அரசியல் கட்டுரைகள்

சீன வெகுஜன எழுச்சியும் துப்பாக்கி முனையிலிருந்து பிறந்த அதிகாரமும்

சீனாவின் அரசியலில் 1989ஆம் ஆண்டில் நிகழ்ந்தது போன்ற நகர்வொன்றுக்கான போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அங்கு ‘பூச்சிய கொவிட்'(Zero Covid) கொள்கையை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையை சீன ஆட்சியாளர்கள் அமுல்படுத்த திட்டமிட்டதன் விளைவாக அதற்கு எதிரான போராட்டங்கள் நிகழ்ந்துவருகின்றன. அது சீனாவின் இனவாதத்தை தூண்டுவதாகவும் சீனா மேலும் இரும்புத்திரை அரசியலுக்குள் அதீதமாக பிரவேசிப்பதைத் தூண்டுவதாகவும் மேற்கு ஊடகங்கள் சுட்டிக்காட்டி வருகின்றன. இவ்வாறான சூழலில் கடந்த நவம்பர்(2022) இறுதி வாரங்களில் சீனா முழுவதும், நாட்டின் கடுமையான ‘பூச்சிய கொவிட் தொற்றுநோய்’ கொள்கைக்கு எதிராக வெகுஜன எதிர்ப்புகள் வளர்ந்துள்ளன. பல நகரங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் விரக்தியை வெளிப்படுத்த தெருக்களில் இறங்கினர். அரசாங்கமும் பதில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஆரம்பித்தது. இக்கட்டுரையும் வெகுஜன போராட்டத்தின் உள்ளடக்கத்தையும் அதன் விளைவுகளையும் தேடுவதாக உள்ளது.

1949இல் மாவோ சே துங் தலைமையிலான சீனப்புரட்சி, சீனாவின் வரலாற்றை புதிய திசையில் நகர்த்தியது. ஆனால் அத்தகைய புரட்சி நிகழ்ந்து சொற்ப காலத்திலேயே கலாசாரப் புரட்சியென்ற பெயரில் சீனக்கம்யூனிஸக் கட்சிக்கு எதிராக எழுந்த எதிர்ப்புகளை நசுக்கும் வரலாறு தொடங்கியது. 1966ஆம் ஆண்டு நிகழ்ந்த காலாசாரப் புரட்சியில் பெருங் களையெடுப்பு அரங்கேறியது. இதன் பின்னர் 1989இல் தினமென் சதுக்கத்தில் அரசுக்கு எதிராக எழுந்த எதிர்ப்புப் போராட்டத்தை சீன ஆட்சியாளர்கள் இராணுவ கவச வாகனங்களை பயன்படுத்தி இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்களை நசுக்கிக் கொன்றொழித்த வரலாறு நிகழ்ந்து முடிந்தது. இவ்வாறு சீனாவின் வரலாறு முழுவதும் அரசுக்கு எதிரான போராட்டங்களை அழித்தொழிப்பதை சீன சோ‌ஷலிசம் இயல்பாகக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகின்றது. சமகாலத்தில் சீனாவில் எழுச்சி பெற்றுள்ள வெகுஜன போராட்டம், சீனாவின் மேற்கு பிராந்தியமான சின்ஜியாங்கின் தலைநகரான உரும்கியில் நவம்பர்-24(2022)அன்று ஏற்பட்ட கொடிய தீ விபத்தைத் தொடர்ந்து ஆரம்பித்துள்ளது. தீ விபத்தில் குறைந்தது 10 பேர் இறந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தின் வீடியோக்கள் தீயணைப்பாளர்களை சென்றடைய தாமதப்படுத்தியமையே பொதுமக்களின் கோபத்திற்கு வழிவகுத்தது. மேலும் இறுக்கமான பூச்சிய கொவிட் கொள்கையால், நகரம் 100 நாட்களுக்கும் மேலாக பூட்டப்பட்ட நிலையில் இருந்தது. குடியிருப்பாளர்கள் இப்பகுதியை விட்டு வெளியேற முடியவில்லை, மற்றும் பலர் வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சீன அரசாங்கத்தால் பின்பற்றப்படும் பூச்சிய- கொவிட் அணுகுமுறை சீனாவில் நோய்த் தொற்றுகளைத் தடுக்கிறது.

