உலகலாவிய அதிகார சமநிலையும் கொரொனா வைரஸ் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற தகவலை 2019 டிசம்பர் காலபபகுதியில் அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் , சர்வதேச ஆய்வாளர்களும் ஹென்றி கீசிங்கர் குறிப்பிட்டிருந்தார். அதற்கான யதார்த்தமும் அதிகார சமநிலைக்கான மாற்றங்களும் நிகழ்ந்து வருகின்ற இக்காலப்பகுதியில் அதனை மேலும் பலப்படுத்தும் விதத்தில் இந்திய, பிரான்சிய , ஜேர்மன் ஆய்வாளர்கள் பல்வேறுபட்ட விடயங்களை முன்வைத்திருந்தனர் . அவையனைத்தும் கோட்பாட்டு அடிப்படையிலும், எதிர்வு கூறலை அடிப்படையாக கொண்டதாகவும் அமைந்திருந்தது. ஆனால் 27.04.2021 இல் அமெரிக்காவின் புலனாய்வு துறையான CIA-யின் பணிப்பாளர் வில்லியம் புரூன்ஸ் (William Burns)அமெரிக்க காங்கிரஸின் சீனா தொடர்பாகவும், உலகளாவிய அரசியலின் போக்கு தொடர்பாகவும் அறிக்கை ஒன்றினை சம்ர்ப்பித்திருந்தார். இக்கட்டுரையில் அவ்வறிக்கை வெளிப்படுத்தும் தகவலையும் அதன் விளைவுகளையும் தேடுவதாக அமைகின்றது.
வில்லியம் புரூன்ஸினுடைய அறிக்கையின் சாராம்சத்தில் அவதானிக்கின்ற போது உலகளாவிய அதிகாரத்திற்கான சீனாவின் நகர்வுகள் அதிகரித்துள்ளது என்றும், பாதுகாப்பு துறை தொடர்பாக அதிகம் கவனம் செலுத்தி வரும் சீனா 2049 உலக அதிகாரத்தின் முதல் நிலையையும் அடைவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் அவ்வறிக்கையில் தொழிநுட்ப ஆயுதங்களையும், அவற்றின் பிரயோகங்களையும் என்றும் இல்லாத அளவிற்கு சீனா அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் ரஷ்யாவோடு சேர்ந்து பயணிக்கும் சீனா ரஷ்யாவை எதிர்க்கொள்வதற்கு தயாராகி வருகின்றது என்றும், அமெரிக்காவை சீனாவின் பிரதான எதிரி என்றும், அமெரிக்காவின் நகர்வுகள் அனைத்தையும் முடிவுக்கு கொண்டுவரும் விதத்தில் சீனா செயற்படுவதாகவும், அவ்வறிக்கையில் CIA-வின் பணிப்பாளர் குறிப்பிட்டது போன்று ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி சீனாவில் செல்வாக்கை பரப்புவதற்கும் அமெரிக்காவின் உலகளாவிய வலுவினை மட்டுபடுத்துவதற்கும், அமெரிக்க நட்பு நாடுகளுக்கிடையிலேயே முரண்பாடுகளையும் பகைமைகளையும் தூண்டிவிட்டு பிளவுகளை ஏற்படுத்த அழுத்தம்கொடுத்துவருவதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி சீனாவின் அரச தலைவர் அமெரிக்காவுடன் பதற்றங்களை குறைத்து, தந்திரோபாய ரீதியான வாய்ப்புகளை தேட முனைவதாகவும் குறைந்தபட்சம் அமெரிக்காவின் உள்கட்டமைப்புகளை தகர்த்தவும், தற்காலிக இடையூறுகளை ஏற்படுத்தவும், சைபர் தாக்குதல்களை அதிகரிக்கவும் இத்தகைய தந்திரோபாய நகர்வுகளை மேற்கொள்வதாக அவ்வறிக்கை சுட்டிகாட்டுகின்றது.
ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் செல்வாக்கை குறைத்து மதிப்பீட்டுக்குட்படுத்தும் விதத்தில் மேற்கு நாடுகளுக்கிடையில் எண்ணங்களையும் கருத்துருவாக்க ஊடுறுவல்களையும் மேற்கொள்கின்ற விதத்தில் சீனாவின் அண்மைக்கால நகர்வுகள் அமைந்திருக்கின்றது எனவும் , சுட்டிகாட்டுகின்ற அவ்வறிக்கை ஈரான், வடகொரியா , சிரியா போன்ற நாடுகளுடன் சீனா கொண்டிருக்கின்ற தீவிரமான உறவு அமெரிக்காவின் நலன்களை பாதிப்பதோடு எதிர்கால சீனாவினுடைய இருப்பை நிலைநிறுத்த வழிவகுக்கும் என ஆய்வறிக்கை சுட்டிகாட்டுகின்றது.
