உலகளாவிய அரசியலில் காலநிலை தொடர்பான உரையாடல் அரசியல் பெறுமானம் உடையதொன்றாக மாறி வருகிறது. கடந்த பல தசாப்தங்களாக காலநிலை நெருக்கடி தொடர்பில் உலக வல்லரசுகளும் பிராந்திய நாடுகளும் உரையாடி வருகிறது. அதனடிப்படையில் மிகப்பிந்திய COP-26 என அழைக்கப்படும் பருவநிலை மாற்றங்களை கையாளுகின்ற கிளாஸ்கோ மாநாட்டில் 12 இற்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் ஒன்றுகூடி சில தீர்மானங்களை முன்மொழிந்துள்ளனர். இம்மாநாட்டின் முக்கியத்துவத்தையும் விளைவுகளையும் அதன் அரசியல் பெறுமானங்களையும் தேடுவதாக இக்கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதலாவது, ஸ்கொட்லாந்தின் தலைநகரான கிளாஸ்கோவில் நடைபெற்ற மாநாட்டில் காலநிலை மாற்ற பாதகத்தை தவிர்த்தல், காபன் வெளியேற்றத்தை குறைத்தல் உள்ளிட்ட கருப்பொருட்களை உள்ளடக்கி உலக தலைவர்களின் உரையாடல் நிகழ்ந்திருந்தது. இம்மாநாட்டில் கொப்பன்கேகன் மாநாடு, பாரிஸ் மாநாடு போன்றவற்றின் தொடர்ச்சியாக கருதப்படுகின்றது. ஆனால் இத்தகைய தொடர்ச்சிக்குள் அரசியல் பொறிமுறையும் அதற்கான அணுகுமுறைகளும் காணப்படுகின்றன. குறிப்பாக பாரிஸ் மாநாட்டிலிருந்து அமெரிக்கா வெளியேறியது போன்று கொப்பன்கேகன் மாநாட்டில் சீனாவும், ரஷ்யாவும், இந்தியாவும் தனித்துவமான நிலையை எடுத்திருந்தன. மனிதனுக்கும் இயற்கைக்குமான உறவு பலவீனமடைவதால் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தின் தீவிரம் உலக நாடுகளை ஆபத்தான நெருக்கடிக்குள் கொண்டு செல்கின்றது. இத்தகைய நெருக்கடியானது, புவி வெப்பமடைவதனால் ஏற்படுகின்றதென்ற அடிப்படையில் முதன்மைப்படுத்தப்படுகிறது. இதன்பிரகாரமே எழுந்திருக்கும் பொருளாதார நெருக்கடிகளும் அழிவுகளும் மீள முடியாத நிலைக்கு நாடுகளை கொண்டு செல்கிறது. அத்தகைய நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கான உலகத்தலைவர்களின் சந்திப்பு ஒவ்வொன்றும் உலகளாவிய அரசியல் சந்திப்புக்களாக மாற்றமுறுகின்றன. அத்தகையதொரு அம்சத்தை கிளாஸ்கோ மாநாட்டிலும் அவதானிக்க முடிகிறது. ஆனால் கிளாஸ்கோ மாநாட்டில் 2030ஆம் ஆண்டுக்குள் காலநிலை மாற்றத்தை தவிர்ப்பதற்கு காபன் உமிழ்வை குறைப்பதற்கும், உலக நாடுகள் ஒப்புக்கொண்டதோடு அக்காலப்பகுதிக்குள் காடழிப்பு நடவடிக்கையை நிறுத்தி காடுகளின் அளவை அதிகரிப்பதுவும், அவற்றை பேணுவதும் இம்மாநாட்டின் உடன்பாடுகளில் எட்டப்பட்ட முக்கிய விடயமாகும். அவ்உடன்படிக்கைகளில் சீனாவும் ரஷ்யாவும் ஒப்பமிட்டிருக்கின்றன. இந்நிலையில் உலகளவில் அதிக காபனை வெளியிடும் நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தில் காணப்படுவதோடு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, ரஷ்யா என்ற வரிசையில் உலக வல்லரசுகள் முன்னிலை பெறுகின்றன. இத்தகைய சூழலிலேயே கிளாஸ்கோ மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது. இம்மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அமுல்படுத்துவதில் ஐக்கிய நாடுகளுக்கு உள்ள சவாலும் ஒன்றாகவே விளங்குகின்றது.
