அரசியல் கட்டுரைகள்

இஸ்ரேல்-அமெரிக்க கூட்டு நலன்களும் ஒருதலைப்பட்சமான போர் நிறுத்தல் உடன்பாடும்?

உலக வரலாறு முழுவதும் போரும் சமாதானமும் அரசியலாக காணப்படுகிறது. போரை நிகழ்த்துவதற்கு சமாதானத்தை ஓர் உபாயமாக பின்பற்றும் நடைமுறை ஒன்றுக்குள் உலகம் நகர்ந்துவருகிறது. அத்தகைய பரிமாணத்தில் மீளவும் ஹமாஸ்-இஸ்ரேல் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதுவும் முழுமையான ஒரு வடிவத்தை பெற்றுவிட்டது என்று கூறிவிட முடியாது. இருந்தாலும் ஒரு தரப்பின் ஒப்புதலோடு போர் நிறுத்தற்குரிய அடிப்படை உருவாக்கப்பட்டுள்ளது. பாரிய மனித அழிவுகளையும் உணவுக்காக பாலஸ்தீனர்கள் அலைந்து திரியும் துயரத்தையும் போரின் பிரதான ஆயுதமாக உணவை இஸ்ரேல் பயன்படுத்துவதும் துயரமான அரசியல் ஒன்றை அரங்கேற்றியுள்ளது. இக்கட்டுரையும் ஹமாஸ்-இஸ்ரேலியர் போர் நிறுத்த உடன்பாட்டில் யதார்த்தத்தை தேடுவதாக உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எகிப்து, கட்டர் போன்ற நாடுகளில் முயற்சியினால் ஹமாஸ்-இஸ்ரேல் போர் நிறுத்த உடன்பாடு (29.05.2025) சமகாலத்தில் எட்டப்பட்டுள்ளது. இஸ்ரேல் போர் நிறுத்த உடன்பாட்டின் அடிப்படைகளை அமெரிக்காவின் எண்ணத்திற்கு அமைவாக உடன்பட்டதோடு போர் நிறுத்த உடன்படிக்கைக்கான நகர்வுகளை உலகளாவிய ரீதியில் வெளிப்படுத்தியுள்ளது. அதன் பிரகாரம் உடனடியாக அமுக்கு வரும் விதத்தில் 60 நாட்கள் போர் நிறுத்த உடன்பாட்டை 06 நாட்களுக்கு முதல் கட்ட போர் நிறுத்த உடன்பாடாக தாம் ஏற்றுக் கொள்வதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. அக்கால பகுதியில் ஹமாஸ் 2023 அக்டோபரில் 07 இல் கைது செய்யப்பட்ட யூத பணயக் கைதிகளில் எஞ்சியுள்ள பணயக்கைதிகளில் 10 பேரை உடனடியாக இஸ்ரேலிடம் ஒப்படைப்பது என்றும் அதற்கு பதிலாக இஸ்ரேல் பிடியில் உள்ள 1236 பால ஸ்தீனியர்களை விடுதலை செய்வதென்று உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதே நேரம் போர் நிறுத்த உடன்பாட்டில் இஸ்ரேலிய தரப்பு ஒப்பம் இட்டிருப்பதாகவும் ஹமாஸ் அது தொடர்பில் சர்வதேச இராஜதந்திரம் தரப்புக்களுடன் உரையாடிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்ததோடு ஆறு நாட்களுக்குப் பின்னரான இரு மாத காலப்பகுதி போர் நிறுத்த உடன்பாட்டுக்கும் உயிருடனும் இறந்த நிலையிலும் காணப்படும் யூத பணயக் கைதிகளை முழுமையாக விடுதலை செய்வதும் போர் நிறுத்த உடன்பாட்டின் பிரதான நோக்கம் என தெரியவருகிறது. ஆனால் ஹமாஸ் தரப்பினரைப் பொறுத்தவரை இத்தகைய உடன்பாடு தமக்கான அடிப்படைகளைகள் எதனையும் கொய்டிருக்வில்லை என்றும் குறிப்பாக நிரந்தர போர் நிறுத்தம் மேற்கொள்வதுடன் காசா நிலப் பரப்பிலிருந்து முழுமையாக இஸ்ரேலிய இராணுவம் வெளியேற வேண்டும் என்ற நிபந்தனையும் ஒரு நாளுக்கு நூறு உணவு வாகனங்களை காசாவின் நிலப்பரப்புக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவாதத்தையும் அதற்கான கண்காணிப்பினை ஐக்கிய நாடுகள் நிவாரண பிரிவு மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியதோடு கடந்த கால போர் நிறுத்த உடன்பாடுகளில் இருந்து இது முற்றிலும் வேறுபட்ட ஒன்றாக எஉள்ளதென குற்றம்சாட்டியுள்ளது. மேற்குறித்த எந்த உத்தரவாதங்களையும் முன்வைக்காத ஒன்றாக போர்நிறுத்த உடன்பாடு காணப்படுவதனால் இது ஹமாஸ் தரப்பினால் அதிகம் விவாதிக்கப்படுகிறது. இருந்த போதும் சர்வதேச அரசியலில் இப்போர் நிறுத்த உடன்பாடு நிகழ்ந்திருப்பதாகவே பிரச்சாரங்களும் அதற்குரிய நகர்வுகளும் வெள்ளை மாளிகையால் அரங்கேற்றப்பட்டு வருகிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக இப் போர் நிறுத்த உடன்பாட்டுக்கான ஒப்புதலை முன் வைத்திருக்கின்றன. இப்போர் நிறுத்த உடன்பாடு ஒரு பக்கசார்பானது என்ற ஹமாஸ் அமைப்பின் குற்றச்சாட்டு நியாயமானதாகவே தெரிகிறது இதனை அழமாக தேடுதல் அவசியமானது.

