சமகால உலக அரசியலானது பல திசைகளை நோக்கி நகர்கிறது. மேற்குலகம் தனது அதிகாரத்தை பாதுகாக்கவும் கிழக்குலகத்தின் மீதான தனது ஆதிக்கத்தை தொடரவும் தொடர்ச்சியான தந்திரோபாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேற்குலகத்தின் பலமானது ஆசிய ஆபிரிக்க மற்றும் இலத்தீனமெரிக்க நாடுகள் மீதான அரசியல் பொருளாதார இராணுவ ஆதிகத்திலேயே அதிகம் தங்கியுள்ளது. அந்நாடுகளின் தனித்துவமான அரசியல் இருப்பொன்றுக்கான எழுச்சியானது மேற்குலகத்தை குழப்பத்திற்குள் தள்ளியுள்ளது. அதனை தடுப்பதற்கான அனைத்து உத்திகளையும் மேற்குலகம் மேற்கொள்ள முனைகிறது. இக்கட்டுரையும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோனின் சீன விஜயத்தையும் அதன் விளைவுகளையும் தேடுவதாக அமையவுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோனது சீன விஜயம் (05.04.2023) குறிப்பிடத்தக்க அரசியல் போக்கினை உணர்த்தியுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி, உக்ரைன் போரை தடுத்து நிறுத்தும் வலிமை சீனாவின் ஜனாதிபதிக்குண்டு எனக் குறிப்பிட்டதுடன் ரஷ்ய, -உக்ரைன் போர் ஐரோப்பாவுக்குள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை மெக்ரோனின் சீன விஜயத்துடன் இணைந்து கொண்ட ஐரோப்பிய யூனியனின் தலைமை உறுசுலா வொண் டிர்லியின் பிஜிங் வருகை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிகிறது. சீன ஜனாதிபதி ஜின் பிங் ரஷ்ய ————–– உக்ரைன் போரை தடுக்க 12 அம்சக் கோரிக்கையை முன்வைத்ததோடு அதனை உக்ரைன் நிராகரித்திருந்ததென்பதும் கலவனத்திற்குரியதாகும். ஆனால் பிரான்ஸ் ஜனாதிபதி அணுவாயுதப் போரை தடுக்கவும், சீனா, மொஸ்கோவுக்கு வழங்கும் ஆயுத விநியோகத்தை தடுத்து நிறுத்தவும் முயன்றுள்ளதை அவரது உரையாடலில் கண்டுகொள்ளக்கூடியதாக உள்ளது. போரை நிறுத்துவதற்கான நகர்வுகளை ஐரோப்பிய யூனியன் தலைமை சீன ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதுடன் உக்ரைன் ஜனாதிபதியுடன் உரையாடுமாறும் விண்ணப்பித்திருந்தார். மேற்குடனான வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவு பற்றிய உரையாடலை மெக்ரோனுடன் சீன ஆட்சியாளர்கள் முதன்மைப்படுத்தியதுடன் பிரான்ஸ் ஜனாதிபதிக்கான கௌரவத்தை முதன்மைப்படுத்தியிருந்ததையும் அவதானிக்கக் கூடியதாக அமைந்திருந்தது. பிரான்ஸ் ஜனாதிபதி 50க்கு மேற்பட்ட வர்த்தக பங்காளிகளுடன் செயல்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும். அத்தகைய வர்த்தக தொடர்பாளர்கள் சீனாவுடன் உடன்பாடுகளை மேற்கொண்டதாகவும் தெரியவருகிறது. அதேநேரம் ஐரோப்பிய யூனியன் தலைமை சீனாவின் மனித உர்மை சார்ந்தும் உய்கூர் இஸ்லாமியர் தொடர்பிலும் தாய்வான் விவகாரத்தையும் முதன்மைப்படுத்தியிருந்ததையும் அவதானிக்க முடிகிறது. இதில் மேற்குலகத்தின் தந்திரோபாயம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. அதாவது சீனாவை அரவணைத்து கையாளுவது மற்றும் எச்சரித்து கையாளுவதென்ற இரட்டை தந்திரத்தை நகர்த்தியுள்ளனர். அவற்றை சற்று விரிவாக நோக்குவது பொருத்தமானது.