இவ்வறிக்கையின் பிரதிபலிப்புகளை அவதானிக்கின்ற போது பல்வேறு நெருக்கடி மிக்க சூழலை நோக்கி உலகம் நகர்கின்றது என்பதை கோடிட்டு காட்டுகின்றது .
அதன் அடிப்படையில் முதலாவது , சீனாவின் கொவிட்-19 க்கு பின்னான எழுச்சி உலகளாவிய அரசியலில் மாற்றத்தை எற்படுத்தும் ஒரு அம்சமாக விளங்குகின்றது என்பதை அமெரிக்காவில் ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. இதனால் உலக அரசியல் சீனாவின் கட்டுபாட்டுக்குள் நகர்ந்துவிடும் என்ற செய்தியை வெளிப்படுத்தி நிற்கின்றது. இவ்வகை எச்சரிக்கைகளை 1991ஆம் ஆண்டு முன்னாள் சோவியத் யூனியன் பெரஸ்ரொய்க்கா, கிளாஸ்ட்நோர்த் போன்றவற்றை முன்வைத்த போது இவ்வகை அச்சுறுத்தல் ஒன்றும், அமெரிக்காவிற்கு எதிராக எழுந்துள்ளது என முன்வைக்கப்பட்டது. அதனையும் அப்போது CIA முன்மொழிந்திருந்தது அதனை தோற்கடிப்பதற்கு முழு அளவில் அமெரிக்கா முயன்று வெற்றிபெற்றது. அதேபோன்றதான ஒரு அணுகுமுறையை மீளவும் அமெரிக்கா மேற்கொள்ளும் என எதிர்பபார்க்கப்படுகிறது.
இரண்டாவது, சீனாவினுடைய தொழிநுட்ப ரீதியான ஆயுதங்களை நோக்கிய வளர்ச்சியும் இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ மோதலை எதிர்ப்பார்ப்பதை விட தொழிநுட்ப ஆயுதங்களை அடிப்படையாக கொண்ட பேரில் போக்கினை பார்ப்பதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. அவ்வகை போர்களால் ஏற்படக்கூடிய சிதைவுகளும் அழிவுகளும் கொவிட் தாக்கத்தை போன்று அமையலாம் என்று எதிர்பார்க்கமுடியும். ஈரானின் முன்னாள் இராணுவ பாதுகாப்பு தளபதி சுலைமானி கொல்லப்பட்டது போன்ற நகர்வுகளையும், சைபர் தாக்குதல்களையும் எதிர்கால உலகம் அனுபவிக்கும் துயரத்துக்கு தொழிநுட்ப ஆயுதங்களை வளர்ச்சி ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பதே இதன் அறுவடையாகும் .
மூன்றாவது, சீனாவின் பொருளாதார ரீதியான பாய்ச்சலும், இராணுவ ரீதியான வளரச்சியும் உலக வல்லரசிற்கான வலுவை சாத்தியப்படுத்தும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாகவே தெரிகின்றது . இதனால் உலக வல்லரசு என்கின்ற இடத்தில் இருந்து அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் புறந்தள்ளப்படுகின்ற போது சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகம், மனிதாபிமானம் , மனித உரிமை போன்றவற்றிற்கு பாரிய சவால்மிக்க ஒரு உலகத்தை எதிர்க்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் இதனை முறியடிப்பதற்கு ஒட்டுமொத்த மேற்கு நாடுகளும் அமெரிக்காவும் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டிய நிலை தவிர்க்கமுடியாததாக மாறுவதற்கான வாய்ப்புள்ளது. அது தொடர்பான தகவல்களை ஆய்வுகளை முதன்மைப்படுத்துகின்ற உரையாடல்கள் மேற்குலகத்தில் ஏற்பட்டுவருகின்றது.