முதலாவது அரைகுறையான போர் நிறுத்த உடன்பாடு ஏன் முதன்மைப்படுத்தப்பட்டது என்ற கேள்வி பிரதானமானது. இஸ்ரேல் காசா நிலப்பரப்பு நிகழ்த்தும் தாக்குதலானது பாரிய மனித அழிவுகளை ஏற்படுத்துவதோடு சர்வதேச மட்டத்தில் அதிக அதிர்வலைகளை கொண்டிருக்கிறது. ஐரோப்பிய நாடுகள் வெளிப்படையாக இஸ்ரேலின் நடவடிக்கை கண்டித்ததோடு பாதுகாப்பு சபையில் இனப்படுகொலை பற்றிய விவாதங்கள் நிகழ்த்தப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடு சபை பாரிய கண்டனங்களையும் எதிர்ப்புக்களையும் காசாவில் நிகழ்வது இனப்படுகொலை என்பதையும் வெளிப்படுத்திவருகின்ற சூழலில் இவ்வாறான ஒரு போர் நிறுத்த உடன்பாடு இஸ்ரேலிய அரசாங்கத்துக்கும் அமெரிக்காவுக்கும் தேவையானதாக உள்ளது. இஸ்ரேல் நிகழ்த்துகின்ற அனைத்து தாக்குதலுக்கும் பின்னால் சமாதானத்தை போதிக்கும் டொனால்ட் ட்ரம்ப்ன் தலைமையிலான அமெரிக்கா அணிவகுத்துள்ளது என்பது தெளிவானது. அப்படியாயின் இவற்றை குறிப்பிட்ட காலத்திற்கு தணிப்பது அல்லது போருக்கு ஒரு ஓய்வு கொடுப்பதும் உலக நாடுகள் மீதான கண்டனங்களில் மாற்றங்களை உருவாக்குவது இதன் பிரதான நோக்கமாக காணப்படுகிறது. போர் நிறுத்த உடன்பாடு எந்த அடிப்படையில் அர்த்தம் பொதிந்ததாக இல்லாத சூழலில் அது அரங்கேற்றப்படுகின்ற விதம் பிரச்சாரப்படுத்தப்படுகின்ற முறைமை அதன் மீதான குழப்பத்தையும் சந்தேகத்தையும் தருகிறது.

