அரசியல் கட்டுரைகள்

பன்னாட்டு அரங்குகளை கையாளத் தெரியாத ஈழத்தமிழர்?

செம்மணி புதைகுழி அகழ்வுக்கு பின்னர் இலங்கை அரசியல் குழப்பகரமான சூழலை ஏற்படுத்த ஆரம்பித்திருக்கிறது. ஆனால் செம்மணி போன்றே ஈழத்தமிழர் மீதான நடவடிக்கையின் பிரதிமைகள் சுதந்திரத்திற்கு பின்னரான தென்னிலங்கையின் ஆட்சியில் ஆழமான வரலாற்றை பகிருகின்றது. விடுதலைப் புலிகள் இல்லாத சூழலில் இன்னொரு ஆயுதப் போராட்டத்தின் எந்த அடிப்படை எச்சங்களும் காணாத நிலையில், பேசுபொருளாகவும் ஈழத்தமிழரின் கடந்த கால வரலாற்றின் நிஜமான வடிவங்களையும் கோடிட்டு காட்டுகின்ற அரசியல் களம் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வில் தொடங்கி இருக்கிறது. இதனை நோக்கி ஈழத்தமிழ் அரசியல் சிவில் மற்றும் ஊடக தரப்புகள் அதீதமாக விழிப்போடு பயணிக்க வேண்டிய காலப்பகுதியாக இது காணப்படுகிறது. இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்களின் அரசியல் – சமூக – பொருளாதார இருப்பை பிற இனங்களுக்கு சமமானதாக மாற்றிக் கொள்ளும் ஒரு செய்முறைக்கான களம் கிடைத்திருக்கிறது. அதனை நோக்கி பயணிக்க வேண்டிய பொறுப்பும் ஈழத்தமிழர்களுக்கு உண்டு. போலித்தனமான உரையாடல்களையும், பொய்யான தகவல்களையும், முன்பின் முரணான அபிப்பிராயங்களையும் ஏற்படுத்துகின்ற தரப்புகளை புறமொதுக்கிவிட்டு; இதற்காக உழைக்க வேண்டிய தரப்புகளுடன் ஆரோக்கியமான இருப்பை கட்டமைக்க முயலுதல் வேண்டும். இக்கட்டுரையும் ஜெனிவா அரங்கை நோக்கிய ஈழத்தமிழர்களின் கவனம் அவசியமானது என்பதை உணர்த்துவதற்கு முயல்கிறது.

ஜெனிவா ஈழத்தமிழரின் அரசியலில் பலமான சர்வதேச அல்லது பன்னாட்டு அரங்காகும். ஈழத்தமிழர்களுக்கான நிலையான ஆதரவை தருகின்ற எந்த நாடும் உலகத்தில் இல்லை என்பதை ஈழத்தமிழர்கள் புரிந்து கொள்ளுதல் வேண்டும். தமிழகமும் இந்தியாவும் 1991ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின்னர் முழுமையாகவே திசை திருப்பப்பட்டுள்ளது. ஏனைய அரசுகள் அனைத்துமே தொலைதூர அரசுகளாகவும் நலன்பேணும் அரசுகளாகவும் காணப்படுகின்ற சூழலில் கனடா, பிரித்தானியா போன்ற நாடுகள் அண்மைய காலங்களில் அதிகமான ஆதரவை ஈழத்தமிழர்களுக்கு வழங்குகின்ற நாடுகளாக காணப்படுகின்றன. ஆனாலும் அவை எல்லாவற்றையும் கடந்து ஜெனிவா என்பது பன்னாட்டு அரசுகளை உள்ளடக்கிய களமாக உள்ளது. ஐக்கிய நாடு சபையின் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் செம்மணிக்கு வருகை தர இருந்தமை அல்லது வருகை தந்தமை பன்னாட்டு அரசியல் வலிமையை கோடிட்டு காட்டியது. அவரது வெளிப்பாடான இலங்கை அரசுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்ற அம்சத்தை பலவீனமானதாக பார்த்தாலும், நடைமுறையில் அத்தகைய வடிவத்திலாவது அரசாங்கம் மீது அழுத்தம் கொடுக்கக்கூடிய பன்னாட்டு முகம் என்பது மனித உரிமை ஆணையாளருக்கு இருந்தது. அதேபோன்றுதான் ஜெனிவா களத்தினை அரசியலுக்காகவும் தமது நலனுக்காகவும் பிரயோகப்படுத்துவது ஒருபுறம் அமைய் மறுபக்கத்தில் அதனை எப்படி கையாளுதல் என்று புரிந்து கொள்ள முடியாமல் குழப்பத்துக்குள்ளாகிய தரப்பாகவே ஈழத்தமிழர் உடைய அரசியல் பக்கம் கடந்த 16 ஆண்டுகள் நகர்ந்து இருக்கிறது. ஆனால் ஜெனிவா என்பதே பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய இறுதியும் முதலுமான பன்னாட்டு அரங்கமாகும். அதனை பயன்படுத்திக்கொள்ள நெருக்கமான திட்டமிடப்பட்ட உபாயங்கள் அனைத்தும் தேவையானதாக உள்ளது. அதனை ஆழமாக தேடுவது அவசியமானது