இரண்டாவது, கிளாஸ்கோ மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்த கருத்துக்கள் அதிக சர்ச்சையை உருவாக்கி இருந்தது. அதாவது பருவநிலை மாற்றம் உலகளாவிய ரீதியில் பிரம்மாண்டமான பிரச்சினை என்றும் சீனா மற்றும் ரஷயா பொறுப்பற்ற முறையில் இம்மாநாட்டில் நேரடியாக கலந்து கொள்ளாது பின்வாங்கி விட்டது எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது மட்டுமன்றி காபன் வெளியேற்றத்தை அதிகம் பிரதிபலிக்கும் சீனா மற்றும் ரஷ்யா நேரடியாக கலந்து கொள்ளாதது தவறு என்றும் சுட்டிக்காட்டினார். ஜோ பைடனின் இத்தகைய கருத்து பாரிஸ் மாநாட்டில் அமெரிக்காவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட அம்சம் போன்றே தெரிகின்றது. அதாவது காலநிலை மாற்றம் பற்றிய மாநாடுகள் நாடுகளின் அரசியலாகவும் உற்பத்தி மற்றும் வர்த்தக பொறிமுறையாகவும் நெருக்கடிக்கு தள்ளப்படுகின்றன. அதனையே கிளாஸ்கோ மாநாட்டில் காண முடிகிறது. சீனாவும் ரஷ்யாவும் இம்மாநாட்டில் நேரடியாக கலந்து கொள்ளமுடியாமைக்கு கொவிட் தொற்று காரணமாக காணொளி மூலம் அந்நாடுகளின் பங்களிப்பு மேற்கொள்ளப்பட்டது என்பதனையும் குறிப்பிடப்படுதல் அவசியமாகும்.
மூன்றாவது, இம்மாநாட்டில் ரஷ்யாவும் சீனாவும் நேரடியாக கலந்து கொள்ள முடியாமைக்கு கொவிட் பெருந்தொற்று மட்டுமன்றி வேறுபல காரணிகளும் நிலவலாம் என்று கூறப்படுகிறது. அதற்கான அடிப்படை அம்மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானமும் அமெரிக்க ஜனாதிபதியின் குற்றச்சாட்டும் ஆதாரமாக விளங்குகின்றன. குறிப்பாக சீனா மற்றும் ரஷ்யா அண்மைக்காலத்தில் அமெரிக்காவோடு பாரிய முரண்பாடுகளை கொண்டுள்ளன. சீனாவுக்கு தாய்வானை பொறுத்தும், தென்சீனக்கடலை பொறுத்தும், ெஹாங்கொங்கின் ஜனநாயக போராட்டங்களைப் பொறுத்தும் அதிக முரண்பாடு காணப்படுகிறது. தாய்வான் இராணுவத்தை சீனாவுடனான போருக்கு தயார் செய்வதிலும், பயிற்சி வழங்குவதிலும் அமெரிக்கா கரிசனை கொள்வதுடன் அமெரிக்கா ஜனாதிபதி வெளிப்படையாக தாய்வானை ஆதரிக்கும் உரையாடல்களை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றார். இதனால் சீனா அமெரிக்காவிற்கான அங்கீகாரத்தை வழங்குவதுடன் அமெரிக்காவுடன் இணைந்து பயணிப்பதில் முரண்பட்ட கருத்துநிலையை கொண்டுள்ளது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்குமான வர்த்தகப்போர் என்பது தீர்க்க முடியாத எல்லைக்குள் நகர்ந்திருப்பதும் அமெரிக்காவின் குற்றச்சாட்டு தொடர்ச்சியாக சீனா மீது நிகழ்வதும் சீனா இந்த விடயத்தில் விலகியிருக்க முயலுகிறது. ஆனாலும் ஐக்கிய நாடுகள் சபையின் நிகழ்ச்சியின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட மாநாட்டில் காணொளியூடாக கலந்து கொண்டமை என்பது சீனாவின் நடவடிக்கையை வெளிப்படுத்துகிறது. இவற்றை விட சீனா தொடர்ச்சியாக அணுவாயுத பரிசோதனையை மேற்கொண்டு வருவதாகவும் ஹைப்பர்சொனிக் பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாகவம் அமெரிக்க புலனாய்வு குறிப்பிட்டுள்ளது. இது அமெரிக்க – சீனா முரண்பாட்டில் இன்னோர் முக்கிய குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகிறது. எனவே தான் அமெரிக்க-,சீன முரண்பாடு இருதரப்பாலும் உலகளாவிய அரசியலில் ஓர் அங்கமாக காணப்படுகிறது. இதுவே காலநிலை தொடர்பான முடிவுகளில் சீனா-அமெரிக்க இழுபறிகளுக்கு பின்னால் உள்ள அடிப்படைகளாகும். சீன அணுவாயுதம் தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு ஒருபக்கமாக அமைய மறுபக்கத்தில் அமெரிக்கா பிரிட்டன் மற்றும் அவுஸ்ரேலியா கூட்டில் அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு சீனாவுக்கும் அமெரிக்காவிற்குமிடையிலான முரண்பாடு பரஸ்பரம் காலநிலை மாற்றத்தை அரசியல் வடிவமாக்கி வருகிறது. இதனால் காலநிலை மாற்றத்திற்கான உத்திகள் அனைத்தும் அரசியலாகவே பரிணாமம் பெறுகின்றது. இதுவே சீன-அமெரிக்க இழுபறிக்கான அடிப்படையும் இயற்கை மீதான கரிசனையும் ஆகும்.
