இலங்கை பொருளாதார நெருக்கடியின் விளைவால் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பும் கொழும்பு கிளர்ச்சியும் கொழும்பு அரசியலில் ஆட்சி மாற்றத்துக்கு பதிலாக ஆள் மாறாட்டத்தை மேற்கொண்டு சிங்கள பௌத்த பேரினவாத ஆளும்குழம் தம்மை தற்காத்துக் கொண்டு விட்டது.
மேற்குலக ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க அவர்கள் இலங்கை ஜனாதிபதியாக பதவியேற்றதன் மூலம் இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினை முன்நகர்த்தப்பட்டு தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனை சர்வதேச அரசியலின் அடியாழத்தில் புதைக்கப்பட்டுவிட்டது.
இன்று இலங்கையின் பொருளாதாரப் பிரச்சனை மட்டுமே முன்னிறுத்தப்பட்டு பொருளாதார மேம்பாட்டுக்கான செயற்திட்டங்களையே மேற்குலகமும் அண்டை நாடுகளும் முன்னெடுக்க விரும்புகின்றன.
இந்த நிலையில் தமிழ் மக்களுடைய பிரச்சனையை முன்நிறுத்துவதற்கு தொடர் வெகுஜனப் போராட்டங்களுடன் கூடிய ஒரு புதிய அரசியல் வியூகம் வகுக்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இத்தகைய ஒரு நெருக்கடியான சூழலில் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் சுயநல விருப்புகளை விடுத்து தமிழ் தேசிய நலனை கருத்தில் கொண்டு வேகமாக செயல்பட வேண்டிய காலச்சுழல் தோன்றியிருக்கிறது.
இத்தகைய ஒரு சூழலிற்தான் இந்த வாரம் யாழ் பல்கலைக்கழக அரசியல் துறைத் தலைவர் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கன் அவர்கள் “”நாடாளுமன்ற உறுப்பினர்களை திருப்பி அழைத்தல் என்ற ஒரு முறமையின் ஊடாக மேற்குலக நாடுகளில் திருப்பி அழைக்கப்படுவது போன்று இலங்கை அரசியல் யாப்பிலும் உள்ள சில ஒழுங்குகளை பயன்படுத்தி தற்போதுள்ள தமிழ்த் தேசியம் பேசும் 13 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தமிழ் தேசியம் பேசும் கட்சிகள் திருப்பி அழைத்து அதற்கு பதிலாக தற்போது களத்தில் போராடுகின்ற காணாமல் ஆக்கப்பட்டோருடைய அன்னையர்களையும் மனைவியரையும் பாராளுமன்றத்திற்கு அனுப்புவதன் ஊடாக தமிழ் மக்களுடைய அரசியலை மீண்டும் சர்வதேச பரிமாணத்துக்கு கொண்டு செல்ல முடியும்”” என தனது ஊடக செவ்வி ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் அவர் அறிவியல் ரீதியாகவும், அரசறிவியல் ரீதியாகவும், அரசியல் சட்ட நுணுக்கங்களுக்கு ஊடாகவும் ஒரு ராஜதந்திர மூலோபாயத்தை தமிழ்த்தேசிய நிலைப்பாட்டில் நின்றுகொண்டு வெளியிட்டு இருக்கிறார். ஒரு காத்திரமான ஜனநாயக அரசியல் வியூகம் ஒன்றை அவர் சரிவர அறிவுறுத்தி இருப்பதை தமிழ் மக்கள் கருத்திற்கொள்ள தவறமாட்டார்கள்.
தமிழ் தேசியம் பேசும் தமிழ் அரசியல் கட்சிகளும் தவறக்கூடாது. அவர் குறிப்பிடும் இந்த அரசியல் செயற்பாடு இன்றைய நிலையில் மிகப் பொருத்தமானதும், முக்கியத்துவம் வாய்ந்ததும், நடைமுறையில் சாத்தியப் படுத்தக்கூடிய ஒன்றுமாகும்.