உரும்கி குடியிருப்பாளர்களின் ஆரம்ப எதிர்ப்புக்களுக்கு சீன உள்ளூர் அரசாங்கம் முடக்கத்தை கட்டங்களாக நீக்குவதாகக் கூறியது. ஆனால் தெளிவான காலக்கெடுவை வழங்கவில்லை. இது பொதுமக்களின் கோபத்தைத் தணிக்கத் தவறியது, மற்றும் எதிர்ப்புக்கள் சின்ஜியாங்கிற்கு அப்பால் வேகமாகப் பரவியது. சீனா முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வசிப்பவர்களும் வீதிகளில் இறங்கினர். போராட்டத்தின் வீச்சு அதிகரித்தமையால், போராட்ட கோரிக்கைக்குள் அதிக அரசியல் சுதந்திரத்தையும் சீன ஜனாதிபதி ஜின்பிங்கை பதவியிலிருந்து அகற்றவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பாரிய அளவிலான போராட்டங்கள் சீனாவில் மிகவும் சாதாரணமானவை எனக்கருதிவிட முடியாது. உள்ளூர் பலவீனங்கள் மீதான ஆர்ப்பாட்டங்கள் அவ்வப்போது நிகழும். இறுக்கமான பூச்சிய கொவிட் கொள்கைக்கு எதிரான போராட்டத்தையும் சீன அரசாங்கம் விரைவாக கையாளத் தொடங்கியுள்ளது. பிரதான போராட்ட பிரதேசங்களில் காவல்துறையை நிலைநிறுத்தியதுடன், சமூக ஊடகத் தணிக்கையை கடுமையாக்கியது.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் சீனாவை பாரிய நெருக்கடிக்கு உள்ளாக்கியதனால் பல நகரங்கள் கொவிட் கட்டுப்பாடுகளை எளிதாக்க நடவடிக்கை எடுத்துள்ளன. அதேநேரம் கொவிட் கட்டுப்பாடுகளுக்கு சாதாரணமான அணுகுமுறையை மேற்கொள்ள ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சமீபத்திய நாட்களில், பீஜிங் உட்பட சீனா முழுவதும் குறைந்தது ஆறு நகரங்கள் தங்கள் கொவிட் கொள்கைகளில் மாற்றங்களைச் செய்துள்ளன, சில சந்தர்ப்பங்களில் கட்டுப்பாடுகளை நீக்குதல், தனிமைப்படுத்தல்களை எளிதாக்குதல் மற்றும் வெகுஜன சோதனைகளை நீக்குதல் என்று நடவடிக்ைககள் மேற்கொள்ளப்படுவதாக சீன அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது. இது பூச்சிய கொவிட் கொள்கை முடிவுக்கு வரக்கூடும் என்ற ஊகத்தை வெளிப்படுத்துகிறது. ஆனால் இத்தகைய போராட்டங்களுக்கு பின்னால் இருக்கக் கூடிய காரணங்களை விளங்கிக் கொள்வது அவசியமானதாகும்.

ஒன்று, சீன அரசாங்கத்தால் கொவிட்-19 பெருந்தொற்றின் ஆபத்துக்களை தவிர்ப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் பூச்சிய கொவிட் கொள்கை சீன தேசியவாதத்தை கட்டமைப்பதில் முதன்மையான கூறாக சமகாலத்தில் அமைந்துள்ளதாக தெரியவருகிறது. இது பிற நாடுகளைச் சேர்ந்தவர்களின் மீதான வெறுப்பு அல்லது பயத்தின் வலுவான உணர்வாக அமைகிறதாகவும் உணரப்படுகிறது. அதாவது வெளிநாட்டினர் மீதான பயம் என்று புரிந்து கொள்ளப்படுகிறது. சீனா பூச்சிய கொவிட் கொள்கையூடாக சீன மக்களிடையே வெளிநாட்டினர் மீதான பயத்தை உருவாக்கி சீன தேசியவாதத்தை வளர்த்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. தேசியவாதத்தினூடாக பெரும்பாலும் இனவெறி மற்றும் இன-தேசியவாதம் சீனாவால் ஊக்குவிக்கப்படுகிறது. இது ஒருவரின் தேசத்தின் மீதான பற்றினை அதிகரிப்பதுடன் வெளிநாட்டினர் மீதான பயத்தையும், சந்தேகத்தையும் மற்றும் விரோதத்தையும் தூண்டுகிறதாக கணிப்பிடப்படுகிறது கொரோனா வைரஸின் அடிப்டைகள் பற்றிய சீன விவரிப்புகளிலும், வெளிநாட்டு பார்வையாளர்கள் சீனாவுக்குள் நுழையும்போது அவர்கள் மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், மற்றும் சீன நடைமுறைகளிலும் வெளிநாட்டினர் மீதான பயம் கட்டமைக்கப்படுகின்றது.

இரண்டு, பூச்சிய கொவிட் கொள்கை வெளிநாட்டு வருகையாளர்களுக்கு இறுக்கமான நிபந்தனைகளை விதித்தது. நோய்த்தொற்று தொடர்பில் வெளிநாட்டினர் மீதான இறுக்கமான நிபந்தனைகள் உடனடியாக மட்டுப்படுத்தப்படவில்லை. 2022 செப்டம்பரில் சீனா தனது முதல் குரங்கம்மை காய்ச்சலை உறுதி செய்தது. இதன் பின்னர் சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வு ஜுன்யூ வெளிநாட்டவர்களுடன் நெருக்கமாக தொடர்பு கொள்ள வேண்டாம் எனப்பொதுமக்களிடம் கேட்டுக் ெகாண்டார். சர்வதேச வருகையாளர்களுக்கான இந்த கொடூரமான தனிமைப்படுத்தல் சீனாவுக்கு வெளியே உள்ள மக்களை அதன் தேசிய பாதுகாப்பிற்கு சாத்தியமான அச்சுறுத்தல்களாக காண்பிக்கின்றது. இது சீன மக்களிடையே சீனர்கள் மற்றும் அந்நியர்கள் என்ற பரஸ்பர பிரத்தியேக தேசியவாத உணர்வை வளர்க்கிறது. சீன அரசின் பூச்சிய கொவிட் கொள்கையால், சீன தேசியவாதம் தூண்டப்படுவதை உணர முடிகிறது. இப்பின்னணியில் பூச்சிய கொவிட் கொள்கையை தளர்த்தும் வகையிலான வெகுஜன போராட்டத்தில் அந்நிய சக்திகள் அதிகம் பாதிக்கப்படுவதாகவே தெரிகிறது. இதுவே அமெரிக்காவின் நலன், அமெரிக்காவின் ஈடுபாடு சார்ந்த சந்தேகங்களை உருவாக்குகிறது.

