தமிழகத் தேர்தல் முடிபுகள் தி.மு.க வின் ஆட்சியை நிறுவியுள்ளது. இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தோடு அதிகம் பிணைப்பைக் கொண்டவர்கள் என்பது வரலாற்றுக் காலம் முதல் புரிந்து கொள்ளப்பட்டதொன்றாகவே உள்ளது. புவிசார் ரீதியில் இந்தியாவுடன் நெருக்கமாகவுள்ள ஈழத் தமிழர்கள் தமிழகத்துடன் மிக நெருக்கமாக உள்ளனர் என்பது புரிந்து கொள்ளப்படும் விடயமாகும். இத்தகைய உறவானது அரசியல் சமூக பண்பாட்டு ரீதியில் தனித்துவமானது. தமிழகத்தினூடாகவே இந்தியாவையும் இந்திய தேசியத்தையும் ஈழத்தமிழர்கள் பின்பற்றுவதற்கும் உறவு கொள்வதற்கும் நேசிப்பதற்கும் காரணமாக அமைந்திருந்தது. அதனாலேயே 1962 ஆண்டு நிகழ்ந்த சீன-இந்திய போரின் போது இந்தியாவுக்கு ஆதரவாக தந்தை செல்வா ஈழத்தமிழ் இளைஞர்களைத் திரட்டி இந்தியாவுக்கு அனுப்ப திட்டமிட்டிருந்தார். பிரிட்டிஷ்க்கு எதிரான சுதந்திர போராட்டத்தின் ஈடுபட்ட போது மகாத்மா காந்தியும், ஜவகல்லால் நேருவும் ஈழத்திற்கு வருகைதர அத்தகைய உறவே காரணமாக அமைந்தது. இவ்வாறு ஈழத் தமிழருக்கும் தமிழகத்திற்குமான நெருக்கம் தனித்துவம் மிக்கதாக ஆரம்ப காலத்தில் விளங்கியது. ஆயுதப் போராட்டத்தின் காலப்பகுதி முழுவதும் தமிழகமே பாரிய ஒத்துழைப்புக்களையும் வாய்ப்புக்களையும் சந்தர்ப்பங்களையும் உருவாக்கிக் கொடுத்தது. அதற்கான பின்புலத்தை தமிழக அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புக்களும், தீவிர ஆதரவாளர்களும் காரணமாக இருந்தனர். அத்தகைய நெருக்கம் இலங்கை மீதான இந்திய இராணுவத்தின் நகர்வுக்கும் ராஜீவ் காந்தியின் படுகொலைக்கும் பின்பு படிப்படியாக பலவீனமடைந்தது. ஆனால் 2009 முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்குப் பின்னர் அது மீளவும் பலமடைய தமிழக ஈழத் தமிழ் ஆதரவு காரணமாக அமைந்தது. அத்தகைய பரிமாணத்திற்குள் தி.மு.க. வின் முதலமைச்சரான மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழகத்திற்கு ஆட்சிமாற்றம் நிகழ்ந்துள்ளது. இக் கட்டுரையில் தமிழகத்தை எவ்வாறு ஈழத் தமிழர்கள் அதன் அரசியல் தலைமைகள் அணுகுதல் பொருத்தமானது என்பதை தேடுவதாக உள்ளது.
முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர் கடந்த பத்து வருடங்கள் ஈழத் தமிழரது புலமைத் தளத்தில் ஒரு தெளிவான வெளியுறவு அவசியம் என்ற கருத்தாடல்கள் காணப்பட்டது. ஆனால் அதற்கான எத்தகைய வடிவமோ ஈழத் தமிழரின் அரசியல் பக்கத்தில் இருந்து உருவாக்கப்படவில்லை. ஆனால் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிற்பாடு ஈழத் தமிழ் அரசியல் தலைமைகள் கட்சி வேறுபாடுகளைக் கடந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு ஈழத் தமிழருக்கான ஆதரவுத் தளத்தை தமிழகம் கொண்டிருக்க வேண்டுமென குறிப்பிட்டிருந்தனர். நியாயமாகப் பார்த்தால் ஈழத் தமிழரின் வெளிவிவகாரத்துக்கான திறவுகோலாக தமிழகமே உள்ளது. அது இந்திய மத்திய அரசோடும் மேற்கு நாடுகளோடும் புலம் பெயர் உறவுகளோடும் உறவு கொள்வதற்கான மையப் புள்ளியாக தமிழகம் விளங்குகிறது. அவ்வாறு தமிழகத்தின் போக்கைப் பொறுத்து ஈழத் தமிழரின் உலகளாவிய தொடர்பு முதல் நிலை நகர்வாக அமைய வாய்ப்பு உள்ளது. ஈழத் தமிழ் அரசியல் தலைமைகள் தமிழகத்தையும் இந்திய மத்திய அரசையும் அணுகுவதற்கான நடைமுறையே வெளி உறவின் முதல் படியாகும்.
