நூல் குறிப்பு
நூல் தலைப்பு: சீனாவும் இந்துசமுத்திரமும்
நூலாசிரியர்: கலாநிதி கே.ரீ. கணேசலிங்கம்
முதற் பதிப்பு: 2017
பதிப்பபாளர்: சதபூ.பத்மசீலன்
அச்சிடல்: சேமமடு பதிப்பகம், கொழும்பு-11.
வெளியீடு: சேமமடு பொத்தகசாலை.
பக்கங்கள்: xviii+142
ISBN: 978-955-685-045-1
முன்னுரை
‘சீனாவும் இந்துசமுத்திரமும்’ என்ற இந் நூல் கடந்த மூன்று வருடங்களாக கலாநிதிப்பட்ட ஆய்வினை மேற்கொண்ட போது தேடப்பட்ட தகவல்களின் மேலதிக வாசிப்பினால் உருவானதாகும். இன்றைய உலக ஒழுங்கு பற்றிய தேடலில் மிகப்பிந்திய முடிவுகளை வெளியிடும் அமெரிக்கப் பல்கலைக்ககைமான ஹவாட்ன் சர்வதேச அரசியல் கற்கையின் பேராசிரியரான ஜோஸப்நை இன் கருத்துக்கள் கவனத்திற்குரியவை.
அவர் தொடர்ச்சியாக உலக ஒழுங்குபற்றிய ஆய்வில் ஈடுபட்டுவருவதனால் இன்றைய உலக ஒழுங்கின் போக்குகளை சரிவர முன்வைத்து வருபவராக உள்ளார். அவரது வாதமே அமெரிக்கா தலைமையிலான மேற்கு உலகம் முடிபுக்கு வந்து கொண்டிருப்பதாகவும் பலதுருவ ஒழுங்குக்குள் உலகம் நகர்வதாகவும் அதில் சீனாவின் பங்கு அதிகமானதெனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் இராணுவ – அரசியல் வலுவை சீனா சமப்படுத்தாது விடினும் பொருளாதாரத்தில் மிகப் பெரும் சக்தியாக எழுச்சியடைந்துள்ளது எனக் குறிப்பிடுகின்றார். ஆனால் அமெரிக்காவின் முன்னாள் வெளிவிவகார செயலாளரும் ஜனநாயகக்கட்சியின் ஜனாதிபதி வேப்பாளராக விளங்கியவருமான கில்லாரி கிளின்டன் சீனா இராணுவ ரீதியில் அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்கும் நாடாக வளர்ந்துள்ளதுடன் அமெரிக்காவை வேவுபார்க்கும் நாடாக உள்ளதென குறிப்பிடுகின்றார். உலகை அமெரிக்கா வேவுபார்க்க அமெரிக்காவை சீனா வேவுபார்க்கின்றது என்றால் அதன் வலியை வளர்த்துள்ளது என்பதையே காட்டுகின்றது. இருந்த போதும் சீனாவை வெற்றி கொள்ள அல்லது எழுச்சியை தடுக்க அமெரிக்க உலகளாவிய கூட்டுக்களைப் பலப்படுத்தி வருகிறது. குறிப்பாக ஜப்பான், ஐரோப்பிய யூனியனின் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை அமெரிக்க தனது அணிக்குள் வைத்துக் கொண்டு சீனாவை எதிர்கொள்கிறது. இத்தகைய அணியின் பலத்துடன் உலக ஒழுங்கு ஒரு பல்துருவ அரசியலுக்குள் பிரவேசித்துள்ளது என்பதை ஜோசப்நை குறிப்பிடுகின்றார். அவரது வாதம் மிக நியாயமானதாகவே அமைந்துள்ளது. சீனா, ரஷ்யா, என்பன ஒரணியிலும் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான், பிரித்தானிய ஓரணியிலும் பயணித்த போதும் பொருளாதார, அரசியல் இராணுவ நிலையில் ஒன்றில் ஒன்று தங்கியுள்ளது என்பதே பல்துருவ அணிக்கான பரிமாணமாக உள்ளது. இதுமட்டுமன்றி அரசியலிலும், இராணுவத்திலும் அமெரிக்க அணிவல்லமை பொருந்தியதாக அமைய சீனா பொருளாதார பலத்தையும் இராணுவ கடற்பலத்தையும் கொண்டிருக்கிறது. இதனை இன்னோர் அமெரிக்க ஆய்வாளரும் முன்னால் இந்தியாவுக்கான அமெரிக்கதூதுவருமான வில்லியம் ஆவேரி குறிப்பிடுவது கவனத்திற்குரியது.
