இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு சர்வதேச பங்களிப்புடனான வெளியகப் பொறிமுறையூடாகவே வினைத்திறனான தீர்வை பெற முடியும் என்பதே இலங்கை தமிழ்த்தரப்பின் நீண்டகால நம்பிக்கையாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. எனினும் இலங்கையின் எந்தவொரு அரசாங்கமும் சர்வதேச பங்களிப்புடனான வெளியகப்பொறிமுறையை ஏற்க தயாராக இல்லை. எனினும் ஒப்பீட்டளவில் ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கம் ஜெனிவா தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு நிலைமாறுகால நீதியை செயற்படுத்த தயாராக இருப்பதாக சர்வதேசத்துக்கு செய்தி வழங்கியது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் உள்ளக பொறிமுறையூடாகவே எதனையும் நகர்த்த முடியுமென தொடர்ச்சியாக ஜெனிவா தீர்மானங்களையும் நிராகரித்து வருகின்றனர். எனினும் இவ்அரசாங்கத்தால் தமிழ்மக்களின் நம்பிக்கையை வெல்லக்கூடிய வகையில் உள்ளக பொறிமுறையை செயற்படுத்த முடியுமா என்பது தேடலுக்;குரிய பகுதியாகும். இதனை மையப்படுத்தியே இக்கட்டுரையும் அரசாங்கத்தின் உள்ளக பொறிமுறையின் நம்பகத்தன்மையினை மதிப்பீடு செய்வதாக அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டெம்பர்-13அன்று ஆரம்பிக்கப்பட்ட 48வது ஜெனிவா கூட்டத்தொடரில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் தனது வாய்மூல அறிக்கையில் இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டியதுடன், 46வது ஜெனிவா கூட்டத்தொடரில் முன்மொழியப்பட்ட இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்துவதற்கான செயற்பாட்டிற்கு நிதியிடல் தொடர்பாகவும் குறிப்பிட்டார். இதனை நிராகரித்த இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஃ1 தீர்மானத்தின் ஊடாக நிறுவப்படக்கூடிய எந்தவொரு வெளியகப்பொறிமுறை தொடர்பான முன்மொழிவுகளையும் முழுமையாக நிராகரிப்பதாகவும், அவற்றுக்கு பதிலாக உள்ளகப்பொறிமுறையின் ஊடாக அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் சம்பந்தப்பட்ட நாட்டின் ஒத்துழைப்பின்றி ஏற்படுத்தக்கூடிய வெளியகப்பொறிமுறைகளால் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்து கொள்ள முடியாது என்பதுடன், அது அரசியல்மயப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புக்களும் காணப்படுவதாக சுட்டிக்காட்டியிருந்தார். அவ்வாறே கடந்த செப்டெம்பர்-20அன்று நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஜனாதிபதி கோட்டபாய ராஜஷஜபக்ஷா மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது, நாட்டின் உள்ளக பிரச்சினைகள் தொடர்பில் உள்நாட்டிலேயே பேசி தீர்வினை பெறவேண்டும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்தின் சகல தரப்பும் உள்ளக பொறிமுறையையே வலியுறுத்தி வருகின்றனர்.
உள்ளக பொறிமுறையை தமது தாரக மந்திரமாக கொண்டுள்ள தற்போதைய அரசாங்கமானது, நிலைத்த சமதானத்துக்கும் வினைத்திறனான தீர்வுக்கும் உரித்தான நம்பகத்தன்மையை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உறுதிப்படுத்துகிறார்களா என்பதை நுணுக்காமாக அவதானிக்க வேண்டியுள்ளது.
முதலாவது, இலங்கை ஜனாதிபதி ஐ.நா பொதுச்செயலாளருடனான உரையாடலில், தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பெரும்பாலான இளைஞர்கள் தாம் ஆட்சியை பொறுப்பேற்றதன் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பான சட்டநடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க தயங்க மாட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் இத்தகைய உத்தரவாதங்கள் போலித்தன்மையானவை என்பதை 2010ஆம் ஆண்டிலிலிருந்து அவதானிக்க முடிகிறது. தமிழ் அரசியல் கைதிகள், காணாமல் போனோர், வலிந்து காணாமலாக்கப்பட்டோர், மற்றும் போர் இறுதிக்காலப்பகுதியில் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டவர்களென பெருந்தொகையான தமிழரசியல் கைதிகள் கடந்த 12 ஆண்டுகளில் எத்தகைய பாரிய அளவிலான விடுதலையையும் பெறவில்லை. ஐ.நா சபையின் அனைத்து தீர்மானங்களையும் ஏதொவொரு வகையிவ் ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள் கையாண்டனவேயன்றி தெளிவானதொரு அரசியல் பொறிமுறையை மேற்கொள்ளவில்லை. இதன் நீட்சியாகவே ஜனாதிபதி ஐ.நா பொதுச்செயலாளர் சந்திப்பும் உரையாடல்களும் அமைய இருக்கிறது.