வெளியுறவு என்பது அரசுகளுக்கும் அரசுகளை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்களுக்கும் இடையில் நிகழும் அரசியல்இ சமூகஇ பண்பாட்டுஇ இராணுவ தொடர்பினை குறிப்பதாக இருந்தாலும் அரசற்ற சமூகங்கள் தமது புவிசார் அரசியலையும் நேசிப்பு சக்திகளையும் அணுகுவதற்கான பொறிமுறைகள் உலகத்தில் பின்பற்றப்பட்டு வருகின்றது. அத்தகைய எல்லைக்குள் பலஸ்தீனியர்கள்இ குர்திஸ்தானியர்கள் மட்டுமன்றி இலங்கையில் இருக்கும் இஸ்லாமியர்களும் அவ்வகை உறவினை பேணி வருகின்றனர். ஈழத் தமிழ் அரசில் என்பது உலகத் தமிழரின் அரசியலின் ஒரு பகுதி என்பதை மறந்து விட முடியாது. அதன் ஆரம்பப் புள்ளி தமிழகமும் ஈழத் தமிழரும் அருகருகே வாழ்கின்றனர் என்பது வரலாற்று படிமமாகும். இதனால் ஈழத் தமிழர்கள் மற்றும் ஈழத் தமிழரின் அரசியல் தலைமைகள் உலகத் தமிழர்களை அணுகுவதற்கான ஒரு பொறிமுறையாக வெளியுறவு ஒன்றினை கையாளுதல் அவசியமானது. அத்தகைய உறவு மீளவும் உருவாக ஒரு வாய்ப்பான சூழலை பிராந்திய சர்வதேச அரசியல் ஏற்படுத்தித் தந்துள்ளது. அதனைக் கடந்த பத்து ஆண்டுகளில் ஈழத் தமிழர்கள் கடந்து சென்றுள்ளனர். அவ்வகை உறவுக்கான அணுகுமுறைகளை புரிந்து கொள்வது அவசியமானது.
முதலாவது, தமிழகத்துடனான ஈழத் தமிழரின் உறவு தி.முக, அ.தி.மு.க, ம.தி.மு.க, நாம் தமிழர் என்று இல்லாமல் அனைத்து அரசியல் கட்சிகளோடும் சிவில் அமைப்புக்களோடும் தீவிர ஆதரவுத் தளங்களோடும் சேர்ந்ததாக அமைதல் வேண்டும். அத்தகைய தளம் தவிர்க்க முடியாமல் ஈழத் தமிழரது அரசியல் சமூக பொருளாதார பண்பாட்டு வடிவங்களில் பின்னிப்பிணைந்து இருப்பதற்கான சூழலைக் கொண்டிருப்பதனால் இதனை மேற்கொள்ளவும் தொடர்ந்து பராமரிக்கவும் ஈழத் தமிழ் அரசியல் கட்சிகள் தெளிவான ஓர் அமைப்பினை உருவாக்கி தமிழகத்தோடு உறவு வைத்துக் கொள்ள வேண்டும். தேர்தலுக்கானதாகவோ கட்சி நலன்களுக்கானதாகவோ அமைவதைத் தவிர்த்தல் வேண்டும்.
இரண்டாவது, தமிழகத்தின் அரசியல் தலைமைகளை ஈழத் தமிழ் அரசியல் தலைமைகள் புரிந்துனர்வுடன் செயல்படுவதற்கான நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும். அதாவது தனிப்பட்ட நலன்களை கடந்து பரஸ்பரம் தமிழர்களின் அரசியல் சார்ந்த விடயங்களை சந்திப்புக்களுக்கு ஊடாக பகிர்ந்து கொள்ளுதல் வேண்டும். இது பெருமளவுக்கு அமைதியையும் சமாதானத்தையும் ஜனநாயக விழுமியங்களையும் கொண்டிருக்கும் விதத்தில் கட்டமைக்கப்பட வேண்டும். அவ்வகைக் கட்டமைப்புகள் ஒன்றுக்கு மேற்பட்டதாகவும் ஜனநாயக வழுமியங்களுக்கு உட்பட்டதாக அமைந்திருத்தல் வேண்டும்.
