இலங்கைத் தீவின் அரசியலில் 2022க்கு பின்னான காலப்பகுதியில் அமெரிக்க தலைமையிலான மேற்கு நாடுகளின் செல்வாக்கு அதிகரித்திருப்பதாக விமர்சனங்கள் காணப்படுகின்றது. குறிப்பாக அரகலய போராட்டமும் அதன் பிந்தைய காலநிலைகளும் 2024இல் ஆட்சி அமைத்த புதிய அரசாங்கமும் அமெரிக்காவின் நலன்களுக்கு உட்பட்டு இலங்கைத் தீவின் அரசியலை கையாள முனைவதாக விவாதிக்கப்படுகிறது. அதேவேளை இலங்கையில் ஆட்சியில் இருக்கும் புதிய அரசாங்கம் அடிப்படையில் இடதுசாரி கொள்கை கொண்டது என்றும் இன்னொரு பக்கமான மதிப்பீடு முன்வைக்கப்படுகிறது. அத்தகைய எண்ணங்களின் அடிப்படைகளையும் அவற்றின் போக்குகளையும் நோக்குவதே இக்கட்டுரையில் வெளிப்பாடாக அமைகிறது.
அதன் பிரகாரம் உலக ஒழுங்கு 1991ஆம் ஆண்டுக்கு பின்னர் இடது-வலது என்ற உரையாடலில் அதிகமான தனித்துவத்தை கொண்டிருப்பதில்லை. இடதுசாரிகளின் வீழ்ச்சி என்பது சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியோடு பிணைந்த ஒன்றாகவும், அமெரிக்காவின் ஒற்றைமைய இருப்பானது முதலாளித்துவத்தின் எழுச்சியோடு தாராண்மைவாதமாகவும் நவதாரண்மைவாதமாகவும் பரிமாணம் பெற்றிருக்கின்றது. இந்நிலையில் இடதும்-வலதும் சமரசம் காணுகின்ற ஒரு அரசியலை உலகம் தரிசிக்க தொடங்கிவிட்டது. ஏறக்குறைய கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக அத்தகைய அரசியல் வடிவம் உலக ஒழுங்கில் இடம் பிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்த சூழலில் தான் ஜே.வி.பி அதன் இன்னொரு பரிமாணமான என்.பி.பி என்பன பற்றிய விவாதங்கள் இன்னுமே இடதுசாரி கொள்கைக்கு உட்பட்டது என்று உரையாடுகின்ற மனோநிலை இலங்கைத் தீவுக்குள்ளும் அதன் வெளியிலும் காணப்படுகிறது. இலங்கைத் தீவின் அரசியல் இன அரசியலாக இனவாத அரசியலாகவே கட்டமைக்கப்பட்டது. மாறாக இது இடதாகவோ அல்லது வலதாகவோ கட்டமைக்கப்படவில்லை. அவ்வப்போது இடதுக்கும் வலதுக்கும் அங்கீகாரம் கொடுப்பதற்கான அரசியல் தலைமைகளும் கட்சிகளும் மேல் எழுந்திருக்கின்றன. அவை ஒரு முழுமையான கொள்கை நியதிகளுக்குள் இடதுசாரித்தனத்தையோ வலதுசாரித்தனத்தையோ கொண்டிருக்கவில்லை. மாறாக இனவாத எண்ணத்தையே பிரதிபலித்திருந்தனர். அதன் நீட்சியை புதிய அரசாங்கம் கொள்கிறதா என்று சந்தேகம் அதிகமாக உண்டு. அதற்கான நியாயப்பாடுகளை புதிய அரசாங்கமும் அவ்வப்போது வெளிப்படுத்த தலைப்படுகிறது. அதற்கு அப்பால் பயணிப்பதற்கு புதிய அரசாங்கம் முயலுகின்ற சந்தர்ப்பங்களில் அமெரிக்க சார்பு நிலையை அதிகம் கொள்வதாக கருதப்படுகிறது. அதனை விரிவாக நோக்குவது அவசியமாகிறது.
