும் ஒழுங்கு விதிகள் இல்லாத சூழலில் பணமோசடி, ஊழல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகள் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

இரண்டாவது, இலங்கை மிகப்பெரிய வணிக மற்றும் பொருளாதார ஆற்றலை கொண்ட ஓரிடத்தில் துறைமுகங்களை இயக்கி கொள்வதில் தேர்ச்சி உள்ள நாடாக காணப்படுகிறது என்று தெரிவித்தார். மேலும், அமெரிக்கா இலங்கைக்கு நீண்ட நிலையான பொருளாதார வளர்ச்சி மேம்பாட்டுக்கு ஒத்தழைப்பு வழங்குவதோடு அமெரிக்கா-இலங்கை நட்புறவு தொடர்ச்சியான இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் நாடென்றும் குறிப்பிட்டார்.

மூன்றாவது, இலங்கை அரசாங்கம் முதலீடுசார் கொள்கைகளை மீழ்மதிப்பீடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அரசாங்கத்திற்கு அப்பால் அரச தலைவர்கள், தொழிற்துறையினர் ஒரு நிலையான மூலோபாயக் கொள்கையை செயற்கடுத்த வேண்டுமெனவும் இலங்கையின் எதிர்கால அரசியல், பொருளாதார நிலையை பேணுவது பற்றி ஒருவித பார்வையை வெளிப்படுத்த வேண்டுமென குறிப்பிட்டதோடு, இலங்கை அரசாங்கம் பிற முதலீட்டாளர்களை உருவாக்கக்கூடிய ஆரோக்கியமான அடித்தளத்தை உறுதி செய்யவேண்டுமெனவும் அப் பேட்டியில் வலியுறுத்தினார்.

நான்காவது, குவாட் நாடுகளின் உறவின் மூலம் இலங்கையில் அமெரிக்கா எதிர்பார்க்கும் ஜனநாயகம், மனித உரிமைகள், அடிப்படை சுதந்திரம் ஆகிய பெறுமானங்களை பகிர்ந்து கொள்வதுடன் இருநாடுகளுக்குமான இரு தரப்பு உறவு அத்தகைய காரணிகளுக்கூடாக பணியாற்றுவது இலகுவானதென தான் கருதுவதாக அவர் குறிப்பிட்டார். இலங்கை ஒரு ஜனநாயகம் சார்ந்த கடல் வர்த்தக நாடு எனவே மேற்குறித்த இலக்குகளை ஊக்குவிப்பதன் மூலம் இருநாடுகளும் ஒன்றாக பணியாற்ற முடியுமென நம்புகிறேன் என அமெரிக்க தூதர் அலைனா தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி அமெரிக்காவின் உதவிகளை இலங்கை திருப்பி செலுத்த வேண்டியதில்லை எனவும் அமெரிக்கா உண்மையில் இலங்கைக்கு கடன் கொடுக்கவில்லை எனவும் இலங்கையர்கள் தங்களுக்குள் தாங்கள் உதவுவதற்காகவும் பலதுறைகளில் ஆற்றலை உருவாக்குவதற்காகவும் இலங்கைக்கு தேவைப்படும் சந்தர்ப்பத்தில் அமெரிக்கா உதவுகிறது எனவும் கடந்த எழுபது ஆண்டுகளில் அமெரிக்கா அத்தகைய பணியையே ஆற்றியுள்ளது எனவும் தெரிவித்தார்.

ஐந்தாவது, இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தி கொள்ள சர்வதேச நாணய நிதியத்தின் வளங்களை இலங்கை அரசாங்கம் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென அமெரிக்க தூதுவர் அலைனா தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதாரம் ஆரோக்கியமான நிலையில் இல்லை என்பதை சுட்டிக்காட்டிய அமெரிக்க தூதுவர் சர்வதேச நாணய நிதியத்தின் வளங்களை பயன்படுத்தவதே இதற்கான சரியான தீர்வாக தான் நம்புவதாக ஊடகங்களுக்கு தெரிவித்த போது குறிப்பிட்டுள்ளார்.