மூன்று, அமெரிக்க-, சீன வர்த்தக போட்டியில் சீனாவின் பூச்சிய கொவிட் கொள்கை அமெரிக்காவுக்கு பெரும் நெருக்கடியானதாக மாறிவருகிறது. சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை விட மேற்கத்திய மொடேர்னா கொவிட்-19 தடுப்பூசிகள் முதியவர்களின் இறப்பைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று அறிவியல் ரீதியான முடிவுகள் நிரூபித்தாலும், சீனா மேற்கத்தேய தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய மறுத்துவிட்டது. மாறாக, சீனா அதன் சொந்த தடுப்பூசிகளின் உள்நாட்டு வளர்ச்சிக்கு நிதியுதவி செய்கிறது. இது மேற்கின் தடுப்பூசிக்கான சீன சந்தையை தடுப்பதாக அமைகிறது. உலகம் இன்று சந்தைகளை மையப்படுத்தியே போட்டியிடுகிறது. சீனாவின் வளர்ச்சியும் அதன் சனத்தொகையை அடிப்படையாக கொண்டு உலகின் பெரிய சந்தையாக காணப்படுவதனால் மேற்க்குக்கு அவசியமாகிறது. உள்நாட்டுத் தொழிலுக்கு உதவ, நிறுவனம் தனது தடுப்பூசியை சீனாவுக்கு விற்க விரும்பினால், தடுப்பூசியின் பின்னால் உள்ள முக்கிய அறிவுசார் சொத்துக்களை ஒப்படைக்குமாறு சீனா கோரியது. ஆனால் மாடர்னா சீனாவின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. மிகப்பெரிய சீன உள்நாட்டுச் சந்தையானது சீனாவின் புதிய உள்நாட்டு மருந்துத் துறையின் வளர்ச்சிக்காக வெளிநாட்டு மருத்துவ நிறுவனங்களுக்கு மூடப்பட்டுள்ளது.

நான்கு, இரண்டு சவால்கள் அமெரிக்க எதிர்கொள்கிறது. முதலாவது இது ஆசியாவில் அமெரிக்க சக்தி மற்றும் செல்வாக்கைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் மற்றும் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கான சீன முயற்சியாக மாற உதவும். இரண்டாவது, எதிர்காலத்தில் உயர் தொழில்நுட்பத் முயற்சிகளை சீனா ஆதிக்கம் செலுத்தக் கூடியதாக அமையும். இத்தகைய ஆதிக்கம் அமெரிக்காவை சீனப் பொருளாதார சக்திக்கு அடிபணியச் செய்யும். மேலும் இத்தகைய தொழில்நுட்பம் நவீன தேசியப் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது. சீன இராணுவ சக்திக்கு அடிபணிய வேண்டும். இந்த அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வகையில் சர்வதேச அரங்கில் சீனாவினை தனிமைப்படுத்தி அமெரிக்க கூட்டை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் பிடன் நிர்வாகம் மும்மரமாக உள்ளது.

எனவே, சீனாவின் வெகுஜன போராட்டமானது அமெரிக்க-சீனா அதிகார போட்டியின் தாக்கம் உள்ளதாகவே உணரப்படுகிறது. கோவிட் பூச்சியக் கொள்கையானது முழுமையாக வெற்றி பெறுமாக அமைந்தால் அதனுடன் இணைந்து சீனாவின் பொருளாதார வலுவும் இராணுவ பாதுகாப்பும் சாத்தியமாவதுடன் அமெரிகிகாவின் சீனா மீதான செல்வாக்கு சரிவடைய வாய்ப்புள்ளது. அது பிராந்திய ரீதியில் அமெரிக்காவை முற்றாகவே அகற்ற முயலும். அதனால் சீனா வெகுஜனப் போராட்டங்களை கண்டு தனது அணுகுமுறையை தளர்த்த முயன்றாலும் தனது துப்பபாக்கிகளை மௌனிக்கவில்லை. காரணம் துப்பாக்கி முனையிருந்து அதிகாரம் பிறக்கிறது என்ற தேசம் சீனா என்பதை கருத்தில் கொள்ளாது இருக்க முடியாது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)