தென் இலங்கை அரசியலில் முன்பின்னான விவாதங்கள் அதிக அரசியல் நெருக்கடியை ஏற்படுத்திவருகிறது. குறிப்பாக மாற்று அரசாங்கம் பற்றி வாதங்களும் ஆளும் கட்சிக்குள் குழப்பம் என்ற கருத்து நிகழ்வதையும் அவதானிக்க முடிகிறது. ஆனால் அவை அனைத்துமே வெறும் அரசியல் உரையாடல்களாக காணப்படுகின்றனவே அன்றி ஆழமான மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவிடயமாக தென்படவில்லை. அதற்கான அடிப்படை தற்போதைய ஆளும் தரப்பின் இயல்பான பலமும் இராணுவ செல்வாக்கும் ஒருபக்கம் அமைய மறுபக்கத்தில் பிராந்திய சர்வதேச சக்திகளை சரியான முறையில் கையாளும் போக்கும் காரணமாக கொள்ள வேண்டியுள்ளது. அதே போன்று ஜனாதிபதியின் பாராளுமன்ற கொள்கைவிளக்க உரையில் தமிழர்களது தேசியப் பிரச்சினைக்கு எந்த தீர்வும் முன்வைக்கவில்லை என்ற ஆதங்கமும் அதற்கான வார்த்தைகளும் இலங்கைத் தீவின் அரசியலில் இடம்பிடித்த விடயமாக உள்ளது. ஆனால் கடந்த எழுபது வருடமாக தமிழ் அரசியல் தலைமைகளது ஏமாற்றத்தின் அனுபபாடத்தை எப்படி விளங்கிக் கொள்வதென்பது தெரியாத விடயமாகவே உள்ளது. சிங்கள அரசியல் தலைமைகள் தமிழ் அரசியல் வாதிகளை ஏமாற்றுவதல்ல விடயம் தமிழ் மக்களை தமிழ் அரசியல் வாதிகள் ஏமாற்றுகிறார்கள் என்பதே கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். இக்கட்டுரையும் தென் இலங்கையின் அரசியல் நகர்வுகளில் ஏற்பட்டுள்ள போக்கினைத் தேடுவதாக உள்ளது.
தென் இலங்கை ஆட்சியாள் அதிக இராதந்திர அறுவடைகளை எட்டிவருகின்றனர். அதற்கான ஒத்துழைப்பினை கட்சி வேறுபாடுகளைக் கடந்தும் ஊடக தர்மத்தை புறந்தள்ளியும் அத்தகைய இராஜதந்திர செய்முறை கையாளப்படுகிறது. குறிப்பாக இந்தியத் தரப்பினை கையாண்டது பற்றி இலங்கைக்கான இந்தியத் தூதுவர் மலிந்த மொறக்கொடயின் இராஜதந்திரம் பற்றி தென் இலங்கை ஆங்கில ஊடகங்கள் அதிக பராட்டினை வெளிப்படுத்தியுள்ளன. இலங்கையின் பொருளாதார நெருக்கடியை வைத்து இலங்கைக்கும் இந்தியாவுக்குமான அரசியலை கையாண்ட விதமே தனித்துவமானதாக அமைந்துள்ளது. வெளிப்படையாககப் பார்த்தால் ஐம்பது வருடங்களுக்கு பின்பு இந்தியா வெற்றி பெற்றதாக கூறப்பட்டாலும் இலங்கை இந்தியாவை திருகோணமலை எண்ணெய் குதங்களுக்குள் மட்டுப்படுத்திவிட்டது என்ற வாதமே மேலோங்கியுள்ளது. இருந்த போதும் இரு தரப்பும் ஆரோக்pயமான நகர்வுகளை எட்டியுள்ளன. ஈழத்தமிழர்களுக்கு மட்டும் நிர்கதி நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. அதற்கான அடிப்படையானது தென் இலங்கை அரசியல் தலைவர்களது உத்தியால் ஏற்பட்ட அறுவடையாகவே காணப்படுகிறது. சீனா தொடர்பில் கிடைத்த வாய்ப்பினை முழுமையாக தென் இலங்கை ஆட்சியாளர்கள் தோற்கடித்துவிட்டனர். அறிக்கையிடும் தமிழ் அரசியல் வாதிகளால் ஏமாற்றத்தையே தமிழ் மக்களுக்கு வழங்க முடியுமே அன்றி ஆரோக்கியமான இருப்பினை ஏற்படுத்த முடியாது.
