July 11, 2025
அரசியல் கட்டுரைகள்

செம்மணி புதைகுழிகளை நோக்கி ஈழத்தமிழர் அரசியல் நகர்த்தப்பட வேண்டும்?

இலங்கை தீவின் அரசியல் இனப்படுகொலை என்று சொல் நீண்ட துயரத்தையும் நெருக்கடியையும் தந்திருக்கின்றது. ஈழத்தமிழர்களின் அரசியல் முழுவதும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் வடிவத்தினாலேயே அதிகம் நகர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். அத்தகைய கொடுமையான இனப்படுகொலை அரசியலுக்குள்ளால் கடந்த 75 வருடங்கள் எதிர்கொண்ட ஈழத்தமிழர்கள் செம்மணி விவகாரத்தையும் சமகாலத்தில் மீளவும் நினைவு கொள்வதோடு நகர்வதாகவே தெரிகிறது. இது ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலை என்பதை நிறுவுவதற்கான இன்னொரு ஆதாரமாக கிடைத்திருக்கிறது. ஒரு நீண்ட வரலாறு முழுவதும் இலங்கைத் தீவின் இருப்பு எதோவொரு அடிப்படையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற இனப்படுகொலை அரசியலாக காணப்படுகிறது. செம்மணியில் அகழ்வுகளில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் ஈழத்தமிழர் உடைய அரசியல் வரலாற்றில் இனப்படுகொலைக்கான ஆதாரங்களை வெளிப்படுத்துவதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் காணப்படுகிறது. வடக்கு கிழக்குக்குள்ளும் வடகிழக்கு வெளியேயும் இவ்வகை படுகொலைகளுக்கான ஆதாரங்கள் புதையுண்டுபோயிருக்கக் கூடியன. இது இலங்கைத்தீவின் அரசியல் நாகரிகத்தை அடையாளப்படுத்துகிறது. இக்கட்டுரையும் செம்மணி ஆதாரங்களை ஈழத்தமிழர்கள் முன்னிறுத்தி செயல்பட வேண்டிய தேவைப்பாட்டை உணர்த்துவதாக அமையவுள்ளது.

செம்மணியில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட 19 எலும்புக்கூடுகளும் அதிக அதிர்ச்சியையும் வேதனையையும் ஈழத்தமிழர் மத்தியில் தோற்றுவித்துள்ளது. கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடுகளின் வடிவத்தை வைத்துக் கொண்டு அவை எதிலும் ஆடைகள் அணிகலன்கள் எதுவும் அற்ற நிலையில் புதைக்கப்பட்டது என்பது நிரூபணமாகியுள்ளது. இதன் வடிவங்களை சட்ட மருத்துவ அதிகாரிகளும் நீதிமன்றமும் சட்டவாதிகளும் ஊடகங்களுக்கு வெளிப்படுத்துகின்ற தகவல்களை வைத்து பார்க்கின்றபோது அதன் உண்மை தன்மை வெளிப்படுகின்றது. அதேபோன்று அப்படுகொலையோடு தொடர்புபட்ட இணுவக் குற்றவாழியான சோமரத்ன ராஜபக்ஷ நீதிமன்றில் தெரிவித்த ஒப்புதல் வாக்கு மூலமும் அத்தகைய படுகொலையின் உண்மைத்தன்மையை உணர்த்துகிறது. குழந்தைகள் மற்றும் கைக்குழந்தைகளோடு கூட்டு தொகுதியாக மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் அத்தகைய படுகொலையின் உண்மை தன்மையை மேலும் உறுதிப்படுத்துகின்றது. இது வெளிப்படையாகவே இனப்படுகொலை என்பதையும் திட்டமிடப்பட்ட நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட படுகொலை என்பதையும் உணர்த்துகிறது. இவர்கள் போரிலோ போரின் எல்லைகளிலோ ஆயுதங்களோடு பயணித்தவர்களோ கிடையாது. அதனால் இது ஓர் இனப்படுகொலை என்பதற்கான ஆதாரங்களை கொண்டிருக்கிறது. அல்லது உறுதிப்படுத்துகிறது. தமிழர்கள் என்பதற்காகவும் வீதியால் பயணித்தவர்கள் என்பதற்காகவும் காணாமல் போனவர்களை தேடியவர்கள் என்பதற்காகவும் வியாபார அனுமதிப் பத்திரம் கோரியவர்கள் என்பதற்காகவும் படுகொலை செய்யப்டபட்டவர்கள்.

