அரசியல் கட்டுரைகள்

மேற்குலகின் இராணுவ அரசியல் வியூகத்துக்குள் தென்னிலங்கையின் இருப்பு!

தென்னிலங்கையின் ஆட்சியில் ஆரம்ப காலப்பகுதிகளில் அமெரிக்க தலைமையிலான மேற்கு நாடுகள் மற்றும் இந்தியாவுடனான உறவில் கடும் நெருக்கடிகள் எதிர் கொண்டது. சீனாவுடன் அதிகரித்து வந்த பொருளாதாரரீதியிலான உறவு மேற்கு நாடுகளுடனான விரிசலை அதிகரித்தது. ஆனால் சமீபத்திய காலப்பகுதியில் இலங்கை சர்வதேச பரப்பில் மேற்கையும் சீனாவையும் சமநிலைப்படுத்த முயலுகிறது. அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் மற்றும் இந்தியாவும் இலங்கை அரசாங்கத்துக்கு கொடுத்த நெருக்கடியால் அத்தகைய சமநிலையை நோக்கி இலங்கை நகர தொடங்கி உள்ளது. இதனைப்பயன்படுத்தி மேற்கும் இலங்கை மீது அதிக நெருக்கத்தை ஏற்படுத்த இராணுவம் மற்றும் பொருளாதார அடிப்படையில் செயற்பட ஆரம்பித்துள்ளது. இக்கட்டுரையும் மேற்கு நாடுகளின் தீவிர நெருக்கத்துக்கான முயற்சியையும் இலங்கையின் உத்திகளையும் தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

முதலாவது, இலங்கையின் துறைமுகங்களை நோக்கி இந்தியா, ஜப்பான், ரஷ்சியா மற்றும் பிரிட்டன் நாட்டின் கடற்படை கப்பல்கள் கொழும்பு மற்றும் திருகோணமலை நோக்கி வருகை தந்துள்ளது. இந்தியாவின் ஆறு கடற்படை கப்பல்கள் நான்கு நாட்கள் நீடிக்கும் விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். இதில் 101வது ஐ.ஓ.டி.சியின் பயிற்சியாளர்களுடன் மகர் மற்றும் ஷர்துல் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. சுஜாதா, சுதர்ஷினி, தரங்கிணி மற்றும் சி.ஜி.எஸ் விக்ரம் ஆகிய கப்பல்கள் 100வது ஐஓடிசியின் பயிற்சியாளர்களுடன் திருகோணமலைக்கு வருகை தந்துள்ளன. இந்தக் கப்பல்கள் இந்தியக் கடற்படையின் பயிற்சிப்பிரிவின் தெற்கு கடற்படைக் கட்டளை தொகுதியின் ஒரு பகுதியாகும். மேலும் வைஸ் அட்மிரல் ஏ.கே. சாவ்லா, தெற்கு கடற்படைக் கட்டளைத் தலைமைக் அதிகாரியின் பொறுப்பில் இயங்குகிறது. மொத்தம் 75 அதிகாரிகள், 153 கடேற் அதிகாரிகள், 10 என்.சி.சி கடேட்கள் மற்றும் 530 மாலுமிகள் வருகை தந்த கப்பல்களின் ஒரு பகுதியினராக காணப்படுகிறார்கள் அவர்கள் தங்கியிருக்கும் காலத்தில், இந்திய கப்பல் அதிகாரிகளுக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையே தொழில்முறைப்பயிற்சி, கலாசார மற்றும் விளையாட்டு தொடர்புகள் நிகழ திட்டமிடப்பட்டுள்ளன. இது தொடர்பில் இலங்கைக்கான இந்திய தூதரகம் குறிப்பிடும் போது, ‘இந்தியா – இலங்கை தரப்புக்கள் பாதுகாப்பு ஒத்துழைப்பின் வலுவான மற்றும் நீடித்த தூண்களில் ஒன்றாக இப்பயிற்சி அமைய உள்ளது எனவும், கடற்படை கப்பல் பயிற்சியின் நான்கு நாள் பயணமானது இருதரப்பு உறவுகளின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமையுமெனவும், முதல் முறையாக இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான இந்திய கடற்படை கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக’ தெரிவித்துள்ளது. இலங்கையில் சீனாவின் அதிகரித்து வரும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி முயற்சிகள் மற்றும் அதனுடன் பாதுகாப்பு உறவுகளை முடுக்கிவிடும் பெய்ஜிங்கின் முயற்சிகளுக்கு மத்தியில் ஆறு இந்திய கடற்படை கப்பல்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளமையானது இலங்கை-இந்தியா உறவின் அதிகரிக்கும் பிணைப்பை காணக்கூடியதாக உள்ளது. இது இலங்கையை இந்தியா இராணுவரீதியில் கையாள முனைகின்ற செய்தியையும் வெளிப்படுத்துகிறது.