முதலாவது, ஈழத்தமிழர்களின் அரசியல் தரப்புகள் இது பற்றிய உரையாடலை வெறும் காலப்போக நிகழ்வாக நடத்தி முடித்ததை காண முடிகிறது. ஆனால் எதார்த்தமாக பார்த்தால் ஈழத்தமிழரின் அரசியல் தரப்பாக இதனை அதிகம் அணுகியவர்களாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமிழரசுக் கட்சியும் காணப்பட்டது. அதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதீதமான கவனத்தை குற்றவியல் நீதிமன்றம் சார்ந்தும், மனித உரிமையை இனப்படுகொலையாக நகர்த்த வேண்டும் என உள்ளும் புறமும் விவாதிக்கின்ற தரப்பாக உள்ளனர். ஆனால் கடந்த 16 ஆண்டுகளில் அந்த அரங்குக்கு வழங்கப்பட்ட அறிக்கைகளும் சாட்சியங்களும் மிக குறைந்த அளவிலே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எதிர்த் தரப்போடு ஒப்பிடுகின்ற விதத்தில் மிகக் குறுகிய அளவு முறைப்பாடுகளே பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என ஜெனிவாவின் உள்ளக பணியாளர்கள் வெளிப்படுத்துகின்றனர். அதுமட்டுமல்ல, ஈழத்தமிழர்களின் அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் எனவும், இணைந்து பயணிப்பதற்கான புறச் சூழலை உருவாக்க வேண்டுமெனவும் ஐக்கியம் பற்றிய உரையாடல்களையும் மீள மீள வலியுறுத்தி வருகின்றனர். இது தேர்தலுக்கு தேர்தலில் ஆட்சியை பங்கீடு செய்வதற்கோ, பாராளுமன்றத்தை கட்சிகள் அலங்கரிக்க வேண்டும் என்பதற்கோ அல்ல் மாறாக ஈழத்தமிழர் மீது நிகழ்த்தப்படுகின்ற நிகழ்த்தப்பட்ட அனைத்து அம்சங்களையும் ஒரு குரலில் அணிதிரட்டுவதும், சரியான தீர்மானங்களை முன்னெடுப்பதும் இதற்கான அடிப்படை தேவையாகும். ஆகவே அத்தகைய ஐக்கியம் பேசப்பட்டது அல்லது முதன்மைப்படுத்தப்பட்டது உள்ளூராட்சி மன்றங்களை அமைப்பதற்கும், பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கும், பாராளுமன்ற உறுப்பினர்களில் தமிழ் கட்சிகள் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும் மட்டுமல்ல என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஐக்கியத்தின் நோக்கம் ஈழத்தமிழர் எதிர்கொள்கின்ற நெருக்கடிகளை சரியான உத்திகளை வகுத்து கையாளுவது என்பதும் அதனை நோக்கியே ஐக்கியம் கட்டமைக்கப்பட வேண்டும். அதனை நோக்கி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். அதனை அடிப்படையாகக் கொண்டு ஜெனிவா அரங்கை வரையறைக்கு உட்படுத்தி கையாளுதல் வேண்டும்.

