அரசியல் கட்டுரைகள்

எல்லையின்றித் தொடரும் உக்ரைன்-ரஷ்யப் போர்?

உலக அரசியலில் நாடுகளுக்கிடையிலான மாற்றங்களும் போட்டிகளும் இயல்பானதாகவே வடிவமைக்கப்பட்டு வருகிறது. மேற்கு, கிழக்கு என்ற இருப்பின் அரசியல் பரிமாணம் தவிர்க்க முடியாது நகர்ந்து வருகிறது. அதற்கான இராணுவ நிகழ்ச்சியாக ரஷ்ய-உக்ரைன் போர் காணப்படுகிறது. ரஷ்யாவின் மீதான உலக நாடுகளின் தடைகளும் உக்ரைனுக்கான இராணுவ உதவிகளும் பிராந்திய மட்டத்திலான போரை சர்வதேச மட்டத்திலானதாக மாற்றும் நிலையை நோக்கி உலக அரசியல் வேகமாக நகர்ந்து செல்கிறது. ஆனாலும் ஐரோப்பாவுக்குள் எழுந்துள்ள பொருளாதாரப் போட்டியும் அரசியல் இழுபறியும் உலகத்தை மீளவும் பங்கு போடுவதில் ஈடுபடுத்துவதாக தெரிகிறது. ரஷ்யாவுக்கான ஆதரவை ஏற்படுத்தும் அரசுகளுக்கும் உக்ரைன் ஆதரவு சக்திகளுக்கும் ஓர் இழுபறி தொடங்கியுள்ளதாகவே தெரிகிறது. இக்கட்டுரையும் அத்தகைய அரசியல் போக்கினைத் தேடுவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதலாவது, ர‌ஷ்ய -உக்ரைன் போரினால் துருக்கிக்கும் -சுவீடனுக்கும் இடையில் எழுந்துள்ள முறுகலானது அதிக இஸ்லாமிய சுவீடன் மோதலாக மாறிவருவதைக் காணக்கூடியதாக தெரிகிறது. குறிப்பாக சுவீடனில் நடைபெற்ற போராட்டத்தில் இஸ்லாமியரது புனித நூலான குர் ஆன் எரியூட்டப்பட்டமை துருக்கியை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. சுவீடனில் நிகழும் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவருமாறு துருக்கி சுவீடனை கோரியிருப்பதுடன் அவமானகரமான செயல் என குர் ஆன் எரியூட்டப்பட்டதை கண்டித்துமுள்ளது. அது மட்டுமன்றி சுவீடன் பாதுகாப்பு அமைச்சரான பால்ஜான்சன் துருக்கிக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை துருக்கி ரத்து செய்துள்ளது. அதேநேரம் சுவீடனின் பாதுகாப்பு அமைச்சர் துருக்கியுடனான சுவீடனின் உறவு மிகவும் முக்கியமானது எனவும் பாதுகாப்புத் தொடர்பான பொதுவான பிரச்சினைகளை பற்றி மீண்டும் போசுவதற்கு வாய்ப்பு ஏற்படும் எனவும் நம்புவதாக தனது டூவிட்டில் பதிவு செய்துள்ளார். இத்தகைய நிலை சுவீடனது நேட்டோவுடனான அங்கத்துவத்தை துருக்கி நிராகரித்ததன் விளைவாக ஏற்பட்டதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. சுவீடனும் பின்லாந்தும் கடந்த ஆண்டு நேட்டோவில் இணைவதற்கான விண்ணப்பத்தை துருக்கி நிராகரித்திருந்தது. அதற்கு துருக்கி கூறிய வலுவான காரணமாக குர்திஸ்தான் ஆயதப் போராட்ட அமைப்பான குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி மற்றும் பல ஆயுதமேந்திய குழுக்களை சுவீடனும் பின்லாந்தும் ஆதரிப்பதாகவும் அவற்றுக்கு ஆயுதங்களை வழங்குவதாகவும் குற்றம்சாட்டி வருகிறது. அத்தோடு குர்த்திஸ்தான் ஆயுதப்பிரிவுக்கு சுவீடன் தமது நாட்டில் பயிற்சியையும் தங்கியிருப்பதற்கான வாய்ப்பினையும் வழங்கிவருவதாக குறிப்பிடுகிறது.