ஒன்று, சீனாவை வர்த்தக ரீதியில் கையாளுவதன் மூலம் ரஷ்ய, -சீன நெருக்கத்தை தகர்ப்பது பிரதான நோக்கமாக அமைந்துள்ளது. பிரான்ஸின் உள்நாட்டில் பாரிய போராட்டங்கள் ஓய்வூதிய சீர்திருத்தம் தொடர்பில் நிகழ்துவருகிறது. அது வன்முறையாக மாறிவருகிறது. இச்சந்தர்ப்பத்தில் மெக்ரோனது சீன விஜயம் உள்நாட்டு நெருக்கடியை கடந்து முதன்மையானதாக கொள்ளப்படுகிறது. அதனாலேயே அவரது விஜயம் சாத்தியமாகியுள்ளது. அப்படியானால் சீனாவினது முக்கியத்துவம் பிரான்ஸுக்கு மட்டுமானதல்ல என்பதும், அது ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்குரியதென்பதையும் கடந்து மேற்குக்கானதாகவே தெரிகிறது. மேற்கு அனைத்து வழிகளிலும் அதிக நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக சீனாவின் அணுகுமுறையால் சவூதி அரேபியாவும், ஈரானும் ஏனைய எண்ணெய்வள நாடுகளும் ஒன்றிணைந்துள்ளன. மெக்ரோன் மற்றும் டிர்லியின் பீக்கிங்குக்கு விஜயம் செய்த அதே நாளில் (05.04.2023) சவூதி மற்றும் ஈரானிய தூதுவர்களை சீன அரசாங்கம் சந்தித்துள்ளது. இரு சந்திப்புகளும் ஏதோ ஒரு வகையில் ஒன்றோடொன்று இணைந்துள்ளது. அதாவது சீனா, ரஷ்யா என்பனவற்றின் முன்முயற்சியால் மேற்காசிய எண்ணெய்வள நாடுகள் தமக்கிடையே நிலவிய முரண்பாடுகளை கைவிட்டு ஒன்றாக இணைந்து பயணிக்க ஆரம்பித்துள்ளன. ஓபெக் அமைப்பும் அதன் பிளஸ் அமைப்பும் எண்ணெய் உற்பத்தியை மட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளன. அமெரிக்கா பலதடவை வலியுறுத்தியும் ஒபெக் நாடுகள் தீர்மானம்’ எடுத்துள்ளன. அதிலும் சவூதி அரேபியா, ஈராக் போன்ற நாடுகள் முதன்மையான முடிவை ஏற்கனவே அறிவித்திருந்தன. இவை அமெரிக்காவினதும் மேற்குலகத்தினதும் விசுவாசம்மிக்க நாடுகள் என்பது கவனத்திற்குரியதாகும். இதனைவிட பிறிக்ஸ் என அழைக்கப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகள் தமக்கிடையேயான வர்த்தகத்தையும் பொருளாதார நடைமுறைகளையும் மேற்கொள்வதற்கான நாணயத்தை உருவாக்கப் போவதாக அறிவித்துடன் ஏற்கனவே ரஷ்ய, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் தமக்கிடையேயான வர்த்தகத்தை தமது நாணயத்தில் (விஸ்ரோவில்) நிகழ்த்த ஆரம்பித்துள்ளன. அது மட்டுமன்றி ஷங்காய் ஒத்துழைப்பு மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீன ஜனாதிபதி இந்தியாவுக்கு ஜூலையில் வருகை தரவுள்ளார்.சீன-, இந்திய ஒத்துழைப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. இதனை தடுக்கவே சீனா, இமாச்சலப் பிரதேசத்திலுள்ள இந்திய பெயரிலுள்ள இடங்களை பெயர் மாற்றம் செய்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அதனை ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் அமெரிக்கா குறிப்பிடுகிறது. 1962 இலிருந்து அதனை இந்தியாவே கண்டுகொள்ளவில்லை எப்பது அமெரிக்காவுக்கு தெரியாததல்ல. இருந்த போதும் முரண்பாட்டை தூண்டுவது அமெரிக்காவுக்கு அவசியமாகிறது. இந்த அணி உடைக்கப்படுவதே பிரதான தேவையாக மேற்குக்கு உள்ளது.
இரண்டு, சீனாவை மனித உரிமை சார்ந்தும் மற்றும் போர் அச்சுறுத்தலை மேற்கொண்டும் நெருக்கடியை உருவாக்குவதாக தெரிகிறது. அதாவது ஐரோப்பிய யூனியனின் தலைமை சீன ஜனாதிபதியுடனான உரையாடலில், உக்ரைன்- -– ரஷ்யப் போரை ஒரு புறம் முதன்மைப்படுத்தினாலும் மறுபக்கத்தில் உய்கூர் முஸ்லிம்கள் தொடர்பிலான மனித உரிமையை முதன்மைப்படுத்தியிருந்தது. அத்துடன் தாய்வான் விவகாரத்தை பற்றிய உரையாடலையும் வெளிப்படுத்த தவறவில்லை. இப்பகுதி எழுதிக் கொண்டிருக்கும் போதே தாய்வான் ஜனாதிபதி ஷிஜி இங்வென் அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ளார். ஏற்கனவே அமெரிக்க காங்கிரஸின் முன்னாள் சபாநாயகர் நான்சி