நான்காவது, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு ஏற்பட்டிருக்கின்ற சவால்கள் CIA அறிக்கையில் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய அறிக்கையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு என்பது அதன் எல்லைக்குட்பட்டது அல்ல, மாறாக அமெரிக்க பிரஜைகளும், அமெரிக்க இராணுவமும், அமெரிக்க இராணுவ அரண்களும், அமெரிக்க கடற்படை, விமானப் படை, தரைப்படை முகாம்களும் உலகளாவிய ரீதியில் காணப்படுகின்றது. அதிலும் குறிப்பாக தென்பூகோள நாடுகள் முழுவதும் ஐரோப்பாவின் கணிசமான பகுதிகளும் அமெரிக்காவின் இருப்பினை தக்கவைக்கும் தேசிய பாதுகாப்பு வலைப்பின்னல் காணப்படுகின்றது. இவற்றிற்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களையே CIA அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு என கருதுகின்றது. இதனால் உலகாளாவிய ரீதியான அமெரிக்காவின் இராணுவ மையங்களை பாதுகாப்பது என்பது மிகப்பெரும் சவாலாகவே அமெரிக்காவிற்கு உள்ளது. முன்னாள் சோவியத் யூனியன் அவ்வாறு பனிப்போர் காலத்தில் உலகநாடுகளில் பரப்பியிருந்த இராணுவத்தினை விலக்கிகொண்டதும், அத்தகைய ஒரு சூழலை உருவாக்குகின்ற முனைப்பில் சீனா நகர்வது தெளிவாக தெரிகின்றது. ஆனால் அவ்வகை பொறிமுறையை அமெரிக்கா மேற்கொள்ளுமாயின் உலகத்தை சீனாவிடம் ஒப்படைப்பதற்கு ஒப்பானதாக அமையும் . அதற்கான வாய்ப்புகளை அமெரிக்கா ஏற்படுத்துமா என்பது கேள்விற்குரிய விடயம். ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகளை விலத்திக்கொண்டது போல அமெரிக்கா செயற்படுமோ என்ற கேள்வி மீள எழுப்பப்படுகின்றது.
ஐந்தாவது, சீனாவின் அணுகுமுறையில் ரஷ்யா மிகப்பிரதான பங்கை வகிக்கும் நாடாக விளங்குகின்றது. அதாவது சீனாவின் பொருளாதார பாய்ச்சலையும், ரஷ்யாவின் இராணுவ அணுகுமுறைக்கான நடவடிக்கைகளையும் அதுவும் குறிப்பாக அமெரிக்காவிற்கு எதிரான நடவடிக்கைகளை ரஷ்யா மேற்கொள்வதையும் அவதானிக்கமுடிகின்றது. அமெரிக்க பொருளாதாரத்தை சிதைப்பதில் சீனா எடுக்கும் கரிசனையை போன்று அமெரிக்காவின் இராணுவ நகர்வுகளை ரஷ்யா நெருக்கடிக்குள்ளாக்கி வருகின்றது. எனவே இத்தகைய போட்டித்தன்மையில் ஈடுபடும் ரஷ்யாவும் சீனாவும் யுத்தத்தை எதிர்க்கொள்வது என்பதுஅமெரிக்காவின் விருப்பமாக இருக்கலாமேயன்ற போதும் அது சீனாவின் நோக்கமாக இருக்க வாய்ப்பில்லை என்றே கூறலாம். ஆனாலும் சீன, ரஷ்யாவிற்கிடையில் மோதலை விட மேற்குக்கு எதிரான இணைவாகவே அதனை புரிந்துக்கொள்ளுதல் வேண்டும்.
எனவே, சீனாவின் உலகளாவிய எழுச்சி தவிர்க்கமுடியாதது என மதிப்பீடுகள் முன்வைக்கப்பட்டாலும் CIA-வின் எச்சரிக்கை அடிப்படையில் ஈரான், வடகொரியா, சிரியா ஆகிய நாடுகளை எதிர்க்கொள்கின்ற மூலோபாயத்தை கொவிட் பரவல், சுற்றுசுழல் , அணுவாயுதம் சைபர் தாக்குதல் போன்றவற்றில் இருந்து மீள்வதற்கான உத்திகளை அமெரிக்கா வகுத்து செயற்பட ஆரம்பித்துள்ளதோடு மேற்கு உலகளாவிய அதிகார சமநிலையில் தனது கட்டுபாட்டில் இருந்து இழப்பதற்கு தயாரில்லாத ஒரு சூழலை உருவாக்க தொடங்கியுள்ளது. சீனாவின் முயற்சியில் அதன் பொருளாதார இருப்பு, இராணுவம், தொழிநுட்பம் நோக்கிய பாய்ச்சலும் உலகளாவிய போட்டித்தன்மைகுள் அதிக நெருக்கடியை எதிர்காலத்தில் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம் காணப்படுகின்றது.
-பேராசிரியர் கே.ரீ. கணேசலிங்கம்-

நன்றி: தீம்புனல்