ஆறாவது, மேற்குறித்த உரையாடலின் பிரகாரம் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கை அரசாங்கம் நாட்டின் வெளிநாட்டு கையிருப்பை பலப்படுத்தம் விதத்தில் 780மில்லியின் அமெரிக்க டொலரினை உதவியாக பெற்றுள்ளது. அதேநேரம் சீனா அபிவிருத்தி வங்கியிடமிருந்து 300 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்க இருப்பதாகவும் நிதியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

எனவே இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார நெருக்கடிகளை தீர்த்துக்கொள்ளும் நோக்கில் அமெரிக்கா இலங்கையுடன் நெருக்கமான உறவை அதிகரித்துவருகிறது. இதன் வாயிலாக அமெரிக்கா இலங்கையில் உறவில் புதிய திருப்பங்களை அலைனா ஏற்படுத்த ஆரம்பித்துள்ளார். அமெரிக்கா இலங்கை அரசியல் பரப்பின் மூலோபாய உறவுகளை கட்டியெழுப்பும் உத்திகளையும் உருவாக்கி வருகிறது. அத்தகைய மூலோபாய உறவுகள் பற்றிய எண்ணங்களை விரிவாக அவதானித்தல் அவசியமாகும்.

ஒன்று, சீனாவுடனான இலங்கையின் உறவை திசைதிருப்பும் விதத்தில் சர்வதேச நாணய நிதியத்தை அமெரிக்கா முன்னிறுத்தியுள்ளது. சீனாவின் கடன்பொறி பற்றிய வாதங்களை அரசியல்மயப்படுத்திய அமெரிக்கா சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை முன்னிறுத்தி இலங்கையின் பொருளாதார வலுவை மேம்படுத்த முனைகிறது. இதற்கூடாக சீனா-இலங்கை உறவின் நெருக்கத்தை மட்டுப்படுத்த முடியும் என்றும் அதன்மூலம் இலங்கைக்கு வழங்கும் உதவிகளை அதிகரித்து அமெரிக்க-இலங்கை ஒத்துழைப்பை பலப்படுத்தும் உத்தியுடன் அமெரிக்கா நகர்கின்றது.

இரண்டு, குவாட் நாடுகளுடனான இலங்கையின் ஒத்துழைப்பு பொருளாதார திட்டமிடல்களூடாக அரவணைக்கவும், பலப்படுத்தவும் சீனாவின் பட்டி மற்றும் பாதை முன்முயற்சியை முறியடிக்கவும் அமெரிக்காவின் நடவடிக்கைகள் முனைப்பு செலுத்துகிறது. அத்தோடு குவாட் நாடுகளுக்கிடையிலான நட்புறவு இந்து சமுத்திரத்தின் மையப்பகுதியில் இலங்கையை முன்னிறுத்துவதனூடாக அத்தகைய ஒத்துழைப்பின் வலுவை மேம்படுத்த முடியுமென்று அமெரிக்கா தனது திட்டமிடல்களை மேற்கொண்டு வருகிறது. சீனாவுடனான இலங்கையின் மூலோபாய உறவு அமெரிக்காவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் ஒத்துழைப்பு வழங்கவும், குவாட் நாடுகளுடன் பயணிக்கவும் ஒரு வாய்ப்பான சூழலை இலங்கைக்கு வழங்கி உள்ளது. இதனூடாக பொருளாதாரத்தை மட்டுமன்றி ஜெனீவா சூழலில் உள்ள அரசியலையும் இலங்கை கையாள முயலுகிறது.

மூன்று, கொழும்பு துறைமுக நிதி நகர முதலீடுகளில் இலங்கையை முதன்மைப்படுத்துவதோடு சிங்கப்பூர் துறைமுகத்துக்கு அடுத்த நிலையில் உள்ள வாய்ப்பான கொழும்பு நிதி நகரத்தை முதலீடுகளுக்கூடாக அமெரிக்கா கையாள திட்டமிடுகின்றது. கொழும்பு துறைமுக நிதி நகர முதலீட்டுக்கான உத்திகளை கொண்டு ஜேர்மனி, பிரிட்டன், அமெரிக்கா நாட்டு கம்பனிகள் அதிக கவனத்தை செலுத்தி இருப்பது முதலீட்டு வாய்ப்புகளுக்கூடாக நிதி நகரத்தை சீனாவின் பிடியிலிருந்து விலக்கி கொள்வதற்கான உத்தியாகவே தெரிகிறது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் குறிப்பிடுவது போல் இலங்கை வர்த்தக மையமாக இந்து சமுத்திரத்தின் மையத்தில் அமைந்துள்ள தீவு. உலக நாடுகளின் வர்த்தக மையமாக இனங்காணப்பட்டுள்ளது. அத்தகைய மைய நகரத்தின் கொழும்பு துறைமுக நகரம் உற்சாகமான வர்த்தக கட்டமைப்புக்களையும் சந்தை அமைப்புக்களையும் ஏற்படுத்தக்கூடியது. உலக தரப்படுத்தலில் முதலீட்டின் 99வது இடத்தில் இருக்கும் இலங்கை மேலும் முன்னகர்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதனால் முதலீட்டுக்கான போட்டிக்களமாக இலங்கைத்தீவும் கொழும்பு துறைமுக நகரமும் எதிர்காலத்தில் விளங்குவதற்கான வாய்ப்பை கொண்டுள்ளது.