இரண்டாவது யூதபடைகள் பெருமளவுக்கு நெருக்கடி மிக்க ஒரு சூழலுக்குள் உளவியல் ரீதியான தாக்கங்களுக்குள் உள்ளாகியிருக்கின்றன. அதை சரி செய்வதற்கும் அவற்றை மீள் எழுச்சி பெற வைப்பது போர் நிறுத்த உடன்பாடு ஒன்று அவசியமானதாக காணப்படுகிறது. தொடர்ச்சியான தாக்குதல்களும் படுகொலைகளும் மீள மீள ஒரே பிரதேசத்தின் மீது தாக்குதல் நடத்த பணிக்கப்படுகின்ற சூழலும் யூத இராணுவத்தின் உளரீதியான நெருக்கடிகளை தோற்றுவித்துள்ளது. எனவே இதிலிருந்து ஒரு தற்காலிக இயல்பு தன்மை ஒன்றை அடைவதற்கான தேவைப்பாடு இஸ்ரேலிய அரசாங்கத்துக்கு எழுந்திருக்கிறது. அதனால் போர் நிறுத்த உடன்பாடு ஒன்று ஒருதலை பட்சமாக மேற்கொள்ளப்படுகிறது.

மூன்றாவது இஸ்ரேலிய இராணுவம் பெருமளவுக்கு ஆயுத தளபாடங்களை அமெரிக்காவிடமிருந்தும் ஐரோப்பிய நாடுகளிடமிருந்து பெற்றுக் கொள்வது வழமையான செய்முறை ஒன்று காணப்படுகிறது. அதில் ஐரோப்பிய நாடுகள் வெளிப்படுத்தி இருக்கும் நெருக்கடியானது தற்காலிகமான ஒரு விட்டுக் கொடுப்புக்கு இஸ்ரேலிய அரசாங்கம் போக வேண்டிய தேவைப்பாடு எழுந்திருக்கிறது. அவ்வாறான சூழலுக்குள் ஐரோப்பிய நாடுகளின் வேண்டுதலையும் இஸ்ரேல் கருத்தில் கொண்டதாக காட்டுவதோடு அதன் பின்னால் ஆயுத கொள்வனவை சாத்தியப்படுத்திக் கொள்ள முடியும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காகவே போர் நிறுத்த உடன்பாட்டில் இஸ்ரேல் ஒப்பமிட்டுள்ளது.

நான்காவது இப்போர் நிறுத்த உடன்பாட்டின் மூலம் ஹமாசின் அரசியல் தனித்துவத்தை முற்றாகவே தகர்ப்பதற்கு அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு திட்டமிட்டுள்ளது. இப்போர் நிறுத்த உடன்பாட்டை ஒரு தலை பட்சமாக அமுல்படுத்துகின்ற அதே சந்தர்ப்பத்தில் யூதர்களுக்கு ஆதரவான பாலஸ்தீன தரப்புகளையும் மற்றும் யூதர்களையும் கொண்ட அணியானது பாலஸ்தீனிய அகதிகளின் உணவு தேவைகளை நிறைவு செய்வதற்கான உத்தியொன்றை இஸ்ரேல் அமெரிக்க கூட்டு வகுத்துள்ளது. அதற்கு ஊடாக இரு தரப்பும் காசா நிலப்பரப்பில் செல்வாக்கு செலுத்தவும் அங்குள்ள பாலஸ்தீனர்களை அரவணைத்து செயல்படவும் போர் நிறுத்த உடன்பாட்டை வாய்ப்பான காலபகுதியாக இஸ்ரேல்-அமெரிக்க கூட்டு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. போர் நிகழ்ந்த பிரதேசங்களை நோக்கி அத்தகைய இஸ்ரேல்-அமெரிக்க ஆதரவு தரப்புகள் உணவு பொதிகளையும் அகதிகளின் உணவுத் தேவைகளையும் தொடர்ச்சியாக வகை தொகை இன்றி வழங்கிவருகிறது. இது கால போக்கில் அதற்கான நிபந்தனைகளை அதிகரித்து உணவு தேவையை நோக்கிவரும் மக்களை ஹமாஸ்ரமிருந்து பிரித்து கையாளுவதற்கு திட்டமிட்டுள்ளது. இது ஒரு வகை பிரித்தாளும் தந்திரோபாயமாகும். அரசியல் ரீதியான உபாயமாகக் காணப்படுகிறது. இதன் மூலம் காசா நிலப்பரப்பை இஸ்ரேலிய தரப்புக்குள் கொண்டு வருவதோடு பணயக் கைதிகளாக கைது செய்ய வைக்கப்பட்டுள்ள யூதர்களை மீட்டெடுப்பதற்கான புலனாய்வுப் பணிகளையும் தீவிரபடுத்த திட்டமிட்டுள்ளது.

