சனநாயகம் என்பது ஆட்சி மாற்றம் மட்டும் கிடையாது என்று யாழ் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானபீடத்தின் தலைவர் கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் உரிமை மின்னிதழுக்கு வழங்கிய சிறப்பு செவ்வியில் தெரிவித்தார். அவர் வழங்கிய செவ்வியின் முழுவடிவம்.
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் பொம்பியோ கூறிய கருத்து இராசதந்திர தளத்தில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும்?
அமெரிக்க இராஜாங்க செயலாளரது விஜயமே இராஜதந்திரரீதியானதே. இந்திய-இலங்கை பிரதமர்கள் உரையாடலை அடுத்து சீனத் தூதுக்குழுவின் வருகை நிகழ்ந்தது. அதனை எதிர்கொள்வதற்கான இராஜீக முயற்சியாகவே பாம்பியோ வருகை தந்தார். அத்துடன் அவர் சீனாவை கண்டித்த விதம் இராஜதந்திர வரன்முறைக்கு முற்றிலும் முரணானது. அதனையே சீனர்களும் மேற்கொள்கின்றனர்.மறுபுறத்தில் சீனா மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் இலங்கையை கடுமையாக தாக்குவதாகவே இராஜதந்திர அணுகுமுறையில் புரிந்து கொள்ளப்பட வேண்டியது. இலங்கையின் பதில் மிக கடுமையான போதும் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் இலங்கையை கண்டிக்காது செயல்பட்டார் என்ற வாதங்கள் இராஜதந்திர ரீதியானதே. இலங்கையின் உறவு அவசியமானது என்பதை புரியவைத்துள்ளதுடன் அதன் ஜனநாயகத்தின் வறுமையையும் ஜனநாயக நாடு என்ற அடிப்படையில் சுட்டிக்காட்டத் தவறவில்லை. ஜனநாயகம் என்பது ஆட்சி மாற்றம் மட்டும் கிடையாது மனித உரிமைகளையும் மனிதாபிமான விதிகளைளயும் சமூக ஒருமைப்பாட்டினையும் புரிதலையும் இன, மத, பால் வேறுபாடுகளைக் கடந்த விதத்தில் செயல்படுவதற்கான செயல்பூர்வமான நடைமுறையைக் குறிப்பதாகும். அதன் மூலம் சீனாவுடனான இலங்கையின் உறவு எத்தகைய பாதிப்பினை தரும் என்ற விதத்தில் பாம்பியோவின் வருகை வெளிப்படுத்தியிருந்தது.
20 திருத்த சட்டம் தமிழ் மக்களின் நீதிக்கான பயணத்தில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும்?
இருபதாவது திருத்தம் நிறைவேற்றதிகாரத்திற்கான அங்கீகாரத்தை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மக்களின் நீதி என்பது நிறைவேற்றுத்துறையால் மட்டும் பாதிக்கப்படவில்லை. இலங்கையின் சுதந்திரத்திலிருந்தே தமிழ் மக்கள் மீதான நியாயாதிக்கம் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளது. அது இலங்கை நாட்டின் அரசியல் கலாசாரத்தில் தங்கியுள்ளது. தனித்து தமிழ் மக்களுக்கானது என்றும் குறிப்பிட முடியாது. அனைத்து பல்லினங்களும் எதிர் நோக்குகின்ற சவாலாகவே தெரிகிறது. இதில் தமிழ் மக்களே அதிக பாதிப்புக்குள் அகப்பட்டுள்ளனர். இது 2015-2019 வரை எப்படியான விளைவைத்தந்தது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே எந்தக் காலத்திலும் நியாயாதிகத்திற்கான அரசியல் கலாசாரம் காணப்படவில்லை.
அமெரிக்காவின் தேர்தல் முடிவுகள் தெற்காசியாவிற்கான குறிப்பாக இலங்கை குறித்த அணுகுமுறைகளில் மாற்றங்கள் உருவாகுமா?
அமெரிக்க தேர்தலுக்கு முன்பே சிறிய தீவு நாடுகள் தொடர்பில் அமெரிக்கா கொள்கை மாற்றம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன் பிரகாரமே இலங்கை மாலைதீவுக்கான விஜயத்தினை பாம்பியோ தேர்தல் காலம் என்றும் கருதாமல் மேற்கொண்டிருந்தார். அதாவது தீவுகளை மையப்படுத்திய சீனாவின் அணுகுமுறையை அதன் பாதையில் சென்றே வெற்றி கொள்ள வேண்டும் என்ற நிலைக்குள் அமெரிக்காவின் கொள்கைமாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது Win-Win உபாயத்தை சீனா கடைப்பிடித்து சிறிய நாடுகளையும் தீவு நாடுகளையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. உலகத்தில் தீவு நாடுகள் தந்திரோபாய நிலங்களாகவே (Strategic Land) நோக்கப்படுகிறது. சீனா அதனையும் கடந்து தனக்கான தீவுகளை தானே உருவாக்குகின்றதை(Man Made Island) தென் சீனக்கடலை அண்டிய பகுதியில் அவதானிக்கலாம். இதுவே அமெரிக்காவின் அண்மைய மாற்றமாகும். அதனைக் கடந்து கட்சிக்கும் ஆட்சியாளர்களுக்காகவும் கொள்கை மாற்றம் செய்யும் நாடாக அமெரிக்காவின் வெளியுறவோ பாதுகாப்போ பொருளாதாரமே அமைவதில்லை. மாறாக பிராந்திய அடிப்படையில் பின்பற்றுகின்ற கொள்கையை அமெரிக்க தேசிய நலனுக்கானதாக வரைந்து கொள்வதில் முனைப்பான தேசம் அமெரிக்கா. குறிப்பா முன்னாள் ஜனாதிபதியின் ஆசிய-பசுபிக் கொள்கை ட்ரம்ப் ஆட்சியில் இந்தோ-பசுபிக் என வடிவம் மாறியதே அன்றி வேறு எதனையும் கொள்கை மாற்றமாகக் கொள்ளவில்லை அமெரிக்கா என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
கொரோனாவிற்கு பிந்திய சர்வதேச அரசியலை தமிழ் சமூகம் எவ்வாறு அணுக வேண்டும்?
