அரசியல் கட்டுரைகள்

இலங்கையின் வெளிவிவகாரத்தில் அனைத்து தரப்பையும் சமமாக பேண இயலுமா!

இலங்கை அரசியலில் புதிய ஆட்சியில் வெளிநாட்டு இராஜதந்திரியாக வருகை தந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கை-இந்தியா உறவை பலப்படுத்தும் உழைப்பில் செயல்பட்டுள்ளார். இலங்கையின் புதிய ஜனாதிபதியும் அவரது ஆட்சி முறையும் இலங்கைத் தீவின் வெளியுறவில் புதிய அத்தியாயத்தை வரையப்போவதாக இலங்கையின் அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இத்தகைய உரையாடல் இலங்கை அரசியல் தேவை, வெளியுறவில் புதிய அணுகுமுறையை ஏற்படுத்துமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அது எப்படி ஏற்படுத்தும் என்ற நோக்குடனேயே இக்கட்டுரை அமைய உள்ளது.

இராஜதந்திர உறவுகளில், இலங்கை அரசாங்கம் அனைத்து நாடுகளுடனும் சமமான முறையில் செயல்பட போவதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார். நாடு சிறிதோ, பெரிதோ அனைத்து நாடுகளுடனும் இலங்கை இராஜதந்திர உறவுகளை பெற முனைகிறது. “எங்களுக்கு எந்த வேறுபாடும் இல்லை. சீனா, இந்தியா, அமெரிக்கா, கியூபா ஆகிய நாடுகளுடன் இராஜதந்திர உறவு காணப்படுகின்றது. சில தினங்களில் சீனாவின் இராணுவ பயிற்சி கப்பல் ஒன்று இலங்கைத் தீவுக்கு வர உள்ளது. அதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியுள்ளது. இதனால் இலங்கைக்கு பாதுகாப்பு ரீதியில் எந்த பாதிப்பும் ஏற்படாது. முன்னதாக அமெரிக்கா இந்தியா மற்றும் ஜெர்மனியின் போர்க்கப்பல்கள் இலங்கைத் தீவுக்கு வருகை தந்துள்ளன. இதனால் இராஜதந்திர உறவுகளில் அனைத்து நாடுகளுடனும் சமமாக நடந்து கொள்கிறோம்” என அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளமை கவனிக்கத்தக்கது.

இதே நேரம் இலங்கைக்கு அக்டோபர்-04, 2024அன்று வருகை தந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை ஜனாதிபதியுடன் நீண்ட உரையாடலை நடத்தியுள்ளார். இருநாட்டுக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்துவது, அது சார்ந்து பொருளாதார ரீதியில் இலங்கைத் தீவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதும் அவரது பிரதான நோக்கமாக அமைந்திருந்தது. குறிப்பாக காங்கேசன்துறை துறைமுக விருத்திக்காக 61.5 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், விசேடமாக தயாரிக்கப்பட்ட 22 டீசல் இயந்திரங்களை இலங்கையின் இரயில்வே துறைக்காக வழங்குவதெனவும், எரிசக்தி, வலுசக்தி, சுகாதாரம், சுற்றுச்சூழல், சுற்றுலாத்துறை பால்வள மேம்பாடு மற்றும் டிஜிட்டல் முகாமைத்துவ விருத்தி போன்றவை தொடர்பாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை ஜனாதிபதியுடன் உரையாடி உள்ளார். மேலும், இந்தியா அண்மை காலங்களில் கடனாக வழங்கிய தொகைகளை மீள செலுத்துவதற்கான கோரலை கைவிடுவதாகவும் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி மிகப்பிரதானமாக மாகாண சபை தேர்தலை நடத்தி பதின்மூன்றாவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கூறியிருந்தார். பொருளாதார மறுசீரமைப்புக்கு தொடர்ச்சியாக இந்தியா உதவும் என்றும் இருநாட்டுக்கு இடையிலான நல்லுறவை பலப்படுத்துவது தனது விஜயத்தின் நோக்கம் என்பதையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் உறுதிப்படுத்தி இருந்தார்.

இது சார்ந்து எழுந்துள்ள எதார்த்தமான அரசிலைப் புரிந்து கொள்வது அவசியமானது ஆகும்.