கொழும்புக்கு வருகை தந்துள்ள தெற்காசியா மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி விவகாரத்திற்கான அமைச்சர் தாரிக் அஹமட் அவர்களை சந்தித்த ஜனாதிபதி புலம்பெயர்ந்த பிரிட்டனில் வாழும் இலங்கையர்களுடன் கலந்துரையாட விருப்பம் தெரிவித்ததுடன் அதற்கான ஏற்பாட்டினை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அதே நேரம் இலங்கையில் அனைத்து பிரஜைகளுக்கான மனித உரிமைகளை உறுதி செய்வதை முன்னிறுத்தி செயல்பட்டால் பிரிட்டன் ஆதரவு வழங்கத் தயார் எனவும் போர் முடிபுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் சமாதமானத்தையும் பொறுப்புக் கூறலையும் நலலிணக்கத்தையும் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் உறுதிப்படுத்துவதற்கான ஜெனீவாவின் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தாரிக் அஹமட் கேட்டுள்ளார். வர்த்தகம் முதலீடு மற்றும் பரஸ்பரம் பாதுகாப்பு ஆகியவற்றில் இந்திய-பசுபிக் பிராந்தியத்தின் முக்கியத்துவம் குறித்து பிரிட்டன் விசேட கவனம் செலுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி பிரிட்டன் பொருளாதார ரீதியில் தொடர்பினை அடிப்படையாகக் கொண்டு வலையமைப்பினை கட்டியெழுப்பி வருவதாகவும் அதில் இலங்கையுடன் ஒன்றிணைந்து செயல்பட விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பிரிட்டன் முன்வைத்துள்ள அம்சங்களை புரிந்து கொள்வது அவசியமானது.
முதலாவது, மனித உரிமைகள் தொடர்பிலேயே பிரிட்டன் அதிக கவனம் செலுத்துவதுடன் ஜெனீவா முன்வைப்புகள் தொடர்பில் கரிசனை கொள்வதனை அவதானிக்க முடிகிறது. சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தும் பிரிட்டன் தமிழ் தரப்புடனான உரையாடல் தொடர்பில் தெளிவான பதிலை வெளிப்படுத்தாத நிலையைக் காண முடிகிறது. அதாவது தமிழ் தரப்புடனான உரையாடலில் தமிழ் தரப்பு முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போது உங்கள் கோரிக்கையை ஆக்கபூர்வமாக அணுகுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக மட்டுமே வாக்குறுதியளித்தார். தமிழ் தரப்பின் நியாயமான தீர்வு பற்றி எந்தவித பதிலையும் வழங்காமை பிரிட்டனின் உள்நோக்கத்தை உணர முடிகிறது.
இரண்டாவது, இந்தியத் தரப்பிடமிருந்து தென் இலங்கை மீளும் போது ஒரு நெருக்கடியாக பிரிட்டனின் அணுகுமுறை அமைந்துள்ளது போல் தெரிகிறது. ஆனால் பிரிட்டனின் அணுகுமுறை இலங்கையுடனான இந்தோ-பசுபிக் வலையமைப்பினை விருத்தி செய்வதாகவே உள்ளது. அதற்கான உபாயங்களையே முதன்மைப்படுத்தியுள்ளதனை அவரது உரையாடல் வெளிப்படுத்துகிறது. பிரதானமாக பிரிட்டனின் பொருளாதார வலையமைப்புக்குள் இலங்கையை உள்ளடக்குவது மற்றும் இந்தோ-பசுபிக் உபாயத்துக்குள் இலங்கையை இணைப்பது ஆகிய இரு இலக்குகளையே தாரிக் அஹமட் வெளிப்படுத்தியுள்ளார். அவரது மனித உரிமை தொடர்பிலான எண்ணமும் கரிசனையும் பிரிட்டனின் அடிப்படை அரசியலாக அமைந்தாலும் ஏனையவிடயங்களை அடைவதற்கான வழிமுறையாகவே மனித உரிமை பற்றிய உரையாடல் காணப்படுகிறது. எவ்வாறு அமைந்தாலும் பிரிட்டனின் நகர்வு இலங்கைத் தீவு பொறுத்த மேற்குலகத்தின் கொள்கையை வெளிப்படுத்துவதாக உள்ளது.
