அரசியல் கட்டுரைகள்

தென் இலங்கையின் இனவன்முறைக்கான முஸ்தீபும் இந்திய-அமெரிக்க நகர்வும்?

தென் இலங்கை அரசியலை நாடிபிடித்துப் பார்ப்பதில் இந்தியாவும் அமெரிக்காவும் அதிக கவனம் கொண்டுள்ளமை அவதானிக்க்கூடியதாக உள்ளது. ஏற்கனவே இந்தியா எச்சரிக்கை செய்துள்ளது தொடர்பில் இப்பகுதியில் உரையாடியுள்ளமை யாவரும் தெரிந்ததே. இனவன்முறைக்கான முஸ்தீபை தென் இலங்கை கொண்டுள்ளதாக இந்தியப் புலனாய்வுத்துறை மீளவும் எச்சரித்துள்ளது. அதன் எச்சரிக்கைக்கு முன்பே தமிழ் மக்கள் அத்தகைய நிலையை உணரத் தொடங்கிவிட்டனர். தற்போது அதனை எப்படி தடுப்பது என்பதே பிரதானமான உரையாடலாக உள்ளது. சில தமிழ் பிரதிநிதிகள் குறிப்பிடுவது போல் தமிழ் மக்கள் எதிர்கொள்ளத்தயார் என்ற விவாதம் கவலைக்குரியது. இன்னும் சிலர் அவ்வாறான தாக்குதல் அல்லது இனவன்முறை நிகழ்ந்தால் ஓரிரு மணித்தியாலயங்களில் தடுக்கப்பட்டுவிடும் என்றும் விவாதிக்கின்றனர். இவை அனைத்தும் அபத்தமான உரையாடலே. தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் ஓரிரு மணித்தியாலயங்கள் என்பது 1983 யூலைக்கலவரத்தைக்காட்டிலும் வேகமான அழிவுகளை ஏற்படுத்தக் கூடியது என்பதையும் கவனத்தில் கொள்ளத்தவறக் கூடாது. எனவே அத்தகைய தாக்குதல் ஒன்றுக்கான முனைப்பை எவ்வாறு தடுப்பதென்பதே பிரதான விடயமாகவுள்ளது. அத்தகைய நகர்வில் ஒன்றாகவே இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரின் வடக்குக்கான விஜயமும், இந்தியப் பாதுகாப்பு அமைச்சரது இலங்கை வருகையும் அமையவுள்ளது. இக்கட்டுரையும் அத்தகைய நகர்வின் உள் நோக்கத்தை விளங்கிக் கொள்ள முயலுகிறது.