உலகிலேயே சீனா 1.6 மில்லியல் இராணுவத்தைக் கொண்டுள்ள நாடு 2025 இல் அமெரிக்காவின் கடற்படையைவிட வலுவுடைய கடற்படையைக் கொண்ட நாடாகமாற உள்ளது. 2010 இல் சீனா 119 பில்லியன் அமெரிக்க டொலரை பாதுகாப்பு செலவீனத்திற்கு ஒதுக்கியிருந்தது. அது 2020 இல் 225 பில்லியன் அமெரிக்க டொலராகவும் 2030 இல் 425 பில்லியனாகவும் அமையவுள்ளது என்கின்றார் ஆவேரி. இதனால் சீனாவின் இராணுவ பலம் அதிகரிக்கப் போகிறது. அதிலும் கடற்படை மிக அதீதமானதாக அமையவுள்ளது. காரணம் சமுத்திரங்கள் மற்றும் கடல்கள் வர்கத்துடனும் போக்குவரத்துடனும் வளங்களை அதிகம் கொண்டுள்ள வகையிலும் மிக முக்கியம் பெறுகிறது. இதனால் சமுத்திரங்களை நோக்கி வல்லரசுகளின் நகர்வுகள் முதன்மையடைந்துள்ளன.
ஏறக்குறை உலக வர்த்தகத்தில் 90 சதவீதத்திற்கு மேல் சமுத்திரங்களுடாகவே பொருட்கள் பரிமாற்றப்படுகின்றன. பனாமா, சுயஸ் கால்வாய்களின் முக்கியத்துவமும், மலாக்கா நீரிணையின் பங்கும் கப்பல் போக்குவரத்தின் பிரதான பகுதிகளாக உள்ளது. சீனாவின் எண்ணெய் இறக்குமதி மலாக்கா நீரிணையூடாக ஏறக்குறைய 40 சதவீதம் நிகழ்கிறது. சீனாவுக்குரிய மிகப் பிரதான பிரச்சினை சக்திவள நெருக்கடியாகும். இதனால் உலகிலுள்ள எண்ணெய்வளம் உள்ள அனைத்துப் பிராந்தியங்களுடனும் தரை, கடல் ரீதியான தொடர்புகளை ஏற்படுத்தி சீனா மக்களின் நுகர்வுக்கு அவசியமான எண்ணெய் வளத்தினை இறக்குமதி செய்கின்றது.
ஆனால் சீனாவின் சக்திவள நெருக்கடியை ஒருவகை உபாயமாக கருதும் அமெரிக்கா சமுத்திரங்களை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர சக்திவள நெருக்கடியை ஒரு தந்திரோபாயமாக கொண்டு சீனாக்கடற்படை பலமடைகிறது எனக் குறிப்பிடுகின்றது. ஏனெனில் இத்தகையை மரபார்ந்த பாணியிலேயே அமெரிக்கா தனது கடற்படையை உருவாக்கியதாகவும் அதனை உருவாக்கி திட்டமிட்ட அட்மிரல் தயா மாகன் குறிப்பிடுகின்றார். ஏறக்குறைய சீனா தயாமாகனின் அதே அணுகுமுறையை பின்பற்றி தனது கடற்படை கொள்கையை வளர்த்து வருகின்றது.
2012 இல் சீனா தனது கடற்படையை நவீனமயப்படுத்தும் திட்டத்தை 1980, 1990, 2000 ஆண்டுகளுக்கு பின் முன்வைத்தது. அதன் பிரதான இலக்குகளாக பின்வருவனவற்றை முதன்மைப்படுத்தி வெளியிட்டது.
1. எதிரி படைகளின் தாக்குதலை எதிர்கொள்ளும் விதத்தில் ஆயுத தளபாடங்களை கடற்படையுடன் சேர்த்துக்கொள்ளுதல் குறிப்பாக சீனாவின் பாதுகாப்பு திணைக்களம் (DOD) பின்வரும் ஆயுத தளபாடங்களை கடற்படையுடன் இணைப்பதென தீர்மானித்துள்ளது.
அ) ஏவுகணைகள் – ASBMs, ASCMs, LACMs, SAMs
ஆ) கடற்படைக்கான கப்பல்கள் தாக்குதல் திறன்கொண்ட நீர்மூழ்கிகள், விமானத் தாங்கிக் கப்பல்கள், அழிவை ஏற்படுத்தும் படகுகள், பழைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தைக் கொண்ட போர்க்கப்பல்கள், ரோந்துக்கப்பல்கள், நீரிலும், தரையிலும் பயணம் செய்யக்கூடிய கப்பல்கள், மிதக்கும் வைத்தியசாலை கப்பல்கள், என்பனவற்றுடன் கட்டளையும் கட்டுபாடும், தொடர்பாடலும் கணணிவலையமைப்பும் புலனாய்வும், கண்காணிப்பையும் மற்றும் இராணுவப் புலனாய்வுகளையும் கொண்டு செயற்படுதல்.
2. எதிர் தாக்குதல் கடல், பிரிவு ஒன்றை உருவாக்குதல் அப்படைப்பிரிவு C41SR முறைமையைக் கொண்டியங்குவதாக திட்டமிட்டுள்ளது.