அவ்வாறெனில் இது திட்டமிடப்பட்டு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நிகழ்த்தப்பட்ட படுகொலையாகவே உள்ளது. இது சார்ந்து நீதிமன்றங்களும் சட்டவாதிகளும் சட்ட வைத்திய அதிகாரிகளும் முன்வைக்கும் கருத்துக்கள் ஒரு புறம் அமைய மறுபக்கத்தில் இதன் அரசியல் முக்கியத்துவத்தையும் ஈழத்தமிழர்களின் அரசியலில் இவ்வகை துயரங்கள் நீண்டது என்பதை ஆதாரங்களோடு வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு காணப்படுகிறது. அதனை நோக்கி ஈழத்தமிழ் அரசியல் சமூகத் தரப்புகள் கவனத்தில் கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாது. அதனை விரிவாக நோக்குவது அவசியம்.

முதலாவது, செம்மணி விவகாரம் பொறுத்து ஈழத்தமிழர்கள் மத்தியில் அதிக கவனம் செலுத்தப்படுவதாக தெரியவில்லை. துயரங்களை மட்டும் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனரே அன்றி அதனைக் கடந்து செயல்பாடுகளில் கவனம் கொள்வதைக் காணமுடியவில்லை. இவ்வாறே இறுதிக்கட்ட போர் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற போது வடக்கு கிழக்கின் ஏனைய பிரதேசங்களில் எந்தவித கவனமும் கொள்ளாது எந்தகைய எதிர்ப்பு இன்றி மௌனமாக இருந்தது போன்றே செம்மணி விவகாரத்தில் மௌனம் காத்து வருகின்றதை அவதானிக்க முடிகிறது. இதன் விளைவுகள் ஒட்டுமொத்தமாக இனத்தின் அடையாளத்தை இருப்பையும் பலவீனப்படுத்தக் கூடியது. அரசியல்வாதிகள் கதிரைகளுக்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கும் போராடிக் கொண்டிருக்கிறார்களே அன்றி ஈழத்தமிழர்களின் அடிப்படையானதும் ஆதாரங்களை உறுதிப்படுத்தக் கூடியதுமான செம்மணி போன்ற விடயங்களில் கவனம் கொள்வதில் தவிர்த்து வருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து ஒரு எதிர்ப்பு போராட்டத்தை நிகழ்த்தியோடு (யூன்5.2025) தொடர்ச்சியாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மட்டுமே சர்வதேச கண்காணிப்புக்குள் செம்மணி விடயம் கையாளப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து வருகின்றனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளுமே அதிக கரிசனை கொண்டிருக்கின்றனர். எனினும் சாதாரண சிவில் பரப்பில் அது ஒரு முக்கியத்துவம் பெற்ற விடயமாக கருதப்படதாக தெரியவில்லை. அதனுடைய தனித்துவத்தையும் அதனுடைய அவசியத்தையும் அதனால் ஏற்படக்கூடிய மாற்றங்களையும் கருத்தில் கொள்ளுகின்ற திராணி ஏனைய எந்த தரப்பிடமும் காணப்படவில்லை. ஆனால் இறுதிக் கட்ட போருக்கான சர்வதேச விசாரணை வேண்டுமென்றும் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை என்பதை ஆதாரப்பூர்வமாக நிறுவுவதற்கான வாய்ப்பு செம்மணியில் கிடைத்துள்ளது. அதனை சரிவர பிரயோகப்படுத்துவதும் அதனை சட்டதரப்புகளோடு சேர்ந்து நீதிமன்றங்களோடு சேர்ந்து அதனை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு வடக்கு கிழக்கில் இருக்க அனைத்து தமிழர்களுக்கும் உரிய கடப்பாடாகும்.

