அரசியல் கட்டுரைகள்

ஜி-20 மாநாடு : பொருளாதார ஒத்துழைப்பையும் இராணுவ விரிசலையும் வெளிப்படுத்திய சந்திப்பு

இரண்டாம் உலகப் போருக்கு பின்னான உலகம் பிராந்திய மட்டத்திலும் பிராந்தியத்தைக் கடந்து உலகளாவிய ரீதியிலும் கூட்டு அணிகளாக இயங்கி வருகிறது. அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ ரீதியில் அத்தகைய அணிகள் கட்டமைக்கப்பட்டு இயங்கி வருகிறதை அவதானிக்க முடிகிறது. உலகம் வலுவான தேசங்களின் கூட்டுப் பாதுகாப்பினாலேயே பாதுகாக்கப்படுகிறது. போரையும் பொருளாதாரத்தையும் கூட்டாகவே மேற்குலகம் எதிர்கொண்டு வருகிறது. அத்தகைய கூட்டுக்கான அரசியல் பொருளாதார கட்டமைப்பே மேற்குலகத்தால் வடிவமைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. அதனுடன் அது நின்றுவிடாது ஏனைய கீழைத்தேச நாடுகளது கட்டமைப்பை தகர்ப்பதையும் அதனை கூட்டாக எழுச்சியடையவிடாது தடுப்பதனையும் பிரதான அரசியலாக பின்பற்றி வருகிறது. இக்கட்டுரையும் இந்தோனேசியத் தலைநகரான பாலியில் நவம்பர் 15,16 இல் நடைபெற்ற ஜி-20 மாநாட்டின் முக்கியத்துவம் பற்றிய தேடலாக உள்ளது.

ஜி-20 மாநாட்டில் கீழைத்தேச நாடுகளது கூட்டும் அதிகார பலமும் காத்திரமானதாக அமைந்திருந்தது. ஜப்பான், தென் கொரியா, ஆசியான் நாடுகள் மற்றும் சீனா, பிறேசில், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளுடன் இந்தியாவின் பங்கு அதீதமாக அமைந்திருந்தது. ஏறக்குறைய 20 அமர்வுகளில் 45 இருதரப்பு சந்திப்புக்களை 45 மணித்தியாலத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டதாக தெரிவருகிறது. சமகால உலக ஒழுங்கின் அரசியல், பொருளாதார, இராணுவ உத்தரவாதப்படுத்தலில் ஜி 20 நாடுகள் முக்கிய செல்வாக்குடைய நாடுகளாக விளங்குகின்றன. இந்தியா உலகளாவிய பொருளாதாரத்தில் பிரதான இடத்தை பெற ஆரம்பித்துள்ளது. எதிர்கால உலக ஒழுங்கில் மேற்குறித்த கீழைத்தேச நாடுகளது பங்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கும் என்பதை விளங்கிக் கொள்ளக் கூடியதாக உள்ளது.

அது மட்டுமன்றி, அமெரிக்க,- சீன தலைவர்களது சந்திப்பு மிக முதன்மையானதாக உரையாடப்பட்டது. அது மட்டுமல்லாது, அச்சந்திப்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஊடகங்களுக்கு வெளிப்படுத்திய தகவல், அம் மாநாட்டை மேலும் வலுப்படுத்தியதாக தெரிகிறது. ஜோ பைடன் தெரிவிக்கும் போது, இரு நாட்டின் தலைவர்களாகிய நாங்கள், பரஸ்பரம் அண்மைய முரண்பாடுகளிலிருந்தும் போட்டித் தன்மையிலிருந்தும் வெளியேவர வேண்டும். அதேநேரம் இரு நாட்டுக்குமான வேறுபாடுகளை முகாமைத்துவம் செய்வதோடு எமது நாடுகளின் நோக்கு நிலையிலிருந்து பொறுப்புக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும், எனவும் எல்லாவற்றையும் கடந்து உலகளாவிய ரீதியில் பரஸ்பர ஒத்துழைப்பின் மூலம் உலக விவகாரங்களில் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அவ்வாறே சீன ஜனாதிபதியும், எங்கள் இரு நாட்டுக்கும் தேவையான விடயம் சரியான திசையில் பயணிப்பதற்கானதும் உறவினை பலப்படுத்துவதற்கானதுமான இரு நாட்டு உறவுமாகும் எனத் தெரிவித்தார்.