இரண்டாவது, அக்டோபர்-02 அன்று ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படையின் (JMSDF) அழிப்புக் கப்பலான முரசமே மற்றும் ஹெலிகாப்டர் கேரியர் காகா ஆகியவை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. ஜே.எஸ் காகா என்பது 248மீ பிளாட் பார்ம் ஆகும். அதன் கட்டளை அதிகாரியான கேப்டன் நிஷிதா சடோஷியின் கீழ் 210பேர் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுகிறது. ஜே.எஸ்.முரசமே 200 பணியாளர்களைக் கொண்ட 151மீ நீளமுள்ள கப்பலாகும். இந்த கப்பலுக்கு கேப்டன் காஷிவாகி யுச்சிரோ தலைமை தாங்குகிறார். அவுஸ்திரேலியாவில் இருந்து கொழும்பு வந்த இரண்டு கப்பல்களும் இந்த விஜயத்தின் போது இலங்கை கடற்படையுடன் இணைந்து ‘JA-LAN EX’ என்ற கூட்டு கடற்படை பயிற்சியில் கலந்து கொண்டு ஒக்டோபர் 04ஆம் திகதி திரும்பியுள்ளனர். இதில் அவுஸ்ரேலிய ஜப்பானின் கடற்படை பயிற்சி வருகை என்பது குவாட்நாடுகளின் மற்றும் இந்தோ-பசுபிக் பிரிவுகளின் வருகையாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும். இது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் பிராந்திய சர்வதேச அரசியலினை மையப்படுத்துவதாக காணப்படுகிறது. இதற்கு மேலும் வலுக்கொடுக்கும் விதத்தில் இந்திய கடற்படையின் வருகையும் அமைந்துள்ளது. குவாட் நாடுகளின் கூட்டுப்பயிற்சி ஒன்று அராபிக்கடலில் மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ள சந்தர்ப்பத்தில் இலங்கை நோக்கிய அக்கப்பலின் விஜயம் இலங்கை மீதான கடல்சார் நெருக்கீடாகவே காணப்படுகிறது.

மூன்றாவது, இதேநேரம், ரஷ்சிய கடற்படை தனது பசிபிக் கடற்படையின் ஒரு நகர்வாக கடற்படை கப்பல்களை இலங்கை துறைமுகத்துக்கு அனுப்பியிருந்தது. மேலும் ரஷ்சியாவின் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களும் இலங்கை துறைமுகத்துக்கு அனுப்பியது. இதில் கொர்வெட் கிரேமியாஷ்சி கப்பல் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் பி-603, பி-274 ஆகியவை உள்ளடங்குகின்றன. கொழும்பு மற்றும் மாஸ்கோ வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் சுற்றுலா உறவுகளை மேம்படுத்த திட்டமிடுகிறது. ரஷ்சியாவிடமிருந்து எஸ்.யு-30 போர் விமானங்கள் மற்றும் கவசப்பிரிவை கொள்வனவு செய்ய இலங்கை திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. போர்ப்பயிற்சிகளில் பங்கேற்பதன் மூலம் இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகள் சமீபத்தில் சந்தித்து உரையாடியுள்ளனர். இதுமட்டுமன்றி இலங்கைக்கு ரஷ்சியா கடற்படை கப்பல்கள் வருகை தருவதற்கு சில நாட்களுக்கு முன்பு ரஷ்சிய கடற்படை கப்பல்கள் சீனக்கப்பல்களுடன் இணைந்து ஜப்பானை கடக்கும் சுகாரு நீரிணை வழியாக செல்கையில் ஜப்பானுக்கு எச்சரிக்கை மணியை ஒலிக்க செய்திருந்தன. இது இலங்கை தொடர்பில் இந்தோ-பசுபிக் நாடுகளின் அணுகுமுறை தொடர்பில் கொண்டிருந்த ரஷ்சியாவின் அணுகுமுறையை வெளிப்படுத்துகின்றன. இது உலகளாவிய அரசியல் போக்கில் காணப்படும் முரண்பாட்டையும் இலங்கை அதில் பெறும் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துவதோடு மேற்கு நாடுகள் இலங்கையோடு மேற்கொள்கின்ற அணுகுமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை ரஷ்சியாவின் நகர்வுகள் காட்டுகின்றது.