முதலாவது, இந்திய வெளிவிவகார அமைச்சரின் வருகை இலங்கை இந்திய  உறவில் முக்கியத்துவமிக்கதாக காணப்படுகிறது. இந்தியா மாலைதீவின் அனுபவத்துக்கு பின்னர் இலங்கையுடன் நெருக்கமான உறவை பேணுவதற்கான அனைத்து விட்டுக் கொடுப்புகளையும் செய்வதற்கு முனைகிறது என்பதை இந்திய வெளிவிவகார அமைச்சரின் வருகை தெளிவுபடுத்துகின்றது. குறிப்பாக பொருளாதார ஒத்துழைப்பையும் கடன் வாய்ப்புகளையும் கையாண்ட விதம் அதனை ஆதாரப்படுத்துகிறது.

இரண்டாவது, இந்திய வெளிவிவகார அமைச்சர் மாகாணசபை தொடர்பான 13ஆம் திருத்தச் சட்டம் மூலம் தொடர்பில் முக்கியமான விடயத்தை தெரிவித்திருந்தார். 37 வருடங்களுக்குப் பின்னரும் அதனையே தொடர்ந்து இந்தியா பேச முனைகிறது என்பது அதன் பலவீனத்தை காட்டுகிறது. அதுமட்டுமின்றி இந்தியாவின் நலனுக்கு உட்பட்ட விதத்தில் 13வது திருத்த சட்டம் அமுலாக்கம் பற்றிய உரையாடலை அவ்வப்போதும் முன்வைக்கின்ற போது, இலங்கையயின் ஒருமைப்பாடு மற்றும் ஐக்கியம் போன்றவற்றை பலவீனப்படுத்தாத விதத்தில் அத்தகைய உரையாடலை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. இந்திய நலனுக்கும் தேவைகளுக்கும் அமைவாகவே 13ஆம் திருத்தத்தின் வடிவத்தை இந்தியா கையாண்டு வருகிறது. கடந்த காலம் முழுவதும் 13ஆம் திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டே இந்தியாவின் பார்வையும் அணுகுமுறையும் இலங்கை தமிழருக்கான அரசியல் தீர்வு மையப்படுத்தப்பட்டுள்ளதுத் அதனைக் கூட இராஜதந்திரிகள், தூதுவர்கள், வெளிநாட்டு அமைச்சர்கள் மற்றும் பிரதமர்கள் வருகை தரும் போது அதனை முதன்மைப்படுத்துவதில் கவனம் கொள்கிறனர். அதனை அமுலாக்கம் செய்வதோ அதில் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற அம்சங்கள் எவ்வகை அளவீட்டல் பலவீனப்படுத்தப்பட்டு இருக்கிறதோ என்பது பற்றி எத்தகைய உரையாடல்களையும் இந்திய தரப்பு முன்னெடுப்பது காண முடியாததாக உள்ளது. இதனால் இந்திய நலனுக்கு உட்பட்ட 13ஆம் திருத்தம் என்ற விவாதம் தெளிவாகவே தொடர்ச்சியாக புதிய ஆட்சியின் போதும் அதனையே முன்னுறுத்துகின்ற அரசியல் வறுமை இந்திய வெளிவிவகார அமைச்சரிடமும் காணப்படுகிறது.

மூன்றாவது, இத்தகைய இந்திய தரப்பில் அணுகுமுறை அமைந்த பிற்பாடு இலங்கையின் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அனைத்து நாடுகளுடனும் சமமான இராஜதந்திர உறவு காணப்படும் என்பதை முதன்மைப்படுத்தி உள்ளது. அவ்வாறாயின் இந்தியாவுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் சீனாவுக்கு வழங்கப்பட இருக்கும் முக்கியத்துவம் சமமானதாகவே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஆனால் இந்தியா புவிசார் அரசியல் ரீதியிலும் பொருளாதார கலாச்சார ரீதியில் கொண்டுள்ள உறவினை எவ்வாறு சமன் செய்வது என்ற கேள்வி முக்கியமானதாக அமைகின்றது. கடந்த காலங்களிலும் இத்தகைய அனுபவங்களை இலங்கைத் தீவு அனுபவித்துள்ளது. குறிப்பாக மகிந்த ராஜபக்ச ஆட்சி காலப்பகுதியில் மட்டுமின்றி கோத்தபாய ராஜபக்சா அவருடைய ஆட்சியிலும் இலங்கை தீவு அனுபவித்திருந்தது. இந்தியாவுக்கு வழங்கப்படும் முன்னுரிமை என்பது புவிசார் அரசியல் ரீதியில் மட்டுமின்றி பூகோள ரீதியிலும் வலிமையானது. மற்றும் ஒன்றாக காணப்படுகிறது. அதனால் இந்தியாவுக்கு வழங்கப்படும் அந்தஸ்தை சீனாவுக்கு வழங்குவது என்பது இலங்கையின் வெளிவிவகாரத்தில் அதீத  தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. அதனால் தற்போதைய புதிய ஆட்சியாளரின் இருப்பு என்பது அதிக நெருக்கடிக்கு உள்ளாகும் சூழலை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

