இலங்கை அரசியல் அதன் வெளியுறவுக் கொள்கையில் தங்கியிருக்கின்றது என்பது சுதந்திர காலப்பகுதியிலிருந்து நிறுவப்பட்டு வருகின்றது. அதில் இந்தியாவுடனான நட்புறவே இலங்கையின் உயிர்வாழ்வுக்கு அடிப்படையானதென காமினிக்கொரயா குறிப்பிட்டுள்ளார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சட்டநிபுணர் குழு அமெரிக்கா சென்றதும் இலங்கை வெளியுறவில் அதிக குழப்பங்களை வெளிப்படுத்தியது. அதன் பிரதிபலிப்புக்களை எதிர்கொள்வதற்கான அணுகுமுறையை தென்னிலங்கை ஆரம்பித்துள்ளது. அதன் ஒரு கட்டமாகவே பசில் ராஜபக்ஷாவின் இந்திய விஜயம் அமையவுள்ளதென்பதை அதன் நகர்வுகளின் ஆரம்பப் புள்ளியிடல்களை வைத்து இக்கட்டுரை புரிந்து கொள்ள முயலுகிறது.
22.11.2021 வாராந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகங்களுக்கான சந்திப்பில் அக்கட்சியின் பத்திரமுல்ல அலுவலகத்தில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், பசில் ராஜபச்ஷாவின் இந்திய விஜயம் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அவரது உரையாடலில் முன்வைத்த விடயங்களை முதலில் நோக்குவது அவசியமாகும்.
ஒன்று, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷா எதிர்வரும் வாரங்களில் புதுடில்லிக்கு விஜயம் செய்யத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் சுதந்திர இலங்கையின் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி சந்தித்துக் கொண்டிருக்கும் இலங்கை அத்தகைய நெருக்கடியிலிருந்து மீழ்வதற்கு இலங்கை முயல்கிறதென்று அதன் ஒரு அங்கமாக புதுடில்லி விஜயம் அமைந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். நிதி அமைச்சரின் புதுடில்லிப் பயணம் இலங்கைக்கு அதிக பயன்களையும் அது எதிர்நோக்கியிருக்கின்ற சவால்களையும் தீர்த்துக் கொள்வதாக அமையுமென்று குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது கடன் பெறுகின்ற நோக்கத்தோடு மட்டுமன்றி பரந்த அளவிலான ஒத்துழைப்பையும் ஏனைய விடயங்களான இலங்கைக்கான நேரடி முதலீடுகளை உள்ளடக்குவதோடு வர்த்தகம் மற்றும் உல்லாசப் பயணத்துறையின் நெருக்கத்தினை ஏற்படுத்தவும் இவ்விஜயத்தின் நோக்கமாக உள்ளது எனக்குறிப்பிட்டார்.
மூன்று, கொவிட்-19 தொற்றுக்குப்பின்னால் அதிக நெருக்கடியை எதிர்கொள்ளும் இலங்கை வெளிநாடுகளின் நடவடிக்கைகளினால் அதிக முரண்பாடுகளை சந்தித்து வருகின்றது. சமகாலத்தில் எதிர்கொண்டிருக்கும் அதிக சவால்களினால் இலங்கை தனிமைப்படுத்தல்களுக்கான வாய்ப்பை கொண்டுள்ளது. அதிலிருந்து விடுபடுவதற்கு வெளிநாடுகளோடு கொள்ளுகின்ற நெருக்கமான நட்புறவை பலப்படுத்துவதனால் தனிமைப்படுத்தலை தவிர்க்க முயல்கிறது. குறிப்பாக இந்தியாவுடனான விசேட நட்புறவு இலங்கைக்கு அவசியமானதெனக் குறிப்பிட்டுள்ளார்.
நான்கு, வெளிவிவகார அமைச்சர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கின்ற போது புதிய அரசியலமைப்புக்கான உருவாக்கமும் அதற்கான அணுகுமுறைகளை முதன்மைப்படுத்துவதை அவசியமானதென்றும் அதனை எதிர்கொள்ள இருக்கின்ற சவால்களை கையாள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
மேற்குறித்த வெளிவிவகார அமைச்சின் உரையாடல்களை அவதானிக்கின்ற போது பசில் ராஜபக்ஷாவின் இந்தியப் பயணம் எவ்வகை முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கின்றதென்பதை உணர்ந்துகொள்ள முடிகின்றது. அதனை இலகுவாகவும் தெளிவாகவும் காட்சிப்படுத்துவது முக்கியமானது.
முதலாவது, வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், பசில் ராஜபக்ஷாவின் புதுடில்லிப் பயணம் கடன் பெறுகின்ற நோக்கத்தை மட்டும் கொண்டதல்ல என்பதைக் குறிப்பிட்டதோடு பரந்த அளவிலான ஒத்துழைப்பை ஏற்படுத்துவதெனக் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறாயின் நிதி அமைச்சரின் புதுடில்லிப் பயணம் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வினை அடைவதற்கான நோக்கத்தை மட்டும் கொண்டதல்ல என்பது தெளிவாகின்றது. இந்தியாவும் சீனா, அமெரிக்கா, ஜரோப்பிய யூனியன் போன்று பெரும் பொருளாதார வலுவுடைய நாடு அல்ல. இந்தியாவில் பொருளாதார நெருக்கடி அதன் உள்நாட்டுக் கட்டமைப்புக்களால் உறுதியாக இருக்கின்றதேயன்றி இலங்கை போன்ற நாடுகளில் பொருளாதார ஒத்துழைப்பை பலப்படுத்தும் அளவிற்கு ஸ்திரமானதல்ல. இந்தியாவின் முதலீட்டு எல்லை வரையறைக்குட்பட்டது. ஆனால் தற்போதைய நரேந்திர மோடி குறிப்பிடுகின்ற பிராந்திய நாடுகளுக்கான வெளியுறவு முதலிடம் என்ற அடிப்படையில் பொருளாதார நலன்களையும் முதலீடுகளையும் மேற்கொள்ளக்கூடிய அளவிற்கு காணப்படவில்லை. ஆனால், இலங்கையில் சீன முதலீடு கடன் மற்றும் நன்கொடை என்பனவற்றோடு ஒப்பிடுகின்ற போது இந்தியா பலவீனமானதாகவே விளங்குகின்றது. அவ்வகை நாட்டை நோக்கி இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை கையாள முடியுமென விவாதிப்பது பொருத்தமற்றது. மாறாக இந்தியாவை அணுகி இலங்கையின் உள்நாட்டு அரசியலில் எழுந்திருக்கும் நெருக்கடியை கையாளுவதற்கான உத்தியாகவே விளங்குகிறது. அதுமட்டுமன்றி பொருளாதார ரீதியான கையாளுகையின் முலம் இலங்கையுடனான இந்திய நட்பை முரண்பாடற்ற விதத்தில் நகர்த்த முடியும் என தென்னிலங்கை ஆட்சியாளர்கள் திட்டமிடுகின்றனர்.
இரண்டாவது, வெளிவிவகார அமைச்சரின் பார்வையில் கோவிட் தொற்றுக்கு பின்னரான இலங்கை வெளிநாட்டு காரணிகளால் தனிமைப்படுத்தப்படும் நிலைக்கு உள்ளடக்கப்பட வேண்டிய சூழல் ஏற்படும் என்பதனையும் அதனை எதிர்கொள்வதற்கு வெளிநாட்டு அரசாங்கங்களோடு நெருக்கமான நட்புறவை பலப்படுத்த வேண்டுமென்றும் அது இந்தியா முக்கியமான நாடு என்பதையும் தெரியப்படுத்தியதனூடாக பசில் ராஜபக்ஷாவின் இந்திய விஜயம் பொருளாதார நோக்கத்தை விட அரசியல் நோக்கம் அதீதமானதென தெரிகிறது. இலங்கை ஆட்சியாளர்கள் நீண்ட மரபிலும், வெளியுறவின் வரலாற்றிலும், இந்தியாவை கையாள்வதற்கான உத்திகளை எப்போதும் பின்பற்றி வந்துள்ளனர். அதனையே பசில் ராஜபக்ஷாவின் விஜயத்தினூடாக பேணுவதற்கான விருப்பை கொண்டிருக்கின்றது என்பதை பீரிஸின் உரையாடல் உறுதிப்படுத்துகிறது. புவிசார் அரசியலாகவும், பூகோள அரசியலாகவும் இலங்கைக்கு இந்தியா முக்கியமானது என்பதை தென்னிலங்கை ஆட்சியாளர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். அதன் பிரதிபலிப்பு பசில் ராஜபக்ஷாவின் புதுடில்லி விஜயத்தின் நோக்கமாக உள்ளது.
மூன்றாவது, இலங்கைக்கான இந்திய தூதுவர் பசில் ராஜபக்ஷாவின் இந்திய விஜயமத்தினால் இலங்கை-இந்திய நட்புறவானது மீளமைக்கப்படுவதென்பது குறிப்பிடத்தக்க விடயமாக சுட்டிக்காட்டியுள்ளார். அதுமட்டுமன்றி இந்தியா Neighbourhood first Policy என்பதற்கமைவாக நரேந்திர மோடி அரசாங்கத்தின் வெளியுறவுக்கொள்கையின் உள்ளடக்கம் என்பதையும், அதற்கமைவான முன்முயற்சி என்பதனையும் குறிப்பிட்டதோடு இலங்கை நெருக்கமான அயல்நாட்டுக்கான உறவினை நோக்கிய வலுவான மற்றும் விருத்திக்கான அணுகுமுறை சிறந்த நட்புறவின் அடிப்படையென குறிப்பிட்டுள்ளார். இத்தகைய எண்ணங்கள் மட்டுமன்றி இலங்கைக்கான இந்திய தூதுவரதும் இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொறகொடவினது முன்முயற்சியின் அடிப்படையிலேயே பசில் ராஜபக்ஷாவின் புதுடில்லி விஜயம் அமையவுள்ளது. எனவே தென்னிலங்கை ஆட்சியாளர்கள் இந்தியாவை நோக்கிய ஆரோக்கியமான நகர்வை முதன்மைப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளனர். இதற்கான அடிப்படையை வகுத்து மிலிந்த மொறகொடா குவாட் அமைப்பின் அங்கத்துவ நாடான இந்தியாவை திருப்திப்படுத்துவதிலும், இயைந்து இயங்குவதிலும் கரிசனை கொள்வதனை அவதானிக்க முடிகிறது.
எனவே, இந்தியாவோடு நெருக்கமான நட்புறவை உருவாக்க வேண்டிய ஈழத்தமிழர்களும் அவர்களது அரசியல் தலைமையும் அமெரிக்காவை நோக்கி பயணம் செய்ய தென்னிலங்கை ஆட்சியாளர்கள் இந்தியாவை நோக்கி தமது நட்புறவை பலப்படுத்துவதில் கரிசணை கொண்டு செயற்படுகின்றார்கள். தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரின் இந்தியா பொறுத்த அணுகுமுறையை காலத்துக்கு காலம் தவறான முன்முயற்சிகளும் அதன் தோல்விகளும் ஈழத்தமிழர்களின் அரசியல் இருப்பை அதிக நெருக்கடியை கடந்த ஒரு தசாப்தங்களில் எற்படுத்தி இருக்கிறது. அதனது தொடர்ச்சி ஆபத்தான விளைவுகளை தருவதற்கான எத்தனங்களை கொடுக்கக்கூடியதானதாக உள்ளது. இந்தியா என்பது குவாட் அமைப்பின் பிரதான நாடு அதன் பாதுகாப்பு அணுகுமுறையின் கூட்டு சக்திகளின் ஒத்துழைப்பினாலும் அணுகுமுறைகளாலும் எதிர்கொள்ளக்கூடியது. சீனாவை எதிர்கொள்வதற்கு குவாட்டில் முன்னிறுத்தப்பட்டுள்ள இந்தியா பிராந்தியரீதியலான அரசியல் முடிவுகளை கட்டுப்படுத்தும் திறனை பிற சக்திகளோடு இணைந்து பலப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. அடுத்துவரும் தசாப்தங்களும் சீனாவின் பட்டி மற்றும் சாலை முன்முயற்சி எதிர் இந்தோ-பசுபிக் உபாயமாகவே அமைய உள்ளது. எனவே, இந்தியா பொறுத்து ஈழத்தமிழர்கள் அணுகுவதனூடாக அமெரிக்காவையும் ஏனைய மேற்கு உலகத்தையும் அணுகுவதே பொருத்தமான உபாயமாக அமையும். கடந்த கால அனுபவங்கள் அத்தகைய முடிவுகளையே ஈழத்தமிழர்களுக்கு உருவாக்கி உள்ளது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)