நான்கு, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படை வெளியேறியதன் பிற்பாடு உலகளாவிய ரீதியில் எற்படட்டு வரும் மாற்றங்களையும் அத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்வதற்கான அணுகுமுறை ஒன்றை அமெரிக்கா விரும்புகிறது. அதனை நோக்கி இலங்கையை ஈர்ப்பதற்கு வர்த்தகம், முதலீடு மற்றும் உதவி என்ற அடிப்படையில் தீவிர நெருக்கத்தை எற்படுத்த ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவின் உலகளாவிய கொள்கை, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவின் பின்வாங்கல் மாற்றத்தை நோக்கி நகர தொடங்கி இருப்பதை அவதானிக்க முடிகின்றது. இதன் பிரதிபலிப்பாக ஜோ பிடன் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் ஆப்கானிஸ்தானுக்கானது மட்டுமன்றி ஏனைய நாடுகளை நோக்கிய இராணுவ நடவடிக்கைகளுக்கான சகாப்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதுமாகுமென குறிப்பிட்டார்.

எனவே, அமெரிக்கா-இலங்கை நட்புறவு பரஸ்பரம் புரிதலோடு பயணிப்பதற்கான களத்தை உருவாக்கியுள்ளது. இலங்கையில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் சீனாவின் நடவடிக்கைளுக்கு நிகராக கொள்ளப்படுவதற்கான எத்தனங்களை உருவாக்கி வருகிறது. ஆப்கானிஸ்தான் வீழ்ச்சிக்கு பின்னர் அமெரிக்கா அதிகம் மென்அதிகாரம் மீதான நாட்டத்தை முதன்மைப்படுத்தி வருகின்றது. இதனால் இலங்கைக்குள்ளும் கொழும்பு துறைமுகர நிதி நகரத்துள்ளும் அமெரிக்க அதிக முதலீட்டை மேற்கொள்ள திட்டமிடுகிறது. அதற்கான வாய்ப்புக்களை குவாட் நாடுகள் அதிகம் பயன்படுத்திக்கொள்வதோடு மறுபக்கத்தில் இலங்கை குவாட் நாடுகளின் அணிக்குள் ஒத்தழைப்பை ஏற்படுத்த விரும்பினாலும் அமெரிக்காவை தனித்து கையாளவே முயலுகிறது. பசில் ராஜபக்சாவும் பீரிக்ஸிம் பதவியேற்ற பிற்பாடு அமெரிக்கா இலங்கையோடு தனித்து உறவினை மேற்கொள்ள இலங்கை இந்தியாவை தனித்து கையாளுகின்ற போக்கினையும் காணக்கூடியதாக உள்ளது. எனவே இத்தகைய போக்கு ஜெனீவா விவகாரத்தில் இலங்கைக்கு எதிரான மேற்குலகு நடைமுறையையும் காலந்தாழ்த்துவதற்கான வாய்ப்பினை உருவாக்குவதோடு ஜெனீவாவில் கூட்டான தீர்மானங்களை ஏற்படுத்த முடியாத நிலையை உருவாக்கும். இலங்கை தமிழ் மக்கள் அமெரிக்காவையோ, இந்தியாவையோ அல்லது உலகத்தையோ தனது நலன்களுக்கு ஏற்ப அரசியல் செய்யாத சூழலில் அந்தந்த நாடுகளின் நலன்களே முன்னித்தப்படுவதை காணமுடிகிறது. அதில் அமெரிக்காவோ, இந்தியாவோ, பிரித்தானியாவோ விதிவிலக்கில்லை. இந்தியாவை ஒரு மூலோபாய உறவுக்குள் கையாள முயற்சிக்கும் இலங்கை அமெரிக்காவை பொருளாதார, வர்த்தக, முதலீடு மற்றும் உதவிக்கான உபாயங்களோடு அணுக ஆரம்பித்தள்ளது. இது ஈழத்தமிழரின் அரசியலை நெருக்கடிக்குள்ளாக்குவதுடன் இலங்கைக்கு தற்போது ஏற்பட்டுள்ள தடைகளை தாண்டி செல்வதற்கான காலப்பகுதியாகவும் காணப்படுகிறது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)