இலங்கை அரசியல் பரப்பு அதிக குழப்பம் மிக்க ஆட்சியை எதிர் கொள்வதாக உள்ளது. அதாவது தமிழ் மக்கள் விடயத்தில் முன்பின் முரணான கருத்துக்களையும் நடைமுறைகளையும் கொண்டிருக்கின்ற ஒரரசாங்கமாக ஜே.வி.பி அரசாங்கம் காணப்படுகிறது. இலங்கை தீவு எப்போதும் புதிய அரசாங்கங்கள் ஆட்சியை கைப்பற்றுகின்ற போது கௌரவமான, சுபீட்சமான, சமாதானமான, எதிர்கால திட்டமிடலுக்கான உபாயங்களைக் கொண்டிருப்பதாக உரையாடுகின்ற மரபைக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. புதிய அரசாங்கங்களும், புதிய ஜனாதிபதிகளும் மக்களுக்கு பொய்யான உத்தரவாதங்களை வழங்குவதை ஒரு மரபார்ந்த அரசியலாக கொள்கின்றனர். இறுதியில் சர்வாதிகாரத்தை நோக்கி அல்லது இனவாத எண்ணத்தை நோக்கி அச்சுறுத்தல்களையும் ஆக்கிரமிப்புகளையும் அதிகார துஷ்பிரயோகத்தையும் கொண்ட ஆட்சிகளாகவே மாறிவிடுகின்றன. அந்த வரிசையிலே புதிய அரசாங்கமும் இடதுசாரி அரசாங்கமாக தன்னை அடையாளப்படுத்தும் ஜேவிபி அரசாங்கமும் அதனையே அரங்கேற்றி வருகின்றது. அடிப்படையில் எத்தகைய மாற்றங்களும் இன்றி மாற்றம் பற்றி உரையாடுகின்ற அரசாங்கமாகவே விளங்குகிறது. இக்கட்டுரையில் அண்மையில் நடந்து முடிந்த போர் வீரர்கள் தினத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையும் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ள கருத்தினையும் அதன் யதார்த்தத்தையும் தேடுவதாக அமையவுள்ளது.
முதலில் ஜனாதிபதி அநுர குமாரதிசநாயகா பத்தரமுல்லையில் 20.05.2025 அன்று நிகழ்ந்த போர்வீரர்கள் தினத்தில் ஆற்றிய உரையின் உள்ளடக்கத்தை அவதானிப்பது பொருத்தமானதாக அமையும்.
எமது நாடு பல தசாப்தங்களாக யுத்தத்திற்கு முகங்கொடுத்தது. பல வருடங்களுக்கு பின்னர் யுத்தத்தை நிறைவு செய்ய முடிந்தது. யுத்தத்ததை நிறைவு செய்ய உயிர்த்தியாகம் செய்த படையினரை இன்று (20) நினைவு கோருகிறோம். இது முக்கியமான வரலாற்று தினமாகும். யுத்தத்தை நிறைவு செய்ய படையினர் உயிர் தியாகம் செய்தனர். அவர்களை தினமும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களுக்கு நாடு கடன்பட்டுள்ளது. வடக்கிலும் இதே நிலைதான். தமது பிள்ளைகள் மற்றும் கணவன்மார் புகைப்படத்தை வைத்துக் கொண்டு அவர்களின் உறவினர்கள் வீதியோரங்களில் ஒப்பாரி வைக்கின்றனர் என்றார்.
இதே நேரம் இலங்கையின் வெளிவிவகாரா அமைச்சர் விஜித ஹேரத் 21.05.2025 அன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது, இலங்கையில் தமிழ் இனவழிப்பு இடம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரிப்பதாக தெவித்த அமைச்சர் இன அழிப்புப் போன்ற கருத்துக்கள் பகிரப்படுவதற்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேற்குறித்த இரண்டு உரையாடல்களும் முரண்பாடு உடையதாக மட்டுமன்றி இலங்கையில் இருக்கும் அனைத்து தேசிய இனங்களையும் வெளிவிவகார அமைச்சரின் கருத்து அச்சமடைச் செய்துள்ளது. அத்தகைய உரையாடல்களின் உள்ளடக்கங்கள் அரசாங்கத்தின் ஆளும் தரப்பிடம் காணப்படும் வேறு வேறுபட்ட எண்ணங்களை தருவதோடு நல்லிணக்கம் பற்றிய அதிக சொல்லாடல்கள் போலியாகப் பயன்படுத்தப்படுகிறது. அதனை விரிவாக தேடுதல் அவசியமானது.
முதலாவது நல்லிணக்கம் என்பது இலங்கை தீவை பொறுத்தவரை நீண்ட அபிலாசைக்குரிய ஒரு சொற்பதமாக உள்ளது. காலத்துக்கு காலம் தமிழ் மக்கள் மீதான போரை மேற்கொண்டு விட்டு அதனை சரிபடுத்துவதற்கு உலகத்தின் முன் அதனை பலவீனப்படுத்துவதற்கும் நல்லிணக்கம் என்ற சொல் பிரியோகம் அரசாங்கங்களால் மேற்கொள்ளப்படுகிறது. நல்லிணக்கம் அதன் பரந்த அர்த்தத்தில் உணர்வுகள், செயல்கள் அல்லது விடயங்கள் ஒன்றிணைந்த விதத்தில் உடன்பாடு, சமமான நடத்தை மற்றும் இன, மத, மொழிக் கூறுகளுக்கிடையிலான இணக்கத்தன்மையின் நிலையைக் குறிக்கிறது. இது இலங்கைத் தீவில் நல்லிணக்க ஆணை குழுக்கள் அமைக்கும் வரை அந்த ஆணைக் குழுக்களின் அறிக்கைகளை பிரஸ்தாபிக்கும் வரையும் அரங்கேற்றப்பட்டது. அது மட்டுமன்றி நடைமுறையில் பின்பற்றுவதற்கோ அல்லது ஏனைய தேசிய இனங்களை அங்கீகரிப்பதற்கோ தயார் இல்லாத சூழலை கடந்த 16 வருடங்களில் கண்டுகொள்ள முடிந்தது. நல்லிணக்கமும் நல்லிணக்கப் பொறிமுறையும் இலங்கை தீவை பொறுத்தவரை பெரும்பான்மை ஆட்சியாளரின் நலனுக்குட்பட்ட ஒன்றாகவே காணப்படுகிறது. முன்மொழிக்கப்பட்ட நல்லிணக்க குழுவின் வரைபுகளை கூட இலங்கை ஆட்சியாளர்கள் முழுமையாக அமுல்படுத்தாமல் ஆட்சியை நகர்தியதே வரலாறாகும். அதுவே புதிய அரசாங்கத்திடமும் நல்லிணக்கம் பற்றிய உரையாடலாக புரிந்து கொள்ளப்படுகிறது.
ஜனாதிபதி நல்லிணக்கம் பற்றி உதட்டளவில் குறிப்பிடுகிற போது அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் நல்லிணக்கத்துக்கு முற்றிலும் முரணான தகவல்களை ஊடகங்கள் முன் வெளிப்படுத்தி வருகின்றார். இன்னோர் அமைச்சர் நிறைவேற்றதிகாரம் தமது அரசாங்கத்திற்கு உண்டு எனவும் அறுதிப் பெரும்பான்மை பராளுமன்றத்தில் இருப்பதாகவும் மிரட்டல் விடுகின்றார். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதி முழுவதும் புரிந்துணர்வோடும் தமிழ் மக்கள் மீதான நேசிப்போடும் உரையாடிய அமைச்சர்கள் தற்போது தலைகீழான கருத்துக்களை முன்வைக்க ஆரம்பித்துள்ளார்கள். வெளிப்படையாக கூறுவதால் பாராளுமன்ற தேர்தல் காலத்தில் அவர் முன்வைத்த (தமிழ் மொழியில்) நல்லிணக்கத்திற்கான உத்திகள் அனைத்துமே தற்போது நிராகரிக்கின்ற போக்கில் காணப்படுகிறது.
இரண்டாவது நல்லிணக்கம் என்பது இலங்கை தீவின் அரசியலில் நடந்து முடிந்த இன ரீதியான மோதல்களின் ஏற்பட்ட வலிகளையும் துயரங்களையும் சரி செய்வதற்கான அணுகுமுறையாகும். அத்தகைய அணுகுமுறை கடந்த காலங்களில் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட அனைத்து வகையான இன ரீதியான நடவடிக்கைக்கும் தீர்வு காணுவதற்கான ஒன்றானதாக அமைய வேண்டும். முழுமையாக அவதானிக்கின்ற போது சுதந்திர காலத்துக்கு முன்னரே தமிழர் உட்பட ஏனைய இனங்கள் மீது பெரும்பான்மையினம் மேற்கொண்ட அனைத்து வகையான அடக்குமுறைகளும் சுதந்திரத்துக்கு பின்னான காலப்பகுதி முழுவதும் இலங்கையின் தேசிய இனமாகிய தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட அனைத்து வகையான அடக்குமுறைகளையும் முடிவுக்கு கொண்டு வருவதுக்கான நடைமுறை தன்மையை குறிப்பதாகும். கடந்தகால அரசாங்கங்கள் போல் அல்லாது புதிய அரசாங்கம் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட அடக்குமுறைகளுக்கு முடிபுகட்டுவதோடு கடந்தகால நிகழ்வுகளுக்கு தீர்வுகாண வேண்டும் என்பதே தமிழ் மக்களின் அபிலாசையாகும். தமிழ் மக்கள் தேசிய இனம் என்பதை ஏற்றுக்கொண்டு அதற்கு உரித்தான அதிகாரங்களையும் வாய்ப்புகளையும் சமமாக பங்கீடு செய்கின்ற ஒரு செய்முறை ஒன்றையே தமிழ் மக்கள் எதிர்பார்த்திருக்கின்றார்கள். கனடாவில் கட்டப்பட்ட தூவி 2009 ஆம் ஆண்டு நிகழ்ந்த இன ரீதியான அழிவுகளின் நினைவாக உருவாக்கப்பட்டது. அது பெருமளவுக்கு தமிழ் மக்களின் மனங்களில் உள்ள வலிகளையும் துயரங்களையும் தீர்த்துக்கொள்வதற்கான நடைமுறை உளவியல் தேவையாக விளங்குகிறது. உலக வரலாறு முழுவதும் அவ்வகை நினைவுகளை சுமந்து கொள்ளுகின்ற நியதியையே மனித சமூகம் கொண்டிருக்கின்றது. தனது மூதாதையர்களையும் மூதாதையர்கள் வாழ்ந்த நிலத்தையும் பூர்விகமாக கொள்ளும் அனைத்து மனித இனமும் அதனையே மேற்கொண்டு வருகின்றது. அதில் ஒரு அங்கமாகவே கனடாவில் அமைக்கப்பட்ட நினைவுத்தூவி காணப்படுகிறது. இங்கு நல்லிணக்கத்தை மீறுகின்ற விதத்தில் எதுவும் நிகழ்த்தப்படவில்லை. மாறாக நினைவுகளை பதிவு செய்வதற்கான சுதந்திரம் பேணப்பட்டுள்ளது. நல்லிணக்கமானது இலங்கைத் தீவிலுள்ள அனைத்து இனங்களது சமமான சுதந்திரத்தை அங்கீகரிப்பதில் ஆரம்பிக்க வேண்டும். அதுவே அறிவியல் ரீதியில் நல்லிணக்கத்திற்கான வளர்ச்சி. மனித சமூகத்தின் சுதந்திரத்துக்கான அடிப்படையை அரசியல் விஞ்ஞானம் கட்டமைத்திருக்கின்றது.
மூன்றாவது தென்னிலங்கையின் புதிய ஆட்சியாளர்கள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்ற நோக்கில் முன்மொழியப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கைகளையும் சர்வதேசத்தின் நல்லிணக்க பொறிமுறைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும். இனத்தின் பெயரால் மேற்கொள்ளப்படும் அனைத்து வகை ஆக்கிரமிப்புகளையும் நிறுத்துவதோடு கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட கொடுமையான அழிவுகளுக்கு தீர்வு காணும் விதத்தில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். இலங்கை தீவிலுள்ள அனைத்து மக்களும் சமமாக மதித்தல் என்பது நல்லிணக்கத்தின் ஒரு செய்முறையாகும். நல்லிணக்கம் என்பது இலங்கைத்தீவின் தொடர்ச்சியான அரசியலாகவே பின்பற்றப்படுகிறது. தமிழ் மக்கள் ஏனைய இனங்களுக்கு சமமாகவும் அங்கீகாரத்துடனும் தாம் வாழுகின்ற நிலத்தில் இறைமையுடனும் வாழ்வதற்கான சூழலை அமைத்துக்கொடுப்பதே நல்லிணக்கமாகும்;. ஒரு லட்சத்தி நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்ட நினைவிடத்தில் வழிபாடு செய்துவிட்டு போர்வீரர்கள் தினத்தில் ஜனாதிபதி கலந்து கொண்டிருப்பாரேயானால் அது ஒரு நல்லிணக்கத்திற்கான செய்முறையாக இருந்திருக்கும். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா காலம் கடந்தேனும் இரண்டாம் உலக யுத்தத்தில் அமெரிக்கா வீசிய அணுக்குண்டினால் கொல்லப்பட்ட ஜப்பானியர்களின் நினைவிடமான ஹிரோசிமா-நாகஷhகியில் மலர்வளையம் வைத்து வழிபட்டது போல் நடந்து கொண்டிருந்தால் அது நல்லிணக்கமாக அமைந்திருக்கும். அத்தகைய விடயத்தை விடுத்து போர் வீரர் தினத்தில் கலந்து கொண்டு இலங்கை தீவில் நல்லிணக்கத்தை கனடாவின் தூபி நிராகரிக்கிறது என குறிப்பிடுவது நியாயமான அறிவியலாக தென்படவில்லை.
நடந்து முடிந்த படுகொலைகள் இரு மனிதர்களுக்கு இடையில் அல்லது குழுக்களுக்கு இடையில் நிகழ்ந்த தாக்குதலோ கிடையாது. ஓரினத்தின் மீது இன்னொரு இனம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையே இனப்படுகொலை என்று குறிப்பிடுவதையே அறிவியல் இனப்படுகொலை எனக் குறிப்பிடுகிறது. இத்தகைய துயரங்களுக்குள்ளால் தான் கடந்த கால வரலாறு முழுவதும் இலங்கைத்தீவின் சுபீட்சமும் செழிப்பும் அழிக்கப்பட்டது. இலங்கை தீவை பாதுகாப்பதக்கும் இலங்கை தீவினுடைய மக்களின் சுபீட்சத்தை பேணுவதற்கும் தமிழ் மக்கள் முன் வருதல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. அதனை நோக்கிய ஈழத்தமிழர்களுடைய நியாயப்பாடுகளும் கோரிக்கைகளும் முதன்மையானதாக உள்ளது.
எனவே சுதந்திரத்தை உச்சரிக்க கூட முடியாத ஒரு சூழலுக்குள் இலங்கை தீவை இடதுசாரி ஆட்சியாளர்கள் கொண்டு செல்ல முனைகிறார்கள். ஒரினத்தின் மீது நிகழ்த்தப்பட்ட துயரங்களை உச்சரிக்க முடியாதென எச்சரிப்பதும் மிரட்டுவதும் இலங்கை தீவுக்கு புதியதல்ல. கடந்த காலம் முழுவதும் அத்தகைய ஆட்சி முறையே நிகழ்ந்து முடிந்தது. அத்தகைய ஆட்சிக்குள் பயணிக்கின்ற சூழலையே புதிய ஆட்சியாளர்களும் தர ஆரம்பித்திருக்கிறார். இத்தகைய ஆட்சி முறைகளில் வடிவங்கள் அனைத்தும் சர்வாதிகார போக்கை புலப்படுத்துவதாகவே காணப்படுகிறது. கடந்த காலத்தில் ஜேவிபி எந்த அளவுக்கு ஆயுதப்போராட்டத்தின் மூலம் தென்னிலங்கையின் ஆட்சி முறையே மாற்றுவதற்கு முயன்றதற்கு பதிலாக அதன் மீதான தாக்குதல்களும் அழிவுகளும் பயங்கரவாதம் என்ற குற்றச்சாட்டும் விதைக்கப்பட்டிருந்தது. அதேயளவுக்கு வடக்கு கிழக்கு தமிழர்கள் மீதான நடவடிக்கைகளும் அமைந்திருந்தன. இதனை புரிந்து கொள்வதற்கு ஆட்சியாளருக்கு மட்டுமல்ல இலங்கை தீவில் இருக்கும் எத்தகைய மேலாதிக்க சக்திகளாலும் முடியாது. அவற்றின் அறிவியல் வறுமைக்குள்ளாள் கண்டுகொள்ள முடியாது என்பது அல்ல மாறாக ஆதிக்கம் செய்முறை ஊடாக அதனை கண்டு கொள்ளக் கூடாது என அவர்கள் கருதுகின்றனர். ஜேவிபி ஆட்சி அமைக்க முடியும் என்ற சூழலை தந்த இன்றைய காலத்துக்கு முன்னர் அதன் மீது முன்வைக்கப்பட்ட பயங்கரவாதம் என்பது எவ்வாறு காணாமல் போனது என்பதை அவர்களே புரிந்து கொள்ள தவறு விடயத்தை உணரமுடிகிறது. இதன் விளைவுகள் இலங்கை தீவின் அரசியல் மாற்றம் வரவில்லை என்பதை கோடிட்டுகாட்டுகிறது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி:தினக்குரல்)