அது மட்டுமல்லாது, சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் புதிய பனிப்போருக்கான தேவையுள்ளதாக நம்பவில்லை எனவும் தைவான் மீது தாக்குதலை மேற்கொள்ளும் உடனடி நோக்கம் எதுவும் சீனாவிடம் உள்ளதாக கருதவில்லை எனவும் ஜோ பைடன் தெரிவித்திருந்தார். இரு தலைவர்களுக்கும் இடையில் மூன்று மணித்தியாலங்கள் நீடித்த உரையாடலில் உக்ரைனில் அணுவாயுதம் பயன்படுத்தப்படுவதை இரு தலைவர்களும் எதிர்ப்பதாக தெரிவித்தனர். சமாதானத்துக்கான சீனாவின் வேண்டுகோளை மீண்டும் வலியுறுத்திய ஜின்பிங் குழப்பமான பிரச்சினைக்கு இலகுவான தீர்வு இல்லை என்றார். அவ்வாறே வடகொரியாவின் அணுவாயுத பரிசோதனை பற்றிய உரையாடலை முதன்மைப்படுத்திய இரு தலைவர்களும் இன்னுமொரு அணுவாயுத பரிசோதனையில் வடகொரியா ஈடுபடுவதை சீனா தடுக்க வேண்டும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார். இரு தலைவர்களது சந்திப்பின் மூலம் பாலி மாநாடு முதன்மையான இடத்தை பெற்றது எனக்குறிப்பிட முடியும். அதாவது உலக ஒழுங்கில் முதல் இரு இடத்தையும் தக்கவைத்துள்ள இரு நாடுகளதும் தலைவர்களது சந்திப்பு உலகளாவிய ரீதியில் முக்கியத்துவமுடையதாகவே அமைந்திருந்தது. அதனை விரிவாக நோக்குவது அவசியமானது.

முதலாவது, அந்த வரைபுக்குள் பாலியில் நிகழ்ந்த ஜி-20 சந்திப்பானது, வடக்கு-, தெற்கு நாடுகளின் சக்திவளம், சூழல்பாதுகாப்பு, விவசாயம், சுகாதாரம் மற்றும் டிஜிற்றல் பரிமாற்றம் தொடர்பில் அதிக உரையாடல்களையும் வரைபுகளையும் ஏற்படுத்தியிருந்தது. அத்தகைய வரைபுகளுக்குள்ளாக நாடுகளுக்கிடையிலான பரிமாற்றமும் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வும் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் பிரிவுகளாக செயல்படாது நெருக்கடிக்கான தீர்வுகளாக செயல்பட்ட தன்மையினைக் காணக் கூடியதாக அமைந்திருந்தது.

இரண்டாவது, ஜி-20 ஐ ஒட்டி நிகழ்ந்த உரையாடலில் ஆசியான் -அமெரிக்க உரையாடலில் இன்னோர் தளத்தில் பொருளாதார இருப்பினை உணர்த்தியதாக அமைந்திருந்தது. அதாவது நவம்பர் 11 -முதல் 13 திகதிகளில் கம்போடியத் தலைநகரில் ஆசியான் மாநாடு தெற்கு நாடுகளின் பொருளாதார வலுவை அடையாளப்படுத்தியதுடன், மேற்குலக நாடுகளின் பொருளாதாரத்தின் இருப்பினையும் தேவைப்பாட்டையும் தந்திருந்தது. ஏறக்குறைய 2023இல் ஆசியான் பொருளாதாரம் 825 மில்லியன் டொலரை கொண்டதாக அமையும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் வலுவான அமைப்பாகவும் முரண்பாடுகள் குறைந்ததொன்றாகவும் ஆசியானே காணப்படுகின்றது என்ற அடிப்படையில் அதன் பொருளாதாரம் மதிப்பிடப்படுகிறது. வலுவான ஐரோப்பிய பொருளாதாரத்தின் இயங்குதிறனை நிர்ணயிக்கும் ஐரோப்பிய யூனியனே அதிக முரண்பாடுகளுக்குள் சிக்குண்டுள்ள போது ஆசியான் பலமாகவே செயல்படுகிறது.

மூன்றாவது, தென்வலய நாடுகளில் இந்தியாவும் சீனாவும் பலமான பொருளாதாரத்தை கொண்டிருப்பதாக கணிப்பிடப்படுகின்ற செய்முறை ஒன்றை, ஜி-20 ஏற்படுத்தியிருந்தது. அதில் இந்தியா உலகளாவிய பொருளாதாரத்தில் அதிக பங்களிப்பினை மேற்கொள்ளும் நாடாக மாறிவருகிறது. சீனாவினது வெற்றிடத்தை நிரப்புவதில் இந்தியா முனைப்புக் காட்டுவதாகவும் அதனை மேற்குலகம் ஊக்குவிப்பதாகவும் கருதப்படுகிறது. மோடி-, பைடன் சந்திப்பின் முக்கியத்துவத்தையும் உடல் மொழியையும் அவதானிக்கும் ஒவ்வொருவரும் அதனை உணர்ந்து கொள்ள முடியும். உக்ரைன், ரஷ்ய மோதலால் எவ்வாறு சீனாவின் உறுதிப்பாடு வலுவடைகிறதோ அவ்வாறே இந்தியப் பொருளாதாரம் மட்டுமல்ல இராணுவ நோக்கு நிலையையும் இந்தியா கட்டமைக்க முயலுவதாக மதிப்பிடப்படுகிறது. இந்தியாவுடன் பிறேசில், ஆர்ஜெண்டீனா, தென் னாபிரிக்கா போன்றவற்றின் எழுச்சியையும் இம்மாநாட்டில் அவதானிக்க முடிந்தது. ஜப்பான், தென் கொரியா தென்வலய நாடுகளாக புவியியல் அமைப்பில் காணப்பட்டாலும் நடைமுறையில் அவை மேற்குலகத்தை பிரதிபலிப்பவையாகவே காணப்படுகின்றன. அதனால் ஏனைய நாடுகளது நகர்வுகள் பாலியில் நிகழ்ந்த மகாநாட்டில் முதன்மையான தென்வலய நாடுகளின் பங்களிப்பாக மதிப்பிடப்படுகிறது.