3. சீனாவின் ஆட்புலம் பிரதேசமாக தென்சீனாக்கடல் பகுதியையும், கிழக்கு சீனாக்கடற்பகுதியையும் (ECS) சர்வதேச கடல் சட்டங்களுக்கு அமைவாக ஏற்படுத்திக் கொள்ளுதல்.
4. சீனாவின் கடல்பகுதியில் 200 கடல்மைல் தூரத்திற்குள் (EEZ) எந்த வெளிநாட்டு கடற்படை மற்றும் இராணுவ நடவடிக்கைக்கு அனுமதி வழங்குவதில்லை என்பது
5. சீனாவிற்கான சக்திவளத்தை பெறுகின்ற நோக்குடன் இந்துசமுத்திரம் உட்பட பாரசீகக்குடா வரையான பிரதேசத்தில் கடல் வலையத் தொலைத்தொடர்பு (SLCN) நடவடிக்கையை பேணுதல், பாதுகாத்தல், பயன்படுத்துதல்.
என்ற இலக்குடன் சீனா தனது கடற்படையை நவீனமயப்படுத்தி வருகிறது. அதன் சாராம்சமாகவே சீனாவானது இந்துசமுத்திரம் நோக்கி தனது கடற்படையை நகர்த்துகின்றது. இதனால் ஏற்பட்ட உந்துதலாகவே முத்துமாலைத் தொடரும் இந்துசமுத்திர நாடுகளுடனான சீனாவின் உறவும் காணப்படுகின்றது.
அதன் அடிப்படையிலேயே சீனாவும் இந்து சமுத்திரமும் என்ற நூல் எழுதப்பட்டுள்ளது. இதன் பொருளடக்கத்தில் ஐந்து அத்தியாயம் உள்ளடக்கப்பட்டுள்ளது.
முதலாவது அத்தியாயம் இந்து சமுத்திரம் பற்றிய பொதுவான அறிமுகமாக அமைந்துள்ளது. இந்தப்பகுதி புவிசார் அரசியலுக்கான அடிப்படையாக தரப்பட்டுள்ளது.
இரண்டாவது அத்தியாயம் ஆரம்பகால சீனா இந்து சமுத்திர உறவு ஆராயப்படுகிறது. அது முழுமையாக ஒரு வரலாற்று பதிவினை ஓர் ஒழுங்கில் தரமுயற்சிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி சீனாவின் இந்து சமுத்திரம் சார் செல்வாக்கினை கோடிகாட்ட முயலுகின்றது மட்டுமன்றி கடற்படையின் தோற்றத்தில் மேற்கு நாடுகளை விட முன்னோடியாக சீனா விளங்கியதென்பது மிகத் தெளிவான ஆதாரங்களுடன் தரப்படுகின்றது.
மூன்றாம் அத்தியாயம் மிக நீண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சீனாவின் முத்துமாலைத் தொடர் பற்றிய பகுதியாகும். இன்றைய உலகப் போட்டியில் அதிகம் பேசப்படும் முத்துமாலைத் தொடர் பிராந்திய சர்வதேச அரசியலில் ஏற்படுத்திவரும் தாக்கங்களை ஆராய முயற்சிக்கப்பட்டுள்ளது. இதில் முத்துமாலைத் தொடரின் கடல்சார் துறைமுகங்களின் புவிசார் உறவுகளும் அதன் விளைவுகளும் மிகத்தெளிவாக பரிசீலிக்கப்பட்டுள்ளது. மேலும் சீனா கடல்சார்க் கொள்கையும், உருவாக்கத்திற்கு பின்புலமாக அமைந்துள்ள சீனாவின் சக்திவள நெருக்கடியும் தெளிவாக ஆராயப்பட்டுள்ளது.
நான்காவது அத்தியாயம் இந்துசமுத்திர விழிம்பு நாடுகளுடன் சீனாவின் உறவு ஆராயப்பட்டுள்ளது. சீனா உலக வல்லரசாகும் நோக்குடன் இந்துசமுத்திர நாடுகளை நட்புறவினால் கையாள முனைகின்றமை குறிப்பிடப்படுகிறது. பொருளாதார உதவியும், உடன்படிக்கைகளும் நேரடி முதலீட்டு முயற்சிகளும், நன்கொடைகளும் அதீதமான தலையடற்ற வர்த்தக கொள்கைப்போக்கும் சீனாவினது உபாயமாக காணப்படுகிறது. மேற்குலகத்திற்கு நேர்மாறான நட்பினை உருவாக்கி வரும் சீனா ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை இவ்வத்தியாயம் கூற முயலுகின்றது.
ஐந்தாம் அத்தியாயம்; இலங்கையின் கொழும்புத் திட்டமும் சீன ஒத்துழைப்பும் தெளிவுபடுத்தப்படுகிறது. இதன் முக்கியத்துவம் கருதி தனி அத்தியாயமாக ஆய்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.
முடிவுரை என்ற ஆறாம் அத்தியாயம், அத்தியாயங்களின் தொகுப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
-கலாநிதி.கே.ரீ.கணேசலிங்கம்.-