இரண்டாவது, காணாமல் போன நபர்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் வெகுவிரைவில் முன்னெடுப்பதாகவும், மற்றும் மரண சான்றிதழ்களை வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் துரித நடவடிக்கைகள் எடுப்பதாகவும் ஜனாதிபதி பொதுச்செயலாளரிடம் தெரிவித்தார். எனினும் இலங்கையில் காணமலாக்கப்பட்டோர் பலரும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் காணமலாக்கப்பட்டுள்ளனர். மேலும் குறித்த காலப்பகுதியில் இன்றைய அரசாங்கமே ஆட்சியிலும் இருந்தது. போரில் நேரடியாக பங்குபற்றிய பலரும் இன்றும் ஆட்சியின் பிரதானிகளாக உள்ளனர். எனவே பொறுப்புக்கூறல் என்பது இன்றைய அரசாங்கத்திடம் உயரளவில் காணப்படுகின்றது. இந்நிலையில் மரணச்சான்றிதழ் அளிப்பதாயின் அதற்கான நீதியும் வழங்கப்படுதல் அவசியமானதாகும். எனினும் அண்மையில் இடம்பெற்ற சர்வதேச காணாமல் போனோர் தினத்தில் இடம்பெற்ற இணையவழி கலந்துரையாடலொன்றில், இலங்கையில் காணமலாக்கப்பட்டோர் காணமல் போனமை எப்படி என்பது தொடர்பில் ஆராய வேண்டாம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக இலங்கையின் நீதியமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான உரையாடல்களை மேற்கொள்பவர்களிடம் எத்தகைய தீர்வை பெறமுடியுமென்பது சவாலான விடயமாகும்.
மூன்றாவது, உள்ளகப்பொறிமுறையில் சமாதானமாக பேசி இலங்கை தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண புலம்பெயர் தமிழர்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். எனினும் கடந்த மார்ச்(2021) மாதம் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் அமைப்புக்களில் பலரின் விபரங்களை தடைப்பட்டியலில் அறிவித்துள்ளனர். தடைப்பட்டியலில் அறிவிக்கப்பட்டோரை எவ்வகையில் பேச்சுக்களுக்கு ஜனாதிபதி அழைக்க முடியுமென்பது முரண்நகையான செயற்பாடாக அமைகிறது. இது புலம்பெயர்ந்த அமைப்புக்களையும் அவர்களின் இலங்கை தமிழர் விவகாரங்களின் தலையீடுகளையும் கையாள்வதற்கான உத்தியாகவே தெரிகின்றது. அதாவது இலங்கை அரசாங்கத்தின் பொருத்தமான கருத்துக்களை கொண்ட புலம்பெயர் அமைப்புக்களுடன் உரையாடுவதன் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வை தற்போதைய அரசாங்கம் விரும்புகின்ற பாணியில் தீர்ப்பதற்கான முனைப்பாகவே அமைய வாய்ப்புள்ளது.