இரண்டாவது, தமிழ் சிவில் அமைப்புகள், அரச சார்பற்ற உள்நாட்டு – சர்வதேச அமைப்புகள் ஒன்று திரண்டு இருக்கின்ற வடக்கு கிழக்கு பிரதேசத்தில் ஜெனிவா அரங்கு சாத்தியமற்றது என்ற விவாதங்களுக்குள் அதிகம் உட்படுத்த முயல்கின்றன. தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு வடக்கு-கிழக்கு சிவில் தரப்புகள் அடிப்படையில் ஒன்றிணைந்து பயணித்திருந்தன. அத்தகைய வீரியமான செய்முறை ஒன்று ஈழத்தமிழர்கள் தரப்பிலிருந்து தோற்கடிக்கப்பட்டாலும் அது கணிசமான வெற்றியை ஈழத்தமிழர் அரசியலில் முன்கொண்டு நகர்ந்திருந்தது. அத்தரப்புகள் ஜெனிவா பொறுத்து அறிக்கைகளையும், முறைப்பாடுகளையும், காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான தகவல்களையும,; கொல்லப்பட்டவர்கள் பற்றிய சாட்சியங்களையும் முன்னிறுத்த வேண்டிய பொறுப்பாண்மை காணப்படுகின்றது. ஈழத்தமிழரிடம் எல்லா விடயங்களுக்கும் நிதி கோரப்படுகின்ற நிலை ஒன்று வளர்ந்திருக்கின்றது. பொது வேட்பாளரின் வாக்கு சேகரிப்பதற்காக பல்வேறு தரப்புகள் நிதியைப் பெற்றுக் கொண்டே சுவரொட்டிகளையும், பிரச்சார சாதனங்களையும் வழங்கி இருந்தனர் என்பது துயரமான கொடுமையான செய்தியாகும். தனது தாய் நாட்டையும், தாயகத்தையும் நேசிப்பதற்கு இந்த மக்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய துயரம் ஈழத் தமிழர்களின் அரசியல் பக்கத்தில் ஏற்பட்டிருக்கின்றது. இதனால் இழந்து போன அம்சங்கள் அதிகமாகவே இருக்கின்றது. ஜெனிவா அரங்கையும் கவனத்தில் கொள்ளாது அரசியல் கட்சிகள் போன்று சிவில் தரப்புகள் செயல்படுமாயின் அவற்றின் இருப்பு காணாமல் போகும். அவ்வாறு காணாமல் போகின்ற சூழல் ஈழத்தமிழருடைய அரசியல் இருப்பையும், பொருளாதார இருப்பையும், சமூக இருப்பையும், பண்பாட்டிருப்பையும் இல்லாமல் செய்துவிடும்.

