அரசியல் கட்டுரைகள்

ரஷ்சிய-அமெரிக்காவுக்கு வாய்ப்புக்களையும் உக்ரைன்-ஐரோப்பாவுக்கு நெருக்கடியையும் தந்த அலஸ்கா உச்சிமகாநாடு?

அலஸ்கா மகாநாடு வெற்றி தோலியின்றி சமநிலையில் முடிந்தது என்ற கிறிகற் வர்ணனையே பொருத்தமானதாக தெரிகிறது. இரு தரப்பும் வெற்றியும் அடையவில்லை தோல்வியையும் அடையவில்லை என்பதே அதன் சாராம்சமாகும். அமெரிக்காவும் ரஷ்சியாவும் சந்தித்துக் கொண்ட அலாஸ்கா சந்திப்பு பிரம்மாண்டமான எதிர்பார்ப்புகளை ஊடக தளத்தில் பிரதிபலித்திருந்தது. மேற்குலக ஊடகங்கள் இரு தலைவர்களது சந்திப்பையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக கட்டமைத்தனர். ஆனால் அது ஒரு மூன்று மணித்தியால சந்திப்பாகவே நடந்து முடிந்தது. அதில் பல விடயங்கள் எட்டப்பட்டதாகவும் இன்னும் சில விடயங்கள் பற்றி உரையாட இருப்பதாகவும் அடுத்த சந்திப்பை ரஷ்சிய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கூறியது போல் மொஸ்கோவில் வைத்துக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் நிறைவு பெற்றிருக்கிறது. இக்கட்டுரையும் சந்திப்பின் முக்கியத்துவம் மற்றும் அதன் போக்கு பற்றிய தேடலாக உள்ளது.

1917ஆம் ஆண்டிலிருந்து ரஷ்சியாவுக்கும் அமெரிக்காவுக்குமான முரண்பாடு ஒரு நீண்ட வரலாற்று ரீதியாக உலகத்தின் போக்கை கட்டமைத்து வருகிறது. அத்தகைய முரண்பாடுகளுக்கும் இருநாடுகளின் தலைவர்களும் அவ்வப்போது சந்திப்பதும் உரையாடுவதும் உலகம் அதனை நோக்கி அணி திரட்டப்படுவதும் ஒரு வரலாற்று பதிவாகவே காணப்படுகிறது. 1943ஆம் ஆண்டில் இருந்து இத்தகைய சந்திப்பினுடைய முக்கியத்துவம் உணரப்பட்டிருக்கிறது. 1961, 1974, 1988, 2001, 2010 ஆகிய ஆண்டுகளில் இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்து உலக ஒழுங்கை கையாண்டுள்ளனர். இவ்வாறு ஒவ்வொரு காலப்பகுதியில் இருநாட்டு தலைவர்களும் உலக அரசியல் ஒழுங்கை சந்திப்புக்களூடாக வெளிப்படுத்தி உள்ளனர். அந்த வரிசையிலே 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி இருநாட்டு தலைவர்களும் புதிய ஓர் உலக தரிசனத்திற்காக அல்லது ஒழுங்கான சந்திப்பினை நகர்த்தியுள்ளனர். ஆனால் இதன் உள்ளடக்கங்களும் இது சார்ந்து வெளிப்படுத்தப்பட்ட தகவல்களும் உலகளாவிய ஊடக பரப்பும் நாடுகளும் தலைவர்களும் எதிர்பார்த்ததை விட வேறொரு திசையை நோக்கியதாகவே இருந்துள்ளது. ஆனால் ஊடகங்களின் கேள்விக்கு இரு தலைவர்களும் பதிலளிக்காது நகர்ந்து சென்ற ஒரு உடல் மொழியை கண்டுகொள்ள முடிந்தது. அதில் புட்டினை விட ட்ரம்ப் அதிக கவனம் கொண்டவராகவே காணப்பட்டார். சந்திப்பு பற்றிய ஆழமாக அவதானிக்க வேண்டிய விடையங்கள் அதிகம் உண்டு.