ஐக்கிய அமெரிக்க மாநிலங்களவைகளில் சட்டமன்றஉறுப்பினர் (செனட்) தேர்தல் வாக்குறுதிகளை மீறினாலோ, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறினாலோ அவர் போட்டியிட்ட தொகுதியில் அவருக்குக் கிடைத்த மொத்த வாக்குகளில் 8% வீதமானவர்கள் இவரை திருப்பி அழைப்பதற்கான மனுவில் கையெழுத்திட்டு ஒப்படைக்கும் பட்சத்தில் அதனை ஏற்றுக் கொண்டு அதற்கான சட்டபூர்வமான நடவடிக்கைகளை பயன்படுத்தி குறிப்பிட்ட அந்த நாடாளுமன்ற உறுப்பினரை பதவி நீக்கம் செய்து புதிய உறுப்பினரைத் தேர்வதற்கான நடைமுறை இடம்பெறும். இத்தகைய ஒரு அரசியல் ஏற்பாடு அமெரிக்க மாநிலங்களவைகளின் அரசியல் யாப்புக்களில் உண்டு.
இந்த அரசியல் யாப்பு நடைமுறை ஐக்கிய அமெரிக்காவின் 24 மாநிலங்களில் இன்றும் நடைமுறையில் உள்ளது.
அண்மை காலங்களில் இவ்வாறு மக்கள் பிரதிநிதிகளை திருப்பி அழைக்கப்பட்ட சம்பவங்கள் அமெரிக்க மாநில சட்டசபையில் உண்டு. இவ்வாறு மாநில கவர்ணரையும் (முதலமைச்சர்) திருப்பி அழைக்கலாம்.
இன்றைய இலங்கை அரசியல் யாப்பின் பிரகாரம் நாடாளுமன்ற உறுப்பினர்களை திருப்பி அழைத்தல் என்ற ஒரு நடைமுறை இல்லை.
ஆனாலும் திருப்பி அழைத்தல் நடைமுறைமைக்கு ஒத்ததான ஒரு மாற்று வழிச் செயற்பாட்டை அரசியல் கட்சிகளின் தலைமைகள் செய்யக்கூடிய வகைகள் இலங்கை அரசியல் யாப்பில் வழி உண்டு.
இலங்கை அரசியல் யாப்பு பெரிதும் தமிழ்மக்களுக்கு பாதகமானதுதான். ஆனாலும் அந்த யாப்பில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்துக்குள் ஓடிவிளையாடி அரசியல் கிளித்தட்டுமறிக்க முடியும்.
அந்த வழி வகைகளை பயன்படுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அன்னையர்களையும், மனைவிமார்களையும் நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்கலாம்.
தன் மூலம் இலங்கை நாடாளுமன்றத்தை கதிகலங்க வைக்க முடியும். அதேநேரத்தில் சர்வதேச கவனத்தையும் தமிழர் பக்கம் திருப்ப முடியும். அத்தகைய ஒரு செயற்பாட்டை நடைமுறைப்படுத் வேண்டியே பேராசிரியர் கனேசலிங்கன் திருப்பி அழைத்தல்முறை வழிமுறையைப் பின்பற்றி “”நாடாளுமன்றத்துக்குள் நுழைய தமிழ் அன்னையர்களுக்கு ஒரு வாய்ப்பு”” என குறிப்பிடுவதோடு நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளியே எடுக்கவும் உள்ளே அனுப்பவும் கட்சித் தலைமைகளால் முடியும் என்பதையும் கூறியுள்ளார்.
இத்தகைய முறை இன்று இலங்கையில் சாத்தியப்படுத்தக் கூடிய ஒன்றுமாகும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்தால் கட்சி தனது புதிய நாடாளுமன்ற உறுப்பினரை ஒரு குறுகியகால நேரத்துக்குள்ளேயே மாற்றி நாடாளுமன்றத்திற்கு அனுப்ப முடியும். அதற்கான அனைத்து வழிமுறைகளும் இலங்கை அரசியல் யாப்பில் உண்டு.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலக்கின்ற போது அந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தல் என்பது இலங்கை அரசியல் யாப்பில் இல்லை. எனவே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இறந்தாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ ஏற்படுகின்ற தொகுதி பிரதிநிதித்துவ இடைவெளியை நிரப்புவதற்கு கட்சி தாம் விரும்பிய புதிய ஒருவரை நியமிக்க வழிவகைகள் உண்டு.
எனவே இந்த அடிப்படையில் இன்று ஏற்பட்டிருக்கின்ற தமிழ் தேசியப் பிரச்சனையின் பின்னடைவை மாற்றி அமைப்பதற்கான ஒரு புதிய மூலோபாயம்தான் தமிழ்த் தேசியம் பேசுகின்ற 13 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தம் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்.
யார் தமிழ் தேசியத்தை நேசிக்கும் தலைவரோ அவரே முதலிற் பதவிதுறந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் அன்னையரை எம். பி. யாக்க வழிவிடுவார்.