முதலாவது, அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் இலங்கை அரசாங்கத்தின் அணுகுமுறைகள் பொறுத்து நற்சான்றிதழை வழங்கும் தூதுவராக காணப்படுகின்றனர். குறிப்பாக கண்டியில் அமைக்கப்பட்டுள்ள ‘அமெரிக்கன் கோனார்’ (American Corner) இருபது வருட பூர்த்தியை கொண்டாடுகின்ற நிகழ்வில் கலந்து கொண்ட இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங், ‘இலங்கை ஜனநாயக ஆட்சியை முன்னெடுத்து செல்வதற்கும், மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்து ஊக்குவிப்பதாக’ குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசிய அலுவலர்கள் தொடர்பு அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு குறிப்பிடுகின்ற போது, ‘தற்போதைய அரசாங்கம் அரசாங்கத்தில் ஊழல் ஒழிப்பு வேலைத் திட்டத்திற்கு எத்தகைய சந்தர்ப்பத்திலும் ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயாராவதாக தயாராக இருப்பதாகவும், நாட்டுக்கு வெளியே கொண்டு செல்லப்பட்ட பணத்தை நாட்டுக்குள் மீட்டுக் கொண்டு வருவதற்கான முயற்சிகளுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக’ தெரிவித்துள்ளார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் இருவரின் குடும்பத்துக்கு அமெரிக்கா ஊழல் குற்றச்சாட்டில் பயணத்தடை விதித்துள்ளது.
இரண்டாவது, ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவும், ஸ்ரீலங்கன் எயார்லைன்சின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவும், அவர்களது குடும்பமும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊழலிற்கு எதிரான சர்வதேச தினம் மற்றும் சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு, உலகில் ஊழல் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கையாக இதனை அமெரிக்கா அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்சின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன பிரதம நிறைவேற்றதிகாரியாக பணியாற்றிய வேளை இலங்கை, எயர்பஸ்ஸினை அதிக விலைக்கு கொள்வனவு செய்வதை உறுதி செய்வதற்காக, இவர் இலஞ்சம் பெற்றார் என அமெரிக்கா பகிரங்கமாக அறிவித்துள்ளது. இலங்கையின் முன்னாள் ரஷ்சிய தூதுவர் உதயங்க வீரதுங்க இலங்கைக்கு மிக் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டபோது, ஊழல் நடவடிக்கையை திட்டமிட்டு முன்னெடுத்து அதனால் நன்மையடைந்தார் என்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மல்வத்து பீடாதிபதியயுடனான அமெரிக்க தூதுவரின் சந்திப்பிலும் அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கான ஒத்துழைப்பு தொடர்பில் அதிகம் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. ‘ஊழலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த அரசாங்கத்தின் போது உயர் பதவிகளை வகித்த இரண்டு இலங்கையர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தீர்மானித்ததாக’ மல்வத்தை பீடத்தின் பிரதான பீடாதிபதி முன்னிலையில் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்தார். மேலும், ‘ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் மோசடி மற்றும் ஊழலுக்கு எதிராக போராடும் வேலைத்திட்டத்திற்கு அமெரிக்கா அதிகபட்ச ஆதரவை வழங்கும்’ என்றும் அவர் கூறினார்.