நான்காவது, அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்குமிடையில் எற்பட்டிருக்கும் முரண்பாடு வல்லரசுப்போட்டியையும் இராணுவ ரீதியிலான உபாயங்களையும் அதிகம் கொண்டிருப்பதனால் கிளாஸ்கோ மாநாடு சீனாவை போன்று ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்குமிடையே மோதல் போக்கை உருவாக்கியுள்ளது. ஏறக்குறைய காபன் வெளியேற்றத்திலும் காலநிலை மாற்றத்தை தடுப்பதிலும் ஆயுத தளபாடங்களின் பங்கும் தொழில்நுட்பத்தின் பிரயோகமும் வல்லரசு நாடுகளினாலேயே அதிகம் இடம்பெறுவதைக் காணலாம். அண்மைக்காலத்தில் ரஷ்யா அணுவாயுதத்தை நீர்மூழ்கிக் கப்பல்களிலிருந்து ஏவப்படும் அணுவாயுத ஏவுகணைகளையும் Super Weapon என்று அழைக்கப்படும் கடல்சார்ந்த பரிசோதனைகளையும் ஹைப்பர்சொனிக் ஏவுகணைகளையும் தொடர்ச்சியாக பரிசோதித்து வருகின்றது. இவை ஏற்படுத்துகின்ற தாக்கங்கள் காலநிலை மாற்றத்தினை அதிகப்படுத்துகின்றன. அதனால், அமெரிக்கா-ரஷ்யாவிற்கு இடையிலான முரண்பாடு வலுவடைவது ஒரு பக்கம் அமைய மறுபக்கத்தில் வல்லரசுப்போட்டியில் இரு நாடுகளும் இராணுவ ரீதியிலான வளர்ச்சியை நோக்கி போராடி வருகிறது. கிழக்கு ஐரோப்பா, மத்திய ஐரோப்பா, மேற்கு ஆசியா என இரு தேசங்களுக்குமான போட்டி என்பது காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. இத்தகைய முரண்பாடே ரஷ்ய தலைமையின் நேரடி பங்கேற்பை கிளாஸ்கோ மாநாட்டில் தவிர்த்ததுடன், இதனையொரு அரசியலாக அமெரிக்கா உலக தளத்தில் முன்னகர்த்தியுள்ளது. சீனா- ரஷ்யா மீது பிடனின் குற்றச்சாட்டு ஒரு அரசியலாகவே மாறி வருகிறது.
எனவே, இயற்கை தொடர்பான கட்டமைப்புக்களை உருவாக்குவதிலும் அதற்கான உரையாடல்களை நகர்த்துவதிலும் உலக தலைவர்கள் ஒன்றிணைந்த போதும் நடைமுறையில் அவை பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை காணமுடியாதுள்ளது. உலகம் விழிப்படைய வேண்டிய பிரதான பிரச்சினையாக காணப்படுவது, காலநிலை மாற்றமாகும். இயற்கையை மீறுகின்ற அனைத்து விடயங்களையும் நிறுத்தாத வரை மனித சமுகத்தின் இருப்பு நெருக்கடிமிக்கதாகவே விளங்கும். வல்லரசுகளும் வல்லரசுகளின் அரசியல் இலாபங்களுக்காக குவிக்கப்படும் ஆயுதங்களும், அதன் பரிசோதனைகளும் அபாயமான முடிவுகளை ஏற்படுத்துவதோடு நவீன இயந்திரங்களின் உற்பத்தி பெருக்கமும் இலாபத்தை பெறுவதற்கான உற்பத்தியின் அதிகரிப்பும் இயற்கையை முற்றாக நிராகரிப்பதாக அமையும்.
-பேராசிரியர் கேரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)