மூன்றாவது, இன்றைய உலகப் பொருளாதாரத்தில் புவிசார் பொருளாதாரம் வலுவான ஒன்றாக மாறி வருகின்றது. அத்தகைய பொருளாதார நோக்கு நிலையை தமிழக முதலீட்டாளர்கள் ஈழத் தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கில் முதலீடு செய்யவும் உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சூழலை உருவாக்கிக் கொடுத்த்ல் வேண்டும். அத்தகைய முதலீட்டாளர்கள் மொழி சார்ந்தும் பண்பாடு சார்ந்தும் கரிசனை உள்ளவர்களாக அமைவது அவசியமானது. ஏற்கனவே இந்திய மத்திய அரசாங்கம் அவ்வகை முதலீட்டுத் திட்டங்களுக்கு வாய்ப்பளித்திருந்த போதும் அது முழுமைப்படுத்தப்படாத அம்சங்களாகவும் தனித்து இலாப நோக்ககங்களையும் சுரண்டலையும் அடியொற்றியிருந்ததனாலும் அனேகமான முதலீட்டுத் திட்டங்கள் தோல்வியை எதிர்கொண்டுள்ளன. அவை மீளமைக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக-ஈழதட்தமிழர் அமைப்பு உருவாக்க வேண்டும்.
நான்காவது, இந்திய மத்திய அரசு வடக்கு கிழக்கில் அதிக அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக யாழ்ப்பாண கலாசார மையம் காங்கேசன் துறை துறைமுக விருத்தி பலாலி விமான போக்குவரத்து வசதி என்பன முக்கிய திட்டங்களாக உள்ளன. ஆனால் இவற்றைத் துரிதப்படுத்துதல் சர்வதேச தரத்துக்கு அவற்றைக் கொண்டு செல்லுதல் அதே போன்று ஏனைய முக்கியமான அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பினையும் நகர்வினையும் துரிதப்படுத்துதல் வேண்டும். அத்தகைய அபிவிருத்தித் திட்டங்கள் நகர்த்தப்படும் போது இலங்கை அரசாங்கம் தமிழக ஆட்சித்துறையினர் இந்திய மத்திய அரசு ஈழத்தமிழர் சார்ந்த குழு ஒன்றின் கண்காணிப்பில் பராமரிக்க வேண்டும்.
ஐந்தாவது, ஈழ உள்நாட்டு தமிழரின் உற்பத்திக்கும் அவற்றின் ஏற்றுமதிக்கும் தமிழகம் வாய்ப்பினை அளிப்பதோடு தமிழகத்தில் ஈழத் தமிழரின் அனைத்து உற்பத்திக்குமான சந்தையை உருவாக்குவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்துதல் வேண்டும். அதற்கேற்ற வகையிலான தொழில்நுட்ப பயிற்சிகளையும் அதற்கான உத்திகளையுமு; ஈழத் தமிழருக்கு வழங்குவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்க வேண்டும். இதனால் ஈழத் தமிழருக்கும் தமிழகத்துக்குமான சமூக பண்பாட்டு உறவு மட்டுமன்றி புவிசார் பொருளாதார உறவும் வலுவடைய வாய்ப்பு ஏற்படும். அதனால் ஈழத்தமிழர் இலங்கை அரசாங்கத்திற்கு பொருளாதார சுமையாக இருக்கும் நிலை காணாமல் போவதுடன் நிலையான பொருளாதார உற்பத்தியை ஏற்படுத்துவபவராகவும் இலங்கை மத்திய அரசாங்கத்திற்கு பங்களிப்பவராகவும் மாற்றமடைய வாய்ப்பு ஏற்படும்.
ஆறாவது ஈழத் தமிழருக்கும் தமிழக மீனவருக்கமான முரண்பாடுகளும் போதைப் பொருள் பரிமாற்றத்திற்குமான நடவடிக்கைகளையும் இல்லாது ஒழிப்பதற்குமான கட்டமைப்பு முறையிலான உரையாடல்கள் அவசியம். கச்சதீவு மற்றும் இலங்கை இந்திய உடன்பாட்டை கருத்தில் கொண்டு சுமுகமான உறவை ஏற்படுத்துதல் அவசியமானது. இரு சமூகங்களுக்கும் இடையில் சுமூகமான நட்புறவை ஏற்படுத்த இரு பிரதேச தமிழ் தலைவர்களும் முயலுதல் வேண்டும்.