நான்காவது, போரும் அணுவாயுத முரண்பாடும் ஏவுகணை தொழில்நுட்பத்தின் பாதிப்புகள் சார்ந்தும் பாலி மாநாடு முக்கியத்துவம் பெற்றிருந்தது. குறிப்பாக உக்ரைன், -ரஷ்யப் போர் அதில் அணுவாயுப் பாவனைக்கான நகர்வுகள் அமெரிக்கா -சீனத் தலைவர்களால் மட்டுமல்ல ஏனைய உலக நாடுகளாலும் கண்டனத்திற்கு உள்ளான விடயமாக அமைந்திருந்தது. ரஷ்யா மீதான கண்டனங்களில் மேற்குலகத் தலைவர்கள் அதிகமான அக்கறை கொண்டிருந்தனர். ரஷ்யாவின் நகர்வுகளால் ஐரோப்பியப் பொருளாதாரம் மட்டுமல்ல ஐரோப்பாவின் ஒற்றுமையும் தகரும் என்ற வாதங்கள் மேலெழ ஆரம்பித்துள்ளன. மேலும், வடகொரியாவின் ஏழாவது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைப் பரிசோதனையானது, மேற்குலகத் தலைவர்களால் அதிகம் விமர்சனத்துக்கு உள்ளானது. வடகொரியாவின் அணுவாயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணைத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மேற்குலக நாடுகளின் தலைவர்களால் அங்கீகரிக்க முடியாதிருந்ததையும் அதனை தடுப்பதற்கான விண்ணப்பங்களும் உரையாடலில் முதன்மைப்படுத்தப்பட்டிருந்தது.

ஐந்தாவது, சீனாவுடனான தைவான் விவகாரத்தையும் மனித உரிமை தொடர்பிலான விடயத்தையும் மேற்குலக நாடுகளின் தலைவர்கள் மட்டுப்படுத்தி உரையாடியதைக் காணக் கூடியதாக இருந்தது. ஏனைய மேற்குலகத்தில் நிகழும் உரையால்களிலும் சந்திப்புகளிலும் மனித உரிமையை முன்னிறுத்தும் அமெரிக்கா பாலியில் அதனை மட்டுப்படுத்தி உரையாடியதுடன் அமெரிக்காவில் அமெரிக்க பாணியிலான ஜனநாயகத்தையும் சீனாவில் சீனப்பாணியிலான ஜனநாயகத்தையும் ஏற்றுக் கொள்வதாக உரையாடல் வெளிப்படுத்தியது.

எனவே, பாலியில் நிகழ்ந்த ஜி-20 மகாநாடு பொருளாதார ரீதியில் வடக்கு-தெற்கு ஒத்துழைப்பின் தன்மையையும் இராணுவ ரீதியில் வடக்கு-தெற்கு முரண்பாட்டையும் அவதானிக்கக் கூடியதாக அமைந்திருந்தது. சீனா, ரஷ;சியா, வடகொரியா தவிர்ந்த நாடுகள் பொருளாதார ரீதியில் ஒன்றிணைக்கப்பட்டதையும் அதனால் அந்த நாடுகள் மீதான கண்டனத்தையும் மேற்குலகத் தலைவர்கள் தவிர்த்துக் கொண்டதையும் காணமுடிந்தது. ஆனால் மறுபக்கத்தில் சீனா,ரஷ்சியா,வடகொரியா போன்ற நாடுகளது நடவடிக்கைகள் நிராகரிக்கப்பட்டதுடன் ஐரோப்பா அடைந்துள்ள கொதிநிலையை கையாளும் தன்மை ஒன்றையும் ஜி-20 மகாநாட்டில் அவதானிக்க முடிந்தது. பொருளாதார ஒத்துழைப்பையும் இராவ விரிசலையும் கொண்ட சந்திப்பாக அமைந்திருந்தது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)