நான்காவது, ஈழத்தமிழரின் அரசியல் தீர்வு தொடர்பாக 13ஆம் திருத்தத்துக்கு அப்பல் இந்தியா  செயல்பட தவறுவது என்பது; அல்லது அதற்கு முன் நகர்வை மேற்கொள்ள முனையாம இருப்பது என்பது; அதன் புவிசார் அரசியல் நட்புக்கான அடிப்படையை பலவீனப்படுத்துகிறது. ஈழத்தமிழர்களுக்கும் இந்தியாவுக்குமான நெருக்கமே இந்திய-கொழும்பு உறவை ஆரோக்கியமானதாக பேணுவதற்கு இலங்கை ஆட்சியாளர்கள் எப்போதும் முனைந்து வருகின்றமை கண்டு கொள்ள முடிகிறது. இதனால் ஈழத்தமிழர்கள் விவகாரம் இந்தியா நெருக்கடிமிக்க புவிசார் அரசியல் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக அமையும். காரணம் ஈழத்தமிழரின் அரசியல் இருப்பு முற்றாகவே சிதைந்துள்ள சூழலில் மேலும் சிதைவுகளை நோக்கி பயணிக்கும். அவ்வாறான ஒரு நிலைக்குள்ளேயே இந்தியாவின் அணுகுமுறை இலங்கை தீவு பொருத்தும்; ஈழத் தமிழர் பொருத்தும் அமைந்திருக்கின்றன. புதிய ஆட்சி வடக்கு-கிழக்கு நோக்கி தெளிவான கொள்கையோடு நகர்வதற்கான வாய்ப்பினை இந்தியா தொடர்ச்சியாக வழங்காத நிலை ஏற்படுமானால், ஈழத் தமிழர்களுடைய இறப்பு இந்தியாவுக்கான புவிசார் அரசியல் வாய்ப்புகளை முற்றாகவே இல்லாது செய்யும். அவகை சூழல் ஒன்றுக்கு உள்ளே ஈழத் தமிழர்கள் அரசியல் காணப்படுகின்றது. அதனை ஈழத் தமிழராக எதிர்கொள்வது என்பது கடினமாக மாறி உள்ளது. நலன்களும், தனிப்பட்ட விருப்பங்களும், அரசியல் புத்தியற்ற போக்குகளும் ஈழத் தமிழர்களிடம் அதீதமாக வளர்ந்துள்ளது. அதனால் இந்தியாவின் அணுகுமுறையும் அதே பார்வையில் அமையுமாக இருந்தால், நம்பிக்கை தரக் கூடிய விதத்தில் ஈழத்தமிழர் அரசியல் எதிர்காலம் அமைவதற்கான வாய்ப்பைக் கொண்டிருக்காது.

எனவே, புதிய அரசாங்கத்தின் புதிய வெளியுறவுக் கொள்கை அதிகம் ஆரோக்கியமானதாக தென்படவில்லை. அது ஒருபுறம் இந்தியாவுக்கு சமதியாக சீனாவையும் ஏனைய நாடுகளையும் கொள்ளுமாக இருந்தால், அதனால் ஏற்படப்போகும் விளைவுகள் இலங்கை தீவின் அரசியலை அதிகம் நெருக்கடிக்கு உள்ளாகும். ஈழத்தமிழர்கள் பொருத்து இந்தியா தனது புவிசார் அரசியல் இருப்பை தக்கவைக்க வேண்டுமானால், மிகத் தெளிவான தனது முதன்மையை உறுதிப்படுத்துகின்ற உறவினிலே பின்பற்றுவது அவசியமானது ஆகும். அதனை இந்திய விலக்குமாக இருந்தால் சீனாவுக்கு சமதையாக இந்தியாவும் அல்லது பாகிஸ்தானுக்கு சமதையாக இந்தியாவும் இருக்கின்ற ஒரு நிலை இலங்கையின் வெளியுறவில் அமையும். அதனால் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் அதன் வெளியுறவும் இலங்கை பொறுத்து மாலைதீவை நோக்கிய நிலைக்கு தள்ளப்படும் என்று கருத முடியும்.

-பேராசிரியர். கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)