நான்காவது, பிரிட்டன் அரச கடற்படையில் பணிபுரியும் ஹெர் மெஜஸ்டிஸ் ஷிப் (எச்.எம்.எஸ்) ‘கென்ட்-23’ வகை போர்க்கப்பல் எரிபொருள் நிரப்புவதற்காக அக்டோபர்-23(2021)அன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. எச்.எம்.எஸ் ‘கென்ட்-23’ என்பது 219 பணியாளர்களைக் கொண்ட 133 மீட்டர் நீளமுள்ள போர்க்கப்பல் ஆகும். வருகை தந்த போர்க்கப்பல், இலங்கை கடற்படையுடன் கொழும்பில் இருந்து பாசேஜ் பயிற்சியில் (PASSEX) ஈடுபட்டு, அக்டோபர்-24(2021)அன்று தீவை விட்டு வெளியேறியது. கொழும்பு வந்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்பு அளித்தனர். கொழும்பில் உள்ள அவரது துறைமுக அழைப்பைத் தொடர்ந்து, அதன் கட்டளை அதிகாரி, கமாண்டர் மேத்யூ சைக்ஸ், அக்டோபர்-23அன்று மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் கடற்படையின் பிரதிப் பிரதானி மற்றும் மேற்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் உபுல் டி சில்வாவைச் சந்தித்தார். இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவுச்சின்னங்கள் பரிமாறிக்கொள்வதன் மூலம் அவர்களது சுமூக சந்திப்பு நிறைவுற்றது. இது அண்மையில் ஆக்காஸ் உடன்படிக்கையின் முக்கிய நாடான பிரிட்டனின் அணுகுமுறையாகவே தெரிகின்றது. இந்தொ-பசுபிக்கின் பிரதான நாடாக இலங்கையை நோக்கி நகர்வதற்கான அணுகுமுறையாக இருப்பதோடு மேற்கு நாடுகள் இலங்கையை கடல்ரீதியாக பாதுகாப்புரீதியாக அணுகுவதனால் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. பிரித்தானியாவை இந்தோ-பசுபிக் அணுகுமுறைக்குள் இணைத்துள்ள ஆக்காஸ் உடன்படிக்கை இலங்கையும் தீவிரமாக மேற்கின் அணுசரனைக்குள் உள்ளடக்குவதோடு, இந்தோ-பசுபிக் அரசியலில் இலங்கை முக்கியமானது என்பதனையும் தெளிவுபடுத்துகிறது.

ஐந்தாவது, தென்னிலங்கை மேற்கு நாடுகளை ஈர்த்துக்கொள்வதன் மூலம் மேற்கு நாடுகளால் ஏற்படும் நெருக்கீடுகளை தீர்த்துக்கொள்ள முயற்சிக்கிறது. அதேவேளை இந்தியாவுடன் கலாசாரரீதியிலான பிணைப்புடன் பொருளாதார ரீதியாக ஒன்றிணைந்து பயணிக்கும் திட்டங்களை நகர்த்தி இந்தியாவால் ஏற்படும் நெருக்கீடுகளை சீர்செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியின் இலங்கை விஜயமும் அதனையே உணர்த்தி நிற்கின்றது. அதானி குழுமம் கொழும்பு துறைமுக மேற்கு கொள்கலன் முனையத்தின் 51சதவீத பங்குகளை பராமரிப்பதற்கான 35வருட குத்தகை ஒப்பந்தம் மேற்கொண்ட நிலையில் கௌதம் அதானியின் இலங்கைக்கான விஜயம் பொருளாதாரத்தை நோக்கமாக கொண்டது என்பது புரிந்து கொள்ளக்கூடியதாக காணப்படுகிறது. அதானி இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளார். மேலும் இலங்கைக்கு வருகை தந்திருந்த அதானி மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். மன்னாரில் பெற்றோலியம் அடையாளம் காணப்பட்ட நிலையில் இவரது விஜயம் முக்கியம் பெறுகிறது.

எனவே, தென்னிலங்கை வடக்கு-கிழக்கு தமிழர் தொடர்பான அரசியலை கையாள எத்தனிக்கும் போது இந்தியாவும் மேற்கு நாடுகளும் இலங்கையை தமது நலனுக்கு ஏற்ற வகையில் ஈர்த்துக்கொள்ளவும் அதனூடாக பிராந்தியரீதியலான அரசியலையும் சீனாவிற்கு எதிரான அரசியலையும் முன்னகர்த்துவதில் கவனம் செலுத்துகிறது. தென்னிலங்கை ஈழத்தமிழரின் அரசியலை முடிவுக்கு கொண்டு வந்த பொருளாதார மற்றும் கலாசார ரீதியினால் இந்தியாவையும் மேற்கையும் நகர்த்த திட்டமிடுகின்ற போது மேற்கும் இந்தியர்வும் புவிசார் அரசியலையும் பிராந்திய அரசியலையும் கடலியில்சார் அரசியலையும் முன்னகர்த்தி வெற்றிகரமான அரசியல் நலன்களை அடைய முயலுகின்றனர். ஏறக்குறைய இலங்கைக்கும் இந்தியா உட்பட மேற்குக்கும் இடையில் அரசியல் பொருளாதார இராணுவ இழுபறி ஒன்று காணப்படுகிறது. இதனுடைய நீட்ச்சியே போர்க்கப்பல்கள் நடமாட்டமும் அதானி குழுமத்தின் வருகையும் காணப்படுகிறது. இலங்கை பிரச்சினைகளை தீர்க்க முடியும் எல்லா சந்தர்ப்பத்திலும் இந்தியாவும் மேற்கும் ஒரு முகமாகவும், ரஸ்சியவும் சீனாவும் இன்னொரு முகமாகவும் மேலுமொரு அரசியல் களத்துக்கான வாய்ப்பை திறந்துள்ளன. இதொரு தொடர்ச்சியான அணுகுமுறையாக தென்னிலங்கை அரசியல் தரப்புக்கு ஏற்பட உள்ளது. ஆனால், இதில் ஈழத்தமிழரின் அரசியல் எந்த மாற்றமுமின்றி இலங்கையாலும், பிராந்திய சர்வதேச நாடுகளாலும் கையாளப்படும் ஒரு தேசிய இனப்பிரச்சினையாகவே காணப்படுகிறது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)