இரண்டாவது, அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை எந்தவிதமான கரிசனையும் கொள்ளாது செயல்படுகின்ற போக்கை செம்மணி விடயத்திலும் அவதானிக்க முடியகிறது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பராளுமன்றத்தில் நீதி அமைச்சுக்கு முன்னே எழுப்பிய கேள்விகளை தவிர பொது அரங்கில் அரசியல் தலைவர்கள் பெருமளவில் செம்மணி விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்ததாக தெரியவில்லை. தமிழரசுக் கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளர் ஊடகங்களோடு உரையாடும் போது ஏனைய விடயங்களில் ஓர் அம்சமாக கடந்து செல்ல முயல்கிறதைக் கண்டு கொள்ள முடிகிறது. இதன் தாற்பரியம் எது என்பதை உணரக் கூடிய தரப்புகள் அரசியல் கட்சிகள் அவற்றினுடைய உறுப்பினர்கள் தொண்டர்கள் இதற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். தொடர்ச்சியாக செம்மணி விடயத்தை சர்வதேச விவகாரங்களுக்குள் உட்படுத்தப்படுவது மட்டுமின்றி அதனூடான ஈழத்தமிழர் உடைய அரசியலின் இருப்புக்கான வாய்ப்புகளை திறந்து விடுதல் வேண்டும். பிரித்தானிய வரலாற்றில் முடியாட்சியாளனான Oliever Cromwell என்பவர் கொல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு எலும்புக்கூடான அவரை தோண்டி எடுத்து அவ்எலும்பு கூட்டுக்கு மரண தண்டனை விதித்த வரலாற்று பதிவு ஒன்று உலகத்தில் அனுபவத்தில் உண்டு. அத்தகைய அனுபவங்களை கவனத்தில் கொள்ள வேண்டிய தேவைப்படும் ஈழத்தமிழர் அரசியல் அவசியமானது. ஈழத்தமிழர் ஒரு நீண்ட அரசியல் உரிமைக்கான சமத்துவத்துக்கான போராட்டத்தை நிகழ்த்தி உள்ளனர். அதனை அடைவதற்கான வாய்ப்புகள் அவ்வப்போது கிடைக்கின்ற சந்தர்ப்பங்கள் அதனை தெளிவாக பயன்படுத்துகின்ற அரசியல் தலைவர்களும் அரசியல்வாதிகளும் இதன் மீது கவனம் கொள்ள வேண்டிய ஒரு தேவைப்பாடு எழுந்திருக்கிறது. அவ்வாறு செயல்படுகின்ற சந்தர்ப்பத்தில் மட்டுமே மாற்றத்தை அடைய முடியும். அரசியல்வாதிகள் தமக்குள்ளும் தமது அதிகாரத்துக்குள்ளும் போட்டியிட்டுக் கொண்டிருக்கிறார். அவர்களது செயல்பாடுகளை திசை திருப்புவது என்பது சிவில் அமைப்புகளாலும் மக்களாலும் புலமை சார்ந்திருக்க கூடிய தரப்புகளாலும் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயமாகும். அரசியல்வாதிகளுடைய அணுகுமுறைகள் அவ்வாறானது என்பதை புரிந்து கொண்டு அதற்கு மாற்றான செய்முறைகளை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு ஏற்படுத்துகின்ற பட்சத்தில் மட்டுமே அரசியல் ரீதியான தீர்வை நோக்கி ஈழத்தமிழ் சமூகம் செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும்.

எனவே ஈழத்தமிழர்களின் அரசியல் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும் கடந்த கால வரலாறு முழுவதும் இலங்கைத் தீவில் எத்தகைய துயரமிக்க வலிகளை ஈழத்தமிழர் சந்தித்துள்ளார்கள் என்பதையும் வெளிப்படுத்த செம்மணி விவகாரம் கிடைத்துள்ளது. அதற்கான வாய்ப்பினை நகர்த்த நீதிமன்ற ஒத்துழைப்பும் சட்டத்தின் ஆதரவும் முழுமையாக காணப்படுகிறது. அத்தகைய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு செம்மணி விவகாரத்தை மேல்நிலைக்கு கொண்டு செல்லுதல் அவசியமானது. ஈழத்தமிழர்கள் முள்ளிவாய்க்கால் போன்று துயரம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றபோது மௌனம் காத்து விட்டு பின்னர் உரையாடுவதில் எந்தப் பயனும் கிடையாது. இது ஒரு வாய்ப்பான சூழலை நீதித்துறையும் சட்டத்துறையும் வழங்கி இருக்கின்றது. அதனை முதன்மைப்படுத்திக் கொண்டு அரசியல் ரீதியான அணுகுமுறைகளை தெளிவான கட்டமைப்புகளுக்குள் கொண்டுவந்து செயல்படுத்த வேண்டும். செம்மணி விடயம் உறுதிப்படுத்தப்பட்ட வலுவான ஆதாரங்களில் ஒன்று. அத்தகைய ஆதாரத்தை முன் கொண்டு செல்வது ஈழத்தமிழர் அரசியல் எதிர்காலத்துக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்தக் கூடியது. இது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்திற்கும் பொறுப்புள்ளது என்பதை உணர வேண்டும். கொல்லப்பட்ட தமிழர்களை நினைவு கொள்ளும் மக்களுக்கு பொறுப்புடையதாக அரசாங்கம் செயல்பட வேண்டும். ஆயுதப் போராட்டத்தின் போது ஜே.வி.பிக்கு வழங்கப்படும் மற்றும் வழங்கப்பட்ட நியாயாதிக்கத்தை ஈழத்தமிழர் கோருவது ஒன்றும் தவறில்லையே.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)