கொரனோவுக்கு பிந்திய சர்வதேச வடிவம் முழுமை பெறவில்லை. இருந்த போதும் அதற்கான அடிப்படை தயாராகிவிட்டது. அது சீனா எதிர் அமெரிக்கா என்பதாகும். அமெரிக்க – இந்தியக் கூட்டு தென்னாசியப்பிராந்தியத்தில் வலுவானதாக மாறுகிறது. அவ்வாறே சீனாவின் அணிநாடுகளது கூட்டும் பலமானதாக மாற முயலுகிறது. சீன-இலங்கை உறவு வலுவானதாகவே அமையவுள்ளது. அமெரிக்க- இந்தியக் கூட்டணி எப்படி தமிழர் அரசியலை கையாளப் போகிறது என்பதை விடுத்து தமிழர் எப்படி அவ்வணியை கையாளப் போகிறார்கள் என்பதே முதன்மையான நடைமுறையாக அமைய வேண்டும். காரணம் சீனர்கள் தமிழர் பக்கம் செயல்படுவதை விட தென் இலங்கை ஆட்சியாளரோடுதான் அதிகம் சேர்ந்து செயல்பட விரும்புவார்கள். அதுவும் இலங்கையின் புவிசார் பொருளாதாரத்திற்கும் புவிசார் அரசியலுக்கும் இலாபகரமானதாக அமையும். கொரனோ புவிசார் பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தினை அதிகப்படுத்தியுள்ளது. இந்த அரசியல் களத்தை தமிழ் சமூகம் இனங்கண்டு முன்கூட்டியே செயல்பட தவறும் பட்சத்தில் இந்த வாய்ப்பும் பறிபோகும். காலம் தாழ்த்துதல் பிற்போடுதல் உள் முரண்பாடுகளை முதன்மைப்படுத்துதல் பிற சக்திகளை கையாள அனுமதித்தல் என்பன வாய்ப்புக்களை இல்லாமல் செய்யும். ஏனெனில் இத்தகைய வாய்ப்பொன்றின் முனையத்தில் 2009 -2015 வரையான காலப்பகுதி அமைந்திருந்தது. அது மட்டுமல்ல 2015-2020 வரையான இன்னோர் காலமும் மிக இலகுவானதாக அமைந்திருந்தது. அத்தகைய இரு சந்தர்ப்பத்தையும் தமிழ் சமூகமாக தவறுவிட்டுள்ளதை நினைவு கொள்ளுவது அவசியமானது.
தமிழ் தேசிய களத்திலே பயணிக்கும் கட்சிகளை சரியான திசைவெளியிலே வழிகாட்டுவதற்கு சிவில் சமூகத்திலிருந்து வலுவான சிந்தனைக்குழாம் அவசியம் என்ற கருத்தாடல்கள் முன்வைக்கப்படுகின்றதே?
அது மிகச் சரியானதே சிந்தனைக் குழாம் உருவாவதும் நிலைத்திருப்பதும் முக்கியமானது போல் அரசியல் தலைமைகளும் சிந்தனைக் குழாமும் ஒன்றிணைந்து பயணிக்க தயாராக வேண்டும். இரண்டாவது சிவில் சமூகங்களின் பங்களிப்பு பெருமளவில் தமிழ் சமூகப் பரப்பில் பலவீனப்பட்டுள்ளது. மூன்றாவது கட்சி நலனுக்கான தமிழ் தலைமைகள் செயல்படுகிறார்களே அன்றி தமிழ் மக்களின் நலனுக்கானதாக அவர்கள் பயணிக்கவில்லை என்பது கவனத்தில் கொள்ள வேண்டும்.மீளவும் ஒரு தேர்தல் அரசியலை முன்வைத்துப் செயல்படும் போக்கே அதிகமாக தென்படுகிறது. உள்நாட்டு அரசியல் பற்றி மட்டுமல்ல பிராந்திய சர்வதேச அரசியல் பற்றிய தமிழ் கட்சிகளது கூட்டான நிலைப்பாடு இனம் சாராது தமது கட்சியின் கொள்கை சார்ந்ததாக உள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் ஒவ்வொரு கொள்கை சார்ந்து மட்டுமே செயல்படுகிறார்கள். எல்லாக் கட்சியும் தேசியமே தொனிப் பொருளாக கொண்டுள்ளன. ஆனால் அத்தேசியத்தை புரிந்து கொண்டார்களா என்பது கேள்விக்குறியானதே. ஆனாலும் எதிர்கால நலன் கருதி தமிழர் மத்தியில் ஒரு சிந்தனைக் குழாம் அவசியமானது.
(நன்றி: உரிமை மின்னிதழ்)