தமிழ்த் தேசியப் பற்றுடைய ஒருவர் இதனை முதலிற் செய்தால் ஏனையோர் இதனைப் பின்பற்றி செய்ய நேரும்.
எனவே இங்கே பதவி விலகல் என்பதற்கு ஒரு தேசிய மனப்பாங்கும், தேசிய நலனும், தேசிய பற்றுறுதியும் இருக்க வேண்டும்.
அத்தகைய ஒரு மனப்பாங்கு இல்லையேல் பதவி விலகல் என்பது சாத்தியப்படாது.
இவ்வாறு இவர்கள் பதவிவிலகி வழி விடுவார்களேயானால் எதிர்காலத்தில் வரும் தேர்தலில் இவர்களுக்கு நல்ல மதிப்பும் அதிகூடிய வாக்கும் பெற்று இவர்கள் மீண்டும் தேர்தலில் வெற்றி பெறவும் முடியும். இன்று இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை உண்மையான தேசியவாதிகளாக நிரூபிப்பதற்கான ஒரு பரீட்சை களமாகவும் இதைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
தமிழ் தேசியம் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவதற்கான காரணமாக “”தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நீதியை பெற்றுத்தருவோம்““ என்ற வாக்குறுதியின் அடிப்படையிலேயே நாம் நாடாளுமன்றத்துக்கு வந்தோம். ஆனால் கடந்த 13 வருடங்களாக மேற்கொண்ட எந்த நடவடிக்கையும் வெற்றி அளிக்கவில்லை.’
‘ எனவே தாம் ஜனநாயக மரபுகளுக்கு இணங்க தமது வாக்குறுதிகளை நிறைவேற்ற இவ்வாறு பதவிவிலகுவதாக அறிவிக்கலாம். இலங்கை அரசும், ஐநா மனித உரிமை ஆணையகமும் காத்திரமான எந்த தீர்வையும் தராமையினால் தமது வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலையில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்காக புதியவர்களுக்கு தாம் வழி விடுவதான போர்ப் பிரகடனத்தை இவ்வாறு ஜனநாயக முறையில் முன்வைத்து தமது பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும்.
இத்தகைய காரணத்தை குறிப்பிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை ராஜினாமா செய்வது என்பது இலங்கைனதும், கூடவே உலகளாவிய ஜனநாயகத்தையும் கேள்விக்கு உள்ளாக்கும். இது சர்வதேசக் கவனத்தை பெரிதும் ஈழத் தமிழர் பக்கம் ஈர்க்கும்.
அத்தோடு நீதிக்காக களத்தில் தற்போது போராடிக் கொண்டிருக்கின்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய அன்னையர்களையும் மனைவிமார்களையும் நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதன் மூலம் இலங்கை அரசியலை கதிகலங்கச் செய்ய , ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்த முடியும். கடந்த 13 வருடங்களாக ஐநா மனித உரிமை ஆணையம் இலங்கை அரசுக்கு அடிப்பது போல் அடிப்பதும், தடவுவது போல் தடவுவதுமாக கால அவசரங்களை கொடுத்து தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான நீதியை வழங்காமல் கால தாமதத்தை ஏற்படுத்தி தொடர்ந்து பின் போடப்பட்டு கொண்டு செல்கின்றது.
இவ்வாறான ஒரு சர்வதேச சூழலில் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இனப்படுகொலையும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கான நீதியை விரைவுப்படுத்துவதற்கு இத்தகைய செயல்பாடுகள் காத்திரமான பங்களிப்பை செலுத்தும்.
கடந்த 13 ஆண்டுகளாக தமிழ் அரசியல் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் நாட்கணக்கில், மணிக்கணக்கில் வாதிட்டார்கள். பேச்சுப் போட்டியை நடத்தினார்கள். இனியும் அவர்களால் அவ்வாறு எதனையு கத்தியும் குழறியும் கூத்தாடியும் சாதிக்க முடியாது.
ஆனால் புதிதாக அனுப்புகின்ற காணாமல் ஆக்கப்பட்டோருடைய அன்னையர்களும் மனைவிமார்களும் நாடாளுமன்றத்துக்குள் வைக்கின்ற சிலநிமிட ஒப்பாரியும், ஓலமும், கண்ணீரும் கம்பளையுமான காட்சியும் இலங்கை நாடாளுமன்றத்தை கதிகலங்கச் செய்வதோடு மாத்திரமல்ல உள்நாட்டில் பெரும் திருப்பங்களை ஏற்படுத்தும்.