சுவீடனில் நிகழ்ந்தவை இஸ்லாமியருக்கு எதிரான இனவெறியை தூண்டுவதுடன் இஸ்லாமியருக்கு எதிரான இனவெறியை ஐரோப்பாவில் தூண்டுவதாகவும் அதற்கான எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளதாகவும் துருக்கிய அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆனால் சுவீடன் வெளியுறவு அமைச்சர் டொபையாஸ் பில்ஸ்ட்ரோம் குர் ஆன் எரியூட்டப்பட்டதை திகிலூட்டக்கூடியதெனவும் கருத்துச் சுதந்திரம் உள்ளது என்பதற்காக ஆர்ப்பாட்டத்தில் வெளிப்படுத்தப்பட்ட உணர்வை ஆதரிக்கிறோம் என்று அர்த்தமில்லை என்கிறார். இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பும் சுவீடனின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் நிகழ்ந்தவற்றை கண்டித்ததுடன் அதற்கு பின்னால் சுவீடன் அதிகாரிகள் இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் குர் ஆன் எரியூட்டப்பட்டதை கண்டித்து வருகின்றன. இது முழு உலகிலுமுள்ள இஸ்லாமியரது உணர்வுகளைத் தூண்டுகின்ற தீவிரச் செயல் எனவும் இஸ்லாமியர்களது மத உணர்வை புண்படுத்துவதாகவும் பாகிஸ்தான், சவுதி அரேபியா, கட்டார் போன்ற நாடுகள் சுவீடன் மீது குற்றம்சாட்டியுள்ளன. இஸ்லாம் என்பதன் அர்த்தமே அமைதியின் வடிவமாகும். இஸ்லாமியர்கள் அனைத்து மதங்களையும் மதிப்பவர்கள். இந்தக் கொள்கையை அனைவரும் மதிக்க வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அறிக்கையிட்டுள்ளது. ஆனால் சுவீடனில் போராட்டம் தொடர்கிறது. வலதுசாரிகளது செயலுக்கு எதிராகவும் ஆதரவாகவும் போராட்டம் நீடிகிறது. அத்தகைய போராட்டங்களில் துருக்கிய ஜனாதிபதியின் உருவப் பொம்மை தலைகீழாக தொங்கவிடப்பட்டது.

இதனால் இரு நாட்டுக்குமான இராஜாங்க உறவு பாதிப்படைந்ததுடன் ஐரோப்பாவுக்குள் இஸ்லாமியர் மீதான இனவெறித்தூண்டல்கள் ஆரம்பித்துள்ளது. ரஷ்யாவுக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையிலான நெருக்கம் மேற்குலகத்தை பாதித்துள்ளதாக தெரிகிறது. அத்தகைய நெருக்கடியை எதிர்கொள்ள முடியாத ஐரோப்பா இஸ்லாமிய நாடுகளது புனிதத்தை அவமதிப்பதன் மூலம் எதிர்ப்பினை வெளிப்படுத்துகின்றது. மேற்குலக ஜனநாயகத்தின் சிறப்பும் தனித்துவமும் இதுவாகவே உள்ளது. மக்களது கருத்துச் சுதந்திரத்தின் வாயிலாக நாடுகளது நலன்களை சாத்தியப்படுத்திவிடுவதாகும். அது நியாயமானதோ இல்லையோ என்பதல்ல முக்கியம். மாறாக அதன் வாயிலாக நாட்டின் நலன் அடையப்படுவதே பிரதான இலக்காகும். இத்தகைய விவாத ஜனநாயகத்தின் புள்ளிக்குள்ளேயே மேற்குலக ஜனநாயகத்தின் வடிவங்கள் காணப்படுகின்றன.

இரண்டாவது, உக்ரைனுக்கான ஆயுத தளபாடங்களை வழங்குவதில் நீடித்த இழுபறிக்கு ஜேர்மனி காரணமாக அமைந்தாலும், தாக்குதலுக்கு பயன்படக் கூடிய டாங்கிகளை வழங்க மேற்கு நாடுகள் முன்வந்துள்ளன. ஆரம்பத்தில் ஜேர்மனி டாங்கிகளை வழங்க மறுப்புத் தெரிவித்த போது அமெரிக்காவும் ஏனைய நேட்டோ அணியினரும் அதிக முரண்பாடுகளை வெளிப்படுத்தினர். குறிப்பாக போலந்து ஜேர்மனிக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படுத்தியது. ஜேர்மனி உக்ரைனுக்கு ஆயுத தளபாடங்களை வழங்க மறுத்தாலும் உக்ரைன் போரில் வெற்றி பெறும் என போலந்துப் பிரதமர் மாடேயஸ் மோராவெய்க்கி தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது ஜேர்மனி தனது தயாரிப்பான லெப்பாட்- 2 டாங்கிகளில் 14 ஐ உக்ரைனுக்கு வழங்க முன்வந்துள்ளது. அவ்வாறே அமெரிக்கா தனது தயாரிப்பான எம்-1 அப்ராம்ஸ் டாங்கிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. உக்ரைன் ஜனாதிபதியின் நீண்டகால வேண்டுகோளை மேற்குலகம் நிறைவேற்றும் சூழல் ஏற்பட்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாக அமைந்துள்ளது. ஆனால் நேட்டோ அணியினர் திறன்குறைந்த ஆயுதங்களையே உக்ரைனுக்கு வழங்குவதாகவும் முழுமையான பயிற்சியின்றி அத்தகைய ஆயுதங்கள் பாவனைக்கு வருவதாகவும் விமர்சனங்கள் காணப்படுகின்றன.