முதலாவது, 23.08.2023இல் வடக்குக்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் விஜயம் செய்திருந்தார். அவர் தமிழ் தரப்புக்களுடனும் இலங்கை இராணுவத்தின் கட்டளைத் தளபதிகளுடனும் உரையாடியதுடன் அமெரிக்க நிதி உதவியுடன் மேற்கொண்டுவரும் திட்டங்களையும் அதன் பயனாளிகளையும் வடக்கில் சந்தித்து உரையாடியுள்ளார். தென் இலங்கையுடன் ஒப்பிடும் போது வடக்கு-கிழக்கில் அதிக கவனம் செலுத்தாமல் அமெரிக்கத் தூதுவர் செயல்படுவதாகவும் அதனை வெளிப்படையாக அவரது டூவிட்டரைப் பின்தொடர்ந்தால் கண்டு கொள்ளக் கூடியதாகவும் அமைந்திருந்தது. ஆனால் அதனை சரிசெய்யும் விதத்தில் அவரது வடக்குக்கான அண்மைய விஜயம் அமைந்திருந்தது. அதே நேரம் அவரது விஜயத்தில் முக்கியமான உரையாடலில் மன்னார், கிளிநொச்சி, மற்றும் யாழ்ப்பாண மாவட்ட இராணுவத் தளபதிகளுடன் அமைந்திருந்தது. அதில் அவர் சிறுபான்மையினருடன் நல்லிணக்கமாக செயல்படுமாறு இராணுவத் தளபதிகளிடம் கோரியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இது அமெரிக்கத் தூதுவரது செய்தியாக விளங்குகிறது என்பது தென் இலங்கையில் பௌத்தமத துறவிகளாலும் தீவிர அரசியல் தரப்பவினராலும் மேற்கொள்ளப்படும் இனவாதப் பிரச்சாரத்தை கருத்தில் கொண்டதாகவே தெரிகிறது. தென் இலங்கை தமிழ் மக்களுக்கு எதிராக பிரச்சாரத்தை முதன்மைப்படுத்தும் தரப்பு அனேகமாக பொதுஜனப் பெரமுனவின் கட்சி சார்ந்தவர்களும் அதற்கு ஆதரவளராகவே காணப்படுகின்றனர். அவர்கள் அடுத்துவரும் தேர்தலை இலக்காகக் கொண்டு நகர்வதாகவே அதிக ஊகங்கள் நிலவுகிறது. ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய பாராளுமன்றத்தால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியைத் தோற்கடிப்பது அல்லது அவரை முடிந்தளவுக்கு தங்களது பூரணமான கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பதாகும். இத்தரப்பினது நடவடிக்கை உடனடியாகவே தற்போதைய ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹாவின் தேர்தல் இலக்கை தோற்கடிப்பதாக அமைய வாய்ப்புள்ளது. அமெரிக்கத் தரப்பினரைப் பொறுத்தவரை ஜனாதிபதி மக்களால் தேர்ந்தெடுக்கும் நிலையைக் குழப்பக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளனர். அதனால் அத்தகைய தரப்புக்களது தீவிர பிரச்சாரம் தடுப்பதென்பது முதல் நகர்வாக அமைவதோடு அதனால் ஏற்படும் விளைவுகளை நிறுத்துவதன் மூலம் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹாவின் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். அதற்கான நடவடிக்கையையே அமெரிக்கத் தூதுவரது வடக்கு விஜயம் காணப்படுவதாக தெரிகிறது. அதன் மூலம் தமிழ் தரப்புக்கும் ஜனாதிபதிக்குமான உறவைப் பாதுகாப்பதும் இதில் இன்னோர் தேவைப்பாடாக உள்ளது. காரணம் தமிழ் மக்களது வாக்குகள் ரணில்விக்கிரமசிங்ஹாவின் வெற்றியை தோற்கடித்துவிடக் கூடாது என்பதை அமெரிக்கா புரிந்து வைத்துள்ளது.
அதனை மேலும் உறுதிப்படுத்தும் விடயமாக பதின்மூன்றாவது சீர்தித்தம் தொடர்பில் தமிழ் கட்சிகளுடன் அமெரிக்கத் தூதுவர் உரையபாடியுள்ளார். அதன் போது தமிழ் கட்சிகளது முன்னகர்வுகளை பாராட்டியுள்ளார். அது ஒரு சரியான நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளார். அமெரிக்கத் தூதுவரது இத்தகைய கருத்துக்கள் அமெரிக்காவின் நிலைப்பாட்டையும் தமிழ் மக்களுக்கு அமெரிக்கா முன்வைக்கும் தீர்வின் எல்லையையும் அளவிடப் போதுமானது. அதன் மூலம் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹாவின் அனைத்து நிலைப்பாட்டையும் அமெரிக்கத் தூதுவர் வழிமொழிவதாக தெரிகிறது. எனவே இதுவொரு ஜனாதிபதித் தேர்தலுக்கான முன்னாயத்த நகர்வாகவே இத்தகைய விஜயத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். அதாவது இனவன்முறையை தடுப்பதன் மூலம் ஜனாதிபதி தேர்தலையும் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியின் வெற்றியையும் உறுதிப்படுத்த முனைகிறார்கள்.

இரண்டாவது, அமெரிக்கத் தூதுவரது வடக்கு விஜயத்தின் போது குருந்தூர்மலை விடயத்தை தூண்டுவதன் மூலம் இந்தியா இனவன்முறையைத் ஏற்படுத்த முனைகிறதா என்ற சந்தேகத்தை சில தரப்புக்களுடன் உரையாடியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத்தகைய தகவல் உண்மைத் தன்மை பொருந்தியதாகவோ இல்லாததாகவோ அமைந்தாலும் அமெரிக்க இந்தியத் தரப்பின் நிலைப்பாடுகள் இலங்கைத் தீவு விடயத்தில் வேறுபட்டவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். காரணம் தற்போதைய ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹா பதவியேற்று ஒருவருடத்திற்கு பின்னர் இந்தியா சென்றிருந்தார். அவரது விஜயம் நிறைவேறி இருவாரங்களில் இந்திய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் அமித்ஷா 2009 இல் இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலை என்பதை தெளிவாக உரைத்துள்ளார். அதன் மூலம் இந்திய ஆளும் தரப்பு அயல் நாடான இலங்கை பொறுத்து எத்தகைய நிலைப்பாட்டில் உள்ளது என்பதை உணர்த்துவதாக அமைவதோடு நெருக்கமான நட்பு நாடாக இலங்கையை இந்தியா கருதுமாக அமைந்தால் அத்தகைய கருத்தினை வெளிப்படுத்தியிருக்குமா என்ற சந்தேகம் நியாயமானதாகவே உள்ளது. இதன் வாயிலாக ரணில்விக்கிரமசிங்ஹா மீதான விமர்சனத்தை புரிந்து கொள்ளக் கூடியதாக அமைந்துள்ளது.