ஐந்தாவது அமெரிக்காவின் நலன்கள் உட்பட்ட விதத்தில் போர் நிறுத்த உடன்பாட்டை இஸ்ரேலியர்களுக்கு சாதகமாகவும் அதே நேரத்தில் இஸ்ரேலில் அமெரிக்காவுடனும் மேற்குடனும் இசைந்து பயணிக்க கூடிய விதத்திலான உத்திகளையும் போர் நிறுத்த உடன்பாடு உள்ளடக்கி உள்ளது. குறிப்பாக அமெரிக்கா இஸ்ரேலியர் கூட்டணி என்பது அவ்வப்போது விரிசல்களையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்த முனைகிறது என்ற பிரச்சாரம் நிலவுகிறது. இஸ்ரேலின் நட்பு நாடும், உலகமும் அமெரிக்கா என்பதை நிராகரித்து விட முடியாது. அப்படியான ஒரு சூழலை ஒரு போதும் இழப்பதற்கு இஸ்ரேல் தயாராகாது. அதனால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்ன் தனித்துவங்களையும் அவரது சமாதான முயற்சியையும் இஸ்ரேல் நிராகரித்துவிட்டு செயல்பட முடியாது. அதனால் ஒரு தற்காலிக விட்டுக்கொடுப்புக்கு இஸ்ரேல் போவதனால் அதிக நெருக்கடி எதுவும் அத் தரப்புக்கு ஏற்படப்போவதில்லை. அதனால் ஒரு விட்டுக் கொடுப்பை இஸ்ரேல் முன்னகர்த்தவும் அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு வலுவான உறவை கொண்டிருக்கவும் இவ்வகையான போர் நிறுத்த உடன்பாடுகள் தேவையாக உள்ளது.

எனவே 2023 ஹமாசின் ஊடுருவல் தாக்குதலுக்கு பின்னர் பல போர் நிறுத்த உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. ஆனால் அவை எதுவும் முழுமையாக இஸ்ரேலிய தரப்பினால் அமுல்படுத்தப்படவில்லை. ஏதோ ஒரு காரணத்தை இஸ்ரேலிய தரப்பு முன்வைத்துக் கொண்டு அத்தகைய போர் நிறுத்த உடன்பாட்டை மீறி உள்ளது. இங்கு போர் என்பது ஒரு தரப்பாகவே நிகழ்த்தப்படுகிறது என்பதும் அதரப்பு போரைக் கைவிட்டால் அல்லது போர் நிறுத்த உடன்பாட்டுக்கு விரைந்தால் போர் நிறுத்தம் காட்சிப்படுத்தப்படும் என்பது தவிர்க்க முடியாத யதார்த்தமாகும். அதனால் போர் நிறுத்த உடன்பாடு இஸ்ரேலிய நலனுக்கும் அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு நலனுக்கும் உகந்தது ஒன்றாக கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. இதனை மீறுவதும் பின்பற்றுவதும் அத்தகைய இரு நாடுகளும் திட்டமிடலே அன்றி ஹமாஸ் சார்ந்தது அல்ல என்பது இதன் உள்ளடக்கத்தை அவதானிக்கின்ற போது கண்டு கொள்ள முடிகிறது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)