முதலாவது இரு தலைவர்களும் சந்திப்பை உலகம் எதிர்பார்த்தது போன்று அமெரிக்கா ஜனாதிபதி அதிகம் முதன்மைப்படுத்தி இருந்ததை விமானங்களின் அணிவகுப்பிலும் அவரது காத்திருப்பிலும் செங்கம்பளத்தில் ரஷ்சிய ஜனாதிபதி நகர்ந்து வருகின்ற போது ட்ரம்ப்ன் உடல் மொழி காட்டிய எண்ணங்களையும் வைத்துக்கொண்டு அளந்து கொள்ள முடியும். அமெரிக்காவுக்கும் டொனால்ட் ட்ரம்ப்க்கும் ரஷ்சிய ஜனாதிபதி மீது இருக்கும் ஈர்ப்பினை விமானங்களின் அணிவகுப்புகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் உணர்த்தியிருந்தது. ஒரு வகையில் புட்டினுக்கு ஏதும் நிகழ்ந்துவிட்டால் ஏற்படக்கூடிய உலகத்தின் பாதிப்பை கருத்தில் கொண்டு அதனை மேற்கொண்டு இருக்கலாம் என்ற வாதம் நியாயமானதாக இருந்தாலும் அதனையும் கடந்து புட்டினுக்கான வரவேற்பும் பாதுகாப்பும் பிரம்மாண்டமானதாக அமைந்திருந்தது.

இரண்டாவது உரையாடப்பட்ட விடயங்களை அல்லது அதன் உள்ளடக்கங்களை அவதானிக்கின்ற போது உக்ரையின் சார்ந்த போர் நிறுத்த உடன்பாட்டுக்கான எண்ணம் என்பது அதிகம் வெளிப்படுத்தப்பட்டதாக தெரியாவிட்டாலும் உக்ரையினின் பாதுகாப்பு பொறுத்து உத்தரவாதப் படுத்தப்பட வேண்டும் என்ற அம்சத்தை ரஷ்சிய ஜனாதிபதி புட்டின் வெளிப்படுத்த தவறவில்லை என்றே தெரிகிறது. அதாவது உக்ரையின் பாதுகாப்பு நோட்டோவின் அல்லது அமெரிக்காவின் களத்திலிருந்து நோக்குவதா என்ற ஒரு பார்வையையும் அது ரஷ்சியாவின் களத்தில் இருந்து நோக்கப்பட வேண்டும் என்ற அர்த்தங்களையும் வெளிப்படுத்தி இருந்தார். ஊடகங்களினுடைய பார்வையிலும் பொதுவான அவதானிப்பிலும் ரஷ்சிய ஜனாதிபதி அதீதமான இராஜதந்திர வார்த்தைகளை பயன்படுத்தினார் என்ற கருத்து முக்கியமானதாக அவதானிக்கப்பட வேண்டியுள்ளது. அதன் அடிப்படையில் போர் நிறுத்தம் தொடர்பில் ரஷ்சியாவிடம் இருந்த நிலைப்பாட்டை புட்டின் வெளிப்படையாகவே அல்லது இராஜதந்திர வார்த்தைகளாலோ அமெரிக்க ஜனாதிபதியிடம் முன்வைத்திருக்கின்றார்.

மூன்றாவது அமெரிக்க ஜனாதிபதி ஊடகங்கள் முன்னோ அல்லது இரு தலைவர்களின் சந்திப்புக்கு பின்னர் வெளிப்படுத்திய கருத்துக்கள் முக்கியமான அம்சங்களை வெளியே கொண்டுவந்துள்ளது. அதாவது பல விடயங்கள் உடன்பாடு எட்டப்பட்டது என்றும் சில விடயங்களில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றும் ஏனைய தரப்புடன் அத்தகைய உரையாடலை அல்லது பேச்சுக்களின் முன் வைத்த பின்னரே பேச்சுக்களை தெர்டரலாம் என்ற சாரப்பட தெரிவித்திருந்தார். அதற்கு பின்னரே அடுத்த கட்ட பேச்சுக்கள் என்ற அடிப்படையில் அவரது கருத்துக்கள் அமைந்திருக்கிறது. அதாவது புட்டின் ரஷ்சியாவின் நடவடிக்கையே உக்ரையின் போர் நிறுத்த உடன்பாட்டை சாத்தியமற்றதாக்குகிறது என்ற குற்றச்சாட்டை தகர்த்துள்ளார். போர் நிறுத்த உடன்பாடு என்பது ரஷ்சியாவிடம் இருந்து நேட்டோ மற்றும் மேற்கு ஐரோப்பிய தரப்பிடம் ஒப்படைத்து இருக்கின்றது. இத்தகைய பொறிமுறையை இந்த இடத்தில் புட்டின் முதன்மைப்படுத்தி இருக்கின்றார். அதனையே அமெரிக்க ஜனாதிபதியும் இதன் அடுத்த நகரை நேட்டோவுடனும் உக்ரையின் ஜனாதிபதியுடனும் உரையாடிய பின்பே எதிர்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