நான்காவது, தற்போதைய அரசாங்கத்தின் உறுப்பினர்களின் செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு மாறாக நம்பிக்கையீனத்தையே அதிகரிக்கிறது. குறிப்பாக அண்மையில் அநுராதபுர சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிக்கு எதிராக நிகழ்ந்த செயற்பாடு அமைகிறது. அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் கைத்துப்பாக்கியுடன் உட்புகுந்து சிறைச்சாலைகள் முகாமைத்துவ மற்றும் சிறைக்கைதிகளின் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியுள்ளார். இச்செயல் பூதாகரமானதையடுத்து பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் தலையீட்டில் சிறைச்சாலையுடன் தொடர்புடைய இராஜாங்க அமைச்சை மாத்திரம் அவர் இராஜினாமா செய்திருந்தார். துப்பாக்கி மூலம் உயிர் அச்சுறுத்தல் விடப்பட்ட இராஜங்க அமைச்சருக்கான உயர் தண்டனை இலங்கை அரசாங்கத்தின் நீதியில் இராஜினமாவே காணப்படுகின்றது. இதனை ஐ.நா சபை வரை கொண்டு சென்று பொறுப்புகூறலாக காட்ட முயற்சிக்கும் நடவடிக்கையாகவும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
ஐந்தாவது, இலங்கை அரசாங்கம் இலங்கை இனப்பிரச்சினை தீர்வு, அரசியல அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் காணமலாக்கப்பட்டோருக்கான தீர்வுகள் தொடர்பான உரையாடல்களில் அதிகமாக ‘விரைவாக’ செயற்படுத்தப்படுமென்ற கருத்தையே குறிப்பிட்டு வருகின்றனர். ஆயுதப்போராட்டம் மௌணிக்கப்பட்டு 12 ஆண்டுகளை கடந்துள்ளது. இந்நிலையில் விரைவாக என்பதன் காலப்பகுதி மயக்க நிலையிலுள்ளது. இது சர்வதேச நாடுகளையும், அதன் நிறுவனங்களையும் கையாள்வதற்கான சொல்லாட்சியாகவே காணப்படுகின்றது. 1957ஆம் ஆண்டு முதல் தற்போது வரை காலத்தை நீடிப்பதற்கான இராஜதந்திர சொல்லாடல்களை முன்னிறுத்தி தென்னிலங்கை அரசாங்கங்கங்கள் செயற்பட்டிருந்ததனை அவதானிக்க முடிகிறது. ஆரம்பத்தில் உள்நாட்டில் முரண்பாடுடைய இருதரப்புகளுக்கு இடையில் உடன்பாடுகளை ஏற்படுத்தி முரண்பாடான தீர்வை வெளிப்படுத்தியது போன்று பிராந்திய மட்டத்திலும் தற்போது சர்வதேச மட்டத்திலும் அத்தகைய இராஜதந்திர சொல்லாடல்களை முன்வைத்து பிரச்சினைக்குரிய தீர்வை சாத்தியமற்றதாக்கி வருகின்றனர். ஜெனிவாவிலும் நியூயோர்க்கிலும் இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திர நகர்வுகளை நடைமுறைக்கு ஒவ்வாது என்பது கடந்தகால வரலாற்றின் நீட்சியாகவே விளங்குகின்றது.
எனவே, தற்போதைய அரசாங்கத்தின் உள்ளகப்பொறிமுறையின் வினைத்திறனும் இவ்வாறான மாயைகளையே அதிகம் காட்சிப்படுத்தக்கூடியதாகும். இது உள்ளகப்பொறிமுறையூடாக முழுமையாக பிரச்சினையை மூடி மறைப்பதற்கான வழிவகையையே ஏற்படுத்தும். சர்வதேசம் இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை எச்சரிக்கை தொனியின்றி சுட்டிக்காட்டும் சூழலில் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக மாயைகளை பிண்ணி உள்ளகப்பொறிமுறையை நியாயப்படுத்துகையில் சர்வதேசம் எவ்வித எச்சரிக்கைகளும் நெருக்கடிகளுமின்றி கடந்து செல்வது சர்வதேச நியாயப்பொறிமுறையின் போலித்தனங்களை வெளிப்படுத்துகின்றது. சர்வதேச சக்திகள் நியாயப்பொறிமுறைகளை அதிகம் தமது அரசியல் நலனுக்குள்ளாலேயே நோக்குகின்றன. தமது நலனுக்கு அச்சுறுத்தலான காலப்பகுதியில் நியாயப்பொறிமுறை பிரச்சாரமூடாக நெருக்கடிகளையும் தமது நலன்கள் பூர்த்தி செய்யப்படும் சூழலில் ஓர் தளர்வையும் ஏற்படுத்த முனைகின்றனர். இலங்கையும் சீனாவுடனான நெருக்கம் அதிகரிக்கையில் அமெரிக்க தலைமையிலான மேற்கு நாடுகள் சர்வதேச நிறுவனத்தினூடாக இலங்கை தமிழர் நலனை முன்னிறுத்தி நெருக்கீடுகளை முன்வைத்த போதிலும், இலங்கை அமெரிக்க தலைமையிலான மேற்கு நாடுகளின் நலனையும் அனுசரித்து போகக்கூடிய வகையிலான நகர்வுகளை முன்னெடுக்கையிலௌ நெருக்கடிகளை தளர்த்தும் நிலை உருவாகியுள்ளது.
-அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: ஈழநாடு 26.09.2021)