மூன்றாவது, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அல்லது உறவுகள் இந்த சந்தர்ப்பத்தில் ஆற்ற வேண்டிய அதீதமான பங்களிப்பை ஆற்ற தவறி இருக்கிறது என்று தெரிகிறது. அவர்கள் ஈழத்தமிழருடைய அரசியல் இருப்புக்காகவும் அவர்களது சுதந்திரமான வாழ்வுக்காகவும் அதீதமான பணிகளை ஆற்றுகிறார்கள் என்பது மறுக்க முடியாது. ஆனால் அவர்கள் எல்லா அரங்கையும் அதிகம் கையாளக்கூடிய தூரத்திலும் எண்ணத்திலும் அந்நிய மக்களாக காணப்படுகின்றனர். சரியான உத்திகளை வகுத்து அத்தகைய பன்னாட்டு அரங்குகளை கையாளக்கூடிய திறமை அவர்களுக்கு உரியது. ஈழத்தமிழர்களின் உயிர் வாழ்வில் ஒரு அங்கமான புலம்பெயர்ந்த தரப்புகள் தற்போது ஏற்பட்டு இருக்கின்ற சூழலை வலுவானதாக மாற்றுவதற்குரிய களம் ஏற்பட்டிருக்கின்றது. களத்திலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் பாராளுமன்றங்களை அலங்கரிக்கின்ற அமைச்சர்களாக இருக்கின்ற அனைத்து உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து ஒரு புதிய அணி ஒன்றை உருவாக்கி அதன் செல்நெறிக்குள்ளால் ஜெனிவா என்ற பன்னாட்டு அரங்கு கையாளப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது. அதனை நோக்கி புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து பயணிப்பது அவசியமாகிறது. இன்றைய சூழல் பலவீனமானதாகவும் எதையும் ஈழத்தமிழர்களுக்கு பெற்றுக் கொடுக்காததாகவோ அமைந்து விடலாம். ஆனால் எதிர்காலம் என்பதற்கான முதலீடுகளை ஈழத்தமிழர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும் இக்கால பகுதியில் செய்வதற்கான சூழல் கிடைத்திருக்கின்றது. அதனை பயன்படுத்த வேண்டிய காலப் பகுதிக்குள் ஜெனிவா களம் முதன்மையானதாக விளங்குகிறது. இஸ்ரேலிய, ஈரானிய பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் சபையில் தினமும் எதிரெதிர் சூழலில் நின்று கொண்டு உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். அதுக்கான அடிப்படை காரணம் உலகத்தில் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்ற சர்வதேச நியமங்களை அங்கே தான் வெளிப்படுத்தவும் கையாளவும் நியாயப்படுத்தவும் முடியும் என்பதாகும். மனித உரிமை ஆணையாளரின் செம்மணி வருகை எல்லாவற்றையும் கடந்து அது ஒரு ஈழத்தமிழரின் அரசியல் இருப்புக்கான உரையாடலை தந்துள்ளது. எனவே அத்தகைய அரங்கம் போலியாக இல்லாமல் நலன்களுக்கு உட்பட்டதாக அல்லாமல் திறம்படவும் உத்திகளோடும் கையாளப்பட வேண்டும்.

எனவே, ஈழத்தமிழர் ஜெனிவாவை கைவிடுதல் என்பது அபாயகரமான விளைவுகளை தரக்கூடியதாக அமையும். ஜெனிவாவில் விடயங்களை கையாளுவதில் உள்ள பலவீனத்துக்காக ஜெனிவா அரங்கம் பலவீனமானது என்று விவாதிப்பது மடமைத்தனமாகும். இம்மடமைத்தனமான விவாதங்களை விடுத்து கிடைக்கும் வாய்ப்புகள் ஒவ்வொன்றையும் எப்படி பயன்படுத்துவது என்பதை ஈழத்தமிழர்கள் கற்றுக் கொள்ளல் வேண்டும். துரோகங்களையும் துரோகத்தனங்களையும் பட்டியலிட்டுக்கொண்டு அதன் மீதான விவாதங்களை மேற்கொண்டு காலத்தையும் நேரத்தையும் விரயமாக்குவதை விட ஒரு ஆரோக்கியமான பயணத்தை ஈழத்தமிழ் அரசியலில் ஏற்படுத்த அறிவுபூர்வமான உரையாடல்களும் முன்னெடுப்புகளும் அவசியமானது. அதில் ஒரு பகுதியை ஜெனிவா அரங்கில் அரசியல் தரப்புகள் – சிவில் தரப்புகள் – புலமை தரப்புகள் ஆகிய மூன்று அணிகளும் ஒன்றிணைந்து ஆழமாக புரிந்து விவாதித்து திட்டமிட்டு நகருதல் வேண்டும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)