இவ்வாறு சிறு முரண்பாடுகளை உடனுக்குடன் தீர்த்துக் கொள்வதும் உலகத் தமிழராக ஒன்றிணைவதும் அவசியமானது. அதற்கான மைப்புள்ளியை தமிழக முதல்வர் ஸ்டாலினிலிருந்து ஆரம்பிப்பது இலகுவானது. காரணம் ஏற்கனவே இரு சமூகங்களுக்கு இடையிலான நெருக்கடியை அனுபவித்த மற்றும் மத்திய அரசாங்கத்துடன் கையாளுகைப் பலமுடைய தமிழகமும் அதன் தலைமையும் வாய்ப்பான களமாக அமைந்துள்ளது. இதனையும் தவறவிடுதல் அரசியல் சமூகம் என்ற வலுவையும் இழப்பதற்கு ஒப்பானதாக அமைந்துவிடுமா? என்ற சந்தேகத்தை தருகிறது.
எனவே ஈழத் தமிழ் அரசியல் தலைமைகளும் அது சார்ந்து கரிசனை கொண்ட அமைப்புக்களும் தெளிவான வெளியுறவுப் பாரம்பரியத்தை உருவாக்க வேண்டும். அதில் தமிழகம் இந்தியா முதன்மையாக இருந்தாலும் இந்தியா ஊடாக மேற்குலக நாடுகளைக் கையாளுவதாக இருந்தாலும் சீனாஇ ரஸ்யா போன்ற நாடுகளுடனான உறவையும் பலப்படுத்துவதற்கான பொறிமுறையை உள்வாங்குவதோடு நடைமுறைப்படுத்த முயலுதல் வேண்டும். அமெரிக்க எதிர் சீன-ரஷ;சிய பூகோளப் போட்டியும் இந்திய எதிர் சீன பிராந்தியப் போட்டியும் நிகழும் சந்தர்ப்பத்தில் நாடுகளை கையாளும் உத்திகளை தமிழ் தலைமைகள் வகுக்க வேண்டும். அத்துடன் ஜனநாயக அமைப்புக்களுடனும் அவற்றின் அலகுகளுடனும் உறவு வைத்துக் கொள்ளுதல் அவசியமானது. எதிர் எதிர் சக்கதிகளை எதிர் கொள்வதும் கையாள்வதும் உறவு கொள்வதுமே வெளிவிவகாரத்தின் இராஜதந்திரமாகும். எனவே அத்தகைய நோக்கை அடையும் விதத்தில் நாடுகள் சிவில் அமைப்புக்கள் நிறுவனங்கள் போன்ற பரிமாணங்களில் அணுகுதலும் அவற்றோடு உறவு கொள்வுதும் அரசற்ற சமூகங்களின் இருப்பினைத் அரசியல் பொருளாதார பண்பாடாக தக்க வைப்பதற்கான பொறிமுறையாகும். கொவிட் தடுப்பூசி தொடர்பாக எத்தகைய உரையாடலிலும் ஈழத் தமிழ் அரசியல் தலைமைகள் இந்தியாவோடு மட்டுமல்ல உலகத்தோடு இதுவரை மேற்கொள்ளவில்லை. ஆனால் ஆளும் தரப்பைக் கடந்து இலங்கையின் எதிர்க் கட்சிகள் ரஸ்யா ஐக்கிய நாடுகள் சபை இந்தியா போன்ற தளத்தில் கரிசனை கொண்டு செயல்படுகின்றன. எனுவே ஈழத் தமிழர்கள் ஈழத் தமிழ் அரசியர் தலைமைகள் தெளிவான கொள்கையை உருவாக்கி நாடுகளையும் சர்வதேச அமைப்புகட்களையும் தொடர்பு கொள்ளுதல் வேண்டும்.இலங்கைத் தமிழர் தனியான பண்பாட்டையும் வாழ்வியலையும் கொண்டிருப்பது போல் அரசியல் பொருளாதார பண்பாட்டு நலன்களை அடைவதற்கு தனித்துவமான பிற சமூகங்களுடன் உறவு வைத்துக் கொள்ளுதல் தவிர்க்க முடியாததாகும். இவை அனைத்தும் இலங்கை அரசியலைப்புக்கும் சர்வதேச சட்டவரைபுக்கும் உட்பட்டவையாகவே அமையும்.
-பேராசிரியர் கே. ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)