மூன்றாவது, இலங்கையில் இடம் பெற்ற கடந்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பொறுப்புக்கூறலை உறுதி செய்வதையும், நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதையும் முன்னிறுத்தி பிரிட்டன் தொடர்ந்து கரிசனையுடன் செயல்படுவதாக பிரித்தானியாவின் இந்தோ-பசுபிக் விவகாரங்களுக்கான இங்கிலாந்தின் பாராளுமன்ற துணை செயலாளர் கேத்தரின் வெஸ்ட் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் உமா குமரன், இலங்கைத் தனிநபர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் சாத்தியமான தகுதிகள் குறித்து வெளியுறவு அலுவலகம் மேற்கொண்டுள்ள மதிப்பீடு குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த வெஸ்ட், “இலங்கை வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்திற்கு மனித உரிமைகள் முன்னுரிமை நாடு. உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் தேவை குறித்து நாங்கள் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்” எனத்தெரிவித்திருந்தார். மேலும், “உலகளாவிய மனித உரிமைகள் தடைகள் ஆட்சி எங்கள் வெளியுறவுக் கொள்கை கருவித்தொகுப்பில் ஒரு கருவியாகும். இருப்பினும், எதிர்காலத் தடைகள் பற்றி ஊகங்களைத் தவிர்த்து, அது அவற்றின் தாக்கத்தைக் குறைக்கும்” என்றவாறு குறிப்பிட்டுள்ளார். வளைந்து செல்லக்கூடிய பிரித்தானிய இராஜதந்திர நடவடிக்கை தொடர்பான மேலதிக தகவலுக்காக, சிரியாவில் வெற்றி பெற்றுள்ள கிளர்ச்சிப் படை பிரித்தானியாவின் பயங்கரவாத தடைப்பட்டியலில் உள்ள அமைப்பாகும். எனினும் சிரியாவில் அசாத் ஆட்சியை கவிழ்த்தமைக்கு பாராட்டு பத்திரம் வாசிப்பதோடு தடை நீக்கம் தொடர்பில் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளது. எனினும் இலங்கையில் ஈழத்தமிழர் நலன் சார்ந்து உரையாடுவது போன்று மனித உரிமை விவகாரத்தை கையாளுகின்ற போதிலும், தொடர்ச்சியாக விடுதலைப்புலிகள் மீதான தடையை பாதுகாத்தே வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய குறுகிய காலத்தில் இலங்கைத் தீவின் அரசியலில் மேற்கு நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் அணுகுமுறைகள் என்.பி.பி அரசாங்கத்தை அரவணைப்பதாகவே காணப்படுகின்றது. இலங்கையின் இனப்பிரச்சனைக்கான தீர்வு பொருத்து உரையாடல்கள் ஒருபக்கம் அமைய, மறுபக்கத்தில் இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் நெருக்கமான நட்புறவை கட்டமைக்கும் விதத்தில் சர்வதேச நாணய நிதியத்தையும், ஆசிய அபிவிருத்தி வங்கியையும் மேற்கு நாடுகள் இலங்கையுடனான ஒத்துழைப்பை பலப்படுத்த முயற்சிக்கின்றனர். அத்தகைய ஒத்துழைப்பின் பிரதிபலிப்பு அமெரிக்க-இலங்கை நட்புறவின் பலப்படுத்தலாகவே காணப்படுகிறது. சீனா, இந்தியா போன்ற நாடுகளின் பங்களிப்பை காட்டிலும் அமெரிக்கா இலங்கையுடன் நெருக்கத்தை அதிகம் முதன்மைப்படுத்தி வருகின்றது. இலங்கையினுடைய ஆட்சி அமெரிக்கா சார்பாக காணப்படுகின்றது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்ற விதத்தில் இலங்கை-அமெரிக்க நெருக்கம் நிலவுகின்றது. இலங்கையின் புதிய அரசாங்கம் தனது வெளியுறவில் பிரதான பங்காளியாக அமெரிக்காவை மாற்றிக் கொள்ளுகின்ற அணுகுமுறைகளை கொண்டிருக்காவிட்டாலும், அமெரிக்க தூதுவர்களும் அமெரிக்கா இராஜதந்திரிகளும் இலங்கை உடனான நெருக்கத்தை அதிகப்படுத்துவதற்கான நகர்வுகளை முன்வைத்து வருகின்றனர். இதுவே இலங்கை-அமெரிக்க உறவின் பிரதான பங்கெடுப்பாக காணப்படுகிறது.
இலங்கை எப்போதும் உலகளாவிய ரீதியில் நட்புக்களையும் உறவுகளையும் பலப்படுத்திக் கொள்ளுகின்ற நாடாகவே உள்ளது. தென்னிலங்கையின் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் ஒவ்வொன்றும் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, சீனா என அதன் வெளியுறவு வலுவான நாடுகளை நோக்கி வடிவமைக்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியான சார்பு நிலை இலங்கை புதிய அரசாங்கத்திடம் ஏற்பட்டுள்ளது. அதற்கான அடிப்படைகளை புதிய அரசாங்கம் கொள்வதற்கான சூழலும் வாய்ப்பும் தவிர்க்க முடியாததாக காணப்படுகின்றது. இலங்கையினுடைய வெளியுறவில் அமெரிக்கா அதனுடைய பங்கு கடந்த காலங்களை விட அதீதமானதாக நிலவுகின்றது. இதற்கான சூழலினை இன்றைய காலப்பகுதியில் அவதானிக்க முடிகின்றது. ‘ஊழல் ஒழிப்போம்’, ‘ஜனநாயகம்’, ‘மனித உரிமைகள்’ என்று அத்தகைய நியதிக்குள் நகர்த்தி விட முயலுகின்றது. இலங்கைத் தீவானது இன ரீதியான அல்லது இனவாத எண்ணங்களோடு விளங்குகின்றது. இத்தகைய சூழலை ஜனநாயகம், மனித உரிமை, ஊழலின்மை என்பவற்றினூடாக கையாளுவதன் மூலம் தீர்த்து விடலாம் எனக்கருதுகின்றது. அதனையே அதன் அடிப்படையான வெளியுறவில் அம்சமாக கொண்டிருப்பதோடு, உலக நாடுகளில் பின்பற்றப்படுகின்றன செய்முறைகளை இலங்கைக்கும் அமல்படுத்துவதற்கு முயல்கின்றது.
இலங்கையின் புதிய ஆட்சியாளர்களும் மனித உரிமையையும் ஜனநாயகத்தையும் சம உரிமை ஆனதாக கருதுகின்ற நிலை காணப்படுகிறது. இலங்கையின் நிலவும் இனப்பிரச்சனைக்குரிய அணுகுமுறைகள் எல்லாவற்றையும் மனித உரிமைகளுக்குள்ளாலும், ஜனநாயகத்துக்குள்ளாலும், ஊழல் ஒழிப்பு கூடாகவும் கண்டுகொள்வதற்கு புதிய அரசாங்கம் முயலுகின்றது. இத்தகைய நெறிமுறைகளுக்கு உட்பட்டு புதிய அரசியல் அமைப்பு அதன் வடிவங்களும் உருவாக்கப்பட இருக்கின்றது. எனவே புதிய அரசாங்கம் வரையப்போகின்ற புதிய அரசியல் யாப்பு உள்நாட்டு மரபுகளையும், நியதிகளையும், பிரச்சனைகளையும் கருத்தில் கொள்ளாது பலமான நாடுகளின் மரபுகளுக்குள்ளாலும், சிந்தனைகளுக்குள்ளாலும் கட்டியமைக்கப்படுகின்ற ஒரு துயரமான சூழலை நோக்கி நகர முயல்கின்றது.
எனவே, இலங்கைத் தீவின் புதிய ஆட்சியாளர்கள் இடதுசாரிகளாகவோ வலதுசாரிகளாகவோ அடையாளப்படுத்தி புரிந்து கொள்வது என்பதும் அடையாளப்படுத்த முயல்வது என்பதும் 21ஆம் நூற்றாண்டில் நிலவும் அரசியல் சூழலை பலவீனப்படுத்துவதாகவே தெரிகின்றது. காரணம் இடதோ அல்லது வலதோ இல்லாத ஒரு உலக ஒழுங்கில், அதற்குரிய தனித்துவம் இல்லாத ஒரு சூழலில், அது சார்ந்த முக்கியத்துவத்தை தேசிய மக்கள் சக்திக்கு வழங்குவது என்பது அதன் நியதிகள் சார்ந்த பலவீனத்தை அடையாளப்படுத்துவதாகவே அமையும். அதற்கான நியாயப்பாடுகளை அது கொண்டிருக்கின்ற வெளியுறவிலிருந்து கண்டு கொள்ள முடிகின்றது. இலங்கைத்தீவின் புதிய ஆட்சியாளர்கள் இடதுசாரிகளும் வலதுசாரிகளும் அல்ல என்பதும்; இனவாதத்திலிருந்து மீள்வதற்கு ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் ஊழல் ஒழிப்பையும் பின்பற்ற முயலுகின்ற ஒரு பலவீனமான எதார்த்தத்தை கோடிட்டு காட்ட முயலுகின்றனர் என்பதே அடிப்படையாகும்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)