மூன்றாவது, பிரிட்டன் அமைச்சரது விஜயத்தினை ஜனாதிபதி தமக்கு சாதமாக மாற்ற முன்வைத்துள்ள உபாயமாகவே புலம்பெயர்ந்த பிரிட்டன் வாழ் இலங்கைப் பிரஜைகளுடன் சேர்ந்து இயங்குவதற்கு விரும்புவதாகவும் அவர்களுடன் உரையாடப் போவதான கோரிக்கை அமைந்துள்ளது. ஜனாதிபதி இலங்கையர் என்று குறிப்பிட்டதாகவே ஊடகப்பரப்பில் செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் அது ஈழத்தமிழர்களாக இருக்க முடியும் என்ற வாதங்களே முதன்மையாக உள்ளது. ஐ.நா. சபையில் உரையாற்ற சென்ற போது ஜனாதிபதி புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களுடன் உரையாடப் போவதாக தெரிவித்திருந்தமை நினைவு கொள்ளத் தக்கது. அப்படியாயின் அத்தகை நகர்வென்பது தென் இலங்கை அரசியல் தலைமைகளின் இராஜதந்திர செய்முறையாகவே அமைய வாய்ப்புள்ளது. ஏறக்குறை ஈழத்தமிழரது அரசியல் இருப்பானது புலம்பெயர்ந்த தளத்திலேயே பாதுகாக்கப்படுகிறதைக் காண முடிகிறது. அதனை நோக்கிய நகர்வுகளை மேற்கொள்ள திட்டமிடும் தென் இலங்கை ஆட்சியாளர்கள் அதனையும் முறியடிப்பார்களாயின் முழுமையாக புலத்திலுள்ள ஈழத்தமிழரது இருப்பு கேள்விக்கட்படுவதாகவே அமையும். அதன் பின்னர் புலத்திலுள்ள ஈழத்தமிழர்களை கையாளுவது இலகுவானதென தென் இலங்கை ஆட்சியாளர்கள் கருதுகின்றனர்.
எனவே, தென் இலங்கையின் ஆட்சியாளர்களது இராஜதந்திர செய்முறை கொள்கைப்பிரகடனத்திலும் இந்தியாவுடனும் எப்படி வாய்ப்பானதாக அமைய திட்டமிடப்பட்டுள்ளார்களே அவ்வாறே பிரிட்டனின் அமைச்சரது விஜயத்தையும் கையாள திட்டமிட்டுள்ளனர். இலங்கைக்கும் பிரிட்டனுக்குமான மூன்று நூற்றாண்டு அடிமைத்தனத்தை விட்டுவிட்டு 75 வருட இராஜீக உறவை கொண்டாட இ.லங்கை ஆட்சியாளர்கள் தயாகின்றனர். இதுவே தென் இலங்கையின் தந்திரோபாய நகர்வாகும். இதனை எல்லாம் எதிர்கொள்ள முடியாது தமிழ் அரசியல் வாதிகள் ஆத்தரம் கொள்வதில் பயன் ஏதும் ஏற்படப் போவதில்லை. அரசியலில் எல்லாவற்றையும் தந்திரமாகவே பார்க்க வேண்டும். இராஜதந்திரம் என்பது ஏமாற்றுத் தனத்தாலும் சதியினாலுமே கட்டப்பட்டுள்ளது. கௌடில்லியர் கூறும் இராஜதந்திரம் அதனையே முதன்மைப்படுத்துகிறது.
-பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம்-

(நன்றி: ஈழநாடு 23.01.2022)