நான்காவது இருவரது சந்திப்புக்களில் இருந்தும் அவர்கள் வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில் அமெரிக்க-ரஷ்சிய உறவு முன்னேற்றத்தை நோக்கி நகர்வதற்கான ஒரு களத்தை முதன்மைப்படுத்தி இருக்கிறது. இருவரது வெளிப்பாடுகளும் அமெரிக்க ரஷ்சிய உறவின் ஆரோக்கியத்தன்மை பற்றி கலாச்சார மற்றும் வணிக ரீதியான இரு தேசங்கள் கொண்டிருக்கின்ற பிடிமானங்கள் பற்றியும் வெளிப்படுத்தியதோடு எதிர்கால ரஷ்சிய அமெரிக்கா உறவு பலப்படுத்துவதற்கான உடன்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ரஷ்சிய ஜனாதிபதி வலியுறுத்தி இருந்தார். குறிப்பாக அணு ஆயுதம் பற்றிய விடயங்களையும் அவர் முன்வைத்ததாக தெரியவருகின்றது. இது உக்ரையின் போரை மையப்படுத்திய சந்திப்பு என்பதை விட அமெரிக்க-ரஷ்சிய உறவைப் பற்றிய உரையாடலாகவே நகர்ந்திருந்தது. இரு நாடுகளும் இரு தலைவர்களும் தமது நட்புவாய்ந்த உறவு பற்றியும் இடைப்பட்ட காலப்பகுதியில் அதிருப்திக்குள்ளனதாவும் தெரியப்படுத்தியிருந்தனர். அதனை மீளமைக்க வேண்டிய சூழல் ஒன்று பற்றிய அமெரிக்க ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார்.

ஐந்தாவது இரு தலைவர்களும் ஊடகங்களை தவிர்த்துக் கொள்வதில் கரிசனை கொண்டிருந்தார்கள் என்று மேற்குலக ஊடகங்கள் அதிகம் குறிப்பிட்டாலும் அதில் அதிக முக்கியம் பெற்றவராக அமெரிக்க ஜனாதிபதியே காணப்பட்டார். இதனை ட்ரம்ப் விமானத்தில் இருந்து இறங்கிய காட்சியில் இருந்து கண்டு கொள்ளக் கூடியதாக இருந்தது. உலகளாவிய ஊடகவியலாளர்கள் இராஜதந்திரிகளும் ட்ரம்ப் இறுக்கமான முகத்துடனும் அதிக பதகளிப்புடனும் காணப்பட்டார் என்றும் ஒப்பீட்டடிப்படையில் ரஷ்சிய ஜனாதிபதி மிகவும் சுவாரசியமாகவும் நட்பு கலந்த விதத்திலும் செயல்பட்டதோடு ஜனாதிபதி புட்டின் முன்னாள் சோவியத்யூனியன் காலத்தில் கொல்லப்பட்ட விமானிகளுக்கான வணக்கம் செலுத்தும் நிகழ்வு அதிகமான ஏற்பினை ஏற்படுத்தியுள்ளது.