பெலஸ்ன் தாய்வான் விஜயத்தின் பின் சீன-, அமெரிக்க உறவு கொதிநிலையில் காணப்படுகிறது. தற்போது அதன் சுதந்திரம் பற்றியும் தைவானின் சுதந்திரம் வரையும் அமெரிக்காவின் ஆயுத விநியோகம் நிகழும் எனவும் அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இதே நேரம் தாய்வானின் முன்னாள் ஜனாதிபதி மா யுங் -ஜீயோவின் சீனப்பயணமும் அரசியல் முக்கியத்துவம் பெற்றதாக மாறியுள்ளது. சீன ஜனாதிபதி மீளவும் தாய்வான் விடயத்தில் எத்தகைய சமரசமும் கிடையாது என அறிவித்துள்ளார். இத்தகைய வெறுப்பூட்டும் தாய்வான், -அமெரிக்கத் தலைவர்களது செயல்பாடுகள் ஒட்டுமொத்தமாக தாய்வானைப் பாதிக்கும். தற்போது தாய்வானை மையப்படுத்தி சீனாவின் போர் ஒத்திகை தீவிரமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதே நேரம் பிரான்ஸ் ஜனாதிபதி ரஷ்யாவின் நட்புநாடான பெலாரஸில் நிறுத்தப்பட்டுள்ள அணுவாயுதம் பற்றிய இராணுவ அரசியலின் முக்கியத்துவம் பற்றி சீன ஜனாதிபதியுடன் உரையாடியிருந்தார். அணுவாயுதப் போரை தவிர்க்க ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். ரஷ்யாவின் அணுவாயுதம் பற்றிய நகர்வுகளை மேற்குலகம் ஒர் இராணுவ அரசியலாக முதன்மைப்படுத்தி பிரசாரம் மேற்கொண்டுவருவதுடன் அதன் மூலம் ரஷ்யாவை சூழவுள்ள நாடுகளை நேட்டோவில் இணைப்பதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இப்பிராந்தியத்தை முழுமையாக மேற்குலகத்தின் காலடியில் வீழ்த்துவதே நேட்டோவின் உத்தியாக அமைந்துள்ளது. ரஷ்யா பழைய சோவியத் யூனியனை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதிலிருந்து அயல்நாடுகள் தம்மை பாதுகாக்க வேண்டுமாயின் நேட்டோவில் இணைவது அவசியம் எனவும் குற்றம்சாட்டிவரும் அமெரிக்கா தற்போது ரஷ்யா அணுவாயுதப் போரை அச்சுறுத்தலாக கருத வேண்டும் எனவும் அயல்நாடுகளை அச்சுறுத்தி சாம்ராச்சியத்தை அமைக்க ரஷ்யா திட்டமிடுவதாகவும் பிரசாரம் செய்துவருகிறது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு ரஷ்யாவுக்கு வழங்கும் ஆயுத விநியோகத்தை கைவிட வேண்டும் எனவும் மெக்ரோன் தெரிவித்துள்ளமை கவனத்திற்குரியதாகும்.
இரண்டையுமே சீனா சரிவரக் கையாண்டுள்ளதாகவே தெரிகிறது. சீனாவின் வர்த்தக மற்றும் பொருளாதா உத்தியை முன்னிறுத்தி இராணுவ அரசியலை கையாள முடியுமென கணித்து செயல்பட்ட மேற்கினதும் பிரான்ஸ் ஜனாதிபதியினதும் நகர்வு அதிக பயனை மேற்குக்கு ஏற்படுத்தவில்லை என்ற கருத்தே அதிகமாகவுள்ளது. சீனா, உலகளாவிய ரீதியில் பொருளாதாரப் பாய்ச்சலைக் கொண்ட நாடு என்றாலும் தாய்வான், ஹொங்கொங் மற்றும் உய்கூர் முஸ்லிம் விடயத்தில் எந்த விட்டுக்கொடுப்பையும் செய்யத் தயாரில்லாத நிலையைக் கொண்டுள்ளது. மறுபக்கத்தில் சீனா, மெக்ரோனுக்கு செங்கம்பள வரவேற்பைக் கொடுத்து வர்த்தக உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் விட பிறிக்ஸ் நாடுகளின் பொது நாணயமே மேற்குக்கு ஆபத்தானதாகும். அதற்கான எதிர்வினையையே பிரான்ஸ் ஜனாதிபதி ஆற்றியுள்ளார். இத்தகைய அரசியல் நகர்வால் நாணய உருவாக்கத்தையும் கிழக்கு நாடுகள் மீதான பொருளாதார முறியடிப்பையும் சாத்தியப்படுத்த முடியவில்லை எனில் சீனா- -– தாய்வான்போரை அல்லது இந்திய-, சீனப் போரை உருவாக்குவதே அமெரிக்காவினதும் மேற்குலகத்தினதும் நோக்கமாகும். ஆனால் மேற்கின் அணியெனக் கருதப்படும் ஜப்பான் ரஷ்யாவுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. ஓபெக் நாடுகளது எண்ணெய் உற்பத்தியில் ஏற்படுத்தியுள்ள மட்டுப்பாடு அதிகமான நாடுகளை ரஷ்யா நோக்கி நகர வைக்கும். இவை அனைத்தும் மேற்கின் அணியைப் பலவீனப்படுத்துவதாக அமையும். ரஷ்யாவும் தனது எண்ணெய் உற்பத்தியை குறைத்துள்ளது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)