மூன்றாவது, இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் இலங்கை வருகை 2-3.09.2023 காலப்பகுதியில் மேற்கொள்ளப்படும் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இவரது வருகை இலங்கைக்கும் இந்தியாவுக்குமான தரைவழித் தொடர்பு மற்றும் கடல்வழி மின்சாரம் போன்ற விடயங்களில் உடன்பாடு எட்டப்படும் எனவும் அவர் திருகோணமலைத் துறைமுகத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் தெரியவருகிறது. இத்தகைய விடயங்களை பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் விஜயம் செய்வதன் மூலம் தான் சாத்தியப்படுத்த வேண்டுமா என்ற கேள்வி தவிர்க்க முடியாதது. அப்படியாயின் இந்தியப் பாதுகாப்பு அமைச்சரது விஜயம் இலங்கை-இந்திய பாதுகாப்புச் சார்ந்ததாகவே அமையவுள்ளமை புலனாகிறது. வெளிப்படையான உரையாடலைவிட உள்ளார்ந்த நோக்கு வேறானதாகவே தெரிகிறது. அது சீனாவின் ஷி யான்-6 பற்றியதாக அமைந்துள்ளதாக அதிக உரையாடல் உண்டு. அதற்கான வாய்ப்பு அதிகமானது. ஆனால் தென் இலங்கையில் எழுந்துள்ள இன உணர்வு சார்ந்தும் அதன் விளைவுகள் சார்ந்தும் காணப்படும் நகர்வுகளை மையப்படுத்தியதாகவும் அமைய வாய்ப்புள்ளது. காரணம் இந்தியாவே அதற்கான எச்சரிக்கையை முதலில் வெளியிட்டிருந்தது. அதனால் இந்தியப் பாதுகாப்பு அமைச்சரது விஜயம் ஒன்றுக்கு மேற்பட்ட நோக்கத்தை இலக்காகக் கொண்டு அமைய வாய்ப்புள்ளது. இது இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு பாதுகாப்புச் சார்ந்து பதிலளிக்கும் உணர்வை இந்தியா வெளிப்படுத்துவதாகவே தெரிகிறது. இத்தகைய அமைச்சுக்களது விஜயம் இராஜதந்திரத்தை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருக்கும். அத்தகைய செய்திகள் மறைமுகமாகவே அமையும். அதனை கண்டு கொள்வதன் மூலம் மாற்று உபாயங்களை நாடுகளும் ஆட்சியாளர்களும் மேற்கொள்வது வழமையான அரசியலாகும். அத்தகைய நகர்வு ஒன்றுக்கான எத்தனமாகவே இந்தியப் பாதுகாப்பு அமைச்சரது விஜயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

நான்காவது, இவ்வாறான இன மோதலுக்கான நகர்வு எப்படி தடுக்கப்பட வேண்டும் என்பதே தமிழ் தரப்பின் அரசியலாக அமைய வேண்டும். தென் இலங்கையில் எழுந்துள்ள சூழலை சர்வதேசமயப்படுத்துவதும் மனித உரிமை பேரவை வரை கொண்டு செல்வதும் ஐக்கியநாடுகள் சபையில் உரையாட முயல்வதும் அவசியமானதாகும். இந்தியாவே அத்தகைய எச்சரிக்கையை வெளிப்படுத்தியிருப்பதனால் அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க இந்தியாவுடன் உரையாடுதல் அவசியமானது. அதற்கான முக்கியத்துவத்தை ஏற்படுத்தும் அரசியலை தமிழக மட்டத்தில் மட்டுமல்லாது அனைத்து இந்திய அளவிலும் கொண்டு செல்லுதல் வேண்டும். தென் இலங்கையின் இன எதிர்ப்புவாதப் பிரச்சாரத்தை ஒர் அரசியலாக்க வேண்டும். இந்தியாவும் அமெரிக்காவும் எடுத்துள்ள அக்கறையை தமிழ் தரப்பு வலிமைப்படுத்த வேண்டும்.

எனவே இலங்கைத் தீவு இந்திய, அமெரிக்க, சீன நலன்களுக்குள்ளால் நகருகிறது. இதில் அமெரிக்கத் தரப்பின் நலன்கள் தனித்துவமானவை. உக்ரையின்-ரஷ்சியப் போருக்கு பின்னர் அத்தகைய இடைவெளி அதிகமானதாகவே உள்ளது. இந்தியத் தரப்பானது இலங்கைத் தீவை முழுமையாக தனது நலனுக்குள் வைத்துக் கொள்ளவே முனைகிறது. அதற்கான அரசியலை இந்தியா உருவாக்க திட்டமிடுகிறது. எவ்வாறு சீனா இலங்கைக்குள் நகர்கிறதோ அவ்வாறே இந்தியாவும் அமெரிக்காவும் இயங்குகின்றன. இதில் ஒருமைப்பாட்டுன் மட்டுமே இயங்க வேண்டும் என்பதைவிட முரண்பட்ட தளத்திலும் இயங்கி இலக்கை அடைய மூன்று தரப்பும் முயல்கிறதை காணக்கூடியதாக உள்ளது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)