எனவே ஒரு நீண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக உலகம் எதிர்பார்த்த ஒரு சந்திப்பு நிறைவு பெற்றுள்ளது. சந்திப்பின் பிரதான நோக்கமாக கருதப்பட்ட உக்ரையின் போர் நிறுத்தம் அல்லது சமாதான உடன்பாடு சாத்தியமற்ஷறுப் போனது. டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிடுவது போல் உடன்பாடுகள் எதுவும் எட்டப்படாத போதும் உடன்பாடுகளுக்கான முன்னேற்ற நகர்வு ஒன்று சாத்தியப்பட்டிருக்கின்றது என்பதை உறுதிப்படுத்த முடியும் என குறிப்பிட்டார். இது ஏகாதிபத்தியங்கள் காலத்தையும் அதற்கான நீட்சியையும் பெற்றுக்கொள்வதில் முனைப்பு கொண்டிருக்கின்றன என்பதை மீள ஒருதடவை வெளிப்படுத்தியுள்ளன. இச்சசந்திப்பில் அதிக இலக்குகளை புட்டின் அடைந்திருப்பதாக தெரிகின்றது. குறிப்பாக உலகம் விரும்புவது போன்று ஒரு உரையாடலை எதிர்கொண்டிருக்கின்ற தலைவராக புட்டின் தன்னைக் காட்டியுள்ளார். அத்தகைய உரையாடல் மூலம் ரஷ்சியாவின் இலக்கை அடைவதற்கான காலநீடிப்பை சாத்தியப்படுத்தி இருக்கின்றார். அது மட்டுமல்லாது குற்றவியல் நீதிமன்றத்தில் புட்டின் மீதான பிடியாணை பிறப்பித்த அமெரிக்கர் சார் உலகத்தின் முன் செங்கம்பளம் விரித்து வரவேற்ற நிகழ்வு அவரது வெற்றிகரமான நகர்வைக் காட்டுகிறது. அமெரிக்காவும் ரஷ்சியாவும் அதன் தலைவர்களும் உலகளாவிய ரீதியில் பெரும் படுகொலைகளுக்கும் மனித அழிவுகளுக்கும் மூலகர்த்தாக்கள் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை அமெரிக்களும் ஐரோப்பியத் தலைவர்களும் ரஷ்சியத் தலைவர்கள் போன்றே வன்முறைகளையும் போர்களையும் படுகொலைகளையும் மேற்கொள்பவர்கள். இவர்களில் யார் யாரை கைது செய்வதற்கோ அல்லது பிடியாணை பிறப்பிக்கவோ உரித்துடையவர்கள் அல்லர். ஆனால் உலக அரசியல் என்பது அத்தகைய நியதிக்குள்ளாலேயே நகர்ந்து செல்லக் கூடியது. அதுவே உலக அரசியலின் யதார்த்தமும் நடைமுறையும். இதனையே அலாஸ்கா மகாநாடு உணர்த்தியுள்ளது. அலாஸ்கா மகாநாட்டின் பொருள் ரஷ்சியாவையும் அமெரிக்காவையும் நோக்கியதாக திசை திருப்பப்பட்டுள்ளது. அதில் அதிக சாதனைகளை நிகழ்த்தியதோடு ஐரோப்பியர்களிடம் போர் நிறுத்த உடன்பாடு பற்றிய முடிவுகளை குறிப்பாக நேட்டோவிடம் புட்டின் ஒப்படைத்து இருக்கின்றார். முடிவு என்பது ரஷ்சியாவுக்கும் புடினுக்கும் ஒரு வெற்றிகரமான நகர்வாகவே தெரிகின்றது. ஜெலன்ஸ்கி குறிப்பிடுவது போல் ரஷ்சியா போரை விரும்புகிறது என்ற வார்த்தைகளை மீள மீள உச்சரிக்க முயல்கிறார். ஆனால் அடிப்படையில் துருக்கியில் நிகழ்ந்த பேச்சுவார்த்தையின் போதும் அலாஸ்காவில் இரு தலைவர்களும் சந்தித்த போதும் இரு தாக்குதல்கள் உக்ரையின் நிகழ்த்தியுள்ளது. ஈரானிலிருந்து தருவிக்கப்பட்ட ஆயுதங்களோடு தரித்து நின்ற ஆயுதக் கப்பல் மீது ரஷ்சியாவின் துறைமுகத்தில் உக்ரையின் தாக்கியுள்ளது. உக்ரையின் பேச்சுவார்த்தை நடைபெறும் காலப்பகுதியில் தாக்குதல் நிகழ்த்தி இருக்கிறது. ஆகவே ஜெலன்ஸ்கியும் மேற்கு ஐரோப்பியர்களும் இப்பேச்சுவார்த்தையை குழப்புவதற்கும் போர் நிறுத்தத்தை ஏற்படாமல் தடுப்பதற்கும் பாரிய பிரயத்தனங்களை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக ட்ரம்ப்-புட்டின் சந்திப்பு நிகழ்கின்ற போது பிரித்தானியாவுக்கும் ஏனைய நேட்டோ நாடுகளுக்கும் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி விஜயம் செய்ததோடு அந்த நாடுகளின் தலைவர்களோடு ஆயுத உடன்பாடு பற்றியும் பொருளாதார ஒத்துழைப்பையும் கோரிவருகிறார்.

எனவே முடிவாக இரு தலைவர்களும் சந்திப்பு இரு தேசத்தினது நலன்களை பலப்படுத்துவதிலும் ஒத்துழைப்பை அதிகரிப்பதிலும் அதிக கவனம் செலுத்தியது. அன்றே மேற்கைரோப்பியர்களும் அவர்களது ஊடகங்கள் கூறுவது போல் உக்ரையின் மீதான போரை நிறுத்துவதற்கான உரையாடலாக இது நிறைவு பெறவில்லை. அதனை ஒரு பகுதியாக கொண்டு இச்சந்திப்பு நகர்த்தப்பட்டுள்ளது. அதற்கான முயற்சிகளோடு அமெரிக்க ஜனாதிபதி உக்ரையின் ஜனாதிபதியையும் நேட்டோ தலைவர்களையும் சந்தித்து உரையாடி பின்னர் அடுத்த கட்ட சந்திப்பில் அது பற்றிய கலந்துரையாடல் இரு தலைவர்களுக்கும் நிகழ்வதற்கான சூழல் ஒன்று உருவாகி இருக்கின்றது. உலக ஏதிபத்தியங்கள் தங்களுக்குள் மோதிக்கொள்ளாமல் நிகழ்த்தும் போரை நகர்த்துவதில் அலாஸ்கா மாநாடு வெற்றிகரமான பங்களிப்பை வழங்கியிருக்கின்றது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)