ஊடகங்கள் அமைதிகாக்க முடியாது. அதேவேளை தமிழர் அரசியலை இன்னொரு கட்ட பாய்ச்சலுக்கு முன்னோக்கித் தள்ளும்.
சம நேரத்தில் சர்வதேச அரங்கில் தமிழர் பிரச்சினை தவிர்க்கப்பட முடியாத ஒன்றாக மாற்றமடையும். ஐநா மனித உரிமைகள் ஆணையம் ஒரு கவுன்சிலிங் சென்டராக இவ்வளவு காலமும் செயற்பட்டு வந்தநிலை மாறி ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்த. நிர்ப்பந்திக்கப்படும்.
சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களோடு இலகுவாகக் கைகோர்க்க முடியாது. இலங்கை நாடாளுமன்றத்துக்குள் இந்த அன்னையர்கள் பேசவேண்டியதில்லை. அவர்களுக்கு ஆங்கிலமோ, சிங்களமோ தெரிய வேண்டியதில்லை. அவர்கள் முன்னெடுக்கின்ற ஒப்பாரியும் அழுகுரலும் இலங்கை நாடாளுமன்றத்துக்குள் ஒரு பிரளயத்தை ஏற்படுத்தும். உலகின் மனசாட்சியை திறக்க வைக்கும். அது ஐநாவின் மனக்கதவுகளையும் திறக்கச் செய்யும்.
குறிப்பாக மேற்குலக நாடுகளையும் அண்டை நாட்டையும் உலுக்கும்.
கொல்லப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அன்னையர்களினதும், மனைவிமார்களினதும் ஒப்பாரியும் கண்ணீரும் சர்வதேச நீதிக்கான பொதுமுறையை விரைவுப்படுத்தும்.
இது ஒரு போராட்ட முறை.
இவ்வளவு காலமும் அறிக்கைகளாகவும் பேச்சுக்களாகவும் உத்தரவாதங்களாகவும் சொல்லப்பட்டவைகள் அர்த்தமற்றுப் போப்பின. இனி ஒரு புதிய போராட்ட முறைமையும் புதிய நடைமுறையும் வேண்டும்.
அன்னையர்களை எதிரியால் நினைத்தபடி நடத்த முடியாது. இத்தகைய ஒரு அரசியல் வெளியை திறப்பதும் அந்த வெளியின் ஊடாக தமிழர் தமது தேசிய அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான சாத்தியங்களை உருவாக்குவதும் தற்போது தமிழ் தேசியம் பேசுகின்ற 13 நாடாளுமன்ற உறுப்பினருடைய சுயநலமற்ற மனவிருப்பிலும், முடிவிலும் தங்கி உள்ளது.
இவ்வாறு இன்றைய காலச்சூழலானது தமிழ் மக்களுக்கு தந்திருக்கின்ற இந்த ஓர் அரிய வாய்ப்பை சாதகமாக பயன்படுத்துவதே சாலச் சிறந்த ராஜதந்திரம் ஆகும் .
“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்”” என்ற சிலப்பதிகாரத்தின் அறிவுரையைக் கருத்திற் கொண்டு மேற்படி தமிழ்த் தலைவர்கள் நடக்கத் துணிவார்களா?
(தி.திபாகரன்.M.A.)
(நன்றி : தமிழ்வின்)
On 1 August 1982 T. Thirunavukarasu, the Tamil United Liberation Front (TULF) MP for Vaddukoddai, died and on 14 October 1982 the TULF nominated Kuttimani (Selvarajah Yogachandran), a leading member of the militant Tamil Eelam Liberation Organization (TELO), to be his replacement. Kuttimani was at that time in prison awaiting trial on charges related to the Neervely bank robbery. There was dispute as to whether Kuttimani was eligible to be an MP and on 24 January 1983 Kuttimani “resigned” from Parliament, never having taken oath. The TULF subsequently nominated Tiruchelvam to be Thirunavukarasu’s replacement. Tiruchelvam took his oath in on 8 March 1983.[13] Tiruchelvam and all other TULF MPs boycotted Parliament from the middle of 1983 for a number of reasons: they were under pressure from Sri Lankan Tamil militants not to stay in Parliament beyond their normal six-year term; the Sixth Amendment to the Constitution of Sri Lanka required them to swear an oath unconditionally renouncing support for a separate state; and the Black July riots in which up to 3,000 Tamils were killed by Sinhalese mobs. After three months of absence, Tiruchelvam forfeited his seat in Parliament on 22 October 1983.