இத்தகைய மேற்குலகத்தின் நகர்வுக்கு பதிலளிக்கும் ரஷ்யா தனது நட்புச் சக்திகளுடன் இணைந்து கூட்டு கடற்படைப் பயிற்சியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி 17 முதல் -26 வரை (2023) தென்னாபிரிக்காவின் துறைமுக நகரங்களான டர்பன் மற்றும் ரிச்சர்ட்ஸ் விரிகுடாவுக்கு அண்மிய பகுதியில் நடைபெறவுள்ளது. இதில் ரஷ்யா சீனா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளது கடற்படைகளுடன் ஹைப்பர்சோனிக் போர்க் கப்பல் கடற்படைப் பயிற்சிக்காக சிரியாவின் டார்டஸ் துறைமுகத்திலிருந்து ரஷ்ய போர்க்கப்பல் இணைந்து கொள்ளும் என ரஷ்ய செய்தி ஊடகங்கள் அறிவித்துள்ளன. இக் கடற்படை பயிற்சிக்கு ர‌ஷ்யாவின் அட்மிரல் கோர்க்கோவ் தலைமை தாங்குவார் எனவும் அவ்வறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளது. இந்தப் போர்க்கப்பலானது ஒலியைவிட ஒன்பது மடங்கு வேகமுடைய சிர்ஹான் தாக்குதல் ஏவுகணையைக் கொண்டுள்ளதுடன், அதன் தாக்குதல் தூரமானது 1000 கி.மீ. அதிகமானது என்பதும் கவனத்திற்குரியதாகும். இந்த ஏவுகணை ரஷ்யாவின் ஹைப்பர்சோனிக் ஆயுத தளபாடங்களின் உயிர்நாடி என்றும் 2019 முதல் போரில் இணைக்கப்பட்டுள்ளது எனவும் தெரியவருகிறது.

இது சீனா, தென்னாபிரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான உறவை பலப்படுத்துவதுடன் ஏற்கனவே வளர்ந்துவரும் உறவினை எதிர்காலத்தில் பலமாக மாற்றுவதற்கு உதவும் எனவும் தென்னாபிரிக்க தேசிய பாதுகாப்பு படைப்பிரிவு அறிவித்துள்ளது. ஏற்கனவே இத்தகைய போர்ப்பயிற்சிகளில் தென்னாபிரிக்கா இணைந்து கொண்டுள்ளது எனவும் இது மூன்றாவது போர்ப்பயிற்சி எனவும் 2019 ஆண்டு முதல் இந்நாடுகளுக்கிடையிலான கடற்படைப்பயிற்சிகள் நிகழ்வதாகவும் தென்னாபிக்க தேசிய படைப்பிரிவு அறிவித்துள்ளது. ரஷ்ய தயாரிப்பான சிர்ஹான் ஏவுகணைக்கு மாற்று ஏவுகணை உலக நாடுகளிடம் இல்லை என்ற கருத்தினை ரஷ்யா கொண்டுள்ளது இதுபற்றிய மதிப்பீடும் போரியல் ஆய்வுகளில் அவ்வாறானதாகவே உள்ளது என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

எனவே இரு தரப்புக்குமான போர் வலுவானதாக மாறிவருகிறது. ரஷ்யாவின் உக்ரைன் மீதான போரை வெற்றிகரமானதாக மேற்குலகம் கையாண்டுவருகிறது. அதற்குள் ரஷ்யாவை முடக்கிவிடலாம் என்ற எண்ணத்துடன் தொடங்கப்பட்ட உக்ரைனுக்கான உதவியானது மேற்குக்கு மீளமைக்கும் காலமாக அமைந்துவருகிறது. அமெரிக்கா உலகளாவிய ஆதிக்கத்திலிருந்து பின்வாங்குமா என்ற குழப்பம் நிலவிய போது உக்ரைன் போர் அதனை மீளமைப்பதற்கான களமாக